Saturday, 5 January 2013

ரொம்ப யோசிக்காதீங்க!அம்மா, அம்மா அக்கா அழறா என்றவாறு பையன் ஓடி வருகிறான்.
‘அச்சோ ஏண்டா?’
 ‘நான் தாம்மா அடிச்சேன்’

எப்படி பார்த்தாலும்  விளங்கிக்கொள்ள முடியாத நிகழ்வுகள் நம்மை சுற்றி நடந்துக்கொண்டே தான் இருக்கின்றன. ஏன், எப்படி, எதனால் என்று யோசிக்க அவசியமில்லாமலும், நேரமில்லாமலும் பலவற்றை கடந்து தான் போகிறோம். என்றாவது நின்று கவனித்தால் புன்னகை தருவிக்கும் நிகழ்வுகளால் நிரம்பியிருகிறது வாழ்க்கை.


என் கணவர் கிரிக்கெட் பிரியர். ஒரு நாள் உச்சகட்ட சோகத்தில் 'உச்' கொட்டிக்கொண்டிருந்தார். நான் என்னாச்சு என்று பார்த்தால்,பிரபல கிரிக்கெட் வீரர் மைக் குவியலுக்கு முன் அமர்ந்து கண்ணீர் சிந்தி, ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறார். அவர் தான் கிரிக்கெட்டின் சுவர், சுற்றுச் சுவர், சுண்ணாம்பு, பெயிண்ட், செங்கல் என என்னவர் அடுக்க, நான் - 'அப்டினா, ஃபீல் பண்ண வேண்டியது தான். பண்ணுங்க பண்ணுங்க!' என்று இடத்தை காலி  செய்கிறேன்


சில நாள் கழித்து பார்த்தால், திரும்ப அதே வீரர் மைக் குவியலுக்கு முன் அமர்ந்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார். நான் - 'என்னாச்சுங்க? சாக போறாராமா? என்ன வியாதியாம்?'
தலைவர்,  பௌலிங் போடும் முரளிதரன் போலப் பார்த்து, பின் சொன்னது - அந்த நடமாடும் கிரிக்கெட் கட்டட சாமான் ஒருநாள் விளையாட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறார். 'உச்' 'உச்' !!இப்போதும் அந்த வீரர் டிவியில் வந்து பந்து துரத்துகிறார், ஐபிஎலுக்காக. இப்போது 'உச்' என் முறை.

இருபத்தி மூணே முக்கால் மணி நேரம் அருகிலேயே இருந்தாலும், அம்மா குளிக்கும் போது பாத்ரூம் கதவை இடித்து சொல்ல குழந்தைகளுக்கு ஏதோ அவசரமான விஷயம் இருக்கிறது. அதிகம் போனால் 60 வினாடிகள். அதற்குள் கதவு திறக்கப்படாவிட்டால், தன்னளவில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் வெளியே காத்திருக்கிறது.

நண்பர்கள் என்னும் இம்சைகள் -

எனக்கு அஜித்-விஜய் எல்லாரும் ஒன்று தான். நண்பர்கள் அஜித் ரசிகர்கள் என்றால் நான் விஜய் ரசிகை. இல்லையென்றால், மாற்றி. நான் சினிமாவே பார்ப்பதில்லை, அதனால் யாவர்க்கு வேண்டுமானாலும் ரசிகை ஆவேன்.  என் ஆர்வம் நண்பர்களோடு போடும் செல்லச் சண்டையில் தான்.

'அஜித்தை விட நல்ல நடிகர் தனுஷ்' என்ற என் விவாதம் கொஞ்சம் நீண்டாலும், 'அவர் எவ்வளவு நல்ல மனிதர் தெரியுமா?' என்கிறார்கள், தடாலடியாக.அவர் பத்திரிக்கையாளர்களை மரியாதையோடு நடத்துகிறார், தானம் செய்கிறார், ரசிகர் மன்றங்கள் தேவையில்லை என்கிறார், இன்னும் நடப்பது - பேசுவது- உட்கார்வது, பல் தேய்ப்பது எல்லாவற்றிலும் நேர்மையை கடைபிடிக்கிறார் - இன்னும் பல  "கிறார்" சொல்லி, அவர் நல்ல நடிகர் என்பதாக முடிக்கிறார்கள்.

இது கமல் ரசிகர்கள் -
நான் - கமலுக்கு பிறந்தநாள் பரிசாக முற்றுபுள்ளி "." தருகிறேன், என்றேன். தொலைக்காட்சி பேட்டிகளில் வாக்கியங்களை கமா கொண்டு பிரித்து, முடிவில்லாமல் பேசி நம்மை முடிக்கிறார் எனப்போக..
பிலுபிலுவென சண்டைக்கு வந்துவிட்டார்கள். 'அவர் நடிப்பை மட்டும் பார்! அது உலக தரம் வாய்ந்தது! நடிப்புக்கே நடிப்பு கற்று தரும் கலைஞன்' என்றெல்லாம் எமோஷனாகிறார்கள். எனக்கு எப்போதும் போல் தலை சுற்றுகிறது.

