Tuesday, 28 February 2012

சுவர்கமே என்றாலும்..

எங்க ஊர போல வராது தான். பெரிய கோவில் உள்ள ஊரில் வளந்தேன். வருடம் இரு முறை பத்து நாள் உற்சவமும் முடிவில் தேரும் உண்டு. ஊரில் உள்ள அனைவரும் அன்று மிக மிக நேர்த்தியாக உடை அணிந்து தேர் இழுக்க வருவார்கள். இளைஞர்களை பற்றி கேட்கவே வேண்டாம்..எல்லா ஹீரோயிசமும் அன்று எடுபடும்! பத்து நாளுமே விதவிதமான வாகனத்தில் சுவாமி பவனி வருவார். நாதஸ்வரத்தில் வாசிக்க மிக கடினமான 'மல்லாரி' அப்போது கேட்க கிடைக்கும்..

இது தவிர ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, அனுமத் ஜெயந்தி எல்லாமே அமர்க்களம் தான். வாசலில் சுவாமி வரும் போது கூடவே ராகத்துடன் பிரபந்தம் பாடிகொண்டே வருவார்கள். தீவிர வைஷ்ணவர்கள் நெடுஞ்சான் கிடையாக தெருவிலேயே விழுந்து தண்டம் சமர்பிப்பார்கள்.

கிறிஸ்தமஸ் மற்றும் புது வருட பிறப்பின் போது அல்லேலூயா பாடி கொண்டே திறந்த வண்டியில் வரும் வெள்ளை உடை குட்டி தேவதைகளுக்கு கை அசைத்தது பசுமையாக நினைவில் இருக்கிறது..

எங்கள் வீடு பிள்ளையார் கோவிலுக்கும், மூன்று கல்யாண மண்டபங்களுக்கும் நடுவில் இருந்தது. அதனால் அடிக்கடி கல்யாண ஊர்வலம் பார்க்க கிடைத்தது. மாப்பிள்ளை சற்றே பவுடர் தூக்கலாக பூசி, உயரமான இருக்கையில் அமர்ந்து focus light டுடன் கூடிய திறந்த வாகனத்தில் அசட்டு சிரிப்புடன் போவார். சுற்றிலும் வான வேடிக்கை, சல சலக்கும் பட்டு புடவை பெண்கள், பெட்ரோ மாக்ஸ் விளக்குகள் எல்லாம் உண்டு.

வருடம் ஒரு முறை காளி கோவிலில் காப்பு கட்டுவார்கள். வயதானவர்கள், 'இன்னும் பத்து நாளைக்கு வெளி ஊரில் தங்க கூடாது! போனாலும் இரவுக்குள் வந்து விடணும்!' என்று அக்கறையோடு கண்டிப்பு காட்டுவார்கள்.

திருவிழா காலத்தில் தோன்றும் திடீர் கடைகளில் கிடைக்கும் பிரத்யேகமான பொருட்களுக்காக அம்மாவிடம் பிடிவாதம் பிடித்திருக்கிறேன். (அம்மா, 'உற்சவம் முடிந்ததும் விலை குறையும். வாங்கி தருகிறேன்' என்றே சொல்வாள்). இதற்காக வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, அத்தை என சகலரும் காசு தருவார்கள். ரங்க ராட்டினம், பெரிய அப்பளம், நன்னாரி சர்பத், கலர் பேப்பர் ஒட்டின கண்ணாடி சமாச்சாரமெல்லாம் அப்போது மட்டுமே பார்க்க முடியும்.

மாரியம்மன் கோவிலில் தீமிதி நடக்கும். எப்படியும், என் வீட்டில் வேலை செய்பவரின் கணவரோ, சகோதரரோ அதில் கலந்து கொள்வார். அடுத்த நாள் வந்து அவர் சொல்லும் கதைக்காக காத்திருப்பேன்..ஒவ்வொரு முறையும் நான், "கால் சுடாதா, அக்கா?" என்று கேட்க அவர் பதில் ,"அப்படி கேட்க கூடாதுடா! மாரியாயி மனசு வச்சா கால் சுடாது" என்பதாகவே இருக்கும்.
அன்று ஒரு நாள் மட்டும் அவர், அடிக்கும் மஞ்சளில் புடவையும், ஒரு ரூபாய் அளவு குங்குமமும் வைத்து வந்தது நன்றாக நினைவில் இருக்கிறது..

