Friday, 19 July 2013

குடும்பம் என்பது யாதெனின்..


நீண்ட நாட்களுக்கு பிறகு என் பால்ய சினேகிதியை சந்தித்தேன். நிறைய காரணங்களில் ஒன்றாக, ரசனைகள் ஒத்து வரவில்லை என்பதால் கணவரை பிரிந்து விட்டதாக சொன்னாள். ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. ஒத்த ரசனையும், திருமணமும்?? அப்படி யோசிக்க ஆரம்பித்தால் நானும், என் கணவரும் தான் உலகின் மிகச்சிறந்த மிஸ்-மாட்ச் ஜோடியாய் இருப்போம்.முற்றிலும் மாறுபட்ட பிடித்தங்களை உடைய எங்கள் கதையை கேளுங்கள் -


என் கணவருக்கு, இந்தக் கார்கள், அதன் மாடல்கள், எஞ்சின்கள் பற்றின யாவும் அத்துப்படி. பயணங்களில் என்னிடம், ஒரே செக்கில் ஒன்பது காரை வாங்க வந்திருக்கும் வாடிக்கையாளரை பார்த்து விட்ட விற்பனை பிரதிநிதி போல, கார்களை பற்றி விளக்குவார்  (அப்போது மட்டும், என்னிடமிருந்து ‘ம்’ மட்டும் வரும் என்பது அவருக்கு கூடுதல் ஸ்வாரஸ்யம்)

இவ்வாறாக போகும் எங்கள் உரையாடல் -

’அது தான் ரெனால்ட் DUSTER..’
’ஒ!’

’ ERTIGA வ விட 5 இன்ச் தான் கம்மி, ஆனா 5 ஸீட்டர். அதனால லெக் ஸ்பெஸ் அதிகம்..'
'ம்.'

'5.2m turning radius'.
'ம்’

'மைலேஜ் எவ்ளோ தருதுன்னா..  '
(மனதிற்குள் -நீங்க டஸ்டர்னதும் நியாபகம் வந்தது) 'ஒரு சூப்பர் மார்கெட்ல நிறுத்துங்க, விளக்குமாறு வாங்கனும்..'
---------------------
அவர் உலகத்தில் மொத்தமே கறுப்பு, வெள்ளை, மஞ்சள், பச்சை, நீலம் எனபதாக ஆறு, ஏழு வண்ணங்கள் தான். நமக்கு அப்டியா?

'இந்த புடவை நல்லா இருக்காப்பா?'
'இதே கலர் தான் ஏற்கனவே வச்சிருக்கீயே?'
'அது ஆஃப் வொயிட், இது க்ரீம்.. வேற, வேற.'
 ங்கே..

இன்னும் காப்பர் ஸல்பேட் ப்ளூ, ராயல் ப்ளூ, ஆலிவ் க்ரீன், பிஸ்தா க்ரீன், செர்ரி ரெட் இம்மாதிரியான வண்ணங்களின் பெயர்கள் அடங்கிய அத்யாவசிய தகவல்கள் தெரியாமல், எப்படி தான் வளர்ந்தாரோ என பாவமாக இருக்கிறது.
------------------------
ஒரு கல்யாணத்துக்கு போய் வந்தோம்.
‘அமெரிக்கால இருந்தானே ரகுராமன் மாமாவோட பையன், வந்திருந்தான் பார்த்தியா?’
‘யாரு, மஞ்சள் அனார்கலி போட்ட பொண்ணு பின்னாடியே சுத்தி சுத்தி வந்தானே அவனா?’
‘அது தெரியாது, Canon Eos 650d slr மாட்டியிருந்தானே?’
’ப்ச், Blue Jeans - Bottle green குர்த்தி, அவன் தானே?’
' iPhone 5 வச்சிருந்தானேமா.’
’ம்? நாதஸ்வர வித்வான் போல, எல்லா விரல்லயும் மோதரம் போட்டிருந்தானே, அவன தான் சொல்றீங்க?’
.
.
ஆக, அது ரகுராமன் மாமா பையனே தான் என்று, எதோ ஒரு வாக்கியத்தில் முடிவுக்கு வந்து விடுகிறோம்.
------------
அவருக்கு சுஜாதா பெயர் தெரியும். மற்றபடி, நான் லைப்ரரியில் இருந்து எடுத்து வரும் சு.ரா, அசோகமித்ரன், நாஞ்சில், தி.ஜா - இவர்களோடு அவருக்கு ஸ்நானப்ராப்தி கூட இல்லை.. என்றாவது ஒரு நாள், ‘ஜெயமோகன் யாரு, உன் ஒன்பதாங்கிளாஸ் ஹிஸ்ட்ரி வாத்யாரா?’ என்றுகூட அவர் கேட்கலாம்.. ஆனால், தலைவர் உருட்டி உருட்டி படிக்கும் எகனாமிக் டைம்ஸ், எனக்கு மாவு சலிக்க மட்டுமே உபயோகமாயிருக்கிறது.

