Sunday, 30 September 2012

ஒரு கீச்சரின் டைரி குறிப்பு

ட்விட்டர்ல சேர்ந்த புதுசுல (சுமார் 6 மாதங்களுக்கு முன்) செம வரவேற்பு! வந்தாச்சு Fake-IDன்னு ஒரே ஆரவாரமா இருக்கும். ஆரம்பத்துல ஒண்ணும் புரியலங்க - வண்டவாளம், கலாசல், வட்டஜிலேபிராஸ்கோலு -- இவங்க அங்க உள்ள  பிரபலங்கள். இந்த பேரெல்லாம் ஏத்துக்கிட்டவங்க, விக்னாசுரேஷ் பேருக்கு வாஸ்து சரியில்லன்றாங்கன்னு ஒரே குழப்பம்.. அப்புறம் தான் தெரிஞ்சுது புத்திசாலிதனமா ட்வீட் போட்டா, போடறவங்க பெண்ணா இருக்கமுடியாதுன்ற உயர்ந்த கருத்து(?!). என்னோட கவலையெல்லாம் இப்படி சொல்றவங்ககிட்ட, உங்க மனைவி ரொம்ப புத்திசாலின்னு யாரும் சொல்லிடாம இருக்கணுமேன்னு தான்..

அப்பறம் வேற ஒரு பெண் ஐடி வந்ததால, என் Fake-ID பதவி பறிபோயிடுச்சு.. டகால்ன்னு என்னை ஒரிஜினல் ஐடி ன்னு சொல்லி சுவாரஸ்யத்த குறைச்சுட்டாங்க. ஆனா நான் அதெல்லாம் மனசுல வச்சிகாம பல்க்-மன்னிப்பு வழங்கிட்டேன்.

ட்விட்டர்ல இருக்கறதுல பல சௌகர்யம் -வீட்லகணவன்-மனைவி, மாமியார்-மருமகள் சண்டை இதெல்லாம் வரவே வராது. ஏன்னா நம்ம வீட்டு ஆளுங்க மூஞ்சியே நமக்கு மறந்து போய்டும் - வேணும்னா அவங்களையும் ட்விட்டர்ல இறக்கி விட்டுட்டு டைம்லைன்ல இன்னிக்கி என்ன சாம்பார் வைக்கட்டும்?ன்னு கேட்டுக்கலாம். (Status update போட்ட மாதிரியும் ஆச்சுது  பாருங்க..)

அதிலும்.. கொஞ்சம் ட்வீட், கொஞ்சம் சமையல்ன்னு மாத்தி மாத்தி பண்ணினதுல 60+ வயதான மாமனாரும், மாமியாரும் அவங்க ஆயுசுல சாப்பிட்டேயிருக்காத எலுமிச்சம் பழம் பிழிஞ்ச சாம்பாரையும், சௌசௌ  ரசத்தையும் பண்ண முடிஞ்சுதே?? ட்விட்டர்ல இல்லனா முடிஞ்சிருக்குமா சொல்லுங்க பார்ப்போம்?

நம்ம ஊர்பக்கம் டவுன் பஸ் நிறையவரும்.. அதுக்கு பக்கத்திலையே போயும்  ஒரு தடவ கூட மாட்டிக்காம ஸ்கூட்டிய லாவகமா ஓட்டின திமிர ட்விட்டர் அடக்கிருச்சுங்க.. என்னன்னு கேட்கறீங்களா? டைம்லைன் ல துப்புவங்க பாருங்க.. அடடடா.. சிலசமயம் யாருக்குமே மென்ஷன் போடாம ஒரு த்தூ - என்ன தான் நம்மமேலயே தெறிச்சாலும்நாம எதுக்கு நமக்குன்னு நினைக்கணும்?? தொடச்சுவிட்டுட்டு தொடர்ந்து கடமைய செய்யோணுமுங்க..

அப்புறம், காதல்ல தோல்வி அடைஞ்சவங்க எல்லாம் தற்கொலை செய்யறது ஓல்ட் பாஷன்.. ட்விட்டர்ல சேர்ந்து பொலம்பி பொலம்பி பூரா பேரையும் சாவடிக்கணும். அதான்ங்க லேட்டஸ்ட்டு!! 

உங்களுக்கு இந்த கவித புடிக்கும்ன்னு வைங்க - நீங்க இருக்க வேண்டிய இடம் ட்விட்டரே தான். எத்தன அடிச்சாலும் தாங்குறவங்க நம்ம கீச்சர்கள்.
காதலி  - மழை - காதல் - வானவில் - நிலா இப்டி நாலு பெரிய பெரிய தமிழ் வார்தைகள இடம் மாத்தி மாத்தி போட்டு பழகிக்கலாம்..

காரசார விவாதம் நடக்கும் பாருங்க? அப்டியே கண்ல தண்ணியே வந்துரும்.- அப்டிதான் ஒரு முறை தமிழ் ஈழம் பத்தி ஆளாளுக்கு கீச்சி தள்ளினாங்க. நமக்கு எங்க அந்த எழவெல்லாம் புரியுது? சரிதான்ன்னு அப்போதைக்கு லாக்ஆப் பண்ணிட்டு ஒரு ரெண்டே மணிநேரத்துக்கு பிறகு திரும்ப ட்விட்டர்க்கு போனேனுங்க - அப்பவும் கொலைவெறியோட தான் இருந்தாங்க.. என்ன? அனிருத் - ஆண்ட்ரியா போட்டோ ரிலீஸ் ஆனதுல ட்விட்டர்ல ஈழம் படத்த தூக்கிட்டு தமிழ்-ஈரம்‘ போட்டுட்டாங்க.

ம்ம்.. சொல்ல மறந்துட்டேனே? பாரதி ரொம்ப துரதிர்ஷ்டசாலிங்க. பின்ன? பல புதுமை பெண்கள பார்க்காமலே போய் சேர்ந்துட்டான்! சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா.. சாத்திரம் எதுக்கடி? ..இது பார் கன்னத்து முத்தம் ஒன்று- சேச்சே என்ன சிறுபிள்ளை தனமா ஒரு முத்தத்தை போய் சுத்தி வளைச்சு சொல்லிக்கிட்டு.. வந்து எங்க பெண் ட்விட்டர்கள் சிலரை பாரீர்! அவன் கண்ட கனவை பலமடங்கு தாண்டிய புதுமை பெண்களை பாரீர்! பாரீர்!

இன்னும் உங்க மொழி ஆளுமை பட்டைதீட்டப்படனும்னா, உடனே ட்விட்டர்ல சேர்ந்துடுங்க சொல்லிட்டேன். கம்பனும், வள்ளுவனும் எந்த காலத்திலும் ஒரு நாலு கெட்ட வார்த்தை உருப்படியா சொல்லித்தரப்போறதில்ல !!

அட.. இவ்ளோ பேசுற நானும்  ரௌடி தாங்க. பிரபலம்தாங்க. வாழ்க்கை - வெற்றி/தோல்வி இத பத்தியெல்லாம் நிறைய தத்துவம் போட்ருகேனுங்க. தவிர DM ல எக்கசக்க பேருக்கு இனாமா அட்வைஸ் பண்ணியிருக்கேன். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்றாங்க. அப்புறம் இந்த விகடன் - குங்குமம் இதுல கூட என்  ட்வீட்ஸ் 8 வந்திருக்கு. (இது சம்பந்தமா வந்து குவிந்த வாசகர் கடிதங்கள இங்கே இணைக்கல.. ஏன்னா பாருங்க அடுத்தவங்க என்னை புகழ்ந்தா கூச்சமாயிடுது! )

சந்துல(ட்விட்டர்ல) சின்ன அம்மணியையும், பிரபல அண்ணனையும் வம்புக்கு இழுக்காமல் நீயெல்லாம் ஒரு பிரபலமா ன்றீங்களா? -- இன்னொன்னும் இருக்குங்க!! ஓண்ணு நம்மள யாராவது ப்ளாக் (Black இல்லீங்க Block) பண்ணனும். இல்ல நாம யாரையாவது ப்ளாக்  பண்ணி விட்றோனும்.. அவங்க 10 பேர்கிட்ட இன்னார் தன்னை ப்ளாக் பண்ணிட்டாங்கன்னு பெருமையா(?) புலம்புவாங்க, அந்த பத்து பேரும் உடனே நம்மள பின்தொடர்வாங்க..

அப்டியே சகட்டு மேனிக்கு ப்ளாக் பண்ணோம்ன்னு வைங்க - நீங்களும் பிரபலம் தான்! # (இந்த டிப்ஸ் இலவசம்)

நானும் என்னைய யாராவது ப்ளாக் பண்ணுவாங்கன்னு பொறுத்து பொறுத்து பார்த்து யாரும் வரன்னவுடனே என்னையே ப்ளாக் பண்ணிகிட்டேன்! என்ன கொடும பார்த்தீங்களா? ஆனா அத சொல்லணும்ன்னு தான் திரும்ப வரவேண்டியதா போச்சு !எனக்கு ரொம்ப பிடிச்ச ட்வீட் - இந்த நிமிஷம் ட்விட்டர்ல இல்லனா என்ன செய்வீங்களோ, அது தான் உங்க வாழ்க்கை! (நன்றி - @indianHood )

ஹமாம் சோப்பு பஜ்ஜி சாப்பிட எப்டி உதவியா இருக்கோ, அதே அளவு ட்விட்டரும் வாழ்க்கை பாடம் கத்துக்க உதவியா இருக்குமுங்க!

எங்க கிளம்பிடீங்க? ட்விட்டர் அக்கௌன்ட் ஆரம்பிக்கதானே? விதி வலியது, இல்லீங்களா?? !!

Sunday, 12 August 2012

ட்வீட் எடு கொண்டாடு!

ட்விட்டரிலும் இருக்கிறேன்.(@VignaSuresh). அங்கே ட்விட்டியதை இங்கே பகிர்கிறேன்.

நட்பு -

 • மது அருந்தும், புகைக்கும் மனிதர்கள் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல, கெட்ட பழக்கங்கள் உள்ளவர்களே!!  # கற்று தந்தது நட்பு

நாம் போட்ட சண்டைகள் மறந்துவிடுகின்றன.. நமக்காக போடப்பட்ட சண்டைகள் மறப்பதில்லை !

 • வாழ்வின் சிறு சிறு சுவாரஸ்யங்களில் ஒன்று, நம்மை பற்றி நமக்கே மறந்து போன விஷயம் வேறுயாருக்காவது நினைவில் நிற்பது!

எதிர்பார்ப்புகள் ஏதுமில்லாத ஒவ்வொரு ஆண் நண்பரிடத்தும் ஒரு சகோதரனே ஒளிந்திருக்கிறான்! 


காதல் - 


 • உங்களை போலவே இன்னொரு நண்பர் உங்கள் தோழிக்கு இருப்பது தெரிந்து பொறாமை உண்டானால், அதை காதல் என்று அறிக!


 • காதல் மறுக்கப் பட்டபோதும், நண்பர்களாய் தொடர்வோம் என்பவர்கள், இன்னும் நம்பிக்கை இழக்காதவகள்!


 • பெரும்பாலான காதலை பெண்கள் தான் முதலில் சொல்கிறார்கள்.. கண்களை படிக்கும் திறன் தான் பாதி ஆண்களுக்கு இருப்பதில்லை.


உறவுகள் - 


 • கோவப்படாத அப்பா சாத்தியம்! கண்டிப்பான தாத்தா அசாத்தியம் !                              
 • எப்படியும் சாதம் மீந்து விடுகிறது. தட்டில் மீந்தால் அம்மாவும், பாத்திரத்தில் மீந்தால் நானும் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிக்கிறோம்..வாழ்வியல் - 


 • சக மனிதர்களை மதிப்பது, அவர்கள் நம்மிடையே சொல்லவரும் விஷயத்தை கவனித்து கேட்பதிலிருந்து தொடங்குகிறது!