எங்கள் வீட்டை தாண்டி ஒரு திடல் இருந்தது. எல்லா அரசியல் பொதுகூட்டமும் நடக்கும். தலைவர் வரும் வரை பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அவை சிலசமயம் வேடிக்கையாகவும் பெரும்பாலும் நாராசமாகவும் இருக்கும். ராஜீவ் காந்தி, ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பல தலைவர்கள் எனக்கு கை அசைதிருக்கிறார்கள். அன்று கேட்ட மணிப்ரவாக தமிழினால் வைகோ இன்னமும் பிடித்தமாக இருக்கிறார். (ஒரு வட்ட செயலாளர் , கரண்ட் எடுத்தபின் தண்ணீர் தருவதால் அதில் சத்து குறைந்து விவசாயிக்கு வருகிறது என்று பேசியது இன்னும் நினைவில் இருந்து தொல்லை கொடுக்கிறது!)

ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ராகு காலத்தில் துர்கைக்கு விளக்கு போட அம்மா என்னையும் அழைத்து போவார். அப்போது ஒரு பெண்ணிற்கு சரியாக அதே சமயத்தில் 'சாமி' வரும். நான் பயந்து போய் அம்மா வின் புடவைக்கு பின் ஒளிந்து கொள்வேன். சமீபத்தில் சிம்பு பாடிய 'where is the party, tonight?' பாடலை என் பெண்ணோடு சேர்ந்து பார்க்க நேரிட்டது. அவள் ஒருபோதும் என்னைபோல 'சாமியாடிகளை' பார்த்து பயப்பட மாட்டாள் என்று தெளிவாகியது..

என் சிறு வயது நினைவுகள் வண்ணமயமாக இருக்கிறது. நகரத்தில் என் நிகழ்காலம் கருப்பு-வெள்ளை போல தோற்ற மயக்கம் தருகிறது ! ஆம், இங்கே இரண்டே வண்ணம் தான் - வார விடுமுறை நாட்கள்; வேலை நாட்கள்.
இங்கே என் பெண்ணை CBSC school ல் படிக்க வைக்க முடிகிறது. கிபோர்ட் கற்று தர வாத்தியார் கிடைக்கிறார். ஆனாலும் அவள் எதையோ மிஸ் பண்ணுவதாக மனம் சொல்கிறது. நல்ல வேலையாக அது என்னவென்று அவள் அறிய போவதில்லை..Saturday, 25 February 2012

பிரிந்தோம், சந்திக்காமலே..

அன்புள்ள ரங்கராஜன் அவர்களுக்கு,
                வணக்கம். நான் நலம். நீங்களும் என் நினைவுகளில் நலமாகவே உள்ளீர்கள். 

இங்கே, இன்னமும் 'மெக்ஸிகோ நாட்டு சலவைகாரி' ஜோக் சொல்லாமல் போனதற்காக ஆண்களும், கணேஷ் அல்லது வசந்தோடு தங்களை சேர்த்து வைக்காமல் போனதற்காக பெண்களும் உங்கள் மீது கோவமாக இருக்கிறார்கள்.
இதுவரையில், பழகியிராத நபரின் மரணம் என்பது, எனக்கு ஒரு துக்க செய்தியாக மட்டுமே  இருந்துள்ளது. மதர் தெரேசாவின் இழப்பு கூட என் கண்களில் இருந்து கண்ணீரை  வரவழைக்காத அளவுக்கு கல்நெஞ்சகாரியாக இருந்திருக்கிறேன். ஆனால், எழுத்தாளர் சுஜாதா மறைந்தார் - என்ற மூன்று வார்த்தைகள் என்னை தேம்பி தேம்பி அழவைத்தது என்றுமே உங்களுக்கு தெரியபோவதில்லை..

