Thursday, 29 March 2012

சீரியல் நாயகியா நீங்க?

பெரும்பாலான ஆண்கள் சீரியல் பாக்கற அம்மணிகள கலாய்கறதால, விக்னா இருக்கும் போது பெண்குலத்துக்கு இப்படி ஒரு இழுக்கானு பதிவு போடவந்துட்டேன்! அதுக்கு முன்னாடி நாம ஒரு வாரம் TV பார்ப்போம்னு ஆரம்பிச்சேன்..(என் வீட்ல ஏகப்பட்ட போட்டி இருக்கறதால நம்மள ரேடியோ பெட்டி எப்பவோ தத்து எடுத்தாச்சு)

நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் தென்பட்டன. அதில் சில -

கதாநாயகி மிக அழகாக, எப்போதும் சிரித்த முகத்துடனும், வேலைக்கும் போய், குடும்பத்தையும் சரியாக கவனிப்பவராக இருக்கிறார். ஆனால், அவர் மாமியார் வில்லியாக மாறவேண்டி இருப்பதால் அவருக்கு குழந்தை பிறக்காமல் இருக்கிறது; அல்லது பிறந்த வீடு ஏழ்மையோடு இருக்கிறது.

முக்கியமாக, நாத்தனார் ஆட்டோ காரரோடு ஓடிபோனாலும், தம்பியை போலீஸ் பிடித்து போனாலும், கணவருக்கு வேறு தொடர்பு இருப்பது தெரிந்தாலும், அழகான உடை அணிந்து, மேட்சிங்-மேட்சிங் அணிகலனுடன் வந்து கவலைபடுகிறார்..(ஆதலினால் பெண்டிரே - இனி காலையில் பொங்கின பாலுக்காக இரவு வரை மூஞ்சியை 'உம்' என்று வைத்து கொள்ளாதீர்!)

நமக்கெல்லாம் ஜி.கே ரொம்ப கம்மி. போலீஸ் ஸ்டேஷன் கு போகணும்னா வீட்டை விட்டு வெளியே வந்ததும், இடதா-வலதா எப்டி திரும்பனும்னு கூட தெரியமாட்டேன்கிறது. நம்ப நாயகி பொழுது விடிஞ்சு,பொழுது போனா ஆட்டோல போய், போலீஸ் ஸ்டேஷன் ல இறங்கி தம்பி/கணவர்/மைத்துனர் இப்படி யாரையாவது ஜாமீன்ல எடுக்கறாங்க..

ஏதாவது முக்கியமான விஷயம்னா, கேட்பவருக்கு முதுகு காட்டி, கேமரா பார்த்து பேசுகிறார்கள். நானும் ஒரு பில்ட்-அப் காக அப்டி செஞ்சு பார்த்தேன். கால் மணி நேரம் பேசினதுக்கு அப்புறம் திரும்பி பார்த்தா என் கணவர் எப்பவோ 'எஸ்கேப்' !!

அப்புறம் படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு கிழவர் மாத்திரை/மருந்து வாங்குகிறாரோ இல்லையோ, கண்டிப்பாக கதாநாயகியிடம் எதோ ஒரு காரணத்திற்காக சத்தியம் வாங்குகிறார்!

யார் என்னவேணா சொல்லிட்டு போகட்டும். சீரியல் னா தினமும் தவறாம, கண் இமைக்காம பார்க்கணும். நான் கூட ஒருமுறை, 'என்னம்மா இது? எவ்ளோ நல்ல பொண்ணா இருந்தாங்க; இப்போ யார் கூடவோ சுத்துறாங்கன்னு கேட்க போய் நல்லா வாங்கி கட்டிகிட்டேன்..போன எபிசொட் ல 'அவருக்கு பதில் இவர்னு' ஒரு செகண்ட் காட்டினாங்கலாமே?

ஒரு நாளைக்கு எல்லா டிவி லயும் சேர்த்து கிட்டத்தட்ட 25 சீரியல் ஒளிபரப்பாகுதுனா கூட அதுல முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ குடும்பங்கள் ஒண்ணு கூட காணும்?! கல்யாணம் ஆகாமலே குழந்தை; 2 பொண்டாட்டிக்கு 3 புருஷன்னு காட்டினா டைரக்டர கட்டி வச்சு தோல உரிப்பாங்கனு தெரியுமோ என்னவோ?

