Thursday, 30 April 2015

ஓர் ஆண்டுவிழாவும், டங்காமாரி அம்மாவும்

"என்ன மாமி, ஷாப்பிங்கா?"
 "ஆமாம்மா, என் பேரன் அபி ஸ்கூல் ஆண்டுவிழா ட்ராமால இருக்கான். அதான்.. இந்தப்புடவைக்கு மேட்சிங் ப்ளவுஸ் தச்சு, அன்னைக்கு கட்டிக்கலாம்ன்னு இருக்கேன். "

என் குழந்தைகள் படிக்கும் அதே பள்ளியில் தான் மாமியின் பேரனும் படிக்கிறான். மாமியை போல தான் நானும். குழந்தைகளை வருடாவருடாம் எதாவது நிகழ்ச்சில் இருக்குமாறு பார்த்துக்கொள்வதே, தற்போது பெற்றோருக்கு வாழ்வில் முதல் மதிப்பெண்ணுக்கு பின்னான உபரி லட்சியம். வகுப்பில் நடந்ததை விட, இவ்வாறு மேடையில் தோன்றும் ஞாபகங்கள் எத்தனை வருடமானாலும் நினைவில் நிற்கும் என்பது ஒரு காரணம். ஆனாலும், ஆண்டுவிழாவில் சந்தித்துக்கொள்ளும் அம்மாக்கள், தங்கள் குழந்தைகள் அடம்பிடித்து நிகழ்ச்சியில் இணைந்து விட்டதாக செல்லமாக அலுத்துக்கொள்வார்கள். அப்பாக்கள் வேறு மாதிரி. ஸ்கூலில் ஃபோட்டோ தருவார்கள் எனினும், முண்டியடித்து முன்னே போய், மேடையில் இருக்கும் தன் குழந்தையை படம் எடுக்க சாஃப்ட்வேர் ஆசாமியும், மளிகை கடைக்காரரும், பிஸினஸ் மேன்களும் மோதிக்கொண்டு சமத்துவத்தை நிரூபிப்பார்கள்.

ஆண்டுவிழாவின் ஆரம்ப கட்டங்கள் சுவாரஸ்யமானவை. முதலில் குழந்தைகள் சந்தோஷமாக  வீட்டிற்கு வருகின்றன. 'அம்மா, நானும்  டங்காமாரி டான்ஸில் இருக்கேன். நம்ம ஸ்ருதி தான், மூஞ்சி கழுவாத மீனாட்சி!' பிறகு பிரச்சனை ஒவ்வொன்றாக ஆரம்பிக்கிறது. டீச்சர் கண்களுக்கு வெள்ளை நிறமே அழகெனப்பட்டு, முதல் வரிசைக்கு போகிறது ஒரு குழந்தை. பிறகெப்போதுமாய் ஒரு மன குளத்தில் கல்லெறிந்துவிட்டதை அறியாமல் குழந்தைகளை தனக்கு பிடித்தவாறு வரிசைப்படுத்துகிறார் டீச்சர். ஸ்கூல் நடனத்தில் மட்டும் உயரம் ஒரு குறையாகி, கடைசி வரிசைக்கு தள்ளப்படுகிறது.  ஆனாலும், தான் ஒரு வரி கூட பேசாத நாடகத்திலும், டீச்சர் ஒத்திகைக்கு அழைத்ததும், மற்றவர்கள் பார்த்திருக்க பாதி க்ளாஸிலிருந்து எழுந்துப்போவதெல்லாம் ஒரு பெருமையாகக் கருதச்செய்கிறது, கலங்கமில்லாத பால்யம்.