 • பிடித்ததை செய்ய எப்படியும் நேரம் கிடைத்து விடுகிறது - பிடிக்காததை செய்யாமல் இருக்க எப்படியும் காரணம் கிடைத்து விடுகிறது !


'நோய்' என்ற இடைப்பட்ட ஒன்று இல்லாவிட்டால், 'எப்படியும் மரணம்' என்பது தவறுகளை அதிகப்படுத்தி இருக்கும்!

தேவதைகளை சிறகுகளோடு தேடாதீர்கள்.. புன்னகையும், அன்பும் சுமந்து உங்களை சுற்றிலும் தான் இருக்கிறார்கள்!

நாம் பெற்ற வெற்றிக்கு உலகம் கூறும் காரணம், உழைப்பா அல்லது அதிர்ஷ்டமா என்பதை அடுத்து வரும் வெற்றி அல்லது தோல்வி தீர்மானிக்கிறது !

 • அறிவியல், ஆராய்ந்த பின் நம்ப சொல்கிறது..ஆன்மிகம், நம்பிய பின் ஆராய சொல்கிறது..


 • நம் மனது நியாயங்கள் தேடி அலைந்தால், நம் செயல் நிச்சயம் தவறானதே!குங்குமத்தில் பிரசுரமான என் ட்வீட்கள்  - 

மடக்கி மடக்கி எழுதுவதெல்லாம் கவிதை என்றால், எனக்கு பிடித்த முதல் கவிதை -- உன் வீட்டு முகவரி!

மகிழ்ச்சியாய் இருக்க சிறந்த தருணம் எது என்று யோசிக்கும் போதே, 'இதோ- இதை நீ யோசிக்கும் இந்த நொடி தான்!' என பதில் தருகிறது மனசு!

"ட்வீட் எடு கொண்டாடு!"
இது என் நண்பர் அறிவு @arivucs இன் கீச்சு!


Sunday, 15 July 2012

திரை விமர்சனம்

இது என்னோட வெற்றிகரமான 41 வது பதிவு!
ஆனா, இது வரைக்கும் ஒரு திரை விமர்சனம் கூட எழுதினதில்ல. நானெல்லாம் ஒரு தமிழச்சியான்னு உங்க ரத்தம் கொதிக்கனுமே? எனக்கு கொதிக்குதுங்க, உள்ளுக்குள்ள..

இப்போ நான் எழுதபோற பட விமர்சனம், நீங்க ஏற்கனவே பார்த்த படமா கூட இருக்கலாம். ஆனா, நான் கடைசியா பார்த்த படம் இது தான். அதனால இதையே விமர்சனம் பண்றேன் -


படத்துல வர்ற கேரக்டர்கள் -

நாயகன் - நம்மாளு, பெண்களை - 'சூப்பர் பிகர்', 'சுமார் பிகர்' மற்றும் 'அட்டு பிகர்' என நேர்த்தியாக பாகுபடுத்தும் வேலையை நண்பர்களோடு சேர்ந்து செய்கிறார். அவர் கண்களில் படித்து கொண்டிருக்கும் நாயகி பட, விடாமல் அவர் போகும் இடமெல்லாம் சென்று பாட்டு பாடி மனசை கரைக்கிறார்.

நாயகனின் நண்பன் - இவரை காதலுக்கு உதவுவதற்காகவே, அவர் வீட்டில் 'நேர்ந்து' விட்டிருக்கிறார்கள். எத்தனை அசிங்கப்பட்டாலும், அவமானப்பட்டாலும், கூச்சமில்லாமல் த்யாக உள்ளதோடு உதவி செய்கிறார், பின்னால் நின்று டான்ஸ் ஆடுகிறார், கடைசியில் வில்லனிடம் செம அடி வாங்குகிறார்.

நாயகி - இவர் கொஞ்சம் லூசு ! இவரோட பேர் மட்டுமில்ல, முகம் கூட சில வினாடிகளே வர்றதால மனசுல நிக்கல..ஆனா அதிக முறை காட்டப்படர இன்ன பிற விஷயங்கள் பற்றி இந்த ப்ளாக் ல பேசமுடியாது! (நம்ம கம்பெனி கொஞ்சம் டீசன்ட்டு). எப்டியோ காதல் வருது..

பெற்றோர்கள் - நாயகனின் பெற்றோர்கள் ரொம்ப நல்லவங்க. எப்டினா, படத்துல அப்பா பையனோட சேர்ந்து சரக்கடிப்பார். அம்மா சைடு டிஷ் கொண்டுவருவாங்க. முக்கியமா, 'அந்த பொண்ண என்ன ஆனாலும் கைவிட்டுடாத!' ன்னு சொல்லி அவனுக்கும் ஒரு லட்சியத்த(?) உருவாக்கறாங்க.

பெண்ணோட பெற்றோர் -இவர்கள் கெட்டவங்க. பொண்ணு தான் விரும்பிட்டாளேன்னு நினைக்காம, நிலையான வேலையில்லாத, நித்தம் சரக்கடிச்சு மட்டையாகும் ஒரு துடப்பக்கட்.. யை விரும்புவதா என்று அர்த்தமில்லாமல் கோவப்படுகிறார்கள். பணக்கார திமிர்தான், வேற என்ன?

வில்லன்- இவன் மார்கெட்டுக்கு வர்ற நாயகனோட தங்கைய கைய பிடிச்சு இழுக்கறான்.. இதே தானே ஆரம்ப காட்சில நாயகனும், நாயகிய பண்ணினான்னு கேட்காதீங்க. நாயகிக்கு அண்ணன் இல்ல. இந்த பொண்ணுக்கு இருக்கு. கடைசியில இந்த வில்லன் ஒரு அரசியல்வாதியோட தம்பி.. (சாரி, ஒரு ரவுடியோட மச்சான். சரி. ரெண்டுல எதோ ஒண்ணு )

சண்டை காட்சிகள் ஏராளம். ஆனால், பாவம் நம்ம ஹீரோ commerce group எடுத்து படித்ததால், நியூட்டன் பற்றி தெரிந்திருக்கவில்லை. புவியீர்ப்பு விசை, வீசம் என்ன விலை என்று கேட்கிறார். இருந்த இடத்திலிருந்து அப்படியே உயர பறந்து, பத்து பேரையாவது அடித்து விட்டு கிழே இறங்குகிறார்..வில்லனின் ஆட்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் பழக்கத்தை நமக்கு கற்றுத் தருகிறார்கள்.

பாடல்கள் : வசனம் அல்ல பாடல்கள் தான் என்று அவர்கள் ஆட தொடங்கும் போது புரிகின்றது. நாயகி, கொளுத்தும் சென்னை வெய்யிலில் ஜீன்சும், பனி மலைகளில் அரைகுறை ஆடையும் அணிகிறார்! (அதான் லூசுன்னு சொல்லியாச்சே?) இது தவிர ஒரு சோக பாடல் இருக்கின்றது - முதல் முறை கேட்கும் போது, நான் நாயகனுக்கு வயிற்று வலி தான் என நினைத்துவிட்டேன், ரொம்ம்ம்ம்ம்பவே முக்கி முக்கி பாடுகிறார்.
படத்தின் கதையை யாரோ ஒரு ட்விட்டர் தான் எழுதியிருக்க வேண்டும்.. 2 வரிகளுக்குள் வருமாறு யோசித்திருக்கிறார்.

காதலின் மகத்துவத்தையும், பணம் இல்லாமல் கூட இருக்கலாம் - குணம் இருந்தால் போதும்ன்னு கடைசி சீன்ல எல்லாரும் புரிஞ்சுக்கறாங்க. (குணத்த வச்சு கத்திரிக்கா வாங்கறதா ஒரு காட்சி வச்சிருக்கலாம் - இது என்னோட ஆதங்கம்). உபரியா, ஜாதி-மதம்-ஊழல் எல்லாம் ஒழியும் போது தான்  நம்ம நாடு (தமிழ் சினிமாவும்) உருப்படும்னு ஒருமாதிரியா புரிஞ்சுக்கறோம்...

ஆங்!! படத்தோட பேரு விட்டுட்டேனே ? யோசிச்சு பார்த்தேன்.. ஒரே குழப்பம். நிறைய பட பேர் ஞாபகத்துக்கு வருது.. ப்ளீஸ், நீங்களாவது சரியான டைட்டில் கண்டு பிடிச்சு எழுதுங்களேன்.
Friday, 13 July 2012

எனக்காக இது கூட செய்ய மாட்டியா?

எங்கள் வீட்டு தொலைக்காட்சியில் ஒரு நாடகம் போய்கொண்டிருக்கிறது - அதில் ஒரு காதலி, தன் காதலனை எதற்காகவோ, "எனக்காக இது கூட செய்ய மாட்டியா?" என்கிறாள். அங்கே தொடங்குகிறது என் பிளாஷ்பேக் மற்றும் இந்த பதிவு !!

Madhubala - Ek Ishq Ek 12th July 2012 Video Watch Online
                            

கல்லூரி முடிந்ததும் நானும் வேலைக்கு போவேன் என்று அடம் பிடித்து பெட்டியை கட்டிக்கொண்டு சென்னைக்கு வந்தாயிற்று.(தமிழ் படங்களில் வருவது போல எனக்கும் ஒரு மாமா சென்னையில் இருந்தார்(இருக்கிறார்)!).

சொற்ப சம்பளத்தில் ஒரு வேலையும், அதைவிட சொற்பத் தேவைகளும் இருந்த அழகிய காலகட்டம்.

எங்கள் அலுவலகத்தில் பெரும்பாலும் திருமணமாகாதவர்கள் தாம். ஒன்றிரண்டு காதல் ஜோடிகளும், மற்ற அனைவரும் நல்ல நண்பர்களாகவும் இருந்தோம். பெண்கள் கல்யாணம் வரையிலும், பையன்கள் வேறு நல்ல வேலை கிடைக்கும் வரையிலும் அங்கே ஒட்டிக் கொண்டிருப்பது, அந்த கம்பெனியின் எழுத படாத சட்டம்.


மதிய உணவு இடைவேளைகளில், எங்களுக்கான வரன் தேடல்களையும், ஆண் நண்பர்களின் இன்டெர்வியு கதைகளையும் சேர்த்தே கொறித்துக்  கொண்டோம். இப்போதும் சொல்வேன் - நண்பர்கள் நிறைய இருப்பவர்கள் சிடுமூஞ்சியாக இருப்பதில்லை. (அல்லது சிடுமூஞ்சிகளுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பதில்லை). அவர்கள், 'என்ன கன்றாவி ஹேர் ஸ்டைல் இது?' என்றால் நமக்கும், 'ராமராஜன் கிட்டயிருந்து பழசு-பட்டு வாங்கி வந்துட்டியா?' என்றால் அவர்களுக்கும் கோவம் வருவதில்லை..மாறாக, இப்படி சீண்டப்படுவதை மனம் ஒருவகையில் எதிர்பார்கின்றது..


எல்லாருமே நல்ல நண்பர்கள் தான் எனினும், அவரவர்கென்று விசேஷமான நண்பர்களும் உண்டு! எனக்கும் ஒரு அப்படி ஒரு நண்பன் வாய்த்தான்.. ஒருவரை திட்டிக்கொண்டே நேசிக்க முடியுமா? முடிந்தது. ஒரு நாள் கூட எங்கள் பேச்சு சண்டையில் முடியாமல் இருந்ததில்லை.. அதற்காக அடுத்தநாள் பேசாமல் இருக்க முடிந்ததும் இல்லை. எல்லாவற்றிலும் ஒரு மாற்று கருத்து இருந்தது அவனுக்கு! எமகாதகன்.

