Friday, 14 November 2014

இவர்கள் சந்தித்தால்..

ஆண்களும் பெண்களுமாக பல்வேறு வயதிலிருக்கும் இவர்கள் இங்கே சந்தித்து உரையாடுகிறார்கள்.

முதலாவதாக ஒருவர் 'நலமா?' எனத்துவங்குகிறார். அவருக்கு பதில் சொல்லும் விதமாக ஆனால் பொதுவாக இரண்டாமவர் அறிவிக்கிறார். 'நலமா விசாரிப்புகள் யாவும் ஒருவகை உரையாடல் துவக்கம் மட்டுமே. அங்கே பதில்கள் அர்த்தமற்றது!'

'இங்கே பலருக்கும் நலம் என்பது 3ஜி கனேக்‌ஷன். உண்மையான ஆரோக்கியம் உடல் மற்றும் மனநலம் தான்!!' என்று சற்றே வயதில் பெரிய பெண்மணி அறிவிக்கிறார்.

'வாழ்கை ஒரு கெலிடாஸ்க்கோப். இங்கே வண்ணங்கள் யாவும் இன்பம், துன்பம், காமம், குரோதம், பகை என்னும்..' என்று ஆரம்பித்து, பின் நிறுத்தி, இதை மேலும் எப்படி சிக்கனமாக சொல்லலாம் என யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார் மற்றுமொருவர்.

அங்கே இருப்பதிலேயே சற்று உயரமான சேரில் உட்கார இடம் கிடைத்த ஒருவர், தான் பேசவேயில்லை என்று உணர்ந்து, அங்கே யாருடன் தன் உரையாடலை துவக்கலாம் என கணக்குப்பண்ணுகிறார். இதற்கு முன் அவரிடம் பேச முற்பட்டவர், கொஞ்சம் உயரம் குறைவான சேரில் அமர்ந்திருந்ததால், உயரசேர்க்காரருக்கு பேச பிடிக்கவில்லை. ஆனால், பேசாமலும் இருந்தாலும் தன் மதிப்பு குறைந்துவிடும் என்று சடாரென்று - 'நரேந்திரமோடியின் அலட்சியத்தால் தான் இந்தியப்பெருங்கடலில் புயல் வருகிறது' என அறிவிக்கிறார், அங்கிருந்த பெரும்பாலானோர் அதையே சொல்லி சொல்லிப்பார்த்துக்கொள்கிறார்கள்.

அங்கே வயதில் மூத்தவரான ஒரு பெரிய தலைவர், பஞ்சனையில் உட்கார்ந்திருக்கிறார். அதிலேயே வாழும் சில அட்டைகள் அவர் ரத்தத்தை குடிக்க,  அவர் வலியால் முனகுகிறார். அது சிலருக்கு ஆச்சரியமாகவும், சிலருக்கு கேலியாகவும் மேலும் சிலர் வாய்க்கு அவலாகவும் இருக்கிறது.

ரொம்ப நேரமாக யாவர் பேசுவதையும் கவனித்துக்கொண்டே இருக்கும் ஒருவர், 'பெண்கள் என்ன இருந்தாலும் அறிவு குறைவானவர்கள் தான். குறைவு என்று சொல்வதன் மூலமே அவர்தம் அறிவு அங்கீகரிக்கப்படுகிறது' என சலசலப்பை எற்படுத்துகிறார். அவர் சொல்வதில் அவரிடமே இன்னும் சில சந்தேககங்கள் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்கிறார்கள் பெண்கள்.

அங்கே ஒரு பெண்ணை தனிப்பட்ட முறையில் பேச அழைக்கிறார், ஒருவர். உங்களுக்கு சினிமா பாட்டு பிடிக்குமா? சினிமா பார்ப்பீர்களா? அந்த பெண் - நான் தினமும் விஷ்ணுசகஸ்ரநாமம் சொல்லுவேன் என்று பதில் தருகிறார். கேட்டவர் மனதுக்குள் - (சரியான லூஸூ என்று நினைத்துக்கொண்டு), 'உங்கள் பதில்கள் யாவும் மிகவும் நுட்பமாக இருக்கின்றன' என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் அடுத்தப்பெண்ணிடம் பேச போகிறார். நுட்பப்பெண், அகமகிழ்ந்து, என் உலகம் வேறு என்று தன்னம்பிக்கை கொள்கிறார்.

அதற்குள் ஒரு கூட்டம், வாட்ஸப்பில் வரும் எசகுபிசகு வீடியோக்களை பற்றி பேசத்துவங்க, பெண்கள் சங்கடமாக அதை கேட்காதது போல நடிக்கத்துவங்குகிறார்கள்.

பிறகு, அங்கே இருந்த சானியா மிர்ஸா கைப்பை வைத்திருக்கும் பெண்ணிடம், 'பிறந்தநாள் வாழ்த்துகள் சானியா' என்கிறார் ஒருவர். அவர் சானியாவோ, அன்று அவர் பிறந்தநாளோ இல்லை எனினும் அதுகுறித்து யாரும் அங்கே கவலைப்படவில்லை. இன்னும் சிலரும் அவரை வாழ்த்த அவரும் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கிறார்.

அங்கே தன் தொப்பையை, நரைமுடியை மிகக்கடுமையான முயற்சிக்கு பின் மறைத்துக்கொண்ட ஒரிரு வயதானவர்கள் பெண்களுக்கு வயதாவதை பற்றி கிண்டலடிக்கிறார்கள். அறிவுக்கு பதில் சொல்வதா, வயதுக்கு பதில் சொல்வதா என்று நுட்பப்பெண் யோசித்துக்கொண்டிருக்கையில்.. அந்த பிரச்சனை முடிவுக்கு வந்து சினிமாகாரர்களின் கா(க)ப்பித்தனங்களை பற்றின உரையாடல் துவங்குகிறது. சினிமா பாடல்களை mp3 டவுன்லோட் செய்தது, கல்லூரி நாட்களில், பாட புத்தங்களை விலைக்கு வாங்காமல் 70 பைசா ஜெராக்ஸ் எடுத்தது எனபலதும் பலருக்கும் மறந்துவிட்டது தெரிகிறது.

தனக்கு பிடித்த ஆண் பிரபலத்தை ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உரக்க கூறுகிறார்கள். ஆணுக்கு ஆண் பிடிப்பதில் என்ன சுவாரஸ்யம் என்று, பெண்ணுக்கு ஒரு ஆண் பிடித்திருப்பதை பிடித்துக்கொள்கிறார்கள். அந்தப்பெண்ணின் மனநிலை, கற்புநிலை யாவும் விவாதித்துவிட்டு பிறகு தங்களுக்கு பிடித்த நடிகையை பற்றி வர்ணிக்க துவங்குகிறார்கள். யாராலும் கவணிக்கப்படாமல், விஸ்வநாதன் ஆனந்த் கடந்து போகிறார்.

பிறகு திடிரென்று சாம்பாருக்கு உகந்தது பெங்களூர் தக்காளியா, நாட்டுத்தக்காளியா என்று சண்டை துவங்குகிறது. சரிசமமாக பிரிந்து மாறிமாறி தங்களுக்கு பிடிக்காத வகையறாவால் அடித்துக்கொள்கிறார்கள். இடம் சகதியாகி சகலமும் ஒன்றானப்பின் கலைகிறார்கள்.

காலம் ஒரு நேர்கோட்டில் கடந்து போகிறது.

8 comments:

 1. கீச்சு கீச்சுனு கீச்சிட்டிங்க போங்க! :)

  ReplyDelete
 2. :-))) விமானத்தில் இருந்து பார்த்தாப்ல எழுதியிருக்கீங்க

  ReplyDelete
 3. ஆர்டி செய்துவிடுகிறேன் ;))

  ReplyDelete
 4. சமூக வலைதளம் பற்றிய மிக நேர்மையான பகடி * அட்டகாசம் யமுனாஜி :)))))

  ReplyDelete
 5. புத்திக்கு எட்டியது சில
  எட்டாத கசந்தது சில(புரியல)
  சுவாரசியமா இருந்தததுங்க :-)

  ReplyDelete
 6. நல்லாருக்கே. . .

  ReplyDelete