Tuesday, 30 September 2014

மல்டிடாஸ்கிங் நவராத்ரி

(மங்கையர் மலர் இதழில் வெளிவந்தது)

அறுந்த வால் மற்றும் குறும்புத்தேள் இருக்கும் வீடுகளில் கொலு வைப்பதே ஒரு சாதனை தான். அந்த சாதனையின் முதல் படி, கொலுப்படியையும், பொம்மைகளையும் இறக்குவதிலிருந்தே தொடங்குகிறது. எந்த வீட்டுவேலை சொன்னாலும் 'ஆணியே பிடுங்க..' என்று வடிவேலுவை துணைக்கிழுத்து தப்பிக்கும் கணவருக்கு, அந்த ஜோக்கை முதல்முதலாய் கேட்பது போல சிரித்துவைத்து ஆணிகளை மாட்ட வைப்பதிலிருந்து அந்த சாதனை பயணம் தொடர்கிறது!

பொம்மைகள், என் கணவரின் பழைய ஸ்கூல் யுனிபாரம், என் கல்யாணத்தின் போது வாங்கின ப்ளவுஸ்கள் முதல்  போன வருடம் வாங்கின (எனக்கு பிடிக்காத) கணவரின் டி-ஷர்ட் வரை சுற்றிக்கொண்டு, 'எப்டி இருந்த நீ, இப்டி ஆகிட்ட பார்!' என்பதற்கான மெளன சாட்சியாக வெளியே வருகின்றன.

சூர்ப்பணகை சாபம் போலும், என் கொலுவில் லஷ்மணனுக்கு மூக்கு இல்லை.. அதுவாவது பரவாயில்லை,சீதை பொம்மையை என் வீட்டு வானர வீரன் உடைக்க, பதிலுக்கு வேறொரு அம்மணியை ராமனுக்கு துணையாக்கி விடிய விடிய ராமாயணகதையை வருடாவருடம் மாற்றுகிறோம்!

கொலு என்றால் அடுத்து சொல்லியாக வேண்டியது சுண்டல் பற்றி தானே? பதின் பருவத்தில் பட்டுபாவாடை, தாவணி கட்டி, தாழம்பூ பின்னல் போட்டுநானும், என் தோழிகளும் அன்று போய் வந்த வீடுகளில்யார் வீட்டு கொலு சிறந்தது என்று வம்படிப்போம். எப்படியும் சிறந்த கொலு என்பதற்கான மதிப்பீட்டில் முக்கிய இடம் பெறுவது அவர் வீட்டு சுண்டலாக இருக்கும்திருமணமானது முதல், இன்று வரை புரியாத புதிர் - எப்படி சுண்டல் நிறைய பண்ணும் அன்று குறைவான விருந்தினரும், குறைவாக பண்ணும அன்று நிறைய பேரும் வருகிறார்கள் என்பது! சுண்டல் ரெடியாக தோராயமாக நான்கு மணி என்றால், மூன்று மணிக்கு வந்து திகைக்க வைப்பதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அவர்களையும் குத்தம் சொல்ல முடியாது, தினமும் கோவிலுக்கும் போக வேண்டும், சுண்டல் தயாராகி நைவேத்தியம் செய்து, அவரவர் கொலுவுக்கு வரும் விருந்தினரையும் கவனித்து, நாலு பேர் வீட்டு கொலுவுக்கும் போகச்சொல்லும் மல்டி டாஸ்கிங் சவால் தருவதல்லவா நவராத்திரி?


கொலு என்றால் பாட்டு இல்லாமலா? ஆசை முகம் மறந்து போச்சே'ன்னு பாடலாம். அடுத்த வரி மறந்து போச்சே..ன்னு பாடினால் நன்றாகவா இருக்கும்?? அதனால், ஒவ்வொரு நவராத்திரிக்கும், பாட்டு புஸ்தகத்தையும் சேர்த்து கீழ் இறக்குவது அவசியமாகிறது. சொர்க்கம் என்று ஒன்று இருந்து, அதற்கு நான் தப்பித்தவறி போக வேண்டி நேர்ந்தால், ஷ்யாமா சாஸ்திரிக்கும், தியாகராஜருக்கும் நிச்சயம்  பதில் சொல்லவேண்டியிருக்கும் என்பதே, இப்போது என் மனதில் கொலுவிருக்கும் கவலை..

