Wednesday, 2 May 2012

ஒரு கதை !

இது சுஜாதா சாரோட கதை. இணையத்தில் சாரை வாத்தியார் என்று அழைக்கிறார்கள். எனக்கும் இது பிடித்திருப்பதால் இனி இது 'வாத்தியாரோட' கதை.

கதைக்குள் நுழைவதற்கு முன் - 
பொதுவாக எனக்கு கதைமாந்தர்கள் பெயர்கள் நினைவில் நிற்பதில்லை(அமரர் கல்கியின் படைப்புகள் மட்டும் விதிவிலக்கு.)இதற்கு நிறைய படிப்பது என்று நானே புத்திசாலிதனமான காரணம் தேடிக்கொண்டாலும்,உண்மை எனக்கு இன்னும் கவனம் போதவில்லை என்பதே. இந்த கதையிலும் பெயர்கள் நினைவில் இல்லை. ஆனால் கதை மட்டும் பிடிவாதமாக மூளையில்.(அப்படியாவது எழுதியாக வேண்டுமா என்றால், இதை பதிய ஒரே காரணம் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதே! )

இனி கதை -

                                                 விரும்பி சொன்ன பொய்கள் 

சர்கஸில் வேலை செய்யும் ஒரு ஆசாமி தான் நம் கதையை நகர்த்த போகிறவன்.அவன் பெயர் மட்டுமல்ல உருவ வர்ணனைகள் கூட நமக்கு அவசியமற்றது. ஆனால் அவசியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது - அவன் செய்யும் வேலை. நம்மாள் வில் வித்தையில் இன்னொரு அர்ஜுனன்.தினமும் மூன்று ஷோவின் போதும் ஆப்பிள் முதல் இன்ன பிற சாமான்கள் தலையில் வைத்திருக்கும், ஜிலு-ஜிலு உடையணிந்த பெண்ணின் மேல் அம்பு எறிய வேண்டும். அம்பு சாமானை மட்டுமே தொட வேண்டும். செய்தான். அன்றோருநாளை தவிர! அவன் காதலை  அவள் நிர்தாட்சண்யமாக நிராகரிக்க, அவன் கோவம் அம்பாக அவள் மீது பாய்ந்தது.

ஆனால் அவள் சாகவில்லை.முடிவு - இரண்டாண்டுகள் சிறைவாசம். திரும்பி வந்ததும் சர்கஸ் முதலாளியிடம் போய் நின்றான். வேறு வேலை அவனுக்கு தெரியாது (அல்லது தெரியாது என்பதை மட்டும் நம்பினான்.)அவர் அவனை ஒரு வாரம் கழித்து வர சொல்கிறார். திரும்பவும் சர்கஸில் சேர்க்க இயலாத காரணத்தை சொல்லி, அவன் முன்கதை தெரிந்த ஒரு பணக்கார முதலாளியிடம் சேர்த்து விடுகிறார்.இப்போது, அவனுக்கு மதுரையில் ஒரு குடோனில் வேலை. என்ன  வேலை, அது அவனுக்கு பிடித்திருக்கிறதா என்பதை விட, அவன் முதலாளி யார் என்பதை தெரிந்து கொள்வோம்.

முதலாளி, அறுபதுகளின் தொடக்கத்தில் இருக்கும் மிகுந்த பணக்காரர் (அப்டிதான் இருக்க வேண்டும். ஏனெனில் அவருக்கு மதுரை குடோன் பக்கம் வருவதற்கு நேரம் இருக்கவில்லை. எப்போதாவது வருடத்திற்கு ஒரு முறை வந்து போகிறார்!) 

ஒரு நாள் முதலாளியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. தன் மனைவி அங்கு வருவதாகவும், மதுரையை சுற்றி காட்டுமாறும் பணிக்கிறார். அவன், ஒரு வயதான குண்டு அம்மணியை எதிர்பார்த்திருக்க, தேவதை போல ஒரு இளம் பெண் படு மாடர்னாக காற்றோட்டமான உடையணிந்து (மதுரைக்கு அது ரொம்பவே ஓவர்!)விமானத்தில் வந்து இறங்குகிறாள்.

மதுரையில், கோவிலை தவிர எல்லா இடங்களுக்கும் ஷாக் அப்சார்பர் இல்லாத டிவிஎஸ் 50 யில் சுற்றுகிறார்கள். காதல் போல எதோ ஒன்று அவனுக்கும் TVS 50 ஐ விட வேகமாக வருகிறது. பெரும்பாலும் மரணம் மற்றும் தற்கொலை பற்றியே பேசுகிறாள். பிடிவாதமாக அவன் மேன்ஷனுக்கு வந்து சுவரில் மாட்டி வைத்திருக்கும் வில்-அம்பை பரிசாக கேட்டு பெறுகிறாள். 