குமுதத்தில் நீங்கள் இணை ஆசிரியராக இருந்தபோது, நறுமணத்துடன் கூடிய பள பள பக்கங்களை வெளியிடுவீர்களே? அந்த வாசனையும் உங்கள் படைப்புகள் போல மூளையின் ஒரு பாகத்தில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறது..ஆனால், உங்கள் பதிவுகளை இங்கே அலசி ஆராய போவதில்லை. ஏனெனில் பூக்களை இதழ் இதழாக பிரித்து ரசிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

முரட்டு வாக்கியங்களுடன், இலக்கியம் என் போன்ற சாமானியர்களை துரத்தி துரத்தி அடித்த போது இளமையும் புதுமையும் கொண்ட நவீன இலக்கியம் படைத்தது, தமிழை சுவைக்க வைத்தீர்கள். இன்று இணையத்தில் தமிழ் வாழ்கின்றதென்றால் அதற்கு நீங்களே முன்னோடி ! ஆங்கில தடிமன் புத்தகங்களை வைத்திருந்த இளைஞர் கூட்டம், சுஜாதாவையும் கையில் வைத்திருப்பது பெருமையென நினைக்க வைத்தீர்கள்..
தனக்கு பிடித்த சினிமா நடிகரை பற்றி எந்த செய்தி வந்தாலும் உள்வாங்கி கொள்ளும் ரசிகனின் 'ஹீரோ வொர்ஷிப்' எனக்கும் இருந்திருக்கிறது. இல்லையென்றால், நீங்கள் வளர்த்த நாய் பெயர் முதல் இப்போது பயன்பாட்டில் உள்ள எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் (EVM ) நீங்களே வடிவமைத்தது வரையிலான செய்தி ஏன் பிடிவாதமாக மனதில் நிற்கிறது??
ஆங்! EVM என்றதும் நினைவுக்கு வருகிறது. ஒரு முறை ஜெயலலிதா தன் தோல்விக்கு புதிய EVM தான் காரணம் என்று சொல்ல, அடுத்த வாரம்  வோட்டிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது என்று விளக்கி கீழ்கண்டவாறு எழுதினீர்கள் -
      "ஜெயலலிதா, இனி தோல்விக்கு வேறு காரணங்களை கண்டுபிடித்து கொள்ளவும் !" 
ஒரு முறை லேண்ட்மார்க் புத்தக கடையில் 'வேட்டி கட்டி வந்தால் மரியாதை இல்லை' என்று நீங்கள் எழுத, நான்கூட அப்படி என்றால் புடவையில் போககூடாது போலிருக்கு என்று நினைத்து கொண்டேன். அடுத்தவாரம், அந்த புத்தக கடைகாரர் குய்யோ முறையோ என்று குதிக்க, 'நான் எழுதியதை literal ஆக அர்த்தம் பண்ண கூடாது! தமிழ் புத்தகம் அங்கு இல்லை' என்று சொல்லி என்னையும் சேர்த்து அசடாக்கி விட்டீர்கள்.. 


இந்தியன் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் - " மேலைநாடுகளில் அரசு அதிகாரிகள் வேலை செய்யாமலிருக்க லஞ்சம் வாங்குவார்கள். நம் மக்கள் தன் வேலையை செய்யவே லஞ்சம் கேட்கிறார்கள்" எவ்வளவு சரி என்று, அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்..இன்னும் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் யுத்தங்கள் நீள்வதற்கான காரணம் பற்றிய வசனங்கள் யாராலுமே மறக்க முடியாது.

ஆனால் சமீபத்தில் (இளையராஜா காப்பாற்றி கொடுத்த )'பிரியா' படம் பார்க்க நேர்ந்தது. கணேஷ்(ரஜினி), தான் காப்பாற்ற போன நடிகையோடு ராஜா-ராணி வேஷம் போட்டு டான்ஸ் கூட ஆடினார். அதிலும் க்ளைமாக்சில் தெரு தெருவாக பாட்டு பாடி ஸ்ரீதேவியை தேடினார். சிங்கப்பூரில் இப்படி தான் அட்ரெஸ் தேடுகிறீர்களா என்று அந்த ஊர் நண்பர்களை கேட்க வேண்டும்..நல்லவேளையாக நீங்கள் "பிரிவோம் சிந்திப்போம்' (ஆனந்த தாண்டவம்) பார்கவில்லை..

