Tuesday, 28 February 2012

சுவர்கமே என்றாலும்..

எங்க ஊர போல வராது தான். பெரிய கோவில் உள்ள ஊரில் வளந்தேன். வருடம் இரு முறை பத்து நாள் உற்சவமும் முடிவில் தேரும் உண்டு. ஊரில் உள்ள அனைவரும் அன்று மிக மிக நேர்த்தியாக உடை அணிந்து தேர் இழுக்க வருவார்கள். இளைஞர்களை பற்றி கேட்கவே வேண்டாம்..எல்லா ஹீரோயிசமும் அன்று எடுபடும்! பத்து நாளுமே விதவிதமான வாகனத்தில் சுவாமி பவனி வருவார். நாதஸ்வரத்தில் வாசிக்க மிக கடினமான 'மல்லாரி' அப்போது கேட்க கிடைக்கும்..

இது தவிர ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, அனுமத் ஜெயந்தி எல்லாமே அமர்க்களம் தான். வாசலில் சுவாமி வரும் போது கூடவே ராகத்துடன் பிரபந்தம் பாடிகொண்டே வருவார்கள். தீவிர வைஷ்ணவர்கள் நெடுஞ்சான் கிடையாக தெருவிலேயே விழுந்து தண்டம் சமர்பிப்பார்கள்.

கிறிஸ்தமஸ் மற்றும் புது வருட பிறப்பின் போது அல்லேலூயா பாடி கொண்டே திறந்த வண்டியில் வரும் வெள்ளை உடை குட்டி தேவதைகளுக்கு கை அசைத்தது பசுமையாக நினைவில் இருக்கிறது..

எங்கள் வீடு பிள்ளையார் கோவிலுக்கும், மூன்று கல்யாண மண்டபங்களுக்கும் நடுவில் இருந்தது. அதனால் அடிக்கடி கல்யாண ஊர்வலம் பார்க்க கிடைத்தது. மாப்பிள்ளை சற்றே பவுடர் தூக்கலாக பூசி, உயரமான இருக்கையில் அமர்ந்து focus light டுடன் கூடிய திறந்த வாகனத்தில் அசட்டு சிரிப்புடன் போவார். சுற்றிலும் வான வேடிக்கை, சல சலக்கும் பட்டு புடவை பெண்கள், பெட்ரோ மாக்ஸ் விளக்குகள் எல்லாம் உண்டு.

வருடம் ஒரு முறை காளி கோவிலில் காப்பு கட்டுவார்கள். வயதானவர்கள், 'இன்னும் பத்து நாளைக்கு வெளி ஊரில் தங்க கூடாது! போனாலும் இரவுக்குள் வந்து விடணும்!' என்று அக்கறையோடு கண்டிப்பு காட்டுவார்கள்.

திருவிழா காலத்தில் தோன்றும் திடீர் கடைகளில் கிடைக்கும் பிரத்யேகமான பொருட்களுக்காக அம்மாவிடம் பிடிவாதம் பிடித்திருக்கிறேன். (அம்மா, 'உற்சவம் முடிந்ததும் விலை குறையும். வாங்கி தருகிறேன்' என்றே சொல்வாள்). இதற்காக வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, அத்தை என சகலரும் காசு தருவார்கள். ரங்க ராட்டினம், பெரிய அப்பளம், நன்னாரி சர்பத், கலர் பேப்பர் ஒட்டின கண்ணாடி சமாச்சாரமெல்லாம் அப்போது மட்டுமே பார்க்க முடியும்.

மாரியம்மன் கோவிலில் தீமிதி நடக்கும். எப்படியும், என் வீட்டில் வேலை செய்பவரின் கணவரோ, சகோதரரோ அதில் கலந்து கொள்வார். அடுத்த நாள் வந்து அவர் சொல்லும் கதைக்காக காத்திருப்பேன்..ஒவ்வொரு முறையும் நான், "கால் சுடாதா, அக்கா?" என்று கேட்க அவர் பதில் ,"அப்படி கேட்க கூடாதுடா! மாரியாயி மனசு வச்சா கால் சுடாது" என்பதாகவே இருக்கும்.
அன்று ஒரு நாள் மட்டும் அவர், அடிக்கும் மஞ்சளில் புடவையும், ஒரு ரூபாய் அளவு குங்குமமும் வைத்து வந்தது நன்றாக நினைவில் இருக்கிறது..

