Saturday, 9 June 2012

நான் ஏன் ??

சில கேள்விகளுக்கு பதில் ஒரு வரியில் சொல்லிவிட முடிவதில்லை. நினைவுநாடாவை சுழலவிடவேண்டியதான கட்டாயம். என்னை நோக்கி வீசப்பட்ட ஒரு கேள்விக்கான பதில் இதோ -

அப்போது நான் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். வாழ்கையில் ப்ராஜெக்ட் - வைவா என்பதை தவிர, புதிதாக எதுவும் சம்பவிக்காத அசுவாரஸ்யமான காலகட்டம்.

ஒரு நாள் கல்லூரியில் இருந்தது வீடு திரும்பி, அம்மா கொடுத்த தேநீரையும் புத்தகங்களையும் எடுத்து கொண்டு மொட்டை மாடியில் படிப்பதற்கு ஆயத்தமானேன். அப்போது தான் அவரை முதல் முதலில் பார்த்தேன்.(மணி 5 இருக்கலாம். புதன் கிழமை என்று நினைவு) அப்பா தான் அவரை அறிமுகப்படுத்தினார். வந்தவர் சுமார் 25 வயது மதிக்க தக்கவராய் 'பகல் நிலவு' முரளியை நினைவுபடுத்தும் கலையான முகத்துடன் இருந்தார். இன்னும் சரியாக சொல்லபோனால், என் வீட்டின் கூடத்தில் முதல் முதலாய் கைலி கட்டிய ஒருவரை காண்கிறேன். (இந்நாள் வரை என் அப்பாவோ, தம்பியோ கைலி கட்டுவதில்லை.)

5 நாட்கள் சேர்ந்தார்போல் வீட்டில் இருந்தார். அவர் வந்ததும் என் ரூமில் இருந்த சாமான்கள் வெளியே தூக்கி வீசப்பட்டன. ஆரம்பத்தில் இது குறித்து மிகுந்த கோவம் வந்தாலும், என் தம்பி சாமானும் சேர்ந்து வெளியே வந்ததில் மனம் சமாதானமடைந்தது. வீடே அவர் வந்ததால் அமளி-துமளி பட்டது..

உண்மையில் எனக்கு கரப்பான்பூச்சிஎன்றால் மிகுந்த பயம். ஆனால் வந்தவர் முன் அதை காட்டிக்கொள்ளாமல் திடீர் தைரியசாலி ஆனேன். ஒவ்வொரு நாளும் கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் போது ஒரு புது வித எதிர்பார்ப்பு முளைத்தது.  என் வீடே எனக்கு புதுவித தோற்றத்தையும், அனுபவத்தையும் தர ஆரம்பித்தது..'துளி துளியாய் அழகானது வீடு!' என்றெல்லாம் கவிதை போல எதோ தோன்ற ஆரம்பித்தது.

ஆனால் இதெல்லாம் 5 நாட்களுக்கு தான். அவர் போய்விட்டார். பழையபடி என் வீடு இல்லை என்பது மட்டும் புரிந்து போனது..ஆம்! அவர் விட்டு போன வாசம் - வீடெங்கும்; என் வீட்டை தாண்டும்போதும்..

அன்றுதான் எனக்கே என் பிடித்தம் பற்றிய புரிதல் வந்தது.
=====================
உங்களுக்கு குமுதம் வாசிக்கும் பழக்கம் உண்டென்றால் - சினிமா நடிகை எதிர்கொள்ளும் கேள்விகளை கவனித்திருக்கிறீர்களா? அவை இவ்வாறு இருக்கும் -
"நீங்க இந்த துறையை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?"
"நடிகை ஆகாவிட்டால் என்னவாகி இருப்பீர்கள்?"
"முதல் முதலில் நடித்த காட்சி பற்றி சொல்லுங்களேன்.." (அந்த நடிகையும் நான் எட்டாம் கிளாஸ் படிக்கும் போது, ஜூலியா ராபர்ட்ஸ் படம் பார்த்து..என பேட்டி அளித்திருப்பார். உண்மையில் அவருக்கு சாம் ஆண்டர்சன் பட நாயகியை பார்த்து நாம் கூட நடிக்கலாம் போலிருக்கே என தோன்றியிருக்கும்!)

என்ன? சம்பந்தாசம்பந்தம் இல்லாம இருக்கிறதே என்கிறீர்களா? இருங்க, வர்றேன்,

ஒரு நாள் நான், அகஸ்மாத்தாக தஞ்சாவூர் ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டென்று சொல்ல, அதை அப்படியே பிடித்துக் கொண்ட நண்பர், என் ரேஞ்சு தெரியாமல்
"நான் ஏன் இதை தேர்ந்தெடுத்தேன்?"
"எப்போதிலிருந்து இந்த பெயின்டிங் ஆர்வம்? "என்றெல்லாம் கேட்கிறார்.

நானும் ஒரு நடிகை போல் பாவித்துக்கொண்டு பதில் கூற தீர்மானித்ததில் இந்த பிளாஷ்பேக் கிட்டியது.
ஆம். நான் வரைவதற்கு அன்று வந்த நபர் தான் காரணம் என்று கண்டுபிடித்துவிட்டேன். இன்று அவர் வேறு யார் வீட்டிலோ கைலி கட்டிக்கொண்டு பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கலாம். ஆனாலும், அவர் என் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம் அளவிடமுடியாதது!!

---------------

நீங்க, வேற ஏதேதோ நினைச்சிருந்தா அதுக்கெல்லாம் நான் ஜவாப்தாரி ஆக முடியாது. பதிவ முதலிருந்து இன்னொரு முறை படிச்சிக்கோங்க! :)