எனக்கும் கிரிக்கெட் பார்க்க பிடிக்கும். அதாவது அது டெஸ்ட் அல்லாமல், ஒன்-டே அல்லது 20-20யாக இருந்து, அதுவும் லைவ் மேட்ச்’சானால், அதிலும் இந்தியா ஆடினால் பார்ப்பேன். தலைவர், எப்போதோ யாரோ விளையாடி, ஹர்ஷா போக்ளே வழுக்கை தலையோடு விமர்சனம் செய்யும் ஆதி கால மாட்சை கூட கண்சிமிட்டாமல் பார்த்து, என் பொறுமையை சோதிப்பார்... ‘18ஆவது ஓவர்ல காம்ப்ளி ஒரு ஸ்ட்ரெயிட் கட் அடிப்பான், பாரேன்..’ (எனக்கு தெரிந்த ஸ்ட்ரெயிட் கட்’டை பார்லரில் தான் பண்ணிவிடுவார்கள்)

ஹோட்டலுக்கு போனால், ஆனியன் ரவா தோசை ஆர்டர் செய்வதற்கு எதற்கு மெனு கார்ட் கேட்கிறார் என்றே ஒவ்வோரு முறையும் அலுத்துக்கொள்கிறேன். (நான், வாயில் நுழையாத பெயரை கண்டுபிடித்து ஆர்டர் செய்தால், வரும் வஸ்து பெரும்பாலும் வாயில் வைக்க வழங்காது. அப்போது, ரவா தோசையையே நான் திரும்ப திரும்ப சாப்பிட வேண்டி இருக்கிறதல்லவா?)

உன்னிகிருஷ்ணனின் ’மனவ்யாள...’வில் மெய் மறந்து லயித்திருந்தால், ‘கர்னாடக சங்கீதத்துக்கு கம்பீரமான ஆண் குரல் தான் எடுபடும்!’ என்று ஒரே வரியில் தாண்டி போய்விடுகிறார். அவருக்கு பிடித்த சாதனா, எனக்கு அத்தனை சொர்கமாக இல்லை.

எவ்வளவு பிரயத்தனப்பட்டு கவனித்தாலும், அவர் சொல்லும் ஆன் லைன்/இன்வெஸ்ட்மெண்ட் பாங்கிங் சமாச்சாரம், எனக்கு 10 நிமிஷத்தில் தூக்கத்தை தருவிக்கிறது..

ஆக, இந்த பத்து வருடத்தில் எங்கள் இருவருக்கும் பொது பிடித்தமாக இருப்பது குழந்தைகளும், இன்னும் ஒன்றிரண்டு விஷயங்களும் மட்டுமே..

யார் கண்டது? ஒரு வேளை ஒத்த ரசனை கொண்டிருந்தோமேயானால், சீக்கிரமே போர் அடித்திருக்கலாம். அவர் பிடித்தங்களை நானும், என்னை அவரும் கேலி செய்யாமலில்லை. ஆயினும், இது வரை எங்கள் ரசனைகளை மாற்றிக்கொள்ள அவசியப்படவுமில்லை..

நம்புங்கள், கொஞ்சம் நகைச்சுவையும், நிறைய ப்ரியமும் இருந்தால், திருமணம் என்பது ஒன்றும் அத்தனை கஷ்டமாக இல்லை  :-)
Thursday, 21 February 2013

ட்விட்டரில் நகைச்சுவை..

140 எழுத்துக்குள் சொல்லவந்ததை சொல்லிவிட வேண்டும் என்பதே
ட்விட்டரின் வசீகரம். அதிலும், உங்களுக்கு சுஜாதா பிடிக்குமாயின், ட்விட்டர் உங்களை அடிமைப்படுத்தும் அபாயம் அதிகம்.

வாழ்வியல் தத்து(பித்து)வங்கள், குழந்தை/அம்மா செண்டிமெண்ட், நட்பு - காதல் என்று கலந்தும் கட்டியுமாக ட்வீட்டியிருக்கிறேன். ஆனால், இவற்றில் என் நகைச்சுவை கீச்சுக்கள் தான் அதிகம் கண்டுக்கொள்ளப்படவில்லை. இது குறித்த வருத்தம் எனக்கு எப்போதுமுண்டு..