ஆண்டு விழா நெருங்க, நெருங்க பல விதமான சவால்கள் பெற்றோருக்கு வருகின்றன. அதே தேதியில், கண்டிப்பாக போயாக வேண்டிய கல்யாண ரிசெப்ஷன், ஆஃபிஸ் நண்பரின் குழந்தைக்கு பர்த்டே பார்ட்டி, சொந்த தலைவலி என பலதும் வந்து தொலைகிறது. இது அத்தனையும் மீறி, கடவுளை தரிசிக்க போகும் பக்தனின் ஆர்வத்தை ஒத்திருக்கிறது, மேடையில் தன் குழந்தையை  ஐந்தே நிமிடங்கள் பார்க்கப்போகும் பெற்றோரின் ஆர்வம்.

இத்தனை கஷ்டத்திற்கு, சுவாரஸ்யத்திற்கு பிறகு வரும் ஆண்டுவிழாக்களின் ஒலி/ஒளி தவிற வேறு விஷயங்களில் நூற்றாண்டுகளாக மாற்றமில்லை.  மைக்கை அளவின்றி நேசிக்கும் 'சீஃப் கெஸ்ட்' , நம் பொறுமையின் அளவை சோதித்துவிட்டு உட்காருகிறார். ஆண்டுவிழா உடைகள், இது நாள் வரை ஒரே லட்சியம் கொண்டு தான் தைக்கப்படுகின்றன - பிறகு எப்போதும், வேறு எங்கேயும் அணிந்து சென்றிடக் கூடாது என்பதே அது! மிட்டாய் ரோஸ் அல்லது தங்க நிறத்தில் இருக்கும் உடையில், ஒரு 'ஜில் ஜில் ரமாமணி'யாக வெளியே வர சிறு குழந்தைக்கு கூட பிடிப்பதில்லை. உடைக்கு சற்றும் சலித்ததில்லை, மேக்கப் பயங்கரங்கள். டீச்சர், தான் கற்ற வித்தை அனைத்தையும் அந்த சின்னஞ்சிறு முகங்களில், கருணை போல எல்லையற்று காட்டுகிறார். பெற்ற தாய்கே மேடையின் கீழிருந்து குழந்தையை பார்த்தால் அடையாளம் தெரியாத உலக அதிசயமெல்லாம் பள்ளி ஆண்டுவிழாவில் சகஜம். ஏக்கச்சக்க லிப்ஸ்டிக்கை அப்பி விடுவதில், குழந்தைகள் ஒரு மாதிரியாக வாயை பிளந்துக்கொண்டு பூச்சி பிடிக்க காத்திருக்கும் பல்லி போல இருக்கின்றன. நிகழ்ச்சிகள் பொதுவாக இறைவணக்கம், சில உரைகள், பட்டம்பூச்சி நடனம், ஆங்கில, தமிழ் நாடகங்கள், பள்ளியில் ஹிந்தி உண்டு என்றால் ஒரு ஹிந்தி பாடல், சமீபத்திய குத்துப்பாட்டு,'அடுத்தாத்து அம்புஜம்' மற்றும் கேட்வாக் என்று திட்டவட்டமாக இருக்கின்றன. அதில் கேட்வாக், என்பது பெரிய வகுப்பு மாணவர்களுக்கானது. எப்போதும் அணியும் உடையில், சிடி, காகித பூ, ப்ளாஸ்ட்டிக் ஸ்பூன், ஃபோர்க், ஈர்க்குச்சி என கண்டதையும் ஒட்டிக்கொண்டு, இது தான் ஃபேஷன் என்று நம்பி நடந்தார்கள், நடக்கிறார்கள், நடப்பார்கள்.நமக்கே இத்தனை சவால்கள் என்றால், டீச்சர்கள் பாடு கொஞ்ச நஞ்சமல்ல என்று புரிய கொஞ்சம் பின்னோக்கி பயணிக்க வேண்டும். மேடைக்கு பின்னால், காந்தியின் தடி காணாமல் போயிருக்கிறது. அதற்கு பதிலாக கிருஷ்ணரின் புல்லாங்குழல் எவ்வகையிலாவது சரிப்படுமா என்று ஆசிரியை கண நேரம் திகில் யோசனை அடைகிறார். தேவதை வேடமிட்ட பெண் குழந்தை, பசியில் அழத்துவங்குகிறது. திரெளபதியின் மானம், டீச்சரின் சில பல சேஃப்டி பின்னில் இருக்கிறது. ராஜராஜ சோழனின் பழைய ஒட்டுமீசை பசை குறைந்து மண் ஒட்ட காத்திருக்க, மேடையில் நிகழ்ச்சி நிரல் படிக்கும் அந்த ஒரு ஆசிரியை தவிர, அத்தனை பேரும் வியர்க்க விறுவிறுக்க பட்டுப்புடவையில் பதட்டமாக இருக்கிறார்கள்.