மற்றுமொரு நண்பர் குழாம்-- என் பிரியத்துக்குரிய தோழியும், அவளது நண்பனும்.. இவர்கள் ideal நண்பர்கள்..இவர்கள், சண்டை போட்டு பார்த்ததேயில்லை. ஆனால், அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது.. ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறையும், வெளியே போய் புகை பிடித்துவிட்டு, ஹீரோவின் அறிமுக காட்சிபோல் புகைமண்டலத்தின் நடுவில் இருந்து வருவான். என் தோழி அவனை மாற்ற 'பகீரத' பிரயத்தனம் பண்ணிக்கொண்டிருந்தாள்.. ஒரு வழியாக என் தோழியின், 'எனக்காக இது கூட செய்ய மாட்டியா? 'வில் விட்டும்விட்டான்.

இதை பற்றி பேசி என் 'எமகாதக' நண்பனிடம் சிலாகித்து கொண்டிருந்தேன். பொறுமையாக கேட்டுக்கொண்டு, கண்களை நேரே பார்த்து -
 'பெண்கள் emotional blackmail செய்வதில் வல்லவர்கள்!' என்று பேரதிர்ச்சி தந்தான்.
நான், பெரிய பெண்ணியவாதி இல்லைதான். இருப்பினும், குறைந்த பட்ச மான-ரோஷம் இருக்கே? அன்றைய சண்டை ஆரம்பமானது..
முடிவாக நான், 'அப்படியே பெண்கள் ப்ளாக்மெயில் பண்ணுவதாகவே இருக்கட்டும், அதனால் விளைவது நன்மைதானே?' என்றேன். அதற்கு நண்பன், 'இந்த மாற்றம் நிலையானது இல்லை. அவர்களுக்குள் சின்ன சண்டை வந்தாலும், பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு திரும்பவும் புகை பிடிப்பான்' என்றான்.


அப்படியே அட்சரம் பிசகாமல் நடந்தது. நம்புவீர்களா?

இன்று உலகின் வெவ்வேறு அட்சய- பூமத்திய ரேகைகளில் பிரிந்து இருக்கிறோம்.. யாராவது ஒரு பெண்-ஏதேனும் ஒரு நிகழ்வு, என்னை அவனுக்கு நினைவுப்படுத்துமா?? தெரியாது! தெரிந்து கொள்ளவும் வேண்டாம். ஆயினும், எங்கே - எப்போது 'எனக்காக இது கூட செய்ய மாட்டியா?' வை, யார் சொல்லிக்கேட்டாலும் நினைவு பின்னோக்கி போய்விடுகிறது..

யாரையும், யாராலும் மாற்ற முடியாது; அவர்களாக மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளாத வரை!! - இதை, அன்று கடைசி வரை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.. இப்போது, கடைசி வரை நினைவில் வைத்திருப்பேன் என தோன்றுகிறது.

இன்று பதிவு எழுதுவதற்கு முன், என் கணவரிடம், "எனக்காக எதையாவது மாற்றிக்கொண்டிருக்கிறீர்களா?" என்று கேட்டேன். கணினியில் இருந்து கண்ணை எடுக்காமல், "ம்ம்?" என்கிறார். மீண்டும் கேட்டேன். இம்முறை, 'ம்ம்' கிடைக்கவில்லை- விடை கிடைத்து விட்டது!

Tuesday, 10 July 2012

Tips for a wannabe poet. (கவிஞனாவது எப்படி?)

Its quite so boring to see the world filled with professional men like Doctors, Engineers, Bankers and not to forget the Software guys (Can someone tell me why every alternative person on earth writes software?). So I've decided to make the planet interesting by introducing POETS!

All the tips (or ground rules, to be exact) are free of cost! But, I don't mind if you spread news about my philanthropy or my blog. 
                                            

Now, go on - read, follow and rock the world!

1. Shopping first : Please go to FabIndia and choose a kurtha in the dullest possible colour. Be careful in not buying more than one.Otherwise the ladies at home may wash it without your knowledge! I hope you have some worn-out jeans to match it with. If not, ask your mom the whereabouts of your dead-rat smelling old jeans (most possibly she would have exchanged it for some utensils) and get it back.        
Don't forget to add 'Jolna' bag to your shopping list. Soon you are going to fill it with papers and books.


2. Get that look! Have you seen cancer struck 'Kamal' in 'Vazhve maayam'? That's exactly how a Poet  should look. Never cut your hair, never apply oil and make sure you grow beard and mustache. Initially people would ask whether you are suffering from Pneumonia or cholera or some other deadly disease. (Sometimes they may even think you have HIV + ve)

        Silly people! We are here to say - "I DON'T CARE WHAT THE WORLD THINKS OF ME"


3. Reason it ! Now that you look like a poet, lets find why you have become a poet in the first place. Grab a reason - Love failure, Corruption in the country, Sri Lankan war - to name a few. ( Look at the opposition party's news paper and choose your reason )

4. Be Serious: Forget smiling. After all, you are fuming inside with anger. Don't look at anyone in their eyes. Keep counting the stars when they are talking to you (even if there is day light).

5. Walk the talk: Tell people how you get irritated at stupid talks. You are after all a genius. Let them not talk about power-cuts or price rise or vegetable rice!

6. Quote from memory! Try to memorize famous poems and quotes. Tell them when no one is expecting it. For example if your mom wants to know whether you are going to office, tell her this -
                      Two roads diverged in a wood, and I-
                   I took the one less traveled by,
                   And that has made all the difference.

7. Practice makes it perfect : Grab a four-line notebook from your child and start practicing cursive -writing. Have you ever heard of a poet with bad hand writing? No Way!

                                          

8. Choose a place: Please be available on near-by park at week ends. (You can be there at week days also, but no one would notice) Sit at a most isolated place and watch the children playing. Now you are allowed to smile but in general direction.

9. Time for a payback! How many times women at home irritated you? We will take a revenge now - Just keep adding all the used coffee mugs in your room. Throw crushed papers in every possible directions and litter your clothes, especially the inner wares. Poet and Cleanliness - are like Lion and Dolphin, can't be in the same place!

10. Did I forget something?? Oh! ya- the actual 'poems'. Write something which ends/begins rhythmically. Wait, I will give you some example - 
I bow my head and
I saw my bed
It was actually red.           Like it?

If Jack and Jill went on to become the world's most uttered poem, why not yours??

All the best!! Don't forget to give special thanks to me while giving interviews to media. 

With Love
Vigna
:)
Statutory Warning : Sending your poems to me or to my blog is strictly prohibited. (But, I would advice you to send it to actor Dhanush or his brother)


  

Saturday, 9 June 2012

நான் ஏன் ??

சில கேள்விகளுக்கு பதில் ஒரு வரியில் சொல்லிவிட முடிவதில்லை. நினைவுநாடாவை சுழலவிடவேண்டியதான கட்டாயம். என்னை நோக்கி வீசப்பட்ட ஒரு கேள்விக்கான பதில் இதோ -

அப்போது நான் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். வாழ்கையில் ப்ராஜெக்ட் - வைவா என்பதை தவிர, புதிதாக எதுவும் சம்பவிக்காத அசுவாரஸ்யமான காலகட்டம்.

ஒரு நாள் கல்லூரியில் இருந்தது வீடு திரும்பி, அம்மா கொடுத்த தேநீரையும் புத்தகங்களையும் எடுத்து கொண்டு மொட்டை மாடியில் படிப்பதற்கு ஆயத்தமானேன். அப்போது தான் அவரை முதல் முதலில் பார்த்தேன்.(மணி 5 இருக்கலாம். புதன் கிழமை என்று நினைவு) அப்பா தான் அவரை அறிமுகப்படுத்தினார். வந்தவர் சுமார் 25 வயது மதிக்க தக்கவராய் 'பகல் நிலவு' முரளியை நினைவுபடுத்தும் கலையான முகத்துடன் இருந்தார். இன்னும் சரியாக சொல்லபோனால், என் வீட்டின் கூடத்தில் முதல் முதலாய் கைலி கட்டிய ஒருவரை காண்கிறேன். (இந்நாள் வரை என் அப்பாவோ, தம்பியோ கைலி கட்டுவதில்லை.)

5 நாட்கள் சேர்ந்தார்போல் வீட்டில் இருந்தார். அவர் வந்ததும் என் ரூமில் இருந்த சாமான்கள் வெளியே தூக்கி வீசப்பட்டன. ஆரம்பத்தில் இது குறித்து மிகுந்த கோவம் வந்தாலும், என் தம்பி சாமானும் சேர்ந்து வெளியே வந்ததில் மனம் சமாதானமடைந்தது. வீடே அவர் வந்ததால் அமளி-துமளி பட்டது..

உண்மையில் எனக்கு கரப்பான்பூச்சிஎன்றால் மிகுந்த பயம். ஆனால் வந்தவர் முன் அதை காட்டிக்கொள்ளாமல் திடீர் தைரியசாலி ஆனேன். ஒவ்வொரு நாளும் கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் போது ஒரு புது வித எதிர்பார்ப்பு முளைத்தது.  என் வீடே எனக்கு புதுவித தோற்றத்தையும், அனுபவத்தையும் தர ஆரம்பித்தது..'துளி துளியாய் அழகானது வீடு!' என்றெல்லாம் கவிதை போல எதோ தோன்ற ஆரம்பித்தது.

ஆனால் இதெல்லாம் 5 நாட்களுக்கு தான். அவர் போய்விட்டார். பழையபடி என் வீடு இல்லை என்பது மட்டும் புரிந்து போனது..ஆம்! அவர் விட்டு போன வாசம் - வீடெங்கும்; என் வீட்டை தாண்டும்போதும்..

அன்றுதான் எனக்கே என் பிடித்தம் பற்றிய புரிதல் வந்தது.
=====================
உங்களுக்கு குமுதம் வாசிக்கும் பழக்கம் உண்டென்றால் - சினிமா நடிகை எதிர்கொள்ளும் கேள்விகளை கவனித்திருக்கிறீர்களா? அவை இவ்வாறு இருக்கும் -
"நீங்க இந்த துறையை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?"
"நடிகை ஆகாவிட்டால் என்னவாகி இருப்பீர்கள்?"
"முதல் முதலில் நடித்த காட்சி பற்றி சொல்லுங்களேன்.." (அந்த நடிகையும் நான் எட்டாம் கிளாஸ் படிக்கும் போது, ஜூலியா ராபர்ட்ஸ் படம் பார்த்து..என பேட்டி அளித்திருப்பார். உண்மையில் அவருக்கு சாம் ஆண்டர்சன் பட நாயகியை பார்த்து நாம் கூட நடிக்கலாம் போலிருக்கே என தோன்றியிருக்கும்!)

என்ன? சம்பந்தாசம்பந்தம் இல்லாம இருக்கிறதே என்கிறீர்களா? இருங்க, வர்றேன்,

ஒரு நாள் நான், அகஸ்மாத்தாக தஞ்சாவூர் ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டென்று சொல்ல, அதை அப்படியே பிடித்துக் கொண்ட நண்பர், என் ரேஞ்சு தெரியாமல்
"நான் ஏன் இதை தேர்ந்தெடுத்தேன்?"
"எப்போதிலிருந்து இந்த பெயின்டிங் ஆர்வம்? "என்றெல்லாம் கேட்கிறார்.

நானும் ஒரு நடிகை போல் பாவித்துக்கொண்டு பதில் கூற தீர்மானித்ததில் இந்த பிளாஷ்பேக் கிட்டியது.
ஆம். நான் வரைவதற்கு அன்று வந்த நபர் தான் காரணம் என்று கண்டுபிடித்துவிட்டேன். இன்று அவர் வேறு யார் வீட்டிலோ கைலி கட்டிக்கொண்டு பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கலாம். ஆனாலும், அவர் என் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம் அளவிடமுடியாதது!!

---------------

நீங்க, வேற ஏதேதோ நினைச்சிருந்தா அதுக்கெல்லாம் நான் ஜவாப்தாரி ஆக முடியாது. பதிவ முதலிருந்து இன்னொரு முறை படிச்சிக்கோங்க! :)

Wednesday, 2 May 2012

ஒரு கதை !

