Sunday, 15 March 2015

இந்தியாவும் மகள்களும்.

இந்தியாவின் மகள் (India’s daughter) என்று பெயரிடப்பட்டு, பிபிசி தொலைக்காட்சிக்காக  திருமதி லெஸ்லி உட்வின்  எடுத்த ஆவணப்படம் நாடளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் கடந்த  2012 ஆம் வருடம், நிர்பயா என்று ஊடகங்களால் பெயரிடப்பட்ட மாணவி, இரவு தன் நண்பனோடு சினிமா பார்த்துவிட்டு வரும் போது, ஓடும் பேருந்தில் வைத்து ஆறு பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அதன் பின், மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டு, பேருந்தில் இருந்து வீசி ஏறியப்பட்ட அவர், மிக நீண்ட போராட்டதிற்கு பின், உயிரிழக்க நேரிட்டது. முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் 18 வயதை அடைய மூன்று மாதம் மீதமிருந்ததால் குறைந்தப்பட்ச தண்டனை பெற்றார். இன்னும் ஒருவர் சிறையில் தூக்கிட்டுக்கொண்ட நிலையில், மீதி நால்வர் திகார் சிறையில் உள்ளனர். நாட்டையே தலைகுனிய வைத்த இச்சம்பவம் குறித்து இந்த ஆவணப்படம் பேசுகிறது. குறிப்பாக குற்றவாளிகளின் வாக்குமூலம், அவர்கள் வழக்கறிஞர்களின் பேட்டி, நிர்பயாவின் பெற்றோரின் தற்போதைய மனநிலை மற்றும் சமூக ஆர்வலர்களின் இது குறித்த அலசல்கள்.
இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் தொலைக்காட்சி வாயிலாகவோ, இணையத்திலோ வெளியிட இந்திய அரசு நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியுள்ள நிலையில், இது குறித்து இரு வேறு நிலைப்பாடுகள் இணையத்தில் காணப்படுகிறது. IndiasDaughter என்ற ஹாஷ்டேக் வரிசையில் ட்விட்டர், ஃபேஸ்புக்கிலும்,இன்னும் பல் வேறு வலைத்தளங்களிலும் மக்கள் இது பற்றி அலசுகிறார்கள்.

முதலில், இந்த ஆவணப்படத்தை ஏன் வெளியிட கூடாது என்பதற்கான சில விவாதங்கள் குறித்துப்பார்ப்போம்.
 • இந்த படம் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் கெடுத்துவிடும். இந்தியா வாழ தகுதியற்ற நாடு போல காட்ட முயல்கின்றது.
 • இனி மீண்டும் போராட்டமும், கலகமும் ஏற்படும். இதனால் சமூக அமைதி கெட்டுவிடும். 
 • ஆவணப்படம், குற்றவாளியின் குரலை வலுவாக எடுத்துரைத்தது போல, இதற்காக போராடியவர்களை காட்டவில்லை.
 • நிர்பயாவின் பெற்றோர்கள், குறிப்பாக அவரது தாய் படம் முழுவதும் அழுதுக்கொண்டே இருப்பது போலில்லாமல், அவர்கள் இந்த சம்பவத்தையும் அதன் பிறகான நாட்களையும் எவ்வாறு தைரியமாக எதிர்கொண்டார்கள் என்பது போல் அமைந்திருக்கவேண்டும்.
 • இந்தியாவின் அனைத்து ஆண்களுமே காமக்கொடூரர்கள் அல்ல. தோழியாக, மகளாக, தாயைப்போல பெண்களை பார்க்கும் பெரும்பாலானவர்களும் இருக்கிறார்கள். ஆவணப்படம், தேடி தேடி, பெண்கள் பற்றின பிற்போக்கு சிந்தனை உள்ளவர்களையே படம்பிடித்திருக்கிறது.
 • மேலும், ஒட்டுமொத்தமாக  சமூக மனநிலைப்பற்றி எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளாமல், மேம்போக்காக ஒரு சம்பவத்தையும், சில மனிதர்களையும் காட்டி தன் முடிவை வெளியிடுகிறது.


