Saturday, 21 April 2012

எதுக்கு இத்தனை கொலைவெறி?

என்னோட ரெண்டரை வயது குட்டி பையனோட பேரு ஷ்யாம். அழகான பால் வடியும் முகத்தோட அவன் பண்ற குறும்பு இருக்கு பாருங்க? அத ஒரு பதிவுல போட முயற்சி பண்ணிருக்கேன்.(நான் எவ்ளோ எழுதினாலும் அவன் செய்யறதுல அது நாலுல ஒரு பாகமா தான் இருக்கும்)

பொதுவா அவன் பண்ற விஷமங்கள நாலா வகைபடுத்தி வச்சிருக்கேன்.
1) Life threatening - கரெண்ட் சம்பந்தப்பட்ட குறும்புகள், மொட்டை மாடிலேருந்து எட்டி பாக்கறது, கார்க்கு வெளியே கைய திடிர்ன்னு நீட்றது, வீட்டுக்கு வந்த யாராவது கேட்ட திறந்துவச்சிட்டு போயிட்டாங்கன்னா ரோட்டுக்கு ஓடிடறது..  - இதெல்லாம், இந்த category க்கு கீழ வரும். நாம செய்யற வேலைய( அது எதுவாயிருந்தாலும்) போட்டது போட்டபடி ஓடிபோய் தடுத்து நிறுத்த வேண்டிய விஷமங்கள்.

2) Replaceable damage - என் பொண்ணு நாளைக்கு பறிச்சுக்கலாம்ன்னு வச்சிருக்க ரோஜா பூவ ஸ்ரத்தையா இன்னிக்கே இதழ் இதழா பிச்சு போடுவான். அவங்க அப்பா லேப்டாப் திறந்திருந்ததுனா அவர் விட்டுட்டு போன code அ அவன் எழுதி முடிச்சிடுவான். ஏதாவது ஒரு பைப்பை திறந்துவிட்டுட்டு போய்டேருப்பான். (பவர் கட் சமயத்துல தண்ணி இல்லைங்கறது எவ்ளோ கஷ்டம்ங்கறது குடும்பத்தலைவிக்கு தான் தெரியும்..) இத போல விஷமங்கள் கொஞ்சம் சரிபண்ண கூடியதுங்கரதால விழுந்து அடிச்சு போக தேவையில்ல..

3)Irreplaceable damage - லைப்ரரி புக்க ஒரு கை பாக்கறது, நாம கையெழுத்து போடவேண்டிய பொண்ணோட ரேங்க் கார்ட்ல நமக்கு முன்ன போடறது - இதெல்லாம். (எதோ கொஞ்சம், அவங்க அப்பா கையெழுத்து அப்படி இப்படி இருக்கறதால மிஸ்ஸுக்கு வித்யாசம் தெரியல..) நாம அட்டென்ட் பண்ற வேகமும் - damage ம் inversely proportional ஆ இருக்கும்! 

4)Minimal. - இது கொஞ்சம் போனா போகுது ரகம்.  சுவத்துல கிறுக்கறது, கண்ட எடத்துல தண்ணிய ஊத்தி வைக்கறது - இதெல்லாம் இதுல சேர்த்துக்கலாம்.
அதிலும் அரிசிய குட்டி கையால அள்ளி வரிசையா எல்லா பாத்திரத்து மேலையும் அட்சதை தூவி கல்யாணம் பண்ணிவச்சிடுவான்!!

அவன் பெரியவனானதும் அவன நம்பி நீங்க பொண்ணு கொடுக்கலாம். மனைவி துணியும் சேர்த்தே துவைச்சு கொடுத்திடுவான். எப்பவும் எதையாவது போட்டு தண்ணிக்குள்ள முக்கி-முக்கி எடுத்துகிட்டே இருக்கான். என்ன ஒண்ணு?- இப்போதைக்கு செல்போன், வாட்ச், டிவி ரிமோட், ரூபா நோட்டுன்னு ஒண்ணையும் விட்டு வைக்கறதில்ல..