இன்று வரை, சிறு வயதில் முதல் முதலாக பார்த்த SCI-FI ' என் இனிய இயந்திரா' தந்த த்ரில்லை எந்திரன் கூட தரவில்லை..
இன்னும், Hindu - Obituary column ல் தெரிந்தவர் யாரும் இல்லையென்றால் ஏமாற்றமாக இருக்கிறது என்று நீங்கள் சொன்னது, தினமும் பேப்பரை திருப்பும் போதெல்லாம் என் நினைவுக்கு வந்து தொலைக்கிறதை, அறிவீர்களா?

என் எழுத்தில், சுஜாதா சாயல் தெரிகிறது என்று ஓரிருவர் சொல்ல கேட்டிருக்கிறேன். இருக்கலாம். உங்கள் படைப்புகள், பிளாட்டிங் பேப்பரில் ஊறும் இன்க் துளிகள் போல. படிக்க படிக்க கொஞ்சம் கொஞ்சமாக வாசகரின் எண்ணங்கள், எழுத்து எல்லாவற்றிலும் ஆளுமை செய்துவிடும். இனி ஒரு போஸ்ட்கார்டில் நாலு வரி எழுதினாலும் சுஜாதா போலவே இருக்கும்..


ஆனாலும், தேங்கும் தண்ணீரில் தெரியும் பிம்பம் எல்லாம் நிலவாக முடியாது..


அன்புடன்
விக்னா
பி-கு: இப்போதெல்லாம் உங்கள் அரங்கநாதர் மேல் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.

Tuesday, 21 February 2012

கவிதை கேளுங்கள்..

கொஞ்ச நாளாகவே நண்பர் ஒருவர் facebook ல் கவிதையாக எழுதி தள்ளுகிறார்..காதல் வயபட்டிருப்பாரோ என்றே என் சந்தேகம்..
அதென்னமோ ஆண்கள் மட்டும், காதலிக்க ஆரம்பித்தாலோ இல்லை காதலில் தோல்வியுற்றாலோ கவிதை எழுத கிளம்பிவிடுகிறார்கள். உண்மையில் அப்போது மரம்-மட்டை-மண்புழு கூட கவிதை எழுத தகுதியான பொருளாவது சந்தோஷமே. ஆனால், எனக்கு தெரிந்த வரையில் பெண்கள் அதிகம் கவிதை பக்கமெல்லாம் போவதில்லை..(உடனே  ஔவையார் இல்லையா என்று கேட்காதீர்கள்!)  ஒருவேளை, ' நீயே ஒரு கவிதை தான்!' என்று காதலர் சொல்வதால் திருப்தி அடைகிறார்கள் போலிருக்கிறது..

'ஆடிக்கு பின்
ஆவணி - என்
தாடிக்கு பின் ஒரு
தாவணி'
என்று மடக்கி மடக்கி, கவிதை போல ஒன்றை எழுதுவது முதல், அசத்தலான கவிதைகள்  வரை எழுதும் நண்பர்களை நானறிவேன்..

என் வரையில் கவிதை என்றால் அதற்கு ஒரே இலக்கணம் தான் - மனதில் நிற்ககூடிய, ஒருமுறையாவது உச்சரிக்க தூண்டும் வரிகள். மேலே சொன்ன அசட்டு கவிதைக்கு கூட அது பொருந்தும்..
சிறு வயது முதல் பாரதியை பிடித்து போனதற்கு அதுவும் ஒரு காரணம். செய்யுளில் மற்ற பகுதிகள் எல்லாம் கடினமாய் இருக்க, புது கவிதைகள் பகுதியில் வரும் பாரதியார் கவிதைகளுக்கு ஒருபோதும்  'கோனார் நோட்ஸ்' தேவை படவில்லை..

