Monday, 16 April 2012

மாற்றம் மட்டுமே மாற்றமில்லாதது..

ஆங்கிலத்தில் change - the only constant என்று ஒரு quote உண்டு. அதை அனுபவபூர்வமாகவே உணர்ந்திருக்கிறேன். நான் தினம் பார்க்கும் மனிதர்களும், விஷயங்களும் (ஏன் நானும் தான்) மாறி இருப்பது நன்றாகவே தெரிகிறது..

ஒரு மனிதர் -
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு என் பக்கத்துக்கு வீட்டிலிருக்கும் போர்ஷனுக்கு ஒரு பேச்சிலர் குடி வந்தார். அவர் வந்த நாள் முதல் எனக்கு இசை விருந்து தான். அருமையான இசை ரசனை உள்ளவராக இருந்தார். காலை ஆறு மணி முதல், அவர் அலுவலகம் செல்லும் வரை பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் (பெரும்பாலும் ராஜா சார் பாடல்கள்). அவர் போர்ஷனும் என் சமையலறையும் அருகருகே இருந்ததால், நானும் கூடவே ஹம் பண்ணிக்கொண்டு சமையல் செய்வேன். பின்பு மாலை ஆரம்பிக்கும் பாடல்கள் இரவு அவர் தூங்க போகும் வரை தொடரும். இவ்வாறு ஒரு ஒண்ணரை வருடங்கள் போனதில், அவர் சிடிக்களில் அடுத்தடுத்து வரும் பாடல்கள் கூட என்னால் யூகிக்க முடிந்தது..ஆனால், பாடல்கள் பரிட்சயமான அளவுக்கு அவர் எனக்கு அறிமுகமாகவில்லை.. எப்போதாவது நாங்கள் எதிரெதிரே பார்க்க நேர்ந்தாலும் தலையை குனிந்தவாறு போய்விடுவார்.

பிறகு ஒரு நாள் பெண்குரல் கேட்க ஆரம்பித்தது..பாடல்கள் நின்று போய் டிவி சத்தம் (சீரியல்கள் என்று படித்து கொள்ளவும்) ஆரம்பித்தது.இப்போது அதையும் விட அதிகம் ஒலிப்பது சுட்டி டிவி யில் வரும் கீச்சு-கீச்சு குரல்கள்.

இப்போதெல்லாம் ஒரு வயது குழந்தையை கையில் வைத்து கொண்டு, எண்ணை வைத்து படிய வாரிய தலையுடன், கொஞ்சம் பருமனாக, பளீரென்ற திருநீறு பூசி(அதைவிட பளீரென்ற தங்க சங்கிலியுடன்) ஒருவர் தென்படுகிறார். சற்றே மாநிறமாய், ஒல்லியான உடல்வாகுடன், அடர்ந்த கேசம் கொண்ட இளைஞனாக என் மனதில் மசமசப்பாக பதிந்திருந்த அவரா என்று எனக்கே குழப்படியாக இருக்கிறது..

எல்லாவற்றையும் விட கண்களை நேரே பார்த்து புன்னகைக்கிறார். குழந்தையிடம் 'ஆன்ட்டிக்கு ஹலோ சொல்லு..' என்கிறார்..ம்ம்..மாற்றம்!

நான் -
சுஜாதா சாரின் படைப்புக்களை கூர்ந்து கவனித்தால் அவர் ரசனையும், எழுத்தும் அவர் வயதோடு சேர்ந்து அழகாக முதிர்ச்சி அடைந்திருப்பதை பார்க்கலாம். (அடல்ட்ஸ் ஒன்லி சமாசாரம் தூக்கலான நாவல்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், தத்துவம் என்று பயணித்து பாசுரங்களை விளக்குவதில் வந்து முடித்தார்.)

