Saturday, 29 November 2014

ஒரு விஷப்பரிட்சை

முதலில் ஒரு ஃப்ளாஷ்பேக் - கொஞ்சமாக(?) என் வாழ்கையை ரீவைண்ட் செய்துப் பார்த்தால்குழந்தை பருவம் முழுவதுமே டீச்சர் விளையாட்டு தான் விளையாடிக்கொண்டிருப்பேன். ஆனால், பிறகெப்படியோ திசை மாறிப்போய்விட்டது. முதலில் சாஃப்ட்வேர் எழுதி, இப்போது அதையும் தூக்கிப்போட்டுவிட்டு ரெண்டு குழந்தைகளுக்கும் ஹோம்வொர்க் எழுதிக்கொண்டிருந்தாலும் , மனதில் இருக்கும் சாக்பீஸ் துகள்கள் மட்டும் உதிர்ந்தப்பாடில்லை. சரி தான் என்று கனவை விரிவாக்கி, விரிவுரையாளர் ஆகலாம் என்று பொறியியல் முதுகலையை பகுதி நேரமாக படிக்க ஆரம்பித்தாயிற்று. இந்த இரண்டு வருடங்களில், “சாமீ, எங்கம்மா பாசாகனும், நிறைய மார்க் வாங்கனும்போன்ற பின்நவினத்துவமான வேண்டுதல் எல்லாம் எங்கள் வீட்டு கடவுளுக்கு பழகிவிட்டிருக்கும்

கல்லூரியில், என் வகுப்பில் முக்கால் வாசிப்பேர் திருமணமானவர்கள், ஏற்கனவே ஒரு வேலையிலும் இருப்பவர்கள். ஆகையால், எந்தீரியஸ்னஸும் இல்லாமல் க்ளாசுக்கு ஜாலியாக பிக்னிக் போல போய்வருவது வரை சரியாக தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், படிப்பு அவ்வளவு சுலமாக இல்லை. குழந்தைகளை, இரவில் பல் தேய்க்க வைப்பதை விட சிரமமாயிருக்கிறது. வகுப்பில் அமர்ந்து, பால் காய்ச்சினோமே ஃப்ரிட்ஜில் வைத்தோமா, குழந்தைகள் சரியாக சாப்பிட்டிருக்குமா, மழை வந்தால் துணி காய்கிறதே, எடுத்து வைப்பார்களா என்று மனம் வேறு கணக்கு போடுகிறது. இன்னும் வகுப்பு நடக்கும் போது நோட்டு புத்தகத்தில் கோலம் வரைந்து தருவது, ரெசிபி மாற்றிக்கொள்வது எல்லாம் தனி அழிச்சாட்டியங்கள்.

இதுவாவது பரவாயில்லை, என்பது போல பரிட்ச்சைகள். அதென்னவோ வருடம் பூராவும் கல்லூரிக்கு போனாலும், பரிட்சைகள் தான், யுகம் யுகமாய் படிப்பது போன்ற அயாசத்தை தருகின்றனஎத்தனை அறிவாளியாக இருந்தாலும், பரிட்சைகள் பிடிக்க அவருக்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும், அது கடைசிநாள் கிடைக்கப்போகும், நாளை முதல் விடுமுறை(தலை) மனநிலை தான்.

எல்லா பல்கலைகழகத்தையும் போல என்னுடையதும் வேண்டுமென்றே எனக்கு சம்பந்தமேயில்லாத துறையை செர்ந்த ஒருவரை தான், பெஞ்சில் என்னருகே அமர்த்துகிறது.
அவரோ, சப்ஜாடாக நான்கு –ஐந்து பதில்களை படித்து வந்து, கேள்வித்தாள் தருமுன்பே எழுத ஆரம்பித்து திகிலூட்டுகிறார்.

பரிட்சை ஹாலில் ஒருமுறை, அருகில் அமர்ந்திருந்த அங்கிள் ஸ்..ஸ்ஸ்.. என்கிறார். குழம்பி, மெல்ல திரும்பி பார்த்தால், ‘ஸ்கேல் தாங்கஎன்கிறார். பிறகு பென்சில்’. பின் எரேசர், கால்குலேட்டர் என்று ஒன்று ஒன்றாய் காதலி போல கேட்க துவங்குகிறார்தன் சரீரத்தை தூக்கி வந்து எக்ஸாம் ஹாலில் வைத்திருப்பதே, இந்தக் கல்லூரிக்கு செய்யும் ஆகப்பெரிய உபகாரம் என நினைத்திருப்பார் போலும். என் சாமான்கள் அனைத்தையும் நான் சைகையால் திரும்பி வாங்குவதற்குள், சூப்பர்வைசரின் பார்வை என்னிடம், இதெல்லாம் வீட்டிலிருந்து எடுத்து வந்து தொலைத்தால் தான் என்ன என்கிறது.. தேவுடா

பெண்கள், பரிட்சை ஹாலில் இது போன்ற இம்சைகளை எந்த ஆணுக்காவது தந்திருக்கிறார்களா? நாங்கள், வேறு வகை. மொத்தமாக ஸ்கெட்ச் பென் 24 கலர்களில் வருகிறது என்றால், அத்தனையும் எடுத்துவந்து பெஞ்சில் பரப்புகிறார் ஒரு அம்மணி. அதில் ஒன்று, டுர்ர் என்று என்னிடம் ஓடிவந்து விடுகிறது. அவசரமாக பேனா எடுத்து எழுததுவங்கினால், மெஜந்தா கலரில் பட்டையாக பேப்பரில் பரவுகிறது. அதை விட, அந்த அம்மணி கேட்காமல் எடுத்ததற்காக என்னை முறைக்கும் போது, அந்த குண்டு கண்ணை ஸ்கெட்ச்பென்னால் குத்தவேண்டும் போல ஆசை எழுந்து அடங்குகிறது. 