நீங்க விரும்பி பாக்கற சீரியல் ல, குடிகார தம்பி திருந்தி IAS (அதேதாங்க!) கலெக்டர் ஆகறாரா? மாமியார் ஒரு நாள் டயலாக் ல (இத முதல் எபிசொட் லையே செஞ்சு தொலைச்சா தான் என்ன?) நல்லவங்களா ஆகறாங்களா? நாத்தனார அவங்க புருஷன் வந்து கூட்டிகிட்டு போயிடறாரா?

இது போல எல்லாம் நல்லதாவே வரிசையா நடந்தா, உங்க சீரியல் டைரக்டர் கு சினிமா சான்ஸ் கிடைச்சாச்சுன்னு அர்த்தம். சீக்கிரமே குரூப் போட்டோ எடுத்து சீரியல முடிக்க போறாங்க..

கலங்காதீங்க..எவ்....வளவோ பார்த்துட்டோம்...புதுசா ஒண்ண பார்க்கமாட்டோமா என்ன?

பின்குறிப்பு - ஒரு சீரியலுக்கு பின்னால் Director, Asst.Directors, Creative(?)Head, Dialogue & Screen play writers, Music composer என குறைந்தது 10 - 15 ஆண்கள் இதையே தொழிலாக கொண்டு உழைக்கிறார்கள். இவர்கள் அரைத்த மாவையே அரைத்து, முடிந்த வரையில் கலாசார சீரழிவுகளை புகுத்தி கதை அமைகிறார்கள். முடிவில், அதை பொழுது போக்கிற்காக பார்க்கும் அம்மணிகளை மட்டும் குறை காண்கிறார்கள்! காரணம் தான் புரியவில்லை..

Thursday, 1 March 2012

மறந்து போன எல்லா நண்பர்களுக்காகவும்...

திருமணம் ஒரு விதத்தில் உறவுகளை அதிகபடுத்தியும், நட்பை குறைத்தும் விடுகிறது. முன்னது சந்தோஷம் தருவதை போலவே பின்னது வலியையும் தருகிறது..

Facebook என்று ஒன்று இருப்பதால், தலைவலியோ - தீபாவளியோ, ஒரு வரி எழுதிவிட்டு இத்தனை friends டச்ல் இருப்பதாக சொல்லி கொள்ள முடிகிறது..அவர்கள் upload செய்யும் போடோக்கள் மூலம், முகம் மட்டும் மறக்காமல் பார்த்து கொள்ள முடிகிறது.

நேரில் நான் பார்க்கும் நண்பர்களனைவரும் என் பெண்ணின் தோழர்களின் அம்மாக்களே ! அவர்களிடம்,' cycle test என்னிக்கி ஆரம்பிகிறாங்க'; 'ஹிந்திக்கு என்ன syllabus ?' என்று ஒரே மாதிரி பேசுவது அலுப்பு தட்டுகிறது..ஆனந்த விகடன் ஜோக்கில் வருவது போல, compound சுவரின் அடுத்த பக்கம் இருக்கும் பெண்மணியுடன் வம்பளப்பது எல்லாம் இப்போது கிடையவே கிடையாது. அம்மணிக்கு திருமதி செல்வமோ - தங்கமோ வந்து காத்திருக்கிறார்கள்..


நகமும் சதையுமாய் கல்லூரி நாட்களில் இருந்த தோழி, அமெரிக்காவிலிருந்து 'hi Vigna how are you?' என்று மெயில் தட்டுகிறாள். சரிதான் என்று நிறைய வரிகளில் பதிலும், குழந்தைகள் போட்டோவை attach செய்தும் காத்திருந்தால், அவள் மேனேஜர் ஊரில் இருந்து திரும்பி விட்டாரோ என்னமோ, என்னை மறந்து போகிறாள்.


