Wednesday, 16 December 2015

பெருமழைக்குப் பின்னால்..சமீபத்தில் தான் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபெயர்ந்திருக்கிறேன். குடியிருப்பு என்று சொன்னால் உங்களுக்கு அதன் பணக்காரத்தன்மை பிடிபடாமல் போய்விடும். ஆங்கிலத்தில் விவரிப்பதானால் ‘கேட்டட் கம்யூனிட்டி’.  அமெரிக்கத்தனத்தோடு தென்படும் மனிதர்களின் உடைகள், பாவனைகள், கன்றுக்குட்டி சைசில் இருக்கும் நாய்கள் (இங்கிருக்கும் நாய்களை, 'நாய்கள்' என்று சொல்லவே பயமாக இருக்கிறது), நுனி நாக்கு ஆங்கிலம் மட்டுமே பேசும் யுவன் - யுவதிகள்/ நண்டு, சிண்டுகள் , பார்க்கிங்கில் நிற்கும் பி.எம்.டபிள்யூ, பென்ஸ் என நீங்கள் உள்ளே வந்தால் என்னைப்போலவே உங்களுக்கும் மிