Thursday, 16 October 2014

தீபாவளி - ஷாப்பிங் கலாட்டாஎன் சிறு வயது முதலே பண்டிகைகளின் முக்கியத்துவம், தாத்பர்யம் யாவற்றையும் திண்பண்டங்களும், கிடைக்கப்போகும் புது துணியும்  தான் தீர்மானித்து வந்துள்ளன. அதிலும், இப்போது நானே திண்பண்டங்கள் செய்யவேண்டிய நிலை வந்துவிட்டதால், புதுசு கேட்கும் பண்டிகைக்கு தான் மவுசு. ஆக, தீபாவளி தான் பண்டிகைகளின் ராஜா/ ராணி/ மானேஜர்/ மாமியார் எல்லாமே.

முன்பு போலில்லாமல், புது துணி வாங்க தீபாவளி வரை காத்திருக்க அவசியப்படாத அளவு நிதிநிலையும், மனநிலையும் மாறிவிட்டதில், தீபாவளியை சிறப்பிக்க கொஞ்சம் மெனக்கெடத் தான் வேண்டியிருக்கிறது. எனக்கு அப்படி துவங்கியது தான் தி.நகர் தீபாவளி ஷாப்பிங்.  இதில் நானாவது சென்னையில் இருக்கிறேன். சென்னைக்கு மிக அருகில் உள்ள நாகர்கோவில், திருச்சி பெண்கள் கூட தி-நகருக்கே வந்து பண்டிகையை சிறப்பிப்பதால் சில ஷாப்பிங் டிப்ஸ் இதோ!

ஷாப்பிங் செய்ய கிளம்பினால், முதல் பிரச்சனை த்ரிஷா, சிவகார்த்திகேயன், சூர்யா  போன்ற சினிமா நட்சத்திரங்கள் ஆளுக்கு ஒரு பிரபல கடை பெயரை சொல்லி,  இதுவே உங்கள் குடும்பத்தினர் அனைவருக்குமான கடை என்று அடித்து.. சாரி, ஆடி சொல்வார்கள். இவர்கள் பேச்சை அப்படியே கேட்காமல், வீட்டில் உள்ள யார் யாருக்கு எங்கே வாங்குவது என்று நீங்களே தான் முடிவு பண்ணவேண்டும்.

அடுத்து பார்க்கிங்- கணவரை நுட்பமாக இம்சிப்பதில் ஒரு வகை, பார்கிங்கே இல்லாத அல்லது கிடைக்காத இடத்துக்கு ஷாப்பிங் அழைத்து சென்று, நாம் மட்டும் கடை வாசலில் இறங்கிக்கொள்வது. அதிலிருந்து ஆண்களின் கடுகடுப்பு தொடங்கும். ஆக, கூட்டம் போதுவாக பதினொன்னரை மணிக்கு மேல் தான் தொடங்குமென்றால், நாம் ஒன்பது மணிக்கு அங்கிருப்பது போல போய்விடவேண்டும்.
பார்கிங் கிடைக்கப்பெற்ற ஆண்கள், ஷாப்பிங்கில் உதவுவார்கள். ஆனால், பொதுவாக ஆண்கள் எந்த புடவையை காட்டினாலும், “நல்லாயிருக்கு”, “சூப்பர்” என்று சொல்லி உடனே முடிக்கப்பார்ப்பார்கள். ஆகையால், முதலிலே அவர்கள் உதவி தேவையா, இல்லையா என்பதை முடிவு செய்துவிடவும்.

அதே போல குழந்தைகளுக்கு வாங்குவது கூடுமானவரை தனியாக ஒருநாளில் வைத்துக்கொள்வது நலம். குழந்தைகள் இல்லாமல் அவர்களுக்கு வாங்கச் செல்லவே வேண்டாம். குழந்தைகளுக்கு வாங்கிடலாம் என்பார்கள். அவர்கள் கவலை, குழந்தைகளுக்கு என்றால் உடனே முடிந்துவிடுமே என்பது. நமக்கு தானே தெரியும், இதுகள் தனக்கு காரியம் ஆனதும் போகலாம், போகலாம் என்று நச்சரிக்க போவது. ஆகையால், முதலில் ஆண்களுக்கு வாங்குவது உத்தமம். கணவர் செலக்ட் செய்யும் நேரத்தில், நாமும் ஒரு சுற்றி சுற்றி நமக்கானதை நோட்டம் விட்டுக்கலாம். இந்த ஆண்கள், டிரெஸிங் ரூமில் கூட தும்மும் நேரத்தைவிட குறைவான நேரத்தில் எப்படி வெளியே வருகிறார்கள் என்பது குறித்து ஏதாவது உலக அளவில் ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்