மற்றுமொரு பரிட்சைஃபுளுரசண்ட் கலரில் ஜீன்ஸ் அணிந்து, தலைமுடி, நடவுக்கு காத்திருக்கும் நாத்து போல குத்திட்டு நிற்க, ஒரு வானரவீரன் அமர்ந்திருந்தான். கையில் கேள்விதாள் வந்ததும் தான் தாமதம்வாலாட்ட, சாரி., காலாட்ட ஆரம்பித்துவிட்டான்.. தட..தட..தட..தட,தட..தட..தட..,பையன் பெரிய தையல்காரனாய் வந்திருக்கவேண்டியது, விதி எஞ்சினியரிங்க் சேர்த்து பரிட்சை ஹாலில் காலாட்ட வைத்துவிட்டது..தட தட தட தட.. தட..தட..தட..தட.. எனக்கு மொத்த பெஞ்சும் வைப்ரேஷன் மோடில் இருக்க, எழுத்துக்கள் நாலு மணி மார்கழி குளிரில் நடுங்கி கொண்டிருக்கிறது. இவன் காலிரண்டையும் ஒரு பெல்ட்டு மூலம் இணைத்து, மோட்டர் கனெக்ஷன் தந்து மின்சாரம் தயாரித்தால் ஒரு மின்விசிரியாவது சுழல விடலாம் என்பதாக யோசிக்க துவங்குகிறேன். மிகுந்த பிரயத்தனப்பட்டு, மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை பாதியிலேயே கைவிட்டுவிட்டு மீதி பரிட்சையை எழுதியாகவேண்டியதாகிறது.

இன்னும், என் அருகில் அமர்ந்திருந்த பையனை நம்பி ஒரு ஐந்து, ஆறு பேர் பரிட்சை எழுத வந்திருக்க, அவனோ யாரையும் திரும்பியே பார்க்காமல் எழுதிக்கொண்டிருந்த ஒரு நன்னாளில், எனக்கு யார்யாரோ விட்டேறிந்த ரப்பர், குட்டி பென்சில், பேப்பர் ராக்கெட் எல்லாவற்றினாலும் அடி கிடைத்திருக்கிறது.


எது எப்படியோ, கடைசியாக பரிட்சை எப்படி இருந்தாலும், ‘எப்டி எழுதியிருக்க?’ என்று நண்பர்கள் கேட்டால், ‘சுமாராஎன்றும், வீட்டில் உள்ளவர்கள் கேட்டால், ‘நல்ல்லாஎன்றும் சொல்லக்கற்றுக் கொண்டிருக்கிறேன். ஏனேனில், மற்ற எல்லா பதில்களும் அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துவிடுகின்றன.

(இந்த இதழ் மங்கயர் மலரில் வெளிவந்துள்ள கட்டுரையின் முழுவடிவம்)

15 comments:

 1. விரைவில் விரிவுரையாளராக வாழ்த்துக்கள்!
  /* அது சரி! பிட் அடிப்பதை பற்றி பதிவில், எந்த வித தகவல்களும் இல்லை! */

  ReplyDelete
  Replies
  1. தட், அதுக்கு நான் சரியா வர மாட்டேன் மொமெண்ட் :-)

   Delete
  2. அப்ப பேசாம பிரின்ஸிபாலாகிவிடுங்க

   Delete
 2. ஹா ஹா .. சுகமான நினைவுகள் .. ஆமா கடைசி வரைக்கும் ரிசல்ட்டு என்னாச்சின்னு சொல்லவே இல்லையே

  ReplyDelete
  Replies
  1. ரிசல்ட் நல்லா வந்திருக்கு. அதையும் சொல்லிட்டா இன்னோரு பதிவு போடமுடியாதே :-)

   Delete
 3. Replies
  1. :-) நன்றி ஸ்ரீராம்

   Delete
 4. dhada, dhada, dhadannu kaal aattiiyavan naan thaan,

  ReplyDelete
 5. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள். நன்கு அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள். ரஞ்சனி சொல்லியே அனுப்பிச்சார். சிரிப்பாய்ச் சிரிச்சு வயித்துவலி வந்தால் நான் பொறுப்பில்லைனு சொன்னார். ஆனால் இப்படிச் சிரிக்க வேண்டி இருக்கும்னு நினைக்கலை. :))))

  ReplyDelete
 6. மார்ஸ் யாரு? வீனஸ் யாருனு சொல்லவே இல்லையே? உங்க குழந்தைங்களா? இத்தனைக்கு நடுவிலும் தேர்வில் தேர்ச்சி பெற்றமைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. yes. My children only. Thanks for your wishes :-)

   Delete
  2. yes. My children only. Thanks for your wishes :-)

   Delete
 7. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்... நல்ல நகைச்சுவைப் பதிவு...

  ReplyDelete