இது சுஜாதா சாரோட கதை. இணையத்தில் சாரை வாத்தியார் என்று அழைக்கிறார்கள். எனக்கும் இது பிடித்திருப்பதால் இனி இது 'வாத்தியாரோட' கதை.

கதைக்குள் நுழைவதற்கு முன் - 
பொதுவாக எனக்கு கதைமாந்தர்கள் பெயர்கள் நினைவில் நிற்பதில்லை(அமரர் கல்கியின் படைப்புகள் மட்டும் விதிவிலக்கு.)இதற்கு நிறைய படிப்பது என்று நானே புத்திசாலிதனமான காரணம் தேடிக்கொண்டாலும்,உண்மை எனக்கு இன்னும் கவனம் போதவில்லை என்பதே. இந்த கதையிலும் பெயர்கள் நினைவில் இல்லை. ஆனால் கதை மட்டும் பிடிவாதமாக மூளையில்.(அப்படியாவது எழுதியாக வேண்டுமா என்றால், இதை பதிய ஒரே காரணம் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதே! )

இனி கதை -

                                                 விரும்பி சொன்ன பொய்கள் 

சர்கஸில் வேலை செய்யும் ஒரு ஆசாமி தான் நம் கதையை நகர்த்த போகிறவன்.அவன் பெயர் மட்டுமல்ல உருவ வர்ணனைகள் கூட நமக்கு அவசியமற்றது. ஆனால் அவசியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது - அவன் செய்யும் வேலை. நம்மாள் வில் வித்தையில் இன்னொரு அர்ஜுனன்.தினமும் மூன்று ஷோவின் போதும் ஆப்பிள் முதல் இன்ன பிற சாமான்கள் தலையில் வைத்திருக்கும், ஜிலு-ஜிலு உடையணிந்த பெண்ணின் மேல் அம்பு எறிய வேண்டும். அம்பு சாமானை மட்டுமே தொட வேண்டும். செய்தான். அன்றோருநாளை தவிர! அவன் காதலை  அவள் நிர்தாட்சண்யமாக நிராகரிக்க, அவன் கோவம் அம்பாக அவள் மீது பாய்ந்தது.

ஆனால் அவள் சாகவில்லை.முடிவு - இரண்டாண்டுகள் சிறைவாசம். திரும்பி வந்ததும் சர்கஸ் முதலாளியிடம் போய் நின்றான். வேறு வேலை அவனுக்கு தெரியாது (அல்லது தெரியாது என்பதை மட்டும் நம்பினான்.)அவர் அவனை ஒரு வாரம் கழித்து வர சொல்கிறார். திரும்பவும் சர்கஸில் சேர்க்க இயலாத காரணத்தை சொல்லி, அவன் முன்கதை தெரிந்த ஒரு பணக்கார முதலாளியிடம் சேர்த்து விடுகிறார்.இப்போது, அவனுக்கு மதுரையில் ஒரு குடோனில் வேலை. என்ன  வேலை, அது அவனுக்கு பிடித்திருக்கிறதா என்பதை விட, அவன் முதலாளி யார் என்பதை தெரிந்து கொள்வோம்.

முதலாளி, அறுபதுகளின் தொடக்கத்தில் இருக்கும் மிகுந்த பணக்காரர் (அப்டிதான் இருக்க வேண்டும். ஏனெனில் அவருக்கு மதுரை குடோன் பக்கம் வருவதற்கு நேரம் இருக்கவில்லை. எப்போதாவது வருடத்திற்கு ஒரு முறை வந்து போகிறார்!) 

ஒரு நாள் முதலாளியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. தன் மனைவி அங்கு வருவதாகவும், மதுரையை சுற்றி காட்டுமாறும் பணிக்கிறார். அவன், ஒரு வயதான குண்டு அம்மணியை எதிர்பார்த்திருக்க, தேவதை போல ஒரு இளம் பெண் படு மாடர்னாக காற்றோட்டமான உடையணிந்து (மதுரைக்கு அது ரொம்பவே ஓவர்!)விமானத்தில் வந்து இறங்குகிறாள்.

மதுரையில், கோவிலை தவிர எல்லா இடங்களுக்கும் ஷாக் அப்சார்பர் இல்லாத டிவிஎஸ் 50 யில் சுற்றுகிறார்கள். காதல் போல எதோ ஒன்று அவனுக்கும் TVS 50 ஐ விட வேகமாக வருகிறது. பெரும்பாலும் மரணம் மற்றும் தற்கொலை பற்றியே பேசுகிறாள். பிடிவாதமாக அவன் மேன்ஷனுக்கு வந்து சுவரில் மாட்டி வைத்திருக்கும் வில்-அம்பை பரிசாக கேட்டு பெறுகிறாள். 

கடைசி நாளன்று, மதுரையிலிருந்து தள்ளி இருக்கும் கடற்கரையோர கிராமத்திற்கு செல்கிறார்கள். அன்றிரவு அம்மாவாசை இருட்டில், நட்சத்திரங்கள் கண்சிமிட்டி கிண்டலடிப்பதை பொருட்படுத்தாமல் அலைகளை காவல் வைத்து ஒன்று சேர்கிறார்கள்.(கண்டுகாதீங்க. வாத்யார் கொஞ்சம் ரகளையான ரசனைகாரர்)

மறுநாள் அதிகாலையில் மறுபடி விமானம். செல்லும் முன் ஒன்றை சொல்கிறாள் - என்ன காரணம் கொண்டும் தன்னை அழைக்க கூடாதென்றும், வேண்டுமானால் தானே அழைப்பதாகவும் கட்டளை போல தெரிவிக்கிறாள்.

அன்று முதல் அவன் பித்துபிடித்தவன் போலாகிறான். எப்போது கூப்பிடுவாள் என்று ஒவ்வொரு மணித்துளியும் ஏங்குகிறான். அந்த அழைப்பு ஒரு ஆறு மாதம் கழித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட ஞாயிற்று கிழமையில் சென்னையில் உள்ள கடற்கரை பங்களாவில் வந்து சந்திக்க ஏற்பாடாகிறது..
மறுபடியும் அவள் மற்றும் கடல்!!(இம்முறை அவனுக்கு வருவது காதல் இல்லை மற்றொரு மூன்றெழுத்து கா.)அதே அனுபவத்திற்காக அவன் துடிக்க, வாசலில் எதோ அரவம் கேட்கிறது. அவள் கணவர் வந்து விட்டதாக கூறி அவனை போக சொல்கிறாள்.

அன்றிரவு அந்த பணக்காரரின் மனைவி அம்பால் குத்தப்பட்டு இறக்கிறாள்.

கதைக்குள் இன்ஸ்பெக்டர் பாலா வருகிறார். நமது வில்லாளியை கைது செய்கிறார். சந்தர்பம்,சூழ்நிலை,கைரேகை இத்தாதி இத்யாதி எல்லாம் சரியாக இருந்தும் அவர் மனம் வில்லாளியை கொலையாளியாக பார்க்க மறுக்கிறது..

அவனிடம் நடந்ததை முழுமையாக கேட்டறிகிறார். இப்படி இருக்கலாமோ? அவர் மனம் ஒரு புதிய கோணம் காட்டுகிறது - நடந்தவை எல்லாமே நாடகம். பணக்காரரின் மனைவி போல வந்தவள் ஒரு நியமிக்கப்பட்ட கால் கேர்ள்.எலிக்காக வைக்கப்பட்ட மசால் வடை.சம்பவம் நடந்த அன்று வில்லாளி சென்றப்பின் உண்மையான மனைவியை கொலை செய்கிறார் பணக்காரர். (அதாவது அவன் பார்த்து பழகிய பெண், முதலாளியின் மனைவியல்ல. அவ்வாறு அவன் நம்ப வைக்கப்படுகிறான்)

உண்மையை அறிய பாலா அவனை அழைத்து கொண்டு பணக்காரரின் வீட்டுக்கு விரைகிறார்..அங்கே சவபெட்டியின் கடைசி ஆணி அடிக்கப்படுகிறது..
அதை திறக்கச் செய்து அவர் கேட்கும் கேள்வி - " நீ பார்த்தது இவளையா?"
--------------------------------------
பின்குறிப்பு - இந்த கதை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால், அதற்கு முழுக்க நானே பொறுப்பேற்கிறேன். கதையின் கரு மட்டுமே நினைவில் இருப்பதால் என் பாணி கதை செலுத்துதலில் உள்ள பிழை. மன்னிக்கவும்..
பிடித்திருந்தால் புகழ் வாத்யாருக்கே..


இக்கதையின் முடிவை ‘ஆம்’ ‘இல்லை’ என்ற வார்த்தைகளில் வாசகர்களிடமே விட்டு விடுகிறார் சுஜாதா. அதனால் தவறாமல் புத்தகத்தை வாசிக்கவும். (பிறகு வந்து திட்டலாம்) 


Saturday, 21 April 2012

எதுக்கு இத்தனை கொலைவெறி?

என்னோட ரெண்டரை வயது குட்டி பையனோட பேரு ஷ்யாம். அழகான பால் வடியும் முகத்தோட அவன் பண்ற குறும்பு இருக்கு பாருங்க? அத ஒரு பதிவுல போட முயற்சி பண்ணிருக்கேன்.(நான் எவ்ளோ எழுதினாலும் அவன் செய்யறதுல அது நாலுல ஒரு பாகமா தான் இருக்கும்)

பொதுவா அவன் பண்ற விஷமங்கள நாலா வகைபடுத்தி வச்சிருக்கேன்.
1) Life threatening - கரெண்ட் சம்பந்தப்பட்ட குறும்புகள், மொட்டை மாடிலேருந்து எட்டி பாக்கறது, கார்க்கு வெளியே கைய திடிர்ன்னு நீட்றது, வீட்டுக்கு வந்த யாராவது கேட்ட திறந்துவச்சிட்டு போயிட்டாங்கன்னா ரோட்டுக்கு ஓடிடறது..  - இதெல்லாம், இந்த category க்கு கீழ வரும். நாம செய்யற வேலைய( அது எதுவாயிருந்தாலும்) போட்டது போட்டபடி ஓடிபோய் தடுத்து நிறுத்த வேண்டிய விஷமங்கள்.

2) Replaceable damage - என் பொண்ணு நாளைக்கு பறிச்சுக்கலாம்ன்னு வச்சிருக்க ரோஜா பூவ ஸ்ரத்தையா இன்னிக்கே இதழ் இதழா பிச்சு போடுவான். அவங்க அப்பா லேப்டாப் திறந்திருந்ததுனா அவர் விட்டுட்டு போன code அ அவன் எழுதி முடிச்சிடுவான். ஏதாவது ஒரு பைப்பை திறந்துவிட்டுட்டு போய்டேருப்பான். (பவர் கட் சமயத்துல தண்ணி இல்லைங்கறது எவ்ளோ கஷ்டம்ங்கறது குடும்பத்தலைவிக்கு தான் தெரியும்..) இத போல விஷமங்கள் கொஞ்சம் சரிபண்ண கூடியதுங்கரதால விழுந்து அடிச்சு போக தேவையில்ல..

3)Irreplaceable damage - லைப்ரரி புக்க ஒரு கை பாக்கறது, நாம கையெழுத்து போடவேண்டிய பொண்ணோட ரேங்க் கார்ட்ல நமக்கு முன்ன போடறது - இதெல்லாம். (எதோ கொஞ்சம், அவங்க அப்பா கையெழுத்து அப்படி இப்படி இருக்கறதால மிஸ்ஸுக்கு வித்யாசம் தெரியல..) நாம அட்டென்ட் பண்ற வேகமும் - damage ம் inversely proportional ஆ இருக்கும்! 

4)Minimal. - இது கொஞ்சம் போனா போகுது ரகம்.  சுவத்துல கிறுக்கறது, கண்ட எடத்துல தண்ணிய ஊத்தி வைக்கறது - இதெல்லாம் இதுல சேர்த்துக்கலாம்.
அதிலும் அரிசிய குட்டி கையால அள்ளி வரிசையா எல்லா பாத்திரத்து மேலையும் அட்சதை தூவி கல்யாணம் பண்ணிவச்சிடுவான்!!