கடைசி நாளன்று, மதுரையிலிருந்து தள்ளி இருக்கும் கடற்கரையோர கிராமத்திற்கு செல்கிறார்கள். அன்றிரவு அம்மாவாசை இருட்டில், நட்சத்திரங்கள் கண்சிமிட்டி கிண்டலடிப்பதை பொருட்படுத்தாமல் அலைகளை காவல் வைத்து ஒன்று சேர்கிறார்கள்.(கண்டுகாதீங்க. வாத்யார் கொஞ்சம் ரகளையான ரசனைகாரர்)

மறுநாள் அதிகாலையில் மறுபடி விமானம். செல்லும் முன் ஒன்றை சொல்கிறாள் - என்ன காரணம் கொண்டும் தன்னை அழைக்க கூடாதென்றும், வேண்டுமானால் தானே அழைப்பதாகவும் கட்டளை போல தெரிவிக்கிறாள்.

அன்று முதல் அவன் பித்துபிடித்தவன் போலாகிறான். எப்போது கூப்பிடுவாள் என்று ஒவ்வொரு மணித்துளியும் ஏங்குகிறான். அந்த அழைப்பு ஒரு ஆறு மாதம் கழித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட ஞாயிற்று கிழமையில் சென்னையில் உள்ள கடற்கரை பங்களாவில் வந்து சந்திக்க ஏற்பாடாகிறது..
மறுபடியும் அவள் மற்றும் கடல்!!(இம்முறை அவனுக்கு வருவது காதல் இல்லை மற்றொரு மூன்றெழுத்து கா.)அதே அனுபவத்திற்காக அவன் துடிக்க, வாசலில் எதோ அரவம் கேட்கிறது. அவள் கணவர் வந்து விட்டதாக கூறி அவனை போக சொல்கிறாள்.

அன்றிரவு அந்த பணக்காரரின் மனைவி அம்பால் குத்தப்பட்டு இறக்கிறாள்.

கதைக்குள் இன்ஸ்பெக்டர் பாலா வருகிறார். நமது வில்லாளியை கைது செய்கிறார். சந்தர்பம்,சூழ்நிலை,கைரேகை இத்தாதி இத்யாதி எல்லாம் சரியாக இருந்தும் அவர் மனம் வில்லாளியை கொலையாளியாக பார்க்க மறுக்கிறது..

அவனிடம் நடந்ததை முழுமையாக கேட்டறிகிறார். இப்படி இருக்கலாமோ? அவர் மனம் ஒரு புதிய கோணம் காட்டுகிறது - நடந்தவை எல்லாமே நாடகம். பணக்காரரின் மனைவி போல வந்தவள் ஒரு நியமிக்கப்பட்ட கால் கேர்ள்.எலிக்காக வைக்கப்பட்ட மசால் வடை.சம்பவம் நடந்த அன்று வில்லாளி சென்றப்பின் உண்மையான மனைவியை கொலை செய்கிறார் பணக்காரர். (அதாவது அவன் பார்த்து பழகிய பெண், முதலாளியின் மனைவியல்ல. அவ்வாறு அவன் நம்ப வைக்கப்படுகிறான்)

உண்மையை அறிய பாலா அவனை அழைத்து கொண்டு பணக்காரரின் வீட்டுக்கு விரைகிறார்..அங்கே சவபெட்டியின் கடைசி ஆணி அடிக்கப்படுகிறது..
அதை திறக்கச் செய்து அவர் கேட்கும் கேள்வி - " நீ பார்த்தது இவளையா?"
--------------------------------------
பின்குறிப்பு - இந்த கதை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால், அதற்கு முழுக்க நானே பொறுப்பேற்கிறேன். கதையின் கரு மட்டுமே நினைவில் இருப்பதால் என் பாணி கதை செலுத்துதலில் உள்ள பிழை. மன்னிக்கவும்..
பிடித்திருந்தால் புகழ் வாத்யாருக்கே..


இக்கதையின் முடிவை ‘ஆம்’ ‘இல்லை’ என்ற வார்த்தைகளில் வாசகர்களிடமே விட்டு விடுகிறார் சுஜாதா. அதனால் தவறாமல் புத்தகத்தை வாசிக்கவும். (பிறகு வந்து திட்டலாம்)