'உலக தரம் வாய்ந்த கல்வி' தரும் மாநகரத்து பள்ளிகள், அம்மா டிகிரி வாங்கிராவிட்டால் எல்.கே.ஜி அட்மிஷன் தர மறுக்கின்றன. ஏ,பி,சி,டி சொல்லி, ரைம்ஸ் பாடிக்காட்டி, 1,2,3 எழுதினால் குழந்தை அதையே பள்ளியில் படிக்க தேர்வாகிறது.

இந்த காலர் ட்யூன் கான்செப்ட் புரிவதேயில்லை. என் உடைகளை வைத்து என்னை எடை போடுவதா என்று பொங்கும் அதே இளைஞர் கூட்டம் தான், என் காலர் ட்யூனை கவனி, என்னை ரசி என்கிறது.
அதிலும் ரசனையான மெலடி பாடல்கள் என்றால் கூட பரவாயில்லை. நமக்கும் நேரம் போவது தெரியாது. ஆனால், துயர் ததும்பும் பாடல்கள்? இவற்றை காலர் ட்யூனாக வைக்கும் ஆசாமிகள் பிடிவாதமாக 5,6 ரிங் போனப்பிறகே எடுத்துப் பேசுகிறார்கள். அதற்குள் நாம் பேசவந்தது மறந்து,  துக்கம் தொண்டயை அடைக்கிறது.

பல லட்ச ரூபாய் கொடுத்து கார் வாங்குகிறார்கள். உள்ளே அசல் லெதர் சீட் போடாவிட்டால் எப்படி? அதற்கு  சில ஆயிரங்கள் செலவழிப்பதும், கார் கலருக்கு ஏற்ற பொருத்தமெல்லாம் பார்த்து வாங்குவதும் எப்படி தவறாகும்? புரியாதது என்னவென்றால் இத்தனை மெனக்கெடலுக்கு பிறகு ஏன் ப்ளாஸ்டிக்  கவர் மேல் உட்கார்ந்து ஓட்டிப்போகிறார்கள் என்பது தான். குடும்ப உறுப்பினர்களுக்கும் அதே கவர் அரியணை தான். அது தானாக கிழிந்து போனால் தான் அந்த லெதர் சீட்டின் வசதி எப்படி என்று அவர்களுக்கு தெரியவரும்.

இன்னும், சின்ன சின்னதாக -

‘கட்டில் கீழ ஒளிஞ்சுக்கறேன். தேடறியாம்மா?’


கார் தூரத்தில் வரும் போது ஓட்டமும் நடையுமாக சாலையை கடக்க முயலும் பாதசாரிகள், அருகில் வந்ததும் நிதானமாக நடந்துப்போகிறார்கள்.

’தமிழகத்தின் புதிய குரலுக்கான தேடல்’, தமிழகத்திலும் இல்லாமல், புதிய குரலுக்கும் இல்லாமல்  ஆனால் தேடி கண்டுப்பிடிக்கப்படுகிறது.

குழந்தைகளின் தனித்திறமையை வெளிக்கொண்டுவர கொடுக்கப்படும் ஸ்கூல் ப்ராஜெக்ட்டுகள், குழந்தைகளால் மட்டுமில்லாமல், அவர்கள் பெற்றோர்களாலும் செய்ய முடியாதவாறு இருக்கிறது.

லிஃப்டின் பொத்தானை பல முறை அழுத்தினால் சீக்கிரம் வந்துவிடும் என்று நம்பும் பல மனிதர்களை மாநகர பெருங்கடைகள் அடையாளம் காட்டுகின்றன.

ஐயப்ப சாமிகளுக்காக பல டாஸ்மாக்கில் தனி டம்ளர்கள் ஒதுக்கப்படுகின்றன.

ஒரு மாமி - "நான் அவதி அவதின்னு இட்லிக்கு மாவு அரைச்சா, இன்னிக்கின்னு பார்த்து கரெண்டே போய் தொலையல, சனியன்!" என்கிறார்.

மற்றொரு உறவினர் - "மாஸ்டர் செக் அப்! ஐயாயிரம் ரூபா தண்டம்.. உங்களுக்கு ஒண்ணுமே பிரச்சனை இல்ல, போங்கனுட்டான்!" என்று அலுத்துக்கொள்கிறார்.

சாதாரண தலைவலி மருந்தின் பக்கவிளைவாக கல்லிரல் பாதிப்பிலிருந்து, மரணம் சம்பவிப்பது வரை பொடி எழுத்தில் எழுதியிருக்கிறது.