அவன் பெரியவனானதும் அவன நம்பி நீங்க பொண்ணு கொடுக்கலாம். மனைவி துணியும் சேர்த்தே துவைச்சு கொடுத்திடுவான். எப்பவும் எதையாவது போட்டு தண்ணிக்குள்ள முக்கி-முக்கி எடுத்துகிட்டே இருக்கான். என்ன ஒண்ணு?- இப்போதைக்கு செல்போன், வாட்ச், டிவி ரிமோட், ரூபா நோட்டுன்னு ஒண்ணையும் விட்டு வைக்கறதில்ல..

ஒரு முறை ஊருக்கு போக bag எல்லாம் ரெடி பண்ணியாச்சு..இவன் அது மேல உட்கார்ந்து விளையாடிட்டு இருந்தான். எனக்கும் கிளம்பற அவசரம்..கடைசியில பார்த்தா அத்தன துணியிலும் உச்சா போய் வச்சிருக்கான்.இத அப்படியே எடுத்து போய் போட்டுகிட்டா என்னைத்தான தப்பா நினைப்பாங்க?? ஒரு வாரமா பிளான் போட்டு எடுத்து வச்ச துணியெல்லாம் விட்டுட்டு, எதெல்லாம் 'வேண்டாம் லிஸ்ட்' ல இருந்ததோ அத மட்டும் அவசர அவரசமா பாக் பண்ண வேண்டியதாச்சு!! ஊர்ல போய் பார்த்தா சுடிதார்க்கு டாப் இருந்தா பாட்டம் காணும். ரெண்டும் இருந்தா துப்பட்டா இல்ல..ச்சே.நொந்துட்டேன். 

வீட்ல எல்லா எலெக்ட்ரானிக் சாமான்களும் குத்துயிரும்-குலை உயிருமா இருக்கு. இப்போ வரைக்கும் என் லேப்டாப் ல  கமா (,) வேலை செய்யாது. நான் மொத்தமா டைப் பண்ணிட்டு கமா போடவேண்டிய இடத்துக்கு காபி-பேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்..இன்னும் செல்போன் க்கு எல்லாம் இது எத்தனாவது புனர்ஜென்மம்ன்னு கணக்கே இல்ல..

அப்புறம் பிரிட்ஜ் கிட்ட வந்தான்னா கவிஞர்கள் பாடற மாதிரி அந்த எடம் முழுக்க பாலாறா ஓடும். சமயத்துல பாலும் தயிரும் கலந்து கூட ஓடும். ஒரு தடவ horlics மொத்தத்தையும் பால்ல கலக்கினதுல, எங்க வீட்டு வழியா போனவங்களுக்கு கூட அன்னிக்கி horlics மரியாத!

வீட்ல எவ்ளோ newspaper கிடந்தாலும் பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்னு அவன் அக்கா புஸ்தகத்த எடுத்து கிழிப்பான். அப்புறம், அவ அழ ஆரம்பிச்சா அவளே நிறுத்தணும்னு நினைச்சாலும் முடியாது..

இத எல்லாத்தையும் கூட பொறுத்துக்கலாம், ஆனா வீட்ல அவனுக்கு சப்போர்ட் அதிகம்கரதால அவன் பண்ற குறும்பு எல்லாத்துக்கும் நான் தான் பதில் சொல்லியாகணும். இன்னும் சாப்பாடு ஊட்டணும்னா வீட்ட சுத்தி 108 தடவ ஓடியாகணும். (சத்தியமா சொல்றேன், என் BMI ஒரே அளவா இருக்கறத்துக்கு ஷ்யாம் மட்டுமே காரணம்)

இத்தனை பண்ற வீரனுக்கு விழுப்புண் இல்லாம இருக்குமா? இந்த ரெண்டு வருஷத்துல எங்க pediatrician, Maruthi omni லருந்து SX4 க்கு மாறிட்டார்..

ஆமாம்....இந்த இணையத்துல குழந்தைகள அஞ்சு வயசுக்கு மேல தான் ஸ்கூலுக்கு அனுப்பணும்ன்னு எழுதறது யாருங்க? - கொஞ்சம் வீட்டுக்கு வாங்க!
உங்கள தான் கொலவெறியோட தேடிகிட்டு இருக்கேன்.


Monday, 16 April 2012

மாற்றம் மட்டுமே மாற்றமில்லாதது..

ஆங்கிலத்தில் change - the only constant என்று ஒரு quote உண்டு. அதை அனுபவபூர்வமாகவே உணர்ந்திருக்கிறேன். நான் தினம் பார்க்கும் மனிதர்களும், விஷயங்களும் (ஏன் நானும் தான்) மாறி இருப்பது நன்றாகவே தெரிகிறது..

ஒரு மனிதர் -
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு என் பக்கத்துக்கு வீட்டிலிருக்கும் போர்ஷனுக்கு ஒரு பேச்சிலர் குடி வந்தார். அவர் வந்த நாள் முதல் எனக்கு இசை விருந்து தான். அருமையான இசை ரசனை உள்ளவராக இருந்தார். காலை ஆறு மணி முதல், அவர் அலுவலகம் செல்லும் வரை பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் (பெரும்பாலும் ராஜா சார் பாடல்கள்). அவர் போர்ஷனும் என் சமையலறையும் அருகருகே இருந்ததால், நானும் கூடவே ஹம் பண்ணிக்கொண்டு சமையல் செய்வேன். பின்பு மாலை ஆரம்பிக்கும் பாடல்கள் இரவு அவர் தூங்க போகும் வரை தொடரும். இவ்வாறு ஒரு ஒண்ணரை வருடங்கள் போனதில், அவர் சிடிக்களில் அடுத்தடுத்து வரும் பாடல்கள் கூட என்னால் யூகிக்க முடிந்தது..ஆனால், பாடல்கள் பரிட்சயமான அளவுக்கு அவர் எனக்கு அறிமுகமாகவில்லை.. எப்போதாவது நாங்கள் எதிரெதிரே பார்க்க நேர்ந்தாலும் தலையை குனிந்தவாறு போய்விடுவார்.

பிறகு ஒரு நாள் பெண்குரல் கேட்க ஆரம்பித்தது..பாடல்கள் நின்று போய் டிவி சத்தம் (சீரியல்கள் என்று படித்து கொள்ளவும்) ஆரம்பித்தது.இப்போது அதையும் விட அதிகம் ஒலிப்பது சுட்டி டிவி யில் வரும் கீச்சு-கீச்சு குரல்கள்.

இப்போதெல்லாம் ஒரு வயது குழந்தையை கையில் வைத்து கொண்டு, எண்ணை வைத்து படிய வாரிய தலையுடன், கொஞ்சம் பருமனாக, பளீரென்ற திருநீறு பூசி(அதைவிட பளீரென்ற தங்க சங்கிலியுடன்) ஒருவர் தென்படுகிறார். சற்றே மாநிறமாய், ஒல்லியான உடல்வாகுடன், அடர்ந்த கேசம் கொண்ட இளைஞனாக என் மனதில் மசமசப்பாக பதிந்திருந்த அவரா என்று எனக்கே குழப்படியாக இருக்கிறது..

எல்லாவற்றையும் விட கண்களை நேரே பார்த்து புன்னகைக்கிறார். குழந்தையிடம் 'ஆன்ட்டிக்கு ஹலோ சொல்லு..' என்கிறார்..ம்ம்..மாற்றம்!

நான் -
சுஜாதா சாரின் படைப்புக்களை கூர்ந்து கவனித்தால் அவர் ரசனையும், எழுத்தும் அவர் வயதோடு சேர்ந்து அழகாக முதிர்ச்சி அடைந்திருப்பதை பார்க்கலாம். (அடல்ட்ஸ் ஒன்லி சமாசாரம் தூக்கலான நாவல்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், தத்துவம் என்று பயணித்து பாசுரங்களை விளக்குவதில் வந்து முடித்தார்.)

எனக்கும் அவ்வாறே வயதோடு சேர்ந்து ரசனைகள் மாறியிருப்பதை நன்கு உணர முடிகிறது. Mils and Boon நாவல்கள் தலையணை அடியில் மறைத்து படித்த காலம் போய், இப்போது என் லைப்ரரியில் அலமாரி அலமாரியாக அடுக்கி வைக்கபட்டிருந்தாலும் எடுத்து பார்க்க கூட தோன்றுவதில்லை..ஸ்கூட்டியை எதோ பல்சர் போல ஓட்டியது போக, இப்போது சைக்கிள் காரர் ஓவர்டேக் பண்ணாத குறையாக போய்கொண்டிருக்கிறேன். இன்னும் எண்ணெய் உணவுகள், சம்கி உடைகள், மெலோ ட்ராமா சினிமாக்கள் போன்ற பல விஷயங்களில் என் ரசனைகள் மாறியிருக்கிறது..

விஷயங்கள் -
கீழ்கண்ட சமாச்சாரங்கள் மக்களுக்கு சீக்கிரமே அலுக்கபோகிறது என்பது என் அனுமானம்.

ரியாலிட்டி ஷோகள், அழுமூஞ்சி சீரியல்கள், Facebook / ட்விட்டர் வகையறாக்கள் மற்றும் IPL.
சில ரசனைகள் முற்றிலுமாக அழிந்து போனது வருத்தமே - அதில் ஒன்று தமிழர்கள் மறந்து போன (பாடல்கள் தோறும் சினிமாகாரர்கள் நினைவுக்கு மட்டும் வரும்) பாவாடை-தாவணி.

மாற்றம் பற்றின எனக்கு பிடித்த வரிகள் - 'இறைவா, என்னால் மாற்ற முடியாதவைகளை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவத்தையும், மாற்ற முடிந்த மற்றும் வேண்டியவையை மாற்றும் ஆற்றலும், இரண்டையும் பிரித்தறியும் பகுத்தறிவையும் எனக்கு தா!' (தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்)

அம்மாவின் அன்பு மட்டுமே மாறாதது என்பார்கள். இன்னும் சில விஷயம் சேர்க்கலாம் என்று தோன்றுகிறது.

மாறாத ரசனைகள்: பார்க்க - நிலா, யானை, கடல் மற்றும் குழந்தை முகம். படிக்க - பொன்னியின் செல்வன். கேட்க - இளையராஜா.

(உங்கள் பார்வையில் மாறாதது பற்றி பின்னூட்ட(கமெண்ட்ஸ்) பகுதியில் எழுதலாம்)
Friday, 13 April 2012

அவ்வையார் விருது

இந்த வருடம் முதல் 'அவ்வையார் விருது' அளிக்க போவதாக தமிழக அரசு அறிவித்ததும், அதை வாங்க போகும் பெண்மணியின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று நினைத்து சிரித்து கொண்டேன்..இதை சொன்ன போது இலக்கிய ஆர்வம் உள்ள என் நண்பர் கோபித்துக்கொண்டார்..உண்மையில், அவ்வையாரே தமிழ் உலகம் கண்டுகொண்ட முதல் அறிவாளி பெண். இருந்தாலும், இப்போது ஒருவரை 'அவ்வையார்' என்று அழைப்பது நடைமுறையில் மிகுந்த வயதானவர் அல்லது அதிகம் அட்வைஸ் செய்பவர் என்ற பொருளில் இருப்பதால் விருது வாங்குபவருக்கு வேடிக்கையாக இருக்கும் என்று தோன்றியது. என் நண்பருக்கு புரியாத இன்னொரு விஷயம் என்னவென்றால் எந்த பெண்ணுமே பிறர், தன் வயதை விட கொஞ்சமேனும் குறைத்து எடைபோடுவத்தையே விரும்புவாள்..