ஆனால் இந்த ஆவணப்படத்தை ஏன் வெளியிடவேண்டும், ஏன் மக்கள் அவசியம் பார்க்கவேண்டும் என்று பார்த்தோமேயானால்,
 • குற்றவாளி மிகமிக இயல்பாக அச்சம்பவத்தை விவரிக்கிறார். அவள் உள்ளுருப்பில் இருந்து பெருங்குடலை வெளியே இழுத்ததை பற்றிப்பேசும் போது நம் அடிவயிறு கலங்குகிறது.  அந்தப் பெண் அவ்வளவு தூரம் போராடாவிட்டால், சாகவேண்டி இருந்திருக்காது என்று குற்றவாளி சொல்லும் போது, இந்த தண்டனையின் பயன் தான் என்ன என்று மிகபெரிய ஆயாசம் உருவாகிறது. இனி, வெளி வந்த பிறகும் இவர்கள் இதை தொடறமாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை என்பது உறுதியாகிறது.  
 • குற்றவாளிகளின் வக்கீல் இன்னும் ஒரு படி மேலே சென்று,  ஆணும், பெண்ணும் எவ்வகையிலும் சரிசமமில்லை என்கிறார். என் பெண் இவ்வாறு இரவில் ஒரு ஆணோடு சுற்றிக்கொண்டிருந்தால், அவளை நானே பெட்ரோல் ஊத்திக்கொளுத்துவேன்.ஒரு கற்பழிப்பு நடக்கிறதென்றால், அங்கே ஆணை விட அந்தப்பெண்ணே காரணமாகிறாள்.அவள் ஒரு உணவைப் போல தெருவில் கிடைக்க கூடாது.ரோட்டில் ஒரு வைரம் கிடந்தால், அதை நாய் எடுக்கதான் செய்யும். அது தவிர்கவே முடியாது. இப்படி அவர் சொல்லச் சொல்ல, படிப்புக்கும் பண்புக்கும் எந்த சம்பந்தமுமில்லையோ எனத்தோன்றுகிறது.  
 • இது தான் இன்றைய சமூகத்தின் நிலை. இதை மறைப்பது, பூனை கண்ணை மூடிக்கொண்டு இருண்டு விட்டதாக நினைப்பது போல தான். இத்தனைகயை மனநிலையை ஒரு நோயை போல அனுகவேண்டும். முதலில் அது இருப்பதை ஒத்துக்கொண்டால் தான் அதை சரி செய்யவும் முடியும்
 • இப்படத்தின் இயக்குனரே பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டவர். அதன் பின் நான் ஏன் வெளியே வரத்தயங்க வேண்டும்? உண்மையில் வருத்தப்பட, வெட்கப்படவேண்டியது குற்றவாளி தான், என்கிறார். அதுவே சரியானதும் கூட
 • மேலும், இன்று ஒரு சானல்4 இல்லையென்றால், இலங்கையில் போர் குற்றங்கள் வெளிவராமல் போயிருக்கும், அல்லவா?


எதுஎப்படியோ, இனி அரசு தண்டனைகளை கடுமையாக்கலாம். பேருந்துகள் , கார்கள் குளிர் கண்ணாடியின் கருமையை குறைக்கலாம். பெண்களை வீட்டில் பூட்டி வைக்கலாம். ஆனால் இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கொஞ்சம் வேண்டுமானால் குறையலாம். ஆனால் ஆரோக்கியமான தேசத்துக்கான மாற்றம் என்னவோ, ஒட்டுமொத்த சமூகத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும், முடியும். பாலியல் பலாத்காரங்களின் பிண்ணனியில் ஏழ்மை, படிப்பறிவின்மை, குடும்பத்தை பிரிந்து வெளிமாநிலங்களில் கடுமையான நெருக்கடியில் வேலை செய்யும் தொழிளாலர்கள் என பலதும் இருக்கிறது. இவையாவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தீர்வு காண முடியாது.
ஓவ்வொரு  தனி மனிதருக்குமே ஒழுக்கம் சார்ந்த அறம் அவசியப்படுகிறது. இங்கே, பெற்றோர்கள் ஆண் குழந்தையை டாக்டராக, இஞ்சினியராக மாற்றுவதை விட,  நல்ல மனிதனாக ஆக்குவது தான் இந்த பூமிக்கு செய்யும் பிரதிபலனாக இருக்கும்.