இங்கிருக்கும் தோழிக்கு தொலைபேசினால் மறுமுனையில், 'லொக்', 'லொக்' என்று சத்தம் கேட்கிறது. அவள் தயக்கத்துடன், என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை என்கிறாள். 'சரி, நான் போனை வச்சுடறேன்' என்றால், 'இரு இரு அவங்களுக்கு மருந்து தந்து விட்டு வருகிறேன்' என்கிறாள். மீண்டும் வந்து 'அவங்களுக்கு horlics வேணுமாம்!' என்று இழுக்க நானே அவளை சங்கட படுத்தாமல் வைத்து விடுகிறேன். மீண்டும் அழைப்பது அவளுக்கு தொல்லை என்று மனம் சொல்கிறது..


இம்முறை என்னை வெளிநாட்டிலிருக்கும் என் நண்பன் அழைக்கிறான். என் இரண்டு வயது குழந்தை potty போய்கொண்டு இருக்கிறது. அதை சொல்லவும் முடியாமல், பேச்சில் கவனமும் இல்லாமல் தவிக்கிறேன். ஒருவழியாக, 'பிறகு பேசுவோம்' என்று முடிக்கிறேன். அந்த 'பிறகு' ஒருபோதும் உடனே வருவதில்லை என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்..


அப்படி என்னதான் பேசவேண்டும் என்கிறீர்களா? Ankle length anaarkali பிடிக்கவில்லை என்று பேசலாம்; நித்ய ஸ்ரீயா - சுதா ரகுநாதனா யார் பெஸ்ட்னு தீர்மானத்துக்கு வரலாம்; ஏதாவது சினிமாகாரரை பற்றி புறம் கூறலாம்;  - இப்படி எதோ ஒண்ணு! விஷயம் முக்கியமில்லையே?
தெரு நாய் குரைத்து அடங்கும் இரவில் களைப்புடன் திரும்பும் கணவருக்கு அனார்கலியும்  நித்ய ஸ்ரீயும் தந்து இம்சிப்பதில் நியாமில்லை. அவருக்கு தேவை - சூடான சாப்பாடும், கொஞ்சம் NDTV யும், நிறைய தூக்கமும் தான் என்பதில் தெளிவாக இருக்கிறேன்..

மீண்டுமொருமுறை --
- என் நண்பனின் மொக்கை கவிதையை, சிரிக்காமல் கேட்டு 'சூப்பர் ரா!' என்று சொல்ல வேண்டும்..
- கடிகாரத்தை எங்களோடு சேர்த்து கொள்ளாமல், நானும் என் தோழியும் ஒரு சுடிதார் வாங்க, ஓராயிரம் கடை ஏறி இறங்க வேண்டும்..
- நண்பர்களின் அம்மாக்கள், எங்களுக்கும் 'அம்மா' ஆகவேண்டும். சாஸ்வதமாக போய் 'ஒரு cofee தாங்கனு' கேட்டு வாங்கணும் .
- 'நான் ரொம்ப ஹர்ட் ஆயிட்டேன்' என்று இரவு முழுதும் திரும்ப திரும்ப சொல்லும் ரூமேட்டிடம் 'இது ஒரு passing clouds , நாளை தானே வந்து பேசுவான் பாரேன்!' என்று தேற்ற வேண்டும்..
- நண்பர்களோடு மொட்டை மாடியில் அமர்ந்து புதிதாய் பார்த்த படம் உருப்படாமல் போனதன் காரணத்தை அலச வேண்டும்..
- கடற்கரையின் அந்தி சாயும் வேளையில், அனல் குறைந்த மணலில் அமர்ந்து நண்பர்களோடு இன்னதென்று நினைவு கொள்ள முடியாத விஷயங்கள் பேச வேண்டும்..

இன்னும் எவ்வளவோ நிராசைகள்..
ஆனால், இந்த பதிவு ஒரு புலம்பல் அல்ல, ஆதங்கம் மட்டுமே. ஏனெனில் இழந்ததை போலவே நான் பெற்றதும் அதிகம்..

இதை படிக்கும் உங்களுக்கு ஒரு நட்பு வட்டம் இருக்குமானால், அதை ஆராதியுங்கள்..ஏனெனில் எல்லோரும் உங்களை போல அதிர்ஷ்டசாலிகள் அல்ல..