எங்கள் வீட்டை தாண்டி ஒரு திடல் இருந்தது. எல்லா அரசியல் பொதுகூட்டமும் நடக்கும். தலைவர் வரும் வரை பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அவை சிலசமயம் வேடிக்கையாகவும் பெரும்பாலும் நாராசமாகவும் இருக்கும். ராஜீவ் காந்தி, ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பல தலைவர்கள் எனக்கு கை அசைதிருக்கிறார்கள். அன்று கேட்ட மணிப்ரவாக தமிழினால் வைகோ இன்னமும் பிடித்தமாக இருக்கிறார். (ஒரு வட்ட செயலாளர் , கரண்ட் எடுத்தபின் தண்ணீர் தருவதால் அதில் சத்து குறைந்து விவசாயிக்கு வருகிறது என்று பேசியது இன்னும் நினைவில் இருந்து தொல்லை கொடுக்கிறது!)

ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ராகு காலத்தில் துர்கைக்கு விளக்கு போட அம்மா என்னையும் அழைத்து போவார். அப்போது ஒரு பெண்ணிற்கு சரியாக அதே சமயத்தில் 'சாமி' வரும். நான் பயந்து போய் அம்மா வின் புடவைக்கு பின் ஒளிந்து கொள்வேன். சமீபத்தில் சிம்பு பாடிய 'where is the party, tonight?' பாடலை என் பெண்ணோடு சேர்ந்து பார்க்க நேரிட்டது. அவள் ஒருபோதும் என்னைபோல 'சாமியாடிகளை' பார்த்து பயப்பட மாட்டாள் என்று தெளிவாகியது..

என் சிறு வயது நினைவுகள் வண்ணமயமாக இருக்கிறது. நகரத்தில் என் நிகழ்காலம் கருப்பு-வெள்ளை போல தோற்ற மயக்கம் தருகிறது ! ஆம், இங்கே இரண்டே வண்ணம் தான் - வார விடுமுறை நாட்கள்; வேலை நாட்கள்.
இங்கே என் பெண்ணை CBSC school ல் படிக்க வைக்க முடிகிறது. கிபோர்ட் கற்று தர வாத்தியார் கிடைக்கிறார். ஆனாலும் அவள் எதையோ மிஸ் பண்ணுவதாக மனம் சொல்கிறது. நல்ல வேலையாக அது என்னவென்று அவள் அறிய போவதில்லை..7 comments:

 1. Sailing in the same boat :). Our parents had the same problem, today we are having the same problem our parents had when we were kids. I guess this is what is called "Change in Life"

  Sreenivasan
  http://sreenivasan.ksshouse.com

  ReplyDelete
 2. I am happy that you still remember your old times and long for such life. That is great especially when people want to go away from the very country and cultur, sometimes out of necessity But life is time bound. We cannot have what all we wish. In case we get it, life will be a big bore. In my opinion there should be a longing for every body according to their age. That longing (that we may get it tomorrow) makes life more interesting. This longing is the very essence of life and keeping the longing everlasting is a trick being played by Almighty to make humanity to think about Him always. One more thing, We understand the value of a thing only when we are away from it. That is why perhaps the Indians who are away from the country celebrate Indian functions more elaborately, intensely and interestingly. Any how everything is for good.
  I am sorry that I am rather Socratic in my comments.
  Mali

  ReplyDelete
 3. Honestly, Vigna, I like Shreyas's life better than mine. I guess, his life is more exciting - more happening .. This read was a good reality check to process that - :))

  ReplyDelete
 4. I fully agree with Mr.Mali.

  ReplyDelete
 5. 20 வருஷம் முன்னே போன மாதிரி இருக்கு Vigna . இன்னிக்கும் நம்ம ஊர்ல இருக்கற சின்ன பசங்க இப்பவும் நாம் enjoy பண்ணின மாதிரி enjoy பண்ணிட்டு இருக்காங்காளா ? இந்த மாற்றத்துக்கு காரணம் நாம் இருக்கற இடம்மா இல்லை வாழும் காலம்மா?
  Krithika.

  ReplyDelete
 6. ஆனாலும் அவள் எதையோ மிஸ் பண்ணுவதாக மனம் சொல்கிறது. நல்ல வேளையாக அது என்னவென்று அவள் அறிய போவதில்லை..// கடைசிவரிதான் 'நச்'.உங்க பெண்ணுக்கு நீங்களே அறியாது நிறைய இது மாதிரியான,இந்த காலத்துக்கு ஏற்ற நிகழ்வுகளின் பதிவு இருக்கும்.இன்னும் 15 வருஷத்துக்குப் பிறகு அவரும் இது மாதிரி எழுதும் போது அதில் அதிகம் நீங்கள் இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்...

  ReplyDelete
 7. இங்கே என் பெண்ணை CBSC school ல் படிக்க வைக்க முடிகிறது. கிபோர்ட் கற்று தர வாத்தியார் கிடைக்கிறார். ஆனாலும் அவள் எதையோ மிஸ் பண்ணுவதாக மனம் சொல்கிறது. நல்ல வேலையாக அது என்னவென்று அவள் அறிய போவதில்லை..

  - chanceless.

  ReplyDelete