சாம்பிளுக்கு சில - புரிகிறதா பாருங்கள்.
  • 'உங்க லெக்சரர் பேர் என்ன?', 'இன்னும் வைக்கல!' # கல்லூரி நினைவுகள் 
  • எதிர் வீட்டுக்காரர் இன்று தைரியமாக, 'நாய்கள் ஜாக்கிரதை' போர்டு மாட்டி விட்டார் # வளர்ப்பது ஒன்று தான்.
  • நரகத்திலும் சில வசதிகள் இருந்து தான் தீர வேண்டும். நானும் ராஜபக்ஷேவும் அப்படி ஒன்றும் சமமாக தோன்றவில்லை! 
  • கடவுளே, எனக்கு கொஞ்சம் பொறுமையை கொடு! அதுவும், உடனடியா.
  • மித மிஞ்சிய கோவம் வந்தால், கவிதை எல்லாம் எழுதுவதில்லை. சமைப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்! ;-)
  • சுத்தம் செய்வதென்று ஆரம்பித்தால் மனதிலிருந்து தான் தொடங்க வேண்டும்.. பேசாமல் அடுத்த வீட்டு குப்பையை கவனிப்போம். 
  • என் வீட்டில் சிதம்பரம் தான்! - இதை சொல்ல அவருக்கு எல்லா அனுமதியும் தந்திருக்கிறேன்.
  • த்ரிஷா-அனுஷ்கா-தமன்னா இவர்களில் யார் பேச்சை கேட்பதென்று உடனே தீர்மானித்தாக வேண்டும்! # தீபாவளி ஷாப்பிங் !!
  • நான் கட்டிலுக்கு கீழ ஒளிஞ்சுக்கறேன். தேடறியாம்மா ?

இதில், 'நாய்கள் ஜாக்கிரதை' கீச்சு மட்டும் ஆனந்த விகடனில் வெளியாகி, மோட்சம் பெற்றுவிட்டது. மற்றவை, அத்தகைய பிறவி பயனை அடையாவிட்டாலும், குறைந்தபட்ச புன்னகையை கூட யாருக்கும் தருவிக்கவில்லை. ஹாஸ்ய கீச்சுக்களுக்கு #JokeOnly போடவேண்டியிருந்ததெல்லாம், அமீபா வரைந்து நாலாபக்கத்திலும் பேர் எழுதுவதற்கு ஒப்பான துயரம்!

நகைச்சுவை உணர்வு யாருக்கு குறைந்து வருகிறது? மற்ற தமிழ் கீச்சர்களுக்கா, எனக்கா என்று குழப்பமாய் இருந்தது.. எப்பவும் போல எனக்கு சௌகர்யமான பதிலை எடுத்துக்கொண்டேன்.Saturday, 5 January 2013

ரொம்ப யோசிக்காதீங்க!அம்மா, அம்மா அக்கா அழறா என்றவாறு பையன் ஓடி வருகிறான்.
‘அச்சோ ஏண்டா?’
 ‘நான் தாம்மா அடிச்சேன்’

எப்படி பார்த்தாலும்  விளங்கிக்கொள்ள முடியாத நிகழ்வுகள் நம்மை சுற்றி நடந்துக்கொண்டே தான் இருக்கின்றன. ஏன், எப்படி, எதனால் என்று யோசிக்க அவசியமில்லாமலும், நேரமில்லாமலும் பலவற்றை கடந்து தான் போகிறோம். என்றாவது நின்று கவனித்தால் புன்னகை தருவிக்கும் நிகழ்வுகளால் நிரம்பியிருகிறது வாழ்க்கை.


என் கணவர் கிரிக்கெட் பிரியர். ஒரு நாள் உச்சகட்ட சோகத்தில் 'உச்' கொட்டிக்கொண்டிருந்தார். நான் என்னாச்சு என்று பார்த்தால்,பிரபல கிரிக்கெட் வீரர் மைக் குவியலுக்கு முன் அமர்ந்து கண்ணீர் சிந்தி, ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறார். அவர் தான் கிரிக்கெட்டின் சுவர், சுற்றுச் சுவர், சுண்ணாம்பு, பெயிண்ட், செங்கல் என என்னவர் அடுக்க, நான் - 'அப்டினா, ஃபீல் பண்ண வேண்டியது தான். பண்ணுங்க பண்ணுங்க!' என்று இடத்தை காலி  செய்கிறேன்


சில நாள் கழித்து பார்த்தால், திரும்ப அதே வீரர் மைக் குவியலுக்கு முன் அமர்ந்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார். நான் - 'என்னாச்சுங்க? சாக போறாராமா? என்ன வியாதியாம்?'
தலைவர்,  பௌலிங் போடும் முரளிதரன் போலப் பார்த்து, பின் சொன்னது - அந்த நடமாடும் கிரிக்கெட் கட்டட சாமான் ஒருநாள் விளையாட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறார். 'உச்' 'உச்' !!இப்போதும் அந்த வீரர் டிவியில் வந்து பந்து துரத்துகிறார், ஐபிஎலுக்காக. இப்போது 'உச்' என் முறை.