கவிஞர்கள் அறிவுமதி, மு.மேத்தா, தபு சங்கர் என பலரின் நல்ல படைப்புகள் விகடன் மூலம் அறிமுகபடுத்த பட்டிருக்கிறேன். ஆனாலும் திரைப்பட பாடலாசிரியர்கள் மேல் எப்போதும் ஒரு ஆச்சர்யம் கலந்த ஈர்ப்பு எனக்குண்டு. என்னையெல்லாம் ஒரு காதலை அல்லது இயற்கையை  வர்ணித்து எழுதசொன்னால் - ஒரு பத்து வரி எழுத முடிந்தால் பெரிய விஷயம். திரு.வைரமுத்து போன்றவர்கள் தினுசு தினுசாக நூற்று கணக்கான வரிகளை கவிதை நயத்தோடு எழுதும் போது பிரமிப்பாக இருக்கிறது..
ஆண் - 'உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது' என்று சொல்ல; பெண் - 'இது கம்பன் பாடாத சிந்தனை - உந்தன் காதோடு யார் சொன்னது??' என்று குறும்பாக பாடுவதாக எழுதி, கேட்கும் ஒவ்வொரு முறையும் புன்னகைக்க வைக்கிறார்..

இன்னும், கவிஞர்கள் கண்ணதாசன்,வைரமுத்து, ந.முத்துக்குமார், தாமரை ஆகியோரின் பல பாடல் வரிகள் நம்முள் ஒரு உணர்ச்சி கடத்தலே நிகழ்த்துகின்றன. உண்மையில் இவர்களின் கவிதையில் பாடலின் அழகு மட்டுமில்லாமல், ஆயுசும் கூடுவதாக தோன்றுகிறது..

அதேபோல் சோகபாடல்களில் டி.ஆரின் இந்த பாடலே எனக்கு பிடித்தது..
இது குழந்தை பாடும் தாலாட்டு
இரவு நேர பூபாளம்
மேற்கில் தோன்றும் உதயம்
நதி இல்லாத ஓடம்
...
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்   
வெறும் நாரில்  கை  கொண்டு பூ மாலை தொடுகிறேன்  
சிறகிழந்த  பறவை  ஒன்றை  வானத்தில்  பார்கிறேன்
...
நடைமறந்த கால்கள் தன்னில் தடையத்தை பார்கிறேன் 
வடமிழந்த தேரினை நானும் நாள்தோறும் இழுக்கிறேன்
...
விருப்பமில்லா பெண்ணை எண்ணி நாள்தோறும் தவிக்கிறேன்..

கொடுக்கப்பட்ட மெட்டுக்குள், சந்தம் கெடாமல், ஆணாகவும்-பெண்ணாகவும் மாறி மாறி கற்பனை செய்து பாடல் எழுதுவது ஒரு சவாலே! அடுத்த முறை sunmusic ல் பாடல் ஒளிபரப்பும் போது, இடுப்பை வெட்டி வெட்டி இழுக்கும் பெண்ணை மறந்து, வரிகளை கவனித்து பாருங்கள் - இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

பின்குறிப்பு - இப்படி ஓரங்கசீப்பாக இருக்கிறோமே, நமக்கும்  கவிதை வராதா என்று ஏங்கி எழுதி பார்த்தேன்..ம்ம்ஹூம்..'கல்' தான் வந்தது..


Friday, 3 February 2012

இந்த காதல் வேண்டாமே..

முந்தய பதிவின்  ஒரு பின்னோட்டத்தில் பாகம் - 2 எழுத சொல்லி ஒரு சக பதிவர் கேட்டிருந்தார்.யோசித்து பார்த்ததில் நான் எழுதியதை விட எழுதாததே அதிகம். அதே போல் சினிமா மேல் அப்படி என்ன கோவம் என்றும் தோழி கேட்டாள். 