ஒரு முறை ஊருக்கு போக bag எல்லாம் ரெடி பண்ணியாச்சு..இவன் அது மேல உட்கார்ந்து விளையாடிட்டு இருந்தான். எனக்கும் கிளம்பற அவசரம்..கடைசியில பார்த்தா அத்தன துணியிலும் உச்சா போய் வச்சிருக்கான்.இத அப்படியே எடுத்து போய் போட்டுகிட்டா என்னைத்தான தப்பா நினைப்பாங்க?? ஒரு வாரமா பிளான் போட்டு எடுத்து வச்ச துணியெல்லாம் விட்டுட்டு, எதெல்லாம் 'வேண்டாம் லிஸ்ட்' ல இருந்ததோ அத மட்டும் அவசர அவரசமா பாக் பண்ண வேண்டியதாச்சு!! ஊர்ல போய் பார்த்தா சுடிதார்க்கு டாப் இருந்தா பாட்டம் காணும். ரெண்டும் இருந்தா துப்பட்டா இல்ல..ச்சே.நொந்துட்டேன். 

வீட்ல எல்லா எலெக்ட்ரானிக் சாமான்களும் குத்துயிரும்-குலை உயிருமா இருக்கு. இப்போ வரைக்கும் என் லேப்டாப் ல  கமா (,) வேலை செய்யாது. நான் மொத்தமா டைப் பண்ணிட்டு கமா போடவேண்டிய இடத்துக்கு காபி-பேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்..இன்னும் செல்போன் க்கு எல்லாம் இது எத்தனாவது புனர்ஜென்மம்ன்னு கணக்கே இல்ல..

அப்புறம் பிரிட்ஜ் கிட்ட வந்தான்னா கவிஞர்கள் பாடற மாதிரி அந்த எடம் முழுக்க பாலாறா ஓடும். சமயத்துல பாலும் தயிரும் கலந்து கூட ஓடும். ஒரு தடவ horlics மொத்தத்தையும் பால்ல கலக்கினதுல, எங்க வீட்டு வழியா போனவங்களுக்கு கூட அன்னிக்கி horlics மரியாத!

வீட்ல எவ்ளோ newspaper கிடந்தாலும் பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்னு அவன் அக்கா புஸ்தகத்த எடுத்து கிழிப்பான். அப்புறம், அவ அழ ஆரம்பிச்சா அவளே நிறுத்தணும்னு நினைச்சாலும் முடியாது..

இத எல்லாத்தையும் கூட பொறுத்துக்கலாம், ஆனா வீட்ல அவனுக்கு சப்போர்ட் அதிகம்கரதால அவன் பண்ற குறும்பு எல்லாத்துக்கும் நான் தான் பதில் சொல்லியாகணும். இன்னும் சாப்பாடு ஊட்டணும்னா வீட்ட சுத்தி 108 தடவ ஓடியாகணும். (சத்தியமா சொல்றேன், என் BMI ஒரே அளவா இருக்கறத்துக்கு ஷ்யாம் மட்டுமே காரணம்)

இத்தனை பண்ற வீரனுக்கு விழுப்புண் இல்லாம இருக்குமா? இந்த ரெண்டு வருஷத்துல எங்க pediatrician, Maruthi omni லருந்து SX4 க்கு மாறிட்டார்..

ஆமாம்....இந்த இணையத்துல குழந்தைகள அஞ்சு வயசுக்கு மேல தான் ஸ்கூலுக்கு அனுப்பணும்ன்னு எழுதறது யாருங்க? - கொஞ்சம் வீட்டுக்கு வாங்க!
உங்கள தான் கொலவெறியோட தேடிகிட்டு இருக்கேன்.


Monday, 16 April 2012

மாற்றம் மட்டுமே மாற்றமில்லாதது..