இருபத்தி மூணே முக்கால் மணி நேரம் அருகிலேயே இருந்தாலும், அம்மா குளிக்கும் போது பாத்ரூம் கதவை இடித்து சொல்ல குழந்தைகளுக்கு ஏதோ அவசரமான விஷயம் இருக்கிறது. அதிகம் போனால் 60 வினாடிகள். அதற்குள் கதவு திறக்கப்படாவிட்டால், தன்னளவில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் வெளியே காத்திருக்கிறது.

நண்பர்கள் என்னும் இம்சைகள் -

எனக்கு அஜித்-விஜய் எல்லாரும் ஒன்று தான். நண்பர்கள் அஜித் ரசிகர்கள் என்றால் நான் விஜய் ரசிகை. இல்லையென்றால், மாற்றி. நான் சினிமாவே பார்ப்பதில்லை, அதனால் யாவர்க்கு வேண்டுமானாலும் ரசிகை ஆவேன்.  என் ஆர்வம் நண்பர்களோடு போடும் செல்லச் சண்டையில் தான்.

'அஜித்தை விட நல்ல நடிகர் தனுஷ்' என்ற என் விவாதம் கொஞ்சம் நீண்டாலும், 'அவர் எவ்வளவு நல்ல மனிதர் தெரியுமா?' என்கிறார்கள், தடாலடியாக.அவர் பத்திரிக்கையாளர்களை மரியாதையோடு நடத்துகிறார், தானம் செய்கிறார், ரசிகர் மன்றங்கள் தேவையில்லை என்கிறார், இன்னும் நடப்பது - பேசுவது- உட்கார்வது, பல் தேய்ப்பது எல்லாவற்றிலும் நேர்மையை கடைபிடிக்கிறார் - இன்னும் பல  "கிறார்" சொல்லி, அவர் நல்ல நடிகர் என்பதாக முடிக்கிறார்கள்.

இது கமல் ரசிகர்கள் -
நான் - கமலுக்கு பிறந்தநாள் பரிசாக முற்றுபுள்ளி "." தருகிறேன், என்றேன். தொலைக்காட்சி பேட்டிகளில் வாக்கியங்களை கமா கொண்டு பிரித்து, முடிவில்லாமல் பேசி நம்மை முடிக்கிறார் எனப்போக..
பிலுபிலுவென சண்டைக்கு வந்துவிட்டார்கள். 'அவர் நடிப்பை மட்டும் பார்! அது உலக தரம் வாய்ந்தது! நடிப்புக்கே நடிப்பு கற்று தரும் கலைஞன்' என்றெல்லாம் எமோஷனாகிறார்கள். எனக்கு எப்போதும் போல் தலை சுற்றுகிறது.

'உலக தரம் வாய்ந்த கல்வி' தரும் மாநகரத்து பள்ளிகள், அம்மா டிகிரி வாங்கிராவிட்டால் எல்.கே.ஜி அட்மிஷன் தர மறுக்கின்றன. ஏ,பி,சி,டி சொல்லி, ரைம்ஸ் பாடிக்காட்டி, 1,2,3 எழுதினால் குழந்தை அதையே பள்ளியில் படிக்க தேர்வாகிறது.

இந்த காலர் ட்யூன் கான்செப்ட் புரிவதேயில்லை. என் உடைகளை வைத்து என்னை எடை போடுவதா என்று பொங்கும் அதே இளைஞர் கூட்டம் தான், என் காலர் ட்யூனை கவனி, என்னை ரசி என்கிறது.
அதிலும் ரசனையான மெலடி பாடல்கள் என்றால் கூட பரவாயில்லை. நமக்கும் நேரம் போவது தெரியாது. ஆனால், துயர் ததும்பும் பாடல்கள்? இவற்றை காலர் ட்யூனாக வைக்கும் ஆசாமிகள் பிடிவாதமாக 5,6 ரிங் போனப்பிறகே எடுத்துப் பேசுகிறார்கள். அதற்குள் நாம் பேசவந்தது மறந்து,  துக்கம் தொண்டயை அடைக்கிறது.