உதாரணமாக என் அம்மாவோடு புடவை கடைக்கு போனால், 'அந்த டிசைன் வேண்டாம்! அது வயசானவங்க கட்றது' என்பார். (எங்க அம்மாவை 'பாட்டி' என்றழைக்கும் ரெண்டு குழந்தைகள் வீட்டிலிருக்கின்றன) மனதளவில் என் அம்மாவை போல இளமையாக இருக்கும் பெண்கள் தான் பெரும்பாலானோர் என்பது என் நம்பிக்கை.  

இவ்ளோ என்? 'உங்க ப்ளாக் சூப்பர்!' ,' உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் நல்லாயிருக்கு..' - இப்படி அப்பப்போ எனக்கு ஏதாவது compliments கிடைக்கறதுண்டு. ஆனாலும், 'you don't look like mom of two' ன்னு சொல்றவங்கள மட்டும் instant ஆ பிடிச்சு போயிடுது!!

ஒரு வில்லத்தனம் கேளுங்க - எனக்கும், என் எதிர் வீட்டிலிருக்கும் என்னை விட ஒன்றிரண்டு வயது குறைந்த பையனுக்கும் 'தீராத பகை' ஒன்றிருக்கிறது. அவன் முதல்முதலில் என் வீட்டிற்கு வந்த கடிதத்தை கொண்டு வந்து தந்த போது கூரியர் பையன்னு நினைத்து 'எதில கையெழுத்து போடணும்?'ன்னு கேட்டு தொலைச்சேன். அதுக்காக என்னை 'ஆன்ட்டி'ன்னு கூப்பிட்டு உயிரை வாங்கறான். அவன், அன்னிக்கி செல்வராகவன் பட கதாநாயகி போல மூஞ்சிய உர்ர்ன்னு வச்சிருந்தது என் தப்பா சொல்லுங்க??? (அப்போ கத்துகிட்ட பாடம் என்னன்னா, யார்கிட்ட பேச ஆரம்பிச்சாலும் முதல் மொழி - புன்னகை தான்)

உங்களுக்கும் சொல்லி வைக்கறேன் - எந்த பெண்ணையாவது இம்ப்ரெஸ் பண்ணனும்ன்னு நினைச்சா, ' உங்கள பார்த்தா -- வயசு போலவே தெரியலையே? ரொம்பவே young ஆ இருக்கீங்க!' ன்னு ஒரு தூஸ்ராவ தூக்கி போடுங்க.அவங்க மட்டும்  க்ளீன் போல்ட் ஆகலன்னா என் பேர அருக்கானின்னு மாத்திக்கறேன்..

திரும்பவும் விருதுக்கே வர்றேன். என்னை பொறுத்த வரையில் 'அரசு விருது'ங்கறது, ஆட்சியில் இருப்போர் தனக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்கு கொடுக்கற சற்றே 'காஸ்ட்லி ட்ரீட்' !! அதுக்கு மேல அத பத்தி யோசிக்க கூடாது.. 
----------
அவ்வையார்ல ஆரம்பிச்சத,அவ்வையார்லே முடிக்கறேன்.  எனக்கு பிடிச்ச அவரோட வரிகள்-

 'எது அரியது?'  என்ற முருகனின் கேள்விக்கு அவ்வையின் பதில் இதோ -
'அரிதரிது மானிடர் ஆதல் அரிது; மானிடராயினும் கூன்-குருடு-செவிடு-பேடு நீங்கிப் பிறத்தல் அரிது; ஞானமும் கல்வியும்நயத்தலரிது'

என் நண்பர் தனக்கு பிடித்ததாக சொன்னது - 
                 ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
                 இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
                 என்னோவு அறியாய் இடும்பைகூர் - என்வயிறே 
                 உன்னோடு வாழ்தல் அறிது

( உணவு அதிகம் கிடைக்கும் அன்று இருவயிறுக்கும், கிடைக்காத அன்று ஒன்றுமில்லாமலும் இருக்க மறுக்கும் வயிறே - உன்னோடு ரொம்ப கஷ்டம்! - பசியோடு அவர் அலைந்து திரிகையில் இத்தனை அருமையாய் எழுதியிருக்கிறார்)

 முதுமைய விரும்பி ஏற்றுக்கொண்ட முதலும்-கடைசியுமான பெண் அவ்வை தான்!

அப்புறம் கடைசியா ஒரு விஷயம் - மேலே கோடிட்ட இடங்கள (--) சரியான நம்பர் கொண்டு நிரப்புங்க. இல்லைன்னா விளைவுகளுக்கு mars and venus company பொறுப்பேற்காது!!!Thursday, 29 March 2012

சீரியல் நாயகியா நீங்க?

பெரும்பாலான ஆண்கள் சீரியல் பாக்கற அம்மணிகள கலாய்கறதால, விக்னா இருக்கும் போது பெண்குலத்துக்கு இப்படி ஒரு இழுக்கானு பதிவு போடவந்துட்டேன்! அதுக்கு முன்னாடி நாம ஒரு வாரம் TV பார்ப்போம்னு ஆரம்பிச்சேன்..(என் வீட்ல ஏகப்பட்ட போட்டி இருக்கறதால நம்மள ரேடியோ பெட்டி எப்பவோ தத்து எடுத்தாச்சு)

நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் தென்பட்டன. அதில் சில -

கதாநாயகி மிக அழகாக, எப்போதும் சிரித்த முகத்துடனும், வேலைக்கும் போய், குடும்பத்தையும் சரியாக கவனிப்பவராக இருக்கிறார். ஆனால், அவர் மாமியார் வில்லியாக மாறவேண்டி இருப்பதால் அவருக்கு குழந்தை பிறக்காமல் இருக்கிறது; அல்லது பிறந்த வீடு ஏழ்மையோடு இருக்கிறது.

முக்கியமாக, நாத்தனார் ஆட்டோ காரரோடு ஓடிபோனாலும், தம்பியை போலீஸ் பிடித்து போனாலும், கணவருக்கு வேறு தொடர்பு இருப்பது தெரிந்தாலும், அழகான உடை அணிந்து, மேட்சிங்-மேட்சிங் அணிகலனுடன் வந்து கவலைபடுகிறார்..(ஆதலினால் பெண்டிரே - இனி காலையில் பொங்கின பாலுக்காக இரவு வரை மூஞ்சியை 'உம்' என்று வைத்து கொள்ளாதீர்!)

நமக்கெல்லாம் ஜி.கே ரொம்ப கம்மி. போலீஸ் ஸ்டேஷன் கு போகணும்னா வீட்டை விட்டு வெளியே வந்ததும், இடதா-வலதா எப்டி திரும்பனும்னு கூட தெரியமாட்டேன்கிறது. நம்ப நாயகி பொழுது விடிஞ்சு,பொழுது போனா ஆட்டோல போய், போலீஸ் ஸ்டேஷன் ல இறங்கி தம்பி/கணவர்/மைத்துனர் இப்படி யாரையாவது ஜாமீன்ல எடுக்கறாங்க..

ஏதாவது முக்கியமான விஷயம்னா, கேட்பவருக்கு முதுகு காட்டி, கேமரா பார்த்து பேசுகிறார்கள். நானும் ஒரு பில்ட்-அப் காக அப்டி செஞ்சு பார்த்தேன். கால் மணி நேரம் பேசினதுக்கு அப்புறம் திரும்பி பார்த்தா என் கணவர் எப்பவோ 'எஸ்கேப்' !!

அப்புறம் படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு கிழவர் மாத்திரை/மருந்து வாங்குகிறாரோ இல்லையோ, கண்டிப்பாக கதாநாயகியிடம் எதோ ஒரு காரணத்திற்காக சத்தியம் வாங்குகிறார்!

யார் என்னவேணா சொல்லிட்டு போகட்டும். சீரியல் னா தினமும் தவறாம, கண் இமைக்காம பார்க்கணும். நான் கூட ஒருமுறை, 'என்னம்மா இது? எவ்ளோ நல்ல பொண்ணா இருந்தாங்க; இப்போ யார் கூடவோ சுத்துறாங்கன்னு கேட்க போய் நல்லா வாங்கி கட்டிகிட்டேன்..போன எபிசொட் ல 'அவருக்கு பதில் இவர்னு' ஒரு செகண்ட் காட்டினாங்கலாமே?

ஒரு நாளைக்கு எல்லா டிவி லயும் சேர்த்து கிட்டத்தட்ட 25 சீரியல் ஒளிபரப்பாகுதுனா கூட அதுல முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ குடும்பங்கள் ஒண்ணு கூட காணும்?! கல்யாணம் ஆகாமலே குழந்தை; 2 பொண்டாட்டிக்கு 3 புருஷன்னு காட்டினா டைரக்டர கட்டி வச்சு தோல உரிப்பாங்கனு தெரியுமோ என்னவோ?

நீங்க விரும்பி பாக்கற சீரியல் ல, குடிகார தம்பி திருந்தி IAS (அதேதாங்க!) கலெக்டர் ஆகறாரா? மாமியார் ஒரு நாள் டயலாக் ல (இத முதல் எபிசொட் லையே செஞ்சு தொலைச்சா தான் என்ன?) நல்லவங்களா ஆகறாங்களா? நாத்தனார அவங்க புருஷன் வந்து கூட்டிகிட்டு போயிடறாரா?

இது போல எல்லாம் நல்லதாவே வரிசையா நடந்தா, உங்க சீரியல் டைரக்டர் கு சினிமா சான்ஸ் கிடைச்சாச்சுன்னு அர்த்தம். சீக்கிரமே குரூப் போட்டோ எடுத்து சீரியல முடிக்க போறாங்க..

கலங்காதீங்க..எவ்....வளவோ பார்த்துட்டோம்...புதுசா ஒண்ண பார்க்கமாட்டோமா என்ன?

பின்குறிப்பு - ஒரு சீரியலுக்கு பின்னால் Director, Asst.Directors, Creative(?)Head, Dialogue & Screen play writers, Music composer என குறைந்தது 10 - 15 ஆண்கள் இதையே தொழிலாக கொண்டு உழைக்கிறார்கள். இவர்கள் அரைத்த மாவையே அரைத்து, முடிந்த வரையில் கலாசார சீரழிவுகளை புகுத்தி கதை அமைகிறார்கள். முடிவில், அதை பொழுது போக்கிற்காக பார்க்கும் அம்மணிகளை மட்டும் குறை காண்கிறார்கள்! காரணம் தான் புரியவில்லை..

Thursday, 1 March 2012

மறந்து போன எல்லா நண்பர்களுக்காகவும்...

திருமணம் ஒரு விதத்தில் உறவுகளை அதிகபடுத்தியும், நட்பை குறைத்தும் விடுகிறது. முன்னது சந்தோஷம் தருவதை போலவே பின்னது வலியையும் தருகிறது..

Facebook என்று ஒன்று இருப்பதால், தலைவலியோ - தீபாவளியோ, ஒரு வரி எழுதிவிட்டு இத்தனை friends டச்ல் இருப்பதாக சொல்லி கொள்ள முடிகிறது..அவர்கள் upload செய்யும் போடோக்கள் மூலம், முகம் மட்டும் மறக்காமல் பார்த்து கொள்ள முடிகிறது.

நேரில் நான் பார்க்கும் நண்பர்களனைவரும் என் பெண்ணின் தோழர்களின் அம்மாக்களே ! அவர்களிடம்,' cycle test என்னிக்கி ஆரம்பிகிறாங்க'; 'ஹிந்திக்கு என்ன syllabus ?' என்று ஒரே மாதிரி பேசுவது அலுப்பு தட்டுகிறது..ஆனந்த விகடன் ஜோக்கில் வருவது போல, compound சுவரின் அடுத்த பக்கம் இருக்கும் பெண்மணியுடன் வம்பளப்பது எல்லாம் இப்போது கிடையவே கிடையாது. அம்மணிக்கு திருமதி செல்வமோ - தங்கமோ வந்து காத்திருக்கிறார்கள்..


