Thursday, 29 March 2012

சீரியல் நாயகியா நீங்க?

பெரும்பாலான ஆண்கள் சீரியல் பாக்கற அம்மணிகள கலாய்கறதால, விக்னா இருக்கும் போது பெண்குலத்துக்கு இப்படி ஒரு இழுக்கானு பதிவு போடவந்துட்டேன்! அதுக்கு முன்னாடி நாம ஒரு வாரம் TV பார்ப்போம்னு ஆரம்பிச்சேன்..(என் வீட்ல ஏகப்பட்ட போட்டி இருக்கறதால நம்மள ரேடியோ பெட்டி எப்பவோ தத்து எடுத்தாச்சு)

நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் தென்பட்டன. அதில் சில -

கதாநாயகி மிக அழகாக, எப்போதும் சிரித்த முகத்துடனும், வேலைக்கும் போய், குடும்பத்தையும் சரியாக கவனிப்பவராக இருக்கிறார். ஆனால், அவர் மாமியார் வில்லியாக மாறவேண்டி இருப்பதால் அவருக்கு குழந்தை பிறக்காமல் இருக்கிறது; அல்லது பிறந்த வீடு ஏழ்மையோடு இருக்கிறது.

முக்கியமாக, நாத்தனார் ஆட்டோ காரரோடு ஓடிபோனாலும், தம்பியை போலீஸ் பிடித்து போனாலும், கணவருக்கு வேறு தொடர்பு இருப்பது தெரிந்தாலும், அழகான உடை அணிந்து, மேட்சிங்-மேட்சிங் அணிகலனுடன் வந்து கவலைபடுகிறார்..(ஆதலினால் பெண்டிரே - இனி காலையில் பொங்கின பாலுக்காக இரவு வரை மூஞ்சியை 'உம்' என்று வைத்து கொள்ளாதீர்!)

நமக்கெல்லாம் ஜி.கே ரொம்ப கம்மி. போலீஸ் ஸ்டேஷன் கு போகணும்னா வீட்டை விட்டு வெளியே வந்ததும், இடதா-வலதா எப்டி திரும்பனும்னு கூட தெரியமாட்டேன்கிறது. நம்ப நாயகி பொழுது விடிஞ்சு,பொழுது போனா ஆட்டோல போய், போலீஸ் ஸ்டேஷன் ல இறங்கி தம்பி/கணவர்/மைத்துனர் இப்படி யாரையாவது ஜாமீன்ல எடுக்கறாங்க..

ஏதாவது முக்கியமான விஷயம்னா, கேட்பவருக்கு முதுகு காட்டி, கேமரா பார்த்து பேசுகிறார்கள். நானும் ஒரு பில்ட்-அப் காக அப்டி செஞ்சு பார்த்தேன். கால் மணி நேரம் பேசினதுக்கு அப்புறம் திரும்பி பார்த்தா என் கணவர் எப்பவோ 'எஸ்கேப்' !!

அப்புறம் படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு கிழவர் மாத்திரை/மருந்து வாங்குகிறாரோ இல்லையோ, கண்டிப்பாக கதாநாயகியிடம் எதோ ஒரு காரணத்திற்காக சத்தியம் வாங்குகிறார்!

யார் என்னவேணா சொல்லிட்டு போகட்டும். சீரியல் னா தினமும் தவறாம, கண் இமைக்காம பார்க்கணும். நான் கூட ஒருமுறை, 'என்னம்மா இது? எவ்ளோ நல்ல பொண்ணா இருந்தாங்க; இப்போ யார் கூடவோ சுத்துறாங்கன்னு கேட்க போய் நல்லா வாங்கி கட்டிகிட்டேன்..போன எபிசொட் ல 'அவருக்கு பதில் இவர்னு' ஒரு செகண்ட் காட்டினாங்கலாமே?

ஒரு நாளைக்கு எல்லா டிவி லயும் சேர்த்து கிட்டத்தட்ட 25 சீரியல் ஒளிபரப்பாகுதுனா கூட அதுல முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ குடும்பங்கள் ஒண்ணு கூட காணும்?! கல்யாணம் ஆகாமலே குழந்தை; 2 பொண்டாட்டிக்கு 3 புருஷன்னு காட்டினா டைரக்டர கட்டி வச்சு தோல உரிப்பாங்கனு தெரியுமோ என்னவோ?

நீங்க விரும்பி பாக்கற சீரியல் ல, குடிகார தம்பி திருந்தி IAS (அதேதாங்க!) கலெக்டர் ஆகறாரா? மாமியார் ஒரு நாள் டயலாக் ல (இத முதல் எபிசொட் லையே செஞ்சு தொலைச்சா தான் என்ன?) நல்லவங்களா ஆகறாங்களா? நாத்தனார அவங்க புருஷன் வந்து கூட்டிகிட்டு போயிடறாரா?

இது போல எல்லாம் நல்லதாவே வரிசையா நடந்தா, உங்க சீரியல் டைரக்டர் கு சினிமா சான்ஸ் கிடைச்சாச்சுன்னு அர்த்தம். சீக்கிரமே குரூப் போட்டோ எடுத்து சீரியல முடிக்க போறாங்க..

கலங்காதீங்க..எவ்....வளவோ பார்த்துட்டோம்...புதுசா ஒண்ண பார்க்கமாட்டோமா என்ன?

பின்குறிப்பு - ஒரு சீரியலுக்கு பின்னால் Director, Asst.Directors, Creative(?)Head, Dialogue & Screen play writers, Music composer என குறைந்தது 10 - 15 ஆண்கள் இதையே தொழிலாக கொண்டு உழைக்கிறார்கள். இவர்கள் அரைத்த மாவையே அரைத்து, முடிந்த வரையில் கலாசார சீரழிவுகளை புகுத்தி கதை அமைகிறார்கள். முடிவில், அதை பொழுது போக்கிற்காக பார்க்கும் அம்மணிகளை மட்டும் குறை காண்கிறார்கள்! காரணம் தான் புரியவில்லை..

14 comments:

 1. You have done a big research on the serials. Intially i use to watch them but i am bored and i stopped watching them. I you deserve a Ph.d for this :)

  ReplyDelete
  Replies
  1. Thank you, Sreeni..But not much effort needed.

   -Dr.Vigna

   Delete
 2. அமெரிக்காவில் எழுவதுகளில் நிறையவந்து இப்போ கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு ஒன்றிரண்டு தான் வருகிறது. பெரும்பாலும் நகைச்சுவை தொடர்கள் தான். ஒவ்வொரு எபிசோடும் அன்றைய ஒரு சிறு நிகழ்ச்சியாக இருப்பதால், தொடர்ந்து பார்க்க வேண்டிய தேவை இல்லை.
  அதே போல், இவருக்கு பதில் இவர், அப்படின்றதே இல்லை..

  நம் ஊரிலும் என்றாவது ஒருநாள் எல்லா சீரியல்களும் ஒழிந்து போய்விடும் என்ற நம்பிக்கையை இந்த ஊரில் நடந்தது விதைக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. bandhu சார், சீரியல் ஏன் ஒழியணும்கறீங்க? நம்ம பெண்களுக்கு சீரியல் ஒரு வரப்ரசாதம்ன்னு தோணுது. 'இருகோடுகள்' மாதிரி கதாநாயகியின் கவலைகளில் தங்களுடையதை மறக்கிறார்கள்..

   Delete
 3. உண்மையை உரைக்கும் தேவையான, அருமையான
  பதிவு!வாழ்த்துக்கள்!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 4. //ஒரு நாளைக்கு எல்லா டிவி லயும் சேர்த்து கிட்டத்தட்ட 25 சீரியல் ஒளிபரப்பாகுதுனா //

  உங்க கணக்கு தப்பு. ஒரு டி.வி. யில மட்டும் ஒரு நாளைக்கு 12 சீரியல். இப்படி தமிழ் சேனல்கள் 15 இருக்கு. ஆக மொத்தம் ஒரு நாளைக்கு 300 சீரியல் ஓடிக்கிட்டு இருக்கு. சீரியலுக்கு வீடு வாடகைக்கு கொடுக்கிறது சென்னையில இப்ப ரோரிங்க் பிசினஸ்.

  ReplyDelete
 5. சாமி சார் - கணக்க விடுங்க..விஷயம் கரெக்டா இல்லையா, சொல்லுங்க..

  ReplyDelete
 6. 'உண்மைதான். ரெண்டு புருஷன் மூணு பொண்டாட்டி, அதற்கான கொலைகள், யாராவது யாரையாவது கொலை செய்ய திட்டம் போட்டுட்டே இருக்காங்க. அதில விசேஷம் பெண்கள்தான திட்டம் போடுறது.' ஒரு பதிவு தொடரே எழுதலாம் இதெல்லாம் பத்தி. அப்படி ஒரு ஐடியா இருக்கு.நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்க. ஆனா ஒணணு பதிவு எழுதறதுக்காக சீரியல் பாக்கணும்.மயங்கிவிடக் கூடாது.

  டெம்ப்ளேட் பின்னணி நிறம் அருமை. good layout

  ReplyDelete
  Replies
  1. அச்சோ..ஆளவிடுங்க..இதுக்கே என்னை கொலவெறியோட தேட்டிட்டு இருக்காங்க..

   Template design - nothing much I have done, except for choosing one. Thanks anyway..Your comments are a great support for me as always..

   Delete
 7. தமிழ் serials வயதானவர்களுக்கு நல்ல பொழுது போக்கு. நீ சொல்ற மாதிரி serials பாத்து அவங்கள் கஷ்டத்தை மறக்கறாங்க . ஸ்கூல் கு போகற மாணவர்களின் படிப்பு இதனால் பாதிக்காமல் இருந்தால் serials யை நாம குத்தம் சொல்ல முடியாது. ஒரு வயதுக்கு அப்பறம் நாமும் தமிழ் serials யை enjoy பண்ண கத்துக்கிட்டு வயசான காலத்தை enjoy பணனும்னு அசை.
  Krithika.

  ReplyDelete
  Replies
  1. அப்படியே ஆகட்டும்!

   Delete
 8. ஸர்ஃப் எக்ஸல் பௌடர் போட்டு நல்ல அலசல்.

  நான் முன்பொருமுறை எழுதிய குட்டிப் பதிவு.

  http://inru.wordpress.com/2007/09/18/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/

  ReplyDelete
  Replies
  1. // ஸர்ஃப் எக்ஸல் பௌடர் போட்டு நல்ல அலசல்.//
   அனுபவமா சாரே??

   Delete