ஸ்மார்ட் போன் வருவதற்கு முன் வேண்டுமாமால், ஆண்கள் பரிதாபமாக கடை வாசலில் குழந்தைகளை வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். இப்போது குழந்தைகளை இவர்களை நம்பி விட முடிவதில்லை. ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸப் என்று வந்துவிட்டதில் மொபைலோடு தனியே (அப்புறம் என்ன ‘தனியே’) சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆக, கையில் ஒன்றும், இடுப்பில் ஒன்றுமாக கிடைத்த கேப்பில் புடவையை ஏட்டி எட்டி பார்க்கவேண்டியது தான். பெரிய பெரிய கடைகளில், எது லேடஸ்ட் டிசைன் என்று அவர்களே முடிவு செய்து அறிவித்திருக்கிறார்களோ, அந்த டேபிளுக்கு முன் முண்டியடிக்கும் கூட்டம். எடுத்த எடுப்பில் நாம் மூண்றாவது வரிசையில் நின்று பார்த்துக்கொண்டே இருக்கவேண்டியது. மனம் தளராமல் இருந்தால், அரை மணி நேர தவத்துக்கு பிறகு, நாமும் முன் வரிசைக்கு வருவோம். அதற்குள் நாம் மனதுக்குள் டிக் செய்து வைத்திருந்த புடவை போயிருக்கும். கடைக்காரர், அடுத்த செட்டை இறக்குவார். கண்டிப்பாக அதில் நமக்கு பிடித்த்து இருக்காது. பார்த்தவுடனே பிடித்த புடவை பெரும்பாலும் இன்னொரு பெண் கையிலிருக்கும். அவர் எப்போது விடுவார் என்று கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால், நாம் அப்படி பார்ப்பது தெரிந்தால், நிச்சயம் அதை தான் வாங்குவார். அதனால், பார்க்காதது போல பார்க்கவேண்டும்.

நாம் ஒரு புடவையை அட, என்று பிடித்து இழுத்தால், அதன் இன்னொரு நுனியை மற்றுமொரு அம்மணி வைத்துக்கொண்டு ’யார் இந்த துச்சாதனி’ என்று முறைப்பார்.  இதை விட மோசம் கடைக்காரர். “ஏங்க, இதே டிசைன்ல, ஆனா வேற கலர் காட்டுங்களேன்!” என்றால், ”பத்தாயிரம் தாங்க, எப்ப முடியுதோ அப்ப தற்றேன்” என்று கேட்டது போல ஒரு உடலசைவை வெளிப்படுத்துவார்.  அப்போது அவரிடமிருந்து வரும் ”மொத்தம் அவ்வளவு தாம்மா”வில்,  “அம்மா” உட்பட எதுவும் உகந்ததாயிருப்பதில்லை. இதையெல்லாம் அவமானமாக கருதாமல், நெச்சியமாக பேசி ஒரு வழியாக பிடித்தமாதிரி வாங்கிவிட்டால், ஜீவாத்மா, பரமாத்மவை கண்டுக்கொண்ட பூரிப்பு கிடைக்கிறது. சூடிதார் என்றால், கணவரின், ப்ச், உச்’ வை பொருட்படுத்தாமல் ட்ரையல் ரூமில் போட்டுப் பார்த்தே வாங்க வேண்டும். அப்படி அங்கே கூட்டமாக இருக்கிறதே என்று சிறிது சலனமடைந்தாலும், ஒரு வேளை மாற்றவேண்டி வந்தால் கிடைக்கப்போகும் குட்டை நினைத்துப்பார்த்துக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு என்றால், அழகை விட கம்ஃபோர்ட் தான் பிரதானம். ஜிகினா,  மணி வேலைப்பாடு வைத்து வாங்கினால் நமக்கு வேண்டுமானால் பார்க்க அழகாயிருக்கும். குழந்தைகளை குக்கருக்குள் மூடி வைத்திருப்பது போன்றது அது. இருக்கும் இடத்தின் சீதோஷண நிலை, அவர்களின் வயது, உடல் வாகு கடைசியாக லேடஸ்ட் ட்ரெண்ட் என்பதை மனதில் வைத்து வாங்கினாலே போதுமானது.