நகமும் சதையுமாய் கல்லூரி நாட்களில் இருந்த தோழி, அமெரிக்காவிலிருந்து 'hi Vigna how are you?' என்று மெயில் தட்டுகிறாள். சரிதான் என்று நிறைய வரிகளில் பதிலும், குழந்தைகள் போட்டோவை attach செய்தும் காத்திருந்தால், அவள் மேனேஜர் ஊரில் இருந்து திரும்பி விட்டாரோ என்னமோ, என்னை மறந்து போகிறாள்.


இங்கிருக்கும் தோழிக்கு தொலைபேசினால் மறுமுனையில், 'லொக்', 'லொக்' என்று சத்தம் கேட்கிறது. அவள் தயக்கத்துடன், என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை என்கிறாள். 'சரி, நான் போனை வச்சுடறேன்' என்றால், 'இரு இரு அவங்களுக்கு மருந்து தந்து விட்டு வருகிறேன்' என்கிறாள். மீண்டும் வந்து 'அவங்களுக்கு horlics வேணுமாம்!' என்று இழுக்க நானே அவளை சங்கட படுத்தாமல் வைத்து விடுகிறேன். மீண்டும் அழைப்பது அவளுக்கு தொல்லை என்று மனம் சொல்கிறது..


இம்முறை என்னை வெளிநாட்டிலிருக்கும் என் நண்பன் அழைக்கிறான். என் இரண்டு வயது குழந்தை potty போய்கொண்டு இருக்கிறது. அதை சொல்லவும் முடியாமல், பேச்சில் கவனமும் இல்லாமல் தவிக்கிறேன். ஒருவழியாக, 'பிறகு பேசுவோம்' என்று முடிக்கிறேன். அந்த 'பிறகு' ஒருபோதும் உடனே வருவதில்லை என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்..


அப்படி என்னதான் பேசவேண்டும் என்கிறீர்களா? Ankle length anaarkali பிடிக்கவில்லை என்று பேசலாம்; நித்ய ஸ்ரீயா - சுதா ரகுநாதனா யார் பெஸ்ட்னு தீர்மானத்துக்கு வரலாம்; ஏதாவது சினிமாகாரரை பற்றி புறம் கூறலாம்;  - இப்படி எதோ ஒண்ணு! விஷயம் முக்கியமில்லையே?
தெரு நாய் குரைத்து அடங்கும் இரவில் களைப்புடன் திரும்பும் கணவருக்கு அனார்கலியும்  நித்ய ஸ்ரீயும் தந்து இம்சிப்பதில் நியாமில்லை. அவருக்கு தேவை - சூடான சாப்பாடும், கொஞ்சம் NDTV யும், நிறைய தூக்கமும் தான் என்பதில் தெளிவாக இருக்கிறேன்..

மீண்டுமொருமுறை --
- என் நண்பனின் மொக்கை கவிதையை, சிரிக்காமல் கேட்டு 'சூப்பர் ரா!' என்று சொல்ல வேண்டும்..
- கடிகாரத்தை எங்களோடு சேர்த்து கொள்ளாமல், நானும் என் தோழியும் ஒரு சுடிதார் வாங்க, ஓராயிரம் கடை ஏறி இறங்க வேண்டும்..
- நண்பர்களின் அம்மாக்கள், எங்களுக்கும் 'அம்மா' ஆகவேண்டும். சாஸ்வதமாக போய் 'ஒரு cofee தாங்கனு' கேட்டு வாங்கணும் .
- 'நான் ரொம்ப ஹர்ட் ஆயிட்டேன்' என்று இரவு முழுதும் திரும்ப திரும்ப சொல்லும் ரூமேட்டிடம் 'இது ஒரு passing clouds , நாளை தானே வந்து பேசுவான் பாரேன்!' என்று தேற்ற வேண்டும்..
- நண்பர்களோடு மொட்டை மாடியில் அமர்ந்து புதிதாய் பார்த்த படம் உருப்படாமல் போனதன் காரணத்தை அலச வேண்டும்..
- கடற்கரையின் அந்தி சாயும் வேளையில், அனல் குறைந்த மணலில் அமர்ந்து நண்பர்களோடு இன்னதென்று நினைவு கொள்ள முடியாத விஷயங்கள் பேச வேண்டும்..

இன்னும் எவ்வளவோ நிராசைகள்..
ஆனால், இந்த பதிவு ஒரு புலம்பல் அல்ல, ஆதங்கம் மட்டுமே. ஏனெனில் இழந்ததை போலவே நான் பெற்றதும் அதிகம்..

இதை படிக்கும் உங்களுக்கு ஒரு நட்பு வட்டம் இருக்குமானால், அதை ஆராதியுங்கள்..ஏனெனில் எல்லோரும் உங்களை போல அதிர்ஷ்டசாலிகள் அல்ல..


Tuesday, 28 February 2012

சுவர்கமே என்றாலும்..

எங்க ஊர போல வராது தான். பெரிய கோவில் உள்ள ஊரில் வளந்தேன். வருடம் இரு முறை பத்து நாள் உற்சவமும் முடிவில் தேரும் உண்டு. ஊரில் உள்ள அனைவரும் அன்று மிக மிக நேர்த்தியாக உடை அணிந்து தேர் இழுக்க வருவார்கள். இளைஞர்களை பற்றி கேட்கவே வேண்டாம்..எல்லா ஹீரோயிசமும் அன்று எடுபடும்! பத்து நாளுமே விதவிதமான வாகனத்தில் சுவாமி பவனி வருவார். நாதஸ்வரத்தில் வாசிக்க மிக கடினமான 'மல்லாரி' அப்போது கேட்க கிடைக்கும்..

இது தவிர ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, அனுமத் ஜெயந்தி எல்லாமே அமர்க்களம் தான். வாசலில் சுவாமி வரும் போது கூடவே ராகத்துடன் பிரபந்தம் பாடிகொண்டே வருவார்கள். தீவிர வைஷ்ணவர்கள் நெடுஞ்சான் கிடையாக தெருவிலேயே விழுந்து தண்டம் சமர்பிப்பார்கள்.

கிறிஸ்தமஸ் மற்றும் புது வருட பிறப்பின் போது அல்லேலூயா பாடி கொண்டே திறந்த வண்டியில் வரும் வெள்ளை உடை குட்டி தேவதைகளுக்கு கை அசைத்தது பசுமையாக நினைவில் இருக்கிறது..

எங்கள் வீடு பிள்ளையார் கோவிலுக்கும், மூன்று கல்யாண மண்டபங்களுக்கும் நடுவில் இருந்தது. அதனால் அடிக்கடி கல்யாண ஊர்வலம் பார்க்க கிடைத்தது. மாப்பிள்ளை சற்றே பவுடர் தூக்கலாக பூசி, உயரமான இருக்கையில் அமர்ந்து focus light டுடன் கூடிய திறந்த வாகனத்தில் அசட்டு சிரிப்புடன் போவார். சுற்றிலும் வான வேடிக்கை, சல சலக்கும் பட்டு புடவை பெண்கள், பெட்ரோ மாக்ஸ் விளக்குகள் எல்லாம் உண்டு.

வருடம் ஒரு முறை காளி கோவிலில் காப்பு கட்டுவார்கள். வயதானவர்கள், 'இன்னும் பத்து நாளைக்கு வெளி ஊரில் தங்க கூடாது! போனாலும் இரவுக்குள் வந்து விடணும்!' என்று அக்கறையோடு கண்டிப்பு காட்டுவார்கள்.

திருவிழா காலத்தில் தோன்றும் திடீர் கடைகளில் கிடைக்கும் பிரத்யேகமான பொருட்களுக்காக அம்மாவிடம் பிடிவாதம் பிடித்திருக்கிறேன். (அம்மா, 'உற்சவம் முடிந்ததும் விலை குறையும். வாங்கி தருகிறேன்' என்றே சொல்வாள்). இதற்காக வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, அத்தை என சகலரும் காசு தருவார்கள். ரங்க ராட்டினம், பெரிய அப்பளம், நன்னாரி சர்பத், கலர் பேப்பர் ஒட்டின கண்ணாடி சமாச்சாரமெல்லாம் அப்போது மட்டுமே பார்க்க முடியும்.

மாரியம்மன் கோவிலில் தீமிதி நடக்கும். எப்படியும், என் வீட்டில் வேலை செய்பவரின் கணவரோ, சகோதரரோ அதில் கலந்து கொள்வார். அடுத்த நாள் வந்து அவர் சொல்லும் கதைக்காக காத்திருப்பேன்..ஒவ்வொரு முறையும் நான், "கால் சுடாதா, அக்கா?" என்று கேட்க அவர் பதில் ,"அப்படி கேட்க கூடாதுடா! மாரியாயி மனசு வச்சா கால் சுடாது" என்பதாகவே இருக்கும்.
அன்று ஒரு நாள் மட்டும் அவர், அடிக்கும் மஞ்சளில் புடவையும், ஒரு ரூபாய் அளவு குங்குமமும் வைத்து வந்தது நன்றாக நினைவில் இருக்கிறது..

எங்கள் வீட்டை தாண்டி ஒரு திடல் இருந்தது. எல்லா அரசியல் பொதுகூட்டமும் நடக்கும். தலைவர் வரும் வரை பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அவை சிலசமயம் வேடிக்கையாகவும் பெரும்பாலும் நாராசமாகவும் இருக்கும். ராஜீவ் காந்தி, ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பல தலைவர்கள் எனக்கு கை அசைதிருக்கிறார்கள். அன்று கேட்ட மணிப்ரவாக தமிழினால் வைகோ இன்னமும் பிடித்தமாக இருக்கிறார். (ஒரு வட்ட செயலாளர் , கரண்ட் எடுத்தபின் தண்ணீர் தருவதால் அதில் சத்து குறைந்து விவசாயிக்கு வருகிறது என்று பேசியது இன்னும் நினைவில் இருந்து தொல்லை கொடுக்கிறது!)

ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ராகு காலத்தில் துர்கைக்கு விளக்கு போட அம்மா என்னையும் அழைத்து போவார். அப்போது ஒரு பெண்ணிற்கு சரியாக அதே சமயத்தில் 'சாமி' வரும். நான் பயந்து போய் அம்மா வின் புடவைக்கு பின் ஒளிந்து கொள்வேன். சமீபத்தில் சிம்பு பாடிய 'where is the party, tonight?' பாடலை என் பெண்ணோடு சேர்ந்து பார்க்க நேரிட்டது. அவள் ஒருபோதும் என்னைபோல 'சாமியாடிகளை' பார்த்து பயப்பட மாட்டாள் என்று தெளிவாகியது..

என் சிறு வயது நினைவுகள் வண்ணமயமாக இருக்கிறது. நகரத்தில் என் நிகழ்காலம் கருப்பு-வெள்ளை போல தோற்ற மயக்கம் தருகிறது ! ஆம், இங்கே இரண்டே வண்ணம் தான் - வார விடுமுறை நாட்கள்; வேலை நாட்கள்.
இங்கே என் பெண்ணை CBSC school ல் படிக்க வைக்க முடிகிறது. கிபோர்ட் கற்று தர வாத்தியார் கிடைக்கிறார். ஆனாலும் அவள் எதையோ மிஸ் பண்ணுவதாக மனம் சொல்கிறது. நல்ல வேலையாக அது என்னவென்று அவள் அறிய போவதில்லை..Saturday, 25 February 2012

பிரிந்தோம், சந்திக்காமலே..

அன்புள்ள ரங்கராஜன் அவர்களுக்கு,
                வணக்கம். நான் நலம். நீங்களும் என் நினைவுகளில் நலமாகவே உள்ளீர்கள். 