நாம் எல்லாரும் செய்யும் தவறு ஒன்றுண்டு. நிகழ்ச்சியை நம் குழந்தைக்காக மட்டும் பார்த்துவிட்டு, தடாலென கிளம்புவது. கடைசிக் கடைசியாக வரும் நிகழ்ச்சியைப் பார்க்க சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோரும், ஆசிரியர்களையும் தவிர யாருமே இருப்பதில்லை, சீஃப் கெஸ்ட் உட்பட. மொக்கை சினிமா என்று தெரிந்துவிட்டால் கூட முழு படத்தையும் விடாமல் பார்க்கும் நமக்கு, சின்னஞ்சிறு குழந்தைகளுக்காக கூடுதலாக ஓரு மணி நேரம் இருக்கமுடியாத அளவு வேலைகள் திடீரென்று முளைக்கின்றன.

முன்பு போலில்லாமல், பள்ளிகள் வலுக்கட்டாயமாக எல்லாம் குழந்தைகளை நிகழ்ச்சியில் சேர்ப்பதில்லை. இப்போது அச்சடித்தே தந்துவிடுகிறார்கள் -
உங்கள் குழந்தை ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டுமா?
1) எந்த கல்சுரல் ப்ரோக்ராமில் உங்கள் குழந்தை பங்குப்பெற வேண்டும் என்பதை நாங்களே தீர்மானிப்போம்
2) இதற்கான உடை தேர்வு முற்றிலும் பள்ளி நிர்வாகத்தால் முடிவு செய்யப்படும்.
3) இதற்காக தினமும், வகுப்புக்கு பின்னரும், வார இறுதியிலும் பயிற்சிக்கு வகுப்புக்கு வர வேண்டும்.
4) இந்த பயிற்சி வகுப்புகளுக்கு எக்காரணம் கொண்டும் விடுப்பு எடுக்க கூடாது.
5) பயிற்சி வகுப்பு முடிந்ததும், பெற்றோர் தான் அழைத்து செல்ல வேண்டும். பள்ளி வேனில் வரும் குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.

மேலே குறிப்பிட்ட யாவற்றிற்கும் சம்மதமெனில், Yes என்னுமிடத்தில் டிக் செய்து, ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பவும்.

நான் மகளிடம் கேட்டேன் - "இவ்வளவு கண்டிஷனுக்கும் எந்த வீட்டில் ஒத்துக்கொள்வார்கள்? உங்க க்ளாஸில் யாவாவது ஆண்டு விழாவிற்கு பெயர் கொடுத்திருக்கிறார்களா?"
மகள் - "ஆல்மோஸ்ட் எல்லாருமே கொடுத்திருக்கோம் மா". அது தான் பெற்றோர்கள்! :-)
விழாவில், பக்கதில் அமர்ந்திருந்த மாமி, நாடகம் தொடங்கியதும் மகிழ்வுடன் சொல்கிறார் - "பாரு, பாரு.. அதோ ராஜராஜ சோழனுக்கு பின்னால சாமரம் வீசறானே, அதான் அபி!"

(ஏப்ரல் மாத குங்குமம் தோழியில் வந்த கட்டுரை)