படம் வெளியிடப்பட்டாலும், இல்லையென்றாலும், பெண்ணை பற்றின சமூகத்தின் தற்போதைய சிந்தனை  மிகவும் கவலைக்குறியது. ஐந்து வயது பெண் குழந்தை வன்புணரப்படுகிறது. எவ்வகையிலும் அதன் ஆடை அதற்கு காரணமாக இருக்கப்போவதில்லை. எப்போதுமில்லாத அளவு பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கான அறிவுரைகள் நீள்கின்றன. பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய அரசில், பாராளுமன்றத்தில் ஆபாசப்படம் பார்க்கும் எம்பிகள் இருக்கிறார்கள். ஆணும், பெண்ணும் நட்பாக இருப்பது சாத்தியமில்லை என்று கணிசமானவர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் தோன்றி உறுதியளிக்கிறார்கள். ஈவ் டீஸிங் செய்து பெண்ணை அடைவது தான் காலம்காலமாக நம் சினிமா, ஹீரோயிஸமாக காட்டுகிறது. உடை முதல் வெளியே செல்லும் நேரம் வரை அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு என்றாகிறது. ரகசிய காமிராவில் படம்பிடிக்கப்பட்ட யாரோ ஒரு பெண்ணின் அந்தரங்கம், சிறிது குற்ற உணர்ச்சிக் கூட இல்லாமல், இளைஞர்களால் வாட்ஸப்பில் பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது. தன் மண வாழ்க்கைக்காக தெருவில் இறங்கிப் போராடும் ஒரு கவிதாயினி, அதற்காக எள்ளளவும் உதவிடாதவர்களால் இணையத்தில் கேலி பேசப்படுகிறார். இவை யாவும் சேர்ந்தது தான் ஒரு சமூகம். பலாத்காரம் பெருங்குற்றமெனில், பெண்ணை ஒரு போகப்பொருளாக பார்ப்பதுவும் ஒரு குற்றமே!


பெண்ணை தெய்வமாக பார்க்க தேவையேயில்லை. அவள் சக உயிர். மதிக்கவேண்டிய, நேசிக்க வேண்டிய ஒரு மனுஷி. இரு கண்களில் ஒரு கண்ணை ஊசியால் குத்திக்கொண்டால், பார்வை ஒருபோதும் அழகாவதில்லை. 

(குங்குமம் தோழி 14/3/2015 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை )


2 comments:


 1. பெண்ணை தெய்வமாக பார்க்க தேவையேயில்லை. அவள் சக உயிர். மதிக்கவேண்டிய, நேசிக்க வேண்டிய ஒரு மனுஷி. இரு கண்களில் ஒரு கண்ணை ஊசியால் குத்திக்கொண்டால், பார்வை ஒருபோதும் அழகாவதில்லை. ///// க்ளாப்ஸ் யமுனா... இந்த நாலு வரிகள் போதும் மனசில் சுருக்கென்று தைக்க.

  ReplyDelete
 2. ஆதி காலத்தில் இருந்தே வரும் ஒரு அவல நிலை இது. இன்றும் ஆப்ரிக்க நாடுகளில் பெண்களின் பிறப்புறுப்பு ஐந்து வயதிற்குள் சிதைக்கப் படும் சடங்கு நடந்து வருகிறது.கேட்பார் இல்லை. இதனால் பெண் சிறுநீர் கழிக்கும்போதும் மாதவிடாயின் போதும் அதிக அல்லல் படுகிறாள். சிலர் தோற்று நோயால் இறந்தும் போகிறார்கள். ஆணாதிக்க சமுதாயம்.

  amas32

  ReplyDelete