Wednesday, 15 July 2015

பேரு பெத்த பேரு, தாக நீரு லேது!


மாநகரம் பல விதங்களில்  சுவாரஸ்யமானது. சரியாக சொல்லப்போனால், இங்கே தண்ணீர் ஒருவர் வாழ்வில் வகிக்கும் பங்கை வைத்து அவரின் பொருளாதாரத்தை எடைப்போட்டு விடலாம். 'அப்பார்ட்மெண்ட்டில் ஸ்விமிங் பூல் இருக்கா?' என்று கவலைப்படும் பணக்காரர்களும், 'கார்ப்பரேஷன் தண்ணீ வருமில்லீங்க?' என்று விசாரித்து வீடுமாறும் நடுத்தரவர்கமும், லாரியில் வரும் தண்ணீரை பிடிக்க வீட்டிலிருந்து எவ்வளவு தொலைவு செல்லவேண்டும் என்று கேட்டு பெண் கொடுக்கும் கடைநிலை மனிதர்களுக்குமானது சென்னை. இங்கே முன்னூற்றி அறுபத்து நான்கு நாட்களும் புரண்டோடும் நதி ஒன்று உண்டென்றால் அது கூவம் தான். மற்றப்படி  தண்ணீர் மழைக்காலங்களில் கங்கையாய் வீட்டின் உள்ளேயே வந்து, வெய்யில் காலங்களில் சரஸ்வதியாய் காணாமல் போகும் ஏரியாக்கள் தான் அதிகம்.

கொஞ்சம் கீழ் தட்டு மக்கள் என்றால், குழாயடியில் வைத்து சண்டையை முடித்து, தண்ணீர் கிடைத்ததும் சிரித்துக்கொண்டே கூட வீடு திரும்பி விடுவார்கள். இரண்டுங்கெட்டானான நடுத்தர குடும்ப ஃப்ளாட்வாசிகளிடையே  மெளன யுத்தம் போல், உடைய காத்திருக்கும் நீர் குமிழி போல், தண்ணீர் சண்டை நிகழ்ந்துக்கொண்டிருக்கும். தண்ணீரை வீணடிப்பதாக தோன்றும் வீட்டினை சேர்ந்த பையன், பந்தால் மற்றொரு வீட்டின் கண்ணாடி ஜன்னலை மட்டுமில்லாது, அந்த நீர்குமிழியையும் சேர்த்தே உடைப்பான்.  அடுக்ககத்தில் இருப்பவர்களை இணைக்க ஒரு சின்ன திருட்டு சம்பவம் போதும். திடீரென்று அன்யோன்யமாகி, யார் யாரெல்லாம் ஊருக்கு போகிறார்கள் என்று பரஸ்பரம் தெரிந்து வைத்து, நாங்க பார்த்துக்கறோம் என்று வாசன் ஐ கேர் போல உறுதி தருவார்கள். போலவே ஜென்ம விரோதியாக்க தண்ணீர் பிரச்சனை போதும். கார் கால நட்பெல்லாம், கோடை காலத்தில் ஆவியாகும்! உங்க வீட்ல இன்னும் எத்தனை நாளுக்கு தான் விருந்தாளிங்க இருப்பாங்க என்று அடுத்த வீட்டில் இருப்பவர் சண்டைக்கு வருவதெல்லம் மாநகரத்து ஸ்பெஷல் எபிசோட்!!


இது ஒரு புறம் என்றால், உங்க தண்ணீல உப்பு இருக்கா என்று கேட்டு, இல்லையென்றால் குடி போகும் ஏரியாக்கள் தான் பெரும்பாலும். சமயத்தில் அருகிலுள்ள நல்ல ஸ்கூல், அல்லது வேலை பார்க்கும் அலுவலகம் காரணமாக உப்பு-தண்ணீ ஏரியாவுக்கு குடி போக நேரிட்டால், ஏற்கனவே கொஞ்சமாக மிச்சமிருக்கும் உறவுகள் நம் வீட்டுக்கு வரவே பயப்படுகிறார்கள் அல்லது அவர்கள் வந்துவிடப்போகிறார்களே என்று நாம் பயப்படுவோம். இரண்டு நாட்கள் சேர்ந்தார்ப்போல தண்ணீர் பிடித்து வைத்துவிட்டால், பக்கெட்டெல்லாம் 2 இன்ச்சுக்கு உப்பு படிந்து, அந்த கால சினிமா நடிகையின் மேக்கப் போட்ட முகம் போல மாறுகிறது. வரும் விருந்தினர்களோ இதை துளிக்கூட ரசிப்பதில்லை.
'சென்னைல தான் குளிச்சா, குளிச்ச மாதிரியே இருக்கறதில்ல. சாக்கடை தண்ணி மாறில்லா இருக்கு?!'
'ஐயோ, சென்னைக்கு வரும் போது பழைய பனியனா எடுத்துவரனும். இங்க வந்து துவைச்சா பிடி-துணி போல ஆகுதே!'
'என் பொண்ணுக்கு போன முறை உங்க வீட்டு தண்ணியால ஸ்கின் ப்ராப்ளம் வந்திருச்சு. '
இதுக்கெல்லாம் அவமானப்படும் கட்டத்தை எப்பவோ தாண்டிவிட்டோம். விருந்தினர் வருகையில், தண்ணீரும் வருவதே எங்களுக்கு போதுமானது. மாநகரத்தின் தண்ணீருக்காக முடி துறந்த மன்னர்களாச்சே நாங்கள்?!