சினிமாவில் ஒரு பெண்ணை காதலில் விழவைக்க, நாயகன் தன நண்பர்களோடு அந்த பெண் போகும் இடமெல்லாம் போவதும் , கெஞ்சுவது முதல் மிரட்டுவது வரை செய்து பார்ப்பதும் (இது உண்மையில் eve teasing - சட்டப்படி  குற்றம்) காதலாகிறது. உண்மையில் அப்படி செய்தால் அந்த பெண் எப்படி வீட்டுக்குள் சுருங்கி போகிறாள்; அனாமதேய காதல் கடிதங்களால் பெற்றவர்கள் எப்படி ஒரு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அழகாய் இருக்கும் ஒரே காரணத்தினால் பட்டாம்பூச்சியாய் இருக்க வேண்டிய பெண்ணை பட்டுபூச்சியாய் மாற்றியதுதான் காதலா என்ன? இதனால், பெரும்பாலும் படிப்பை மூட்டைகட்டி பெண்ணுக்கு அவசரம் அவசரமாக கல்யாணம் செய்து விடுகிறார்கள். அவளும் தன் திறமை என்ன என்று கண்டறிவதற்குள், தப்பித்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளபடுகிறாள்.  

இது ஒருபுறம் என்றால், சில ஆண்டுகளுக்கு முன் என் வீட்டில் வேலைசெய்தவர்  ஒரு நாள் அழுதுகொண்டே வந்து, தன் பதினைந்து வயது பெண் அருகிலுள்ள மெகானிக் கடையில் வேலை செய்யும் பையனோடு ஓடி விட்டதாக சொன்னார். 'தங்களை போன்றவர்களுக்கு மானம் மட்டுமே ஒரே சொத்து, இப்போது அதுவும் போனதால் மற்ற குழந்தைகளின் எதிர்காலம் கேள்விகுறி ஆகிவிட்டது ; பத்தாவது கூட முடிக்காத தன் பெண், இனி தன்னை போலவே வேலைகாரி ஆகதான் முடியும்; அதற்காகவா இவ்வளவு கடுமையாக உழைத்தேன்' என்றும் அவர் கண்ணீர் சிந்தியதை வாழ்நாளில் மறக்க முடியாது..

முகம் தெரியாத அந்த பையனின் மேலிருந்த என் கோவம், நாளடைவில் இதுபோன்ற uniform காதலை நியாயபடுத்தும், தட்டி கேட்கும் பெற்றோர்களை வில்லன்களாக்கும் சினிமாமேல் திரும்பியது. இவர்களுக்கு சமூக அக்கறையே கிடையாதா என்று யோசித்து பார்த்ததில், சினிமாகாரர்களின் அதிகபட்ச கவலை நல்ல producer கிடைப்பதோடு முடிந்துவிடுவதாக தோன்றியது.  

ஆனால் நாம் ஒன்று செய்யமுடியும் - இது போன்ற தவறான செயல்களை நியாயபடுத்தும் சினிமாவை புறகணிக்கலாம், அல்லது குழந்தைகளையாவது அழைத்து செல்லாமல் தவிர்க்கலாம்.  

பதின் பருவத்தில் emotional balance குறைவாக இருக்கும். 'தான் கவனிக்கபடுகிறோம்' என்பதே காதல் வர போதுமானது. visual ஆக பார்க்கும் எதுவும் மனதில் ஆழமாகவே பதியும். அதனால், ஆரம்பம் முதலே நம் குழந்தைகளுக்கு சரியான உலகத்தை காட்டுவோம்..

விளையாட்டு, பாட்டு, ஓவியம், நடனம், புத்தகங்கள் இன்னும் தெரிந்து கொள்ள எவ்வளவோ விஷயங்கள்  நம்மை சுற்றி உள்ளது. அதில் ஒன்றையாவது நம் குழந்தைகளுக்கு அறிமுகபடுத்துவோம்.அவர்கள், ஆரம்பம் முதலே நல்ல விஷயங்களில் மனதை செலுத்த நம்மாலான முயற்சியை செய்வோம்..(படிப்பை விட்டால் டிவி அல்லது சினிமா  தான் என்னும் நிலை வருந்ததக்கது..) 