இங்கே, இன்னமும் 'மெக்ஸிகோ நாட்டு சலவைகாரி' ஜோக் சொல்லாமல் போனதற்காக ஆண்களும், கணேஷ் அல்லது வசந்தோடு தங்களை சேர்த்து வைக்காமல் போனதற்காக பெண்களும் உங்கள் மீது கோவமாக இருக்கிறார்கள்.
இதுவரையில், பழகியிராத நபரின் மரணம் என்பது, எனக்கு ஒரு துக்க செய்தியாக மட்டுமே  இருந்துள்ளது. மதர் தெரேசாவின் இழப்பு கூட என் கண்களில் இருந்து கண்ணீரை  வரவழைக்காத அளவுக்கு கல்நெஞ்சகாரியாக இருந்திருக்கிறேன். ஆனால், எழுத்தாளர் சுஜாதா மறைந்தார் - என்ற மூன்று வார்த்தைகள் என்னை தேம்பி தேம்பி அழவைத்தது என்றுமே உங்களுக்கு தெரியபோவதில்லை..

குமுதத்தில் நீங்கள் இணை ஆசிரியராக இருந்தபோது, நறுமணத்துடன் கூடிய பள பள பக்கங்களை வெளியிடுவீர்களே? அந்த வாசனையும் உங்கள் படைப்புகள் போல மூளையின் ஒரு பாகத்தில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறது..ஆனால், உங்கள் பதிவுகளை இங்கே அலசி ஆராய போவதில்லை. ஏனெனில் பூக்களை இதழ் இதழாக பிரித்து ரசிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

முரட்டு வாக்கியங்களுடன், இலக்கியம் என் போன்ற சாமானியர்களை துரத்தி துரத்தி அடித்த போது இளமையும் புதுமையும் கொண்ட நவீன இலக்கியம் படைத்தது, தமிழை சுவைக்க வைத்தீர்கள். இன்று இணையத்தில் தமிழ் வாழ்கின்றதென்றால் அதற்கு நீங்களே முன்னோடி ! ஆங்கில தடிமன் புத்தகங்களை வைத்திருந்த இளைஞர் கூட்டம், சுஜாதாவையும் கையில் வைத்திருப்பது பெருமையென நினைக்க வைத்தீர்கள்..
தனக்கு பிடித்த சினிமா நடிகரை பற்றி எந்த செய்தி வந்தாலும் உள்வாங்கி கொள்ளும் ரசிகனின் 'ஹீரோ வொர்ஷிப்' எனக்கும் இருந்திருக்கிறது. இல்லையென்றால், நீங்கள் வளர்த்த நாய் பெயர் முதல் இப்போது பயன்பாட்டில் உள்ள எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் (EVM ) நீங்களே வடிவமைத்தது வரையிலான செய்தி ஏன் பிடிவாதமாக மனதில் நிற்கிறது??
ஆங்! EVM என்றதும் நினைவுக்கு வருகிறது. ஒரு முறை ஜெயலலிதா தன் தோல்விக்கு புதிய EVM தான் காரணம் என்று சொல்ல, அடுத்த வாரம்  வோட்டிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது என்று விளக்கி கீழ்கண்டவாறு எழுதினீர்கள் -
      "ஜெயலலிதா, இனி தோல்விக்கு வேறு காரணங்களை கண்டுபிடித்து கொள்ளவும் !" 
ஒரு முறை லேண்ட்மார்க் புத்தக கடையில் 'வேட்டி கட்டி வந்தால் மரியாதை இல்லை' என்று நீங்கள் எழுத, நான்கூட அப்படி என்றால் புடவையில் போககூடாது போலிருக்கு என்று நினைத்து கொண்டேன். அடுத்தவாரம், அந்த புத்தக கடைகாரர் குய்யோ முறையோ என்று குதிக்க, 'நான் எழுதியதை literal ஆக அர்த்தம் பண்ண கூடாது! தமிழ் புத்தகம் அங்கு இல்லை' என்று சொல்லி என்னையும் சேர்த்து அசடாக்கி விட்டீர்கள்.. 


இந்தியன் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் - " மேலைநாடுகளில் அரசு அதிகாரிகள் வேலை செய்யாமலிருக்க லஞ்சம் வாங்குவார்கள். நம் மக்கள் தன் வேலையை செய்யவே லஞ்சம் கேட்கிறார்கள்" எவ்வளவு சரி என்று, அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்..இன்னும் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் யுத்தங்கள் நீள்வதற்கான காரணம் பற்றிய வசனங்கள் யாராலுமே மறக்க முடியாது.

ஆனால் சமீபத்தில் (இளையராஜா காப்பாற்றி கொடுத்த )'பிரியா' படம் பார்க்க நேர்ந்தது. கணேஷ்(ரஜினி), தான் காப்பாற்ற போன நடிகையோடு ராஜா-ராணி வேஷம் போட்டு டான்ஸ் கூட ஆடினார். அதிலும் க்ளைமாக்சில் தெரு தெருவாக பாட்டு பாடி ஸ்ரீதேவியை தேடினார். சிங்கப்பூரில் இப்படி தான் அட்ரெஸ் தேடுகிறீர்களா என்று அந்த ஊர் நண்பர்களை கேட்க வேண்டும்..நல்லவேளையாக நீங்கள் "பிரிவோம் சிந்திப்போம்' (ஆனந்த தாண்டவம்) பார்கவில்லை..

இன்று வரை, சிறு வயதில் முதல் முதலாக பார்த்த SCI-FI ' என் இனிய இயந்திரா' தந்த த்ரில்லை எந்திரன் கூட தரவில்லை..
இன்னும், Hindu - Obituary column ல் தெரிந்தவர் யாரும் இல்லையென்றால் ஏமாற்றமாக இருக்கிறது என்று நீங்கள் சொன்னது, தினமும் பேப்பரை திருப்பும் போதெல்லாம் என் நினைவுக்கு வந்து தொலைக்கிறதை, அறிவீர்களா?

என் எழுத்தில், சுஜாதா சாயல் தெரிகிறது என்று ஓரிருவர் சொல்ல கேட்டிருக்கிறேன். இருக்கலாம். உங்கள் படைப்புகள், பிளாட்டிங் பேப்பரில் ஊறும் இன்க் துளிகள் போல. படிக்க படிக்க கொஞ்சம் கொஞ்சமாக வாசகரின் எண்ணங்கள், எழுத்து எல்லாவற்றிலும் ஆளுமை செய்துவிடும். இனி ஒரு போஸ்ட்கார்டில் நாலு வரி எழுதினாலும் சுஜாதா போலவே இருக்கும்..


ஆனாலும், தேங்கும் தண்ணீரில் தெரியும் பிம்பம் எல்லாம் நிலவாக முடியாது..


அன்புடன்
விக்னா
பி-கு: இப்போதெல்லாம் உங்கள் அரங்கநாதர் மேல் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.

Tuesday, 21 February 2012

கவிதை கேளுங்கள்..

கொஞ்ச நாளாகவே நண்பர் ஒருவர் facebook ல் கவிதையாக எழுதி தள்ளுகிறார்..காதல் வயபட்டிருப்பாரோ என்றே என் சந்தேகம்..
அதென்னமோ ஆண்கள் மட்டும், காதலிக்க ஆரம்பித்தாலோ இல்லை காதலில் தோல்வியுற்றாலோ கவிதை எழுத கிளம்பிவிடுகிறார்கள். உண்மையில் அப்போது மரம்-மட்டை-மண்புழு கூட கவிதை எழுத தகுதியான பொருளாவது சந்தோஷமே. ஆனால், எனக்கு தெரிந்த வரையில் பெண்கள் அதிகம் கவிதை பக்கமெல்லாம் போவதில்லை..(உடனே  ஔவையார் இல்லையா என்று கேட்காதீர்கள்!)  ஒருவேளை, ' நீயே ஒரு கவிதை தான்!' என்று காதலர் சொல்வதால் திருப்தி அடைகிறார்கள் போலிருக்கிறது..

'ஆடிக்கு பின்
ஆவணி - என்
தாடிக்கு பின் ஒரு
தாவணி'
என்று மடக்கி மடக்கி, கவிதை போல ஒன்றை எழுதுவது முதல், அசத்தலான கவிதைகள்  வரை எழுதும் நண்பர்களை நானறிவேன்..

என் வரையில் கவிதை என்றால் அதற்கு ஒரே இலக்கணம் தான் - மனதில் நிற்ககூடிய, ஒருமுறையாவது உச்சரிக்க தூண்டும் வரிகள். மேலே சொன்ன அசட்டு கவிதைக்கு கூட அது பொருந்தும்..
சிறு வயது முதல் பாரதியை பிடித்து போனதற்கு அதுவும் ஒரு காரணம். செய்யுளில் மற்ற பகுதிகள் எல்லாம் கடினமாய் இருக்க, புது கவிதைகள் பகுதியில் வரும் பாரதியார் கவிதைகளுக்கு ஒருபோதும்  'கோனார் நோட்ஸ்' தேவை படவில்லை..

கவிஞர்கள் அறிவுமதி, மு.மேத்தா, தபு சங்கர் என பலரின் நல்ல படைப்புகள் விகடன் மூலம் அறிமுகபடுத்த பட்டிருக்கிறேன். ஆனாலும் திரைப்பட பாடலாசிரியர்கள் மேல் எப்போதும் ஒரு ஆச்சர்யம் கலந்த ஈர்ப்பு எனக்குண்டு. என்னையெல்லாம் ஒரு காதலை அல்லது இயற்கையை  வர்ணித்து எழுதசொன்னால் - ஒரு பத்து வரி எழுத முடிந்தால் பெரிய விஷயம். திரு.வைரமுத்து போன்றவர்கள் தினுசு தினுசாக நூற்று கணக்கான வரிகளை கவிதை நயத்தோடு எழுதும் போது பிரமிப்பாக இருக்கிறது..
ஆண் - 'உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது' என்று சொல்ல; பெண் - 'இது கம்பன் பாடாத சிந்தனை - உந்தன் காதோடு யார் சொன்னது??' என்று குறும்பாக பாடுவதாக எழுதி, கேட்கும் ஒவ்வொரு முறையும் புன்னகைக்க வைக்கிறார்..

இன்னும், கவிஞர்கள் கண்ணதாசன்,வைரமுத்து, ந.முத்துக்குமார், தாமரை ஆகியோரின் பல பாடல் வரிகள் நம்முள் ஒரு உணர்ச்சி கடத்தலே நிகழ்த்துகின்றன. உண்மையில் இவர்களின் கவிதையில் பாடலின் அழகு மட்டுமில்லாமல், ஆயுசும் கூடுவதாக தோன்றுகிறது..

அதேபோல் சோகபாடல்களில் டி.ஆரின் இந்த பாடலே எனக்கு பிடித்தது..
இது குழந்தை பாடும் தாலாட்டு
இரவு நேர பூபாளம்
மேற்கில் தோன்றும் உதயம்
நதி இல்லாத ஓடம்
...
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்   
வெறும் நாரில்  கை  கொண்டு பூ மாலை தொடுகிறேன்  
சிறகிழந்த  பறவை  ஒன்றை  வானத்தில்  பார்கிறேன்
...
நடைமறந்த கால்கள் தன்னில் தடையத்தை பார்கிறேன் 
வடமிழந்த தேரினை நானும் நாள்தோறும் இழுக்கிறேன்
...
விருப்பமில்லா பெண்ணை எண்ணி நாள்தோறும் தவிக்கிறேன்..

கொடுக்கப்பட்ட மெட்டுக்குள், சந்தம் கெடாமல், ஆணாகவும்-பெண்ணாகவும் மாறி மாறி கற்பனை செய்து பாடல் எழுதுவது ஒரு சவாலே! அடுத்த முறை sunmusic ல் பாடல் ஒளிபரப்பும் போது, இடுப்பை வெட்டி வெட்டி இழுக்கும் பெண்ணை மறந்து, வரிகளை கவனித்து பாருங்கள் - இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

பின்குறிப்பு - இப்படி ஓரங்கசீப்பாக இருக்கிறோமே, நமக்கும்  கவிதை வராதா என்று ஏங்கி எழுதி பார்த்தேன்..ம்ம்ஹூம்..'கல்' தான் வந்தது..