குரோமியம், ஈயம் இன்னும் கெமிஸ்ட்ரி லாபில் இருக்கவேண்டியதெல்லாம் இப்போது நிலத்தடி நீரில் இருக்கிறதாம். இத்தனை ரசாயனத்தையும் சுமந்து சில பகுதிகளில் தண்ணீர் அழகான ஆரஞ்சு வண்ணத்தில் வருகிறது.  இன்னும் மஞ்சள், பச்சை என்று வைரமுத்து பெண்ணை பற்றி பாடத்தேவையான எல்லா வண்ணத்திலும் தண்ணீர் கிடைக்கையில், குழந்தைகள் புத்தகத்தில் மட்டும் தான் தண்ணீருக்கு வண்ணமில்லை என்றிருக்கிறது. ஏதேனும் ஒரு நதிநீரை பைப்பில் கிடைக்கப்பெரும் ஏரியாவாசிகள் போன பிறவியில் ஓரளவு நல்லவர்கள். நிலத்தடி நீரை நம்பியிருப்பவர்கள் கதை, சித்திரகுப்தன் கோவமாக இருக்கையில் எழுதியது! போர் போட்டு தண்ணீர் எடுக்க முயல்கையில், சமயத்தில் 600 அடி தாண்டியும் கூட, ப்ளம்பர், 'வெறும் காத்து தாங்க வருது' என்கிறார். எவ்வகையிலும் அது 'தேவர் மகன்' ரேவதி கிசுகிசுத்ததைப்போல தித்திப்பாக இல்லை. 'இன்னும் தோண்டு இன்னும் தோண்டு' என்கிறோம்.  அந்தப்பக்கம் அமெரிக்கா வருவதற்குள் தண்ணீர் வந்துவிடாதா என்ன?

நமக்காக, பல புறநகர் பகுதியில் உள்ள விவசாயிகள் பேருக்கு விவசாயம் செய்துக்கொண்டு, கிணற்றில் மோட்டர் போட்டு உரிஞ்சி உரிஞ்சி பயிருக்கு போகவேண்டிய தண்ணீரை லாரிகளில் நகரத்துக்குள் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். லாரிகள் வழி நெடுக நிலத்தின் ரத்தம் போல தண்ணீரை சிந்திக்கொண்டே செல்கின்றன. அதை தான் இஷ்டத்துக்கு வாரியிரைக்கிறோம்.

'லேக் வ்யூ' அப்பார்ட்மெண்ட் என்று விளம்பரம் செய்து, வீடுகள் விற்று முடித்ததும் அந்த லேக்கில் அப்பாட்மெண்ட்டின் கழிவு நீரை கொண்டுசேர்த்து, 'சாக்கடை வ்யூ' அப்பார்ட்மெண்ட்டாக மாற்றிக்கொள்வது ; எப்படியாவது வீட்டை தாண்டினால் போதும் என்று நாம் நினைக்கும் குப்பைகள், நீர் நிலைகளுக்கு அருகில் கொட்டப்படுவது; ஏரிகள் வரண்டு போக காத்திருந்து, போஸ்டல் அட்ரஸை ஏரி மேல் மாற்றிக்கொள்வது; வீட்டில், பல் தேய்பதற்கு குளிக்கத்தேவையான அளவு தண்ணீரும், குளிப்பதற்கு விவசாயம் செய்துவிடலாம் அளவு தண்ணீரையும் உபயோகிப்பது..இவையாவும் தொடர்ந்து செய்துக்கொண்டே போனோமேயானால், சென்னை சீக்கிரம் ஒட்டகமில்லா ராஜஸ்தானாகும்.Image result for water scarcity cartoonsஇதில், நம் பெண்களால் செய்யக் கூடியது ஒன்றுண்டு. குழந்தைகளுக்கு தண்ணீரின் அருமையை புரியவைப்பது. எங்கு தண்ணீர் வீணாகிக்கொண்டிருந்தாலும், ஓடிப்போய் நிறுத்துவதெல்லாம் பாலப்பாடமாக வேண்டும். இவ்வளவு ஏன் பேச வேண்டும் என்றால்,  தண்ணீர் பிரச்சனையை பொருத்த வரையில், இன்றைய சென்னை நிலை, நாளை  மொத்த தமிழகத்துக்குமான ட்ரைலர்!


(குங்குமம் தோழியில் வந்துள்ள கட்டுரை)

2 comments:

  1. சிறப்பான கட்டுரை. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. விரைவில் நாம் திருந்தாவிட்டால் திண்டாட்டம் தான்.

    ReplyDelete
  2. நிலமை இந்த அளவிற்கு மோசமாக போன பின்பும் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல மக்களுக்கும் இன்னும் பொறுப்பு வரவில்லையோ என்றுதான் தோன்றுகிறது

    ReplyDelete