பண்டிகை காலத்தில் பாண்டிபஜார் அல்லது ரங்கநாதன் தெரு ஜனத்திரளில் நீந்த தெரிந்தவருக்கு ,வாழ்கையின் எந்த கடினமான கட்டதையும் சுலபமாகவே நீந்திவிடலாம், என்பேன். நம்மை 200 பேர் பின்தொடர்வதும், நாம் ஒரு 300 பேரை பின்தொடர்வதும்  ஃபேஸ்புக், ட்விட்டரில் வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம்.’ இங்கே அதுவே அவஸ்தை. மணிக்கணக்காக நின்று ஷாப்பிங் செய்து, கூட்டத்தில் சிக்கி, பிதுங்கி, பாச்சிலர் ரூம் டூத் பேஸ்ட் போல வீட்டுக்கு வந்தாலும், மனம் மட்டும் உற்சாகமாக இருப்பது எல்லாம் ஒரு மெடிகல் மிராக்கிள்! வெகு சில நேரங்களில் மட்டுமே, உடல் சோர்ந்து, மனம் உற்சாகமடைகிறது. பெண்களுக்கு அது ஷாப்பிங்!
ஹாப்பி ஷாப்பிங் பெண்களே!
பிகு : இக்கட்டுரை மங்கையர் மலர் தீபாவளி சிறப்பிதழில் வெளிவந்துள்ளது.


12 comments:

 1. அசத்துறீங்க விக்னா..செம breezy, உண்மைக்கு அருகிலான பதிவு..

  //ஆனால், பொதுவாக ஆண்கள் எந்த புடவையை காட்டினாலும், “நல்லாயிருக்கு”, “சூப்பர்” என்று சொல்லி உடனே முடிக்கப்பார்ப்பார்கள்.// ஆமா இது வொர்க் அவுட் ஆகாதா :o

  ReplyDelete
  Replies
  1. ஆகாதுன்னு தான் நினைக்கறேன். பரிணாமவளர்ச்சியில் உயிர்கள் பலவற்றை கற்று முன்னேறுகின்றன

   Delete
 2. Happy Shopping! சுவைபட இருந்தது உங்கள் கட்டுரை. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி, வெங்கட் :-)

   Delete
 3. இந்த ஆண்கள், டிரெஸிங் ரூமில் கூட தும்மும் நேரத்தைவிட குறைவான நேரத்தில் எப்படி வெளியே வருகிறார்கள் என்பது குறித்து ஏதாவது உலக அளவில் ஆராய்ச்சி செய்யப்படவேண்டும் /// ஹா... ஹா... ஹா... செம. சரளமான எழுத்து நடை. அசத்தலா ஷாப்பிங் அனுபவங்கள் வந்திருக்கின்றன. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் யமுனா.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி, பாலா :-)

   Delete
 4. தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள்!! பண்டிகை காலம் தரும் மன மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது!! வாழ்க வளமுடன்!!

  ReplyDelete
 5. லேட் ஆகதான் உங்கள் கட்டுரைகள் கண்ணில் பட்டது . அருமை ! அமெரிக்கா வந்து விட்டதால் சில வருடங்களாக தி.நகரை மிஸ் செய்கிறேன். அந்த குறையை சிறிதேனும் போக்கி, தி.நகருக்குள் நேரில் சென்று வந்த உணர்வை தந்தது, நன்றி !

  ReplyDelete