Wednesday, 1 February 2012

ஆதலினால் காதல் செய்வீர்!


நான் வளர்ந்தது முழுக்கவே கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத பேரூர். காலையில் பொடி நடையாக வீட்டை விட்டு கிளம்பினால் இரவுக்குள் எல்லா தெருவையும் சுற்றி விட்டு வந்துவிடலாம். அதனால், அடிக்கற கலரில் தாவணி கட்டி, வயல் வரப்பில் 'மாமா...' ன்னு  பாடிகிட்டே ஓடிவர்ற ஸ்லோமோஷன் காட்சியெல்லாம் என் கதையில் வரவேயில்லை..இன்னும் சொல்லபோனால், காதல்-கத்திரிக்காய் ரெண்டுமே வசமானது கல்யாணத்துக்கு அப்புறம் தான்..

அதுக்காக காதல் என் வாழ்கையில் வராமல் இல்ல..அடிக்கடி தனியே சிரித்து கொள்ளும் தோழி, திடீர் வைரமுத்து ஆன நண்பன், அடுத்த ஞாயிறுக்குள் அழகாகிவிட துடிக்கும் face -pack ஹாஸ்டல் பூச்சாண்டிகள், அர்த்தராத்திரியில் எழுந்து, எனக்கும் சேர்த்து தெலுங்கு சொல்லிதர முடிவெடுத்த ரூம் மேட் என பல காதல்களை கடந்தே வந்திருக்கிறேன்..(காதலர்களை விட காதல், நண்பர்களையே பாடாய்படுத்தும் - அனுபவம்) 

சினிமா காதல் கூட என்னை அவ்வளவாக ஈர்த்ததில்லை..இங்கே காதலில் வெற்றி பெற சில 'கல்யாண குணங்கள்' தேவைபடுகிறது. நாயகன் - மிகுந்த நல்லவனாகவும், 10 பேரையாவது அடிக்க தெரிந்தவனாகவும், பாட்டு,டான்ஸ் என்று வந்தால் கூட ஆட 10-20 தோழர்களையும் சேர்த்து வைத்திருப்பவனாகவும் இருந்தால் போதுமானது..நாயகி - அழகியாக(கொஞ்சம் லூசாக) இருந்தால் கண்டவுடன் காதல் தான்..நாமும் குறைந்த செலவில் பாரின் சுற்றி பார்க்கலாம்..     

நிஜத்தில் காதலுக்கு சில qualities தேவை என்று கண்டிருக்கிறேன்  - தைரியம், உறுதி, புற தோற்றத்தை தாண்டியதொரு நேசம் மற்றும் தனி நபர் சுகந்திரம் - இவை அவசியம்.முன்னிரண்டும் கல்யாணத்திற்கு முன்பும், பின்னிரண்டும் கல்யாணத்திற்கு பிறகும் அத்தியாவசியமாகிறது.. Ego கூட கொஞ்சமாக இருந்தால் பாதகமில்லை ..ஏனெனில் ஊடல் இல்லாத காதலில் சுவாரசியமில்லை! (அப்புறம் எங்களை போன்ற நண்பர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்)

நான் புரிந்து கொண்ட வரையில், ஒருவரை பிடித்து போக காரணங்கள் ரொம்ப அவசியமில்லை (வேண்டுமானால், பின்னர் கற்பித்து கொள்ளலாம்). ஆனால் பிடிக்காமல் போக, காரணம் அவசியம்.(மாறி இருந்தால் உங்களிடம் எதோ பிசகு!)

எங்கள் வீட்டில், (குழந்தைகளோடு விளையாடும் போது எப்படி அவர்கள் ஜெயித்தால் மகிழ்வேனோ அப்படி) என் கணவரோடு வரும் சின்ன சண்டைகளில் அவர் ஜெயித்தாலும் சந்தோஷமாகவே இருக்கிறது. ஒருவேளை இது தான் காதலா?? அப்படியாயின் பாரதியின் வரிகளை தயக்கமில்லாமல் வழிமொழிவேன்..

                     'ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே!'