பல லட்ச ரூபாய் கொடுத்து கார் வாங்குகிறார்கள். உள்ளே அசல் லெதர் சீட் போடாவிட்டால் எப்படி? அதற்கு  சில ஆயிரங்கள் செலவழிப்பதும், கார் கலருக்கு ஏற்ற பொருத்தமெல்லாம் பார்த்து வாங்குவதும் எப்படி தவறாகும்? புரியாதது என்னவென்றால் இத்தனை மெனக்கெடலுக்கு பிறகு ஏன் ப்ளாஸ்டிக்  கவர் மேல் உட்கார்ந்து ஓட்டிப்போகிறார்கள் என்பது தான். குடும்ப உறுப்பினர்களுக்கும் அதே கவர் அரியணை தான். அது தானாக கிழிந்து போனால் தான் அந்த லெதர் சீட்டின் வசதி எப்படி என்று அவர்களுக்கு தெரியவரும்.

இன்னும், சின்ன சின்னதாக -

‘கட்டில் கீழ ஒளிஞ்சுக்கறேன். தேடறியாம்மா?’


கார் தூரத்தில் வரும் போது ஓட்டமும் நடையுமாக சாலையை கடக்க முயலும் பாதசாரிகள், அருகில் வந்ததும் நிதானமாக நடந்துப்போகிறார்கள்.

’தமிழகத்தின் புதிய குரலுக்கான தேடல்’, தமிழகத்திலும் இல்லாமல், புதிய குரலுக்கும் இல்லாமல்  ஆனால் தேடி கண்டுப்பிடிக்கப்படுகிறது.

குழந்தைகளின் தனித்திறமையை வெளிக்கொண்டுவர கொடுக்கப்படும் ஸ்கூல் ப்ராஜெக்ட்டுகள், குழந்தைகளால் மட்டுமில்லாமல், அவர்கள் பெற்றோர்களாலும் செய்ய முடியாதவாறு இருக்கிறது.

லிஃப்டின் பொத்தானை பல முறை அழுத்தினால் சீக்கிரம் வந்துவிடும் என்று நம்பும் பல மனிதர்களை மாநகர பெருங்கடைகள் அடையாளம் காட்டுகின்றன.

ஐயப்ப சாமிகளுக்காக பல டாஸ்மாக்கில் தனி டம்ளர்கள் ஒதுக்கப்படுகின்றன.

ஒரு மாமி - "நான் அவதி அவதின்னு இட்லிக்கு மாவு அரைச்சா, இன்னிக்கின்னு பார்த்து கரெண்டே போய் தொலையல, சனியன்!" என்கிறார்.

மற்றொரு உறவினர் - "மாஸ்டர் செக் அப்! ஐயாயிரம் ரூபா தண்டம்.. உங்களுக்கு ஒண்ணுமே பிரச்சனை இல்ல, போங்கனுட்டான்!" என்று அலுத்துக்கொள்கிறார்.

சாதாரண தலைவலி மருந்தின் பக்கவிளைவாக கல்லிரல் பாதிப்பிலிருந்து, மரணம் சம்பவிப்பது வரை பொடி எழுத்தில் எழுதியிருக்கிறது.

டிவி ரிப்பேர் செய்பவர் , எங்க கடை ரொம்ப ராசியானதுமா. அடிக்கடி வருவீங்க பாருங்க என்று உறுதி தருகிறார்.

வருடக்கணக்காக சும்மாவே இருக்கும் ஒரு பொருளை தூக்கி எறிந்த நொடியே வீட்டில் உள்ள யாருக்காவது அதற்கான தேவை வருகிறது..

’ஜெயமோகனா, அவர் எழுத்துன்னா எனக்கு ஒரு இது. நிறைய வாங்கி வச்சிருக்கேன். என்ன, இன்னும் படிக்க தான் நேரமில்ல’ என்று வித்தியாசமான வாசகர்கள் திகிலூட்டுகிறார்கள்.


வாழ்க்கை பல சமயங்களில் ராமநாராயணன் படம் போல, லாஜிக் பார்க்காமல் ரசிக்க சொல்கிறது. ரெண்டும் ரெண்டும் ஐந்து தான் என்று யாராவது தீர்மானமாய் சொன்னால், இருந்துட்டு போகட்டுமே என்கிறேன்.

சிரிப்போம்.


// கலாட்டா கார்னர்

தூங்கிக்கொ