நான் பாட மாட்டேன் என்று கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சினாலும்,என்னை கதற கதற (சாரி, பாட பாட) வைக்கிறார்கள்.. சரி தான் என்று பாட ஆரம்பித்த அடுத்த நொடி, பாட சொன்ன மாமி விருட்டென்று சமையலறைக்குள் புகுந்து விடுகிறார். ஏனைய மாமிக்கள், தங்களுக்குள்  பிட்ஸ்பர்க் போன கதையை பேச ஆரம்பிக்கிறார்கள்.. வேறு வழியில்லாமல் என் பாட்டை கொலு பொம்மைகள் தலையாட்டியும், ஆட்டாமலும் கேட்கின்றன!

'உன் குரல் நன்னா இழையறதேடி.. சித்த இன்னொரு பாட்டு பாடேன்'னு உள்ளிருந்தபடியே மாமி சொன்னால், எனக்கு வாயெல்லாம் பல்லாகி, மெய் சிலிர்த்து.. ம்ம்ஹூம், இத்தனை எமோஷன் இந்த காட்சிக்கு தேவையேப்படுவதில்லை. --மாமியின் மேற்படி வாக்கியத்தின் உள்ளர்த்தம், சுண்டல் இன்னும் ரெடி ஆகவில்லை என்பதே!

இன்றைய தேதியில் கொலு குறித்து ஒரு வருத்தம். அது, கொலு என்பது ஒரே ஒரு சமூகம் சார்ந்ததாக சுறுங்கிவிட்டதே என்பது. நம் கலாச்சாரமும், ஆன்மிகமும், நட்பும் கூடும் அழகிய பண்டிகை அல்லவா நவராத்திரி? அதே போல குழந்தைகள் தான் நவராத்திரி ஸ்பெஷலே! ஆனால் அவர்களோ அபாகஸ் கிளாஸிலோ - கராத்தேயிலோ தங்கள் மாலை நேரத்தை அடகு வைத்திருக்கிறார்கள்.

முடிவாக, கொலுவுக்கு வரும் பெண்களுக்கு தரும் பரிசு பொருட்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும். அதென்னமோ கொலுவில் வைத்து தரப்படும் கண்ணகல கண்ணாடியில் முகம் பார்க்க, எனக்கு கைகூடாத ஒரு தனி சாமர்த்தியம் தேவைப்படுகிறது.. அப்போது வைத்து தரப்படும் பிளாஸ்டிக் டப்பாக்களும், ப்ளவுஸ் பிட்டும் எங்கள் நகரையே ஒரு சுற்று சுற்றி வந்து, சமயங்களில் முதலில் வாங்கியவரையே கூட சென்றடைகிறது!

மொத்தத்தில் கொலு என்பது,

புதிய புதிய நண்பர்கள் கிடைக்கப் பெறுவது,
வெறும் சுண்டல் செலவில் தெரு கதை மொத்தத்தையும் அப்டேட்டாக வைத்துக்கொள்வது,
எக்குத் தப்பு ஸ்ருதியில் ஒரு ரெட்டை பின்னல் பாடினால், சிரிக்காமல் ஒரு மாதிரியாக முகத்தை மானேஜ் பண்ணும் வித்தையை மீண்டும் மீண்டும் பரிட்சித்து பார்ப்பது,
2 செ.மி * 4 செ.மி சுற்றளவு கண்ணாடியில், யார் வேண்டுமானாலும் முகம் பார்க்க முடியும் என நம்புவது,
சுண்டல் தீர்ந்து போன பிறகு வருபவருக்கு, வேறு வீட்டிலிருந்து வாங்கி வந்த சுண்டலை நாமே செய்தது போல தருவது
அறுந்த வால் வானரங்களோடு வரும் அம்மாக்களை ஸ்பெஷலாக கவனித்து உடனே அனுப்பி வைப்பது..


என்பதாக வருடா வருடம் வரும் கோலாகலம் தான்!!

No comments:

Post a Comment