ஆங்கிலத்தில் change - the only constant என்று ஒரு quote உண்டு. அதை அனுபவபூர்வமாகவே உணர்ந்திருக்கிறேன். நான் தினம் பார்க்கும் மனிதர்களும், விஷயங்களும் (ஏன் நானும் தான்) மாறி இருப்பது நன்றாகவே தெரிகிறது..

ஒரு மனிதர் -
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு என் பக்கத்துக்கு வீட்டிலிருக்கும் போர்ஷனுக்கு ஒரு பேச்சிலர் குடி வந்தார். அவர் வந்த நாள் முதல் எனக்கு இசை விருந்து தான். அருமையான இசை ரசனை உள்ளவராக இருந்தார். காலை ஆறு மணி முதல், அவர் அலுவலகம் செல்லும் வரை பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் (பெரும்பாலும் ராஜா சார் பாடல்கள்). அவர் போர்ஷனும் என் சமையலறையும் அருகருகே இருந்ததால், நானும் கூடவே ஹம் பண்ணிக்கொண்டு சமையல் செய்வேன். பின்பு மாலை ஆரம்பிக்கும் பாடல்கள் இரவு அவர் தூங்க போகும் வரை தொடரும். இவ்வாறு ஒரு ஒண்ணரை வருடங்கள் போனதில், அவர் சிடிக்களில் அடுத்தடுத்து வரும் பாடல்கள் கூட என்னால் யூகிக்க முடிந்தது..ஆனால், பாடல்கள் பரிட்சயமான அளவுக்கு அவர் எனக்கு அறிமுகமாகவில்லை.. எப்போதாவது நாங்கள் எதிரெதிரே பார்க்க நேர்ந்தாலும் தலையை குனிந்தவாறு போய்விடுவார்.

பிறகு ஒரு நாள் பெண்குரல் கேட்க ஆரம்பித்தது..பாடல்கள் நின்று போய் டிவி சத்தம் (சீரியல்கள் என்று படித்து கொள்ளவும்) ஆரம்பித்தது.இப்போது அதையும் விட அதிகம் ஒலிப்பது சுட்டி டிவி யில் வரும் கீச்சு-கீச்சு குரல்கள்.

இப்போதெல்லாம் ஒரு வயது குழந்தையை கையில் வைத்து கொண்டு, எண்ணை வைத்து படிய வாரிய தலையுடன், கொஞ்சம் பருமனாக, பளீரென்ற திருநீறு பூசி(அதைவிட பளீரென்ற தங்க சங்கிலியுடன்) ஒருவர் தென்படுகிறார். சற்றே மாநிறமாய், ஒல்லியான உடல்வாகுடன், அடர்ந்த கேசம் கொண்ட இளைஞனாக என் மனதில் மசமசப்பாக பதிந்திருந்த அவரா என்று எனக்கே குழப்படியாக இருக்கிறது..

எல்லாவற்றையும் விட கண்களை நேரே பார்த்து புன்னகைக்கிறார். குழந்தையிடம் 'ஆன்ட்டிக்கு ஹலோ சொல்லு..' என்கிறார்..ம்ம்..மாற்றம்!

நான் -
சுஜாதா சாரின் படைப்புக்களை கூர்ந்து கவனித்தால் அவர் ரசனையும், எழுத்தும் அவர் வயதோடு சேர்ந்து அழகாக முதிர்ச்சி அடைந்திருப்பதை பார்க்கலாம். (அடல்ட்ஸ் ஒன்லி சமாசாரம் தூக்கலான நாவல்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், தத்துவம் என்று பயணித்து பாசுரங்களை விளக்குவதில் வந்து முடித்தார்.)

எனக்கும் அவ்வாறே வயதோடு சேர்ந்து ரசனைகள் மாறியிருப்பதை நன்கு உணர முடிகிறது. Mils and Boon நாவல்கள் தலையணை அடியில் மறைத்து படித்த காலம் போய், இப்போது என் லைப்ரரியில் அலமாரி அலமாரியாக அடுக்கி வைக்கபட்டிருந்தாலும் எடுத்து பார்க்க கூட தோன்றுவதில்லை..ஸ்கூட்டியை எதோ பல்சர் போல ஓட்டியது போக, இப்போது சைக்கிள் காரர் ஓவர்டேக் பண்ணாத குறையாக போய்கொண்டிருக்கிறேன். இன்னும் எண்ணெய் உணவுகள், சம்கி உடைகள், மெலோ ட்ராமா சினிமாக்கள் போன்ற பல விஷயங்களில் என் ரசனைகள் மாறியிருக்கிறது..