எனக்கும் அவ்வாறே வயதோடு சேர்ந்து ரசனைகள் மாறியிருப்பதை நன்கு உணர முடிகிறது. Mils and Boon நாவல்கள் தலையணை அடியில் மறைத்து படித்த காலம் போய், இப்போது என் லைப்ரரியில் அலமாரி அலமாரியாக அடுக்கி வைக்கபட்டிருந்தாலும் எடுத்து பார்க்க கூட தோன்றுவதில்லை..ஸ்கூட்டியை எதோ பல்சர் போல ஓட்டியது போக, இப்போது சைக்கிள் காரர் ஓவர்டேக் பண்ணாத குறையாக போய்கொண்டிருக்கிறேன். இன்னும் எண்ணெய் உணவுகள், சம்கி உடைகள், மெலோ ட்ராமா சினிமாக்கள் போன்ற பல விஷயங்களில் என் ரசனைகள் மாறியிருக்கிறது..

விஷயங்கள் -
கீழ்கண்ட சமாச்சாரங்கள் மக்களுக்கு சீக்கிரமே அலுக்கபோகிறது என்பது என் அனுமானம்.

ரியாலிட்டி ஷோகள், அழுமூஞ்சி சீரியல்கள், Facebook / ட்விட்டர் வகையறாக்கள் மற்றும் IPL.
சில ரசனைகள் முற்றிலுமாக அழிந்து போனது வருத்தமே - அதில் ஒன்று தமிழர்கள் மறந்து போன (பாடல்கள் தோறும் சினிமாகாரர்கள் நினைவுக்கு மட்டும் வரும்) பாவாடை-தாவணி.

மாற்றம் பற்றின எனக்கு பிடித்த வரிகள் - 'இறைவா, என்னால் மாற்ற முடியாதவைகளை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவத்தையும், மாற்ற முடிந்த மற்றும் வேண்டியவையை மாற்றும் ஆற்றலும், இரண்டையும் பிரித்தறியும் பகுத்தறிவையும் எனக்கு தா!' (தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்)

அம்மாவின் அன்பு மட்டுமே மாறாதது என்பார்கள். இன்னும் சில விஷயம் சேர்க்கலாம் என்று தோன்றுகிறது.

மாறாத ரசனைகள்: பார்க்க - நிலா, யானை, கடல் மற்றும் குழந்தை முகம். படிக்க - பொன்னியின் செல்வன். கேட்க - இளையராஜா.

(உங்கள் பார்வையில் மாறாதது பற்றி பின்னூட்ட(கமெண்ட்ஸ்) பகுதியில் எழுதலாம்)
8 comments:

 1. Constant list:
  1)Second guessing my parenting - should I have let go more/less?
  2) my bad sense of topography. Also add wanting to change that.
  3) wanting to shed my consciousness to dance away... Hmm... Porum.. the list gos to my dislike..

  ReplyDelete
  Replies
  1. mmm.. Nothing in the list seems to be unchangeable though! :)

   Delete
 2. கிட்டத்தட்ட 20 வருடங்களாக ராஜாவின் இசைக்கு அடிமையாக இருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. இந்த உலகத்திலேயே, அடிமைதனதிற்காக பெருமைப்படும் ஆசாமிகள், நம்மை போன்ற ராஜா சார் விசிறிகளே..

   Delete
 3. நம் புற தோற்றத்தை விட அக தோற்றமே நிறைய மாறுகிறது. சந்தர்பமும் சூழ்நிலையும் ஒரு மனிதனின் அக இளமையை மாற்றவில்லை என்றால் அவனே அதிர்ஷ்டசாலி ...

  Krithika.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்...ஆனால் புறத்தோற்ற மாறுதல் நம் கண்களுக்கு முதலில் தென்படுவதில்லை..முந்தய பதிவை (அவ்வையார் விருது) படித்து பார்க்கவும்.

   Delete
 4. blog ஆறுமாதத்துக்குள் அலுத்துப் போய் பதிவு எழுதி ரெண்டு மாசமாகப் போகிறது. என்னத்த சொல்ல...எழுதுவேன்னு பட்சி சொல்லுது!

  ReplyDelete
  Replies
  1. எங்களுக்கு அலுக்கல..அதனால தொடர்ந்து எழுதுங்க.. :)

   Delete