டிவி ரிப்பேர் செய்பவர் , எங்க கடை ரொம்ப ராசியானதுமா. அடிக்கடி வருவீங்க பாருங்க என்று உறுதி தருகிறார்.

வருடக்கணக்காக சும்மாவே இருக்கும் ஒரு பொருளை தூக்கி எறிந்த நொடியே வீட்டில் உள்ள யாருக்காவது அதற்கான தேவை வருகிறது..

’ஜெயமோகனா, அவர் எழுத்துன்னா எனக்கு ஒரு இது. நிறைய வாங்கி வச்சிருக்கேன். என்ன, இன்னும் படிக்க தான் நேரமில்ல’ என்று வித்தியாசமான வாசகர்கள் திகிலூட்டுகிறார்கள்.


வாழ்க்கை பல சமயங்களில் ராமநாராயணன் படம் போல, லாஜிக் பார்க்காமல் ரசிக்க சொல்கிறது. ரெண்டும் ரெண்டும் ஐந்து தான் என்று யாராவது தீர்மானமாய் சொன்னால், இருந்துட்டு போகட்டுமே என்கிறேன்.

சிரிப்போம்.


// கலாட்டா கார்னர்

தூங்கிக்கொ

28 comments:

 1. நல்ல தத்துவ போதனை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete


 2. ரொம்பவும் யோசிக்காதம்மா - மிக நல்ல உபதேசம் - பிறருக்கு!

  நீங்கள் சொல்வதுபோல வாழ்க்கையை லாஜிக் பார்க்காமல் ரசிப்பது நல்லதுதான்.

  நகைச்சுவை உங்களுக்கு மிகவும் சுவையாக வருகிறது.

  இந்தப் புத்தாண்டில் இன்னும் நிறைய எழுதி எல்லோரையும் சிரிப்பாய் சிரிக்க வைக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. >>>>இந்தப் புத்தாண்டில் இன்னும் நிறைய எழுதி எல்லோரையும் சிரிப்பாய் சிரிக்க வைக்க வாழ்த்துக்கள்!>>>>
  இதை நான் வழி மொழிகிறேன்

  ReplyDelete
 4. Typing from a mobile. No Tamil font support. :)
  Sarcasm, light hearted, but still there are many things for a thought. Your typical style of making the readers smile inside heart. Enjoyed reading this Vigna mam.
  Cheers! :)

  ReplyDelete
 5. "மாஸ்டர் செக் அப்! ஆயிரம் ரூபா தண்டம்.. உங்களுக்கு ஒண்ணுமே பிரச்சனை இல்ல, போங்கனுட்டான்!" இது என்ன லாஜிக்? வாவிசி... ரொம்ப (நல்லா) யோசிக்குறீங்க.. :) யூ கண்டின்யூ.. :)

  ReplyDelete
 6. வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி சுரேஷ், ரஞ்சனி அம்மா,சக்தி, முகுந்தன், சக்திவேல்..

  நிறைய எழுத வாழ்த்தினதுக்கு ஸ்பெஷல் நன்றி :-)

  ReplyDelete
 7. ப்ளாக் சூப்பர். எனக்கு தான் இன்னும் கமென்ட் பண்ண‌ நேரம் அமையல... வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நேரம் அமைஞ்சாச்சு போலருக்கே? நன்றி அறிவு :-)

   Delete
 8. இப்படியும் யோசிக்கலாமா?

  ReplyDelete
 9. இந்த வித யோசிப்புதன்மை திருமணத்திருக்கு முன்பே இருந்ததா?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி கண்ணதாசன், செந்தில் :-)

   இவ்வித யோசிப்பு தன்மை என் கணவருக்கு தான் இல்லாமல் போயிற்று பாவம்.

   Delete
 10. ரசிக்கும்படியான சிந்தனைத் தொகுப்பு. நுணுக்கமான, புத்திசாலித்தனமான ஹ்யூமர் எழுத்து சரளமாக உங்களுக்கு கைகூடுகிறது.

  ஹைலைட்ஸ்:

  //அவர் தான் கிரிக்கெட்டின் சுவர், சுற்று சுவர், சுண்ணாம்பு, பெயிண்ட், செங்கல் என என்னவர் அடுக்க,//

  //இன்னும் நடப்பது - பேசுவது- உட்கார்வது, பல் தேய்ப்பது எல்லாவற்றிலும் நேர்மையை கடைபிடிக்கிறார் - இன்னும் பல "கிறார்" சொல்லி//

  //நான் - கமலுக்கு பிறந்தநாள் பரிசாக முற்றுபுள்ளி "." தருகிறேன், என்றேன். தொலைக்காட்சி பேட்டிகளில் வாக்கியங்களை கமா கொண்டு பிரித்து, முடிவில்லாமல் பேசி நம்மை முடிக்கிறார் எனப்போக..//

  //மற்றொரு உறவினர் - "மாஸ்டர் செக் அப்! ஆயிரம் ரூபா தண்டம்.. உங்களுக்கு ஒண்ணுமே பிரச்சனை இல்ல, போங்கனுட்டான்!"//

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜி :-) வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி !

   Delete
 11. அட்டகாசம் போ! Chithran has articulated even better what I felt and listed all my favorites. - <<ரெண்டும் ரெண்டும் ஐந்து என்று யாராவது தீர்மானமாய் சொன்னால், இருந்துட்டு போகட்டும் என்கிறேன்!!?? தீர்மானமாக சொன்னால் நிச்சயம் argue செய்யக் கூடாதுதான். When you argue with a fool you can tell the difference!!
  (Fool is synonymous with close-minded -same difference)- Worth the wait, I guess..

  ReplyDelete
  Replies
  1. வித்தூ, தேங்க்ஸ் :-)

   Delete
  2. ay yai yai.. just noticed the fatal typo..whe u argue with a fool you CANT tell the difference..

   Delete
 12. நல்லா வக்கனையாக அரட்டை அடிப்பது போல ஜாலியான நடை..ப்ளீஸ் கண்டினியு :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி நடராஜ். :-)

   Delete
 13. கமலுக்கு புல்ஃஸ்டாப் தர்றீங்களா... சூப்பருங்கோ. அப்படியே கொஞ்சம் நிறுத்தி நிதானமா புரியற மாதிரி அவரை பேச வைக்க ஏதாவது மருந்து இருந்தா அதையும் குடுத்துடுங்கோ. அவதி அவதியா மாவு அரைச்ச மாமியின் வயத்தெரிச்சல் கமெண்ட்டும், மாஸ்டர் செக் அப் கமெண்ட்டும் வாய்விட்டுச் சிரிச்சு ரசிக்க வைச்சது யமுனா. அடிக்கடி ப்ளாக் பக்கமும் வாங்கம்மா...

  ReplyDelete
  Replies
  1. கணேஷ் சார், புரியாம பேசற வரை தான் ஜீனியஸ்..

   //அடிக்கடி ப்ளாக் பக்கம்// - வந்துட்டா போச்சு. நீங்க வந்ததுக்கும், பின்னூட்டமிட்டதுக்கும் பிடிங்க - "நன்றி, நன்றி!"

   Delete
 14. உங்கள் நகைச்சுவைக்கு ஈடே இல்லை, முன்னையே சொல்லிருக்கேன் நீங்க லேடி சந்தானம்னு அதை மீண்டும் நினைவில் கொள்கின்றேன். மாஸ்டர் செக்கப், கரண்ட் பிரமாதம். உங்கள் பதிவகள் தவறாமல் படிக்கப்படும் என உறுதி கூறுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சகோ, உங்கள மகிழ்விக்கரதால எனக்கு தான் அதிக சந்தோஷம். பிடிங்க "நன்றி"

   Delete
 15. வழக்கம்போல் நல்ல லைட்ஹார்ட்டட் நகைச்சுவையில் கலக்குறீங்க யமுனாக்கா! வாழ்த்துக்கள்! :) ஒரே ஒரு சின்ன சஜஸ்சன். போஸ்ட் பாதில படிக்கும்போது என்ன தலைப்புன்னு மறந்துப்போய்டுது. ஸோ எல்லார் புலம்புறதை பத்தி எழுதுனா, பாயின்ட்ஸ் அல்லது சின்ன ஹெட்டிங் மாதிரி பிரிச்சிவச்சிருந்தா இன்னும் நல்லாருந்துருக்கும்! இன்னும் நிறைய அடிக்கடி எழுதுங்க! -from ur fan :-)

  ReplyDelete
  Replies
  1. மனோஜ், ஓவரா புகழாதீங்க. அப்புறம் நிஜமில்லன்னு கண்டுபிடிச்சுடுவேன்!

   Delete
 16. இப்பதான் உங்க பிளாக் பக்கம் வாரேன் கலக்குறீங்க மேடம்!

  உங்கள் நக்கல்,நகைச்சுவை அருமை!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரியாஸ்.. அடிக்கடி வாங்க. :-)

   Delete
 17. பொதுவா நகைசுவை சிரிப்பதோடு முடிந்துவிடும்..! ஆனால் உங்கள் பதிவு சிரிப்போடு சிந்தனையும் தருகிறது...! தொடரட்டும் வாழ்த்துக்களுடன்..

  நாஞ்சில்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நசீர். அடிக்கடி வாங்க! :-)

   Delete