விஷயங்கள் -
கீழ்கண்ட சமாச்சாரங்கள் மக்களுக்கு சீக்கிரமே அலுக்கபோகிறது என்பது என் அனுமானம்.

ரியாலிட்டி ஷோகள், அழுமூஞ்சி சீரியல்கள், Facebook / ட்விட்டர் வகையறாக்கள் மற்றும் IPL.
சில ரசனைகள் முற்றிலுமாக அழிந்து போனது வருத்தமே - அதில் ஒன்று தமிழர்கள் மறந்து போன (பாடல்கள் தோறும் சினிமாகாரர்கள் நினைவுக்கு மட்டும் வரும்) பாவாடை-தாவணி.

மாற்றம் பற்றின எனக்கு பிடித்த வரிகள் - 'இறைவா, என்னால் மாற்ற முடியாதவைகளை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவத்தையும், மாற்ற முடிந்த மற்றும் வேண்டியவையை மாற்றும் ஆற்றலும், இரண்டையும் பிரித்தறியும் பகுத்தறிவையும் எனக்கு தா!' (தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்)

அம்மாவின் அன்பு மட்டுமே மாறாதது என்பார்கள். இன்னும் சில விஷயம் சேர்க்கலாம் என்று தோன்றுகிறது.

மாறாத ரசனைகள்: பார்க்க - நிலா, யானை, கடல் மற்றும் குழந்தை முகம். படிக்க - பொன்னியின் செல்வன். கேட்க - இளையராஜா.

(உங்கள் பார்வையில் மாறாதது பற்றி பின்னூட்ட(கமெண்ட்ஸ்) பகுதியில் எழுதலாம்)
Friday, 13 April 2012

அவ்வையார் விருது

இந்த வருடம் முதல் 'அவ்வையார் விருது' அளிக்க போவதாக தமிழக அரசு அறிவித்ததும், அதை வாங்க போகும் பெண்மணியின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று நினைத்து சிரித்து கொண்டேன்..இதை சொன்ன போது இலக்கிய ஆர்வம் உள்ள என் நண்பர் கோபித்துக்கொண்டார்..உண்மையில், அவ்வையாரே தமிழ் உலகம் கண்டுகொண்ட முதல் அறிவாளி பெண். இருந்தாலும், இப்போது ஒருவரை 'அவ்வையார்' என்று அழைப்பது நடைமுறையில் மிகுந்த வயதானவர் அல்லது அதிகம் அட்வைஸ் செய்பவர் என்ற பொருளில் இருப்பதால் விருது வாங்குபவருக்கு வேடிக்கையாக இருக்கும் என்று தோன்றியது. என் நண்பருக்கு புரியாத இன்னொரு விஷயம் என்னவென்றால் எந்த பெண்ணுமே பிறர், தன் வயதை விட கொஞ்சமேனும் குறைத்து எடைபோடுவத்தையே விரும்புவாள்..

உதாரணமாக என் அம்மாவோடு புடவை கடைக்கு போனால், 'அந்த டிசைன் வேண்டாம்! அது வயசானவங்க கட்றது' என்பார். (எங்க அம்மாவை 'பாட்டி' என்றழைக்கும் ரெண்டு குழந்தைகள் வீட்டிலிருக்கின்றன) மனதளவில் என் அம்மாவை போல இளமையாக இருக்கும் பெண்கள் தான் பெரும்பாலானோர் என்பது என் நம்பிக்கை.  

இவ்ளோ என்? 'உங்க ப்ளாக் சூப்பர்!' ,' உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் நல்லாயிருக்கு..' - இப்படி அப்பப்போ எனக்கு ஏதாவது compliments கிடைக்கறதுண்டு. ஆனாலும், 'you don't look like mom of two' ன்னு சொல்றவங்கள மட்டும் instant ஆ பிடிச்சு போயிடுது!!

ஒரு வில்லத்தனம் கேளுங்க - எனக்கும், என் எதிர் வீட்டிலிருக்கும் என்னை விட ஒன்றிரண்டு வயது குறைந்த பையனுக்கும் 'தீராத பகை' ஒன்றிருக்கிறது. அவன் முதல்முதலில் என் வீட்டிற்கு வந்த கடிதத்தை கொண்டு வந்து தந்த போது கூரியர் பையன்னு நினைத்து 'எதில கையெழுத்து போடணும்?'ன்னு கேட்டு தொலைச்சேன். அதுக்காக என்னை 'ஆன்ட்டி'ன்னு கூப்பிட்டு உயிரை வாங்கறான். அவன், அன்னிக்கி செல்வராகவன் பட கதாநாயகி போல மூஞ்சிய உர்ர்ன்னு வச்சிருந்தது என் தப்பா சொல்லுங்க??? (அப்போ கத்துகிட்ட பாடம் என்னன்னா, யார்கிட்ட பேச ஆரம்பிச்சாலும் முதல் மொழி - புன்னகை தான்)

உங்களுக்கும் சொல்லி வைக்கறேன் - எந்த பெண்ணையாவது இம்ப்ரெஸ் பண்ணனும்ன்னு நினைச்சா, ' உங்கள பார்த்தா -- வயசு போலவே தெரியலையே? ரொம்பவே young ஆ இருக்கீங்க!' ன்னு ஒரு தூஸ்ராவ தூக்கி போடுங்க.அவங்க மட்டும்  க்ளீன் போல்ட் ஆகலன்னா என் பேர அருக்கானின்னு மாத்திக்கறேன்..

திரும்பவும் விருதுக்கே வர்றேன். என்னை பொறுத்த வரையில் 'அரசு விருது'ங்கறது, ஆட்சியில் இருப்போர் தனக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்கு கொடுக்கற சற்றே 'காஸ்ட்லி ட்ரீட்' !! அதுக்கு மேல அத பத்தி யோசிக்க கூடாது.. 
----------
அவ்வையார்ல ஆரம்பிச்சத,அவ்வையார்லே முடிக்கறேன்.  எனக்கு பிடிச்ச அவரோட வரிகள்-

 'எது அரியது?'  என்ற முருகனின் கேள்விக்கு அவ்வையின் பதில் இதோ -
'அரிதரிது மானிடர் ஆதல் அரிது; மானிடராயினும் கூன்-குருடு-செவிடு-பேடு நீங்கிப் பிறத்தல் அரிது; ஞானமும் கல்வியும்நயத்தலரிது'

என் நண்பர் தனக்கு பிடித்ததாக சொன்னது - 
                 ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
                 இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
                 என்னோவு அறியாய் இடும்பைகூர் - என்வயிறே 
                 உன்னோடு வாழ்தல் அறிது

( உணவு அதிகம் கிடைக்கும் அன்று இருவயிறுக்கும், கிடைக்காத அன்று ஒன்றுமில்லாமலும் இருக்க மறுக்கும் வயிறே - உன்னோடு ரொம்ப கஷ்டம்! - பசியோடு அவர் அலைந்து திரிகையில் இத்தனை அருமையாய் எழுதியிருக்கிறார்)

 முதுமைய விரும்பி ஏற்றுக்கொண்ட முதலும்-கடைசியுமான பெண் அவ்வை தான்!

அப்புறம் கடைசியா ஒரு விஷயம் - மேலே கோடிட்ட இடங்கள (--) சரியான நம்பர் கொண்டு நிரப்புங்க. இல்லைன்னா விளைவுகளுக்கு mars and venus company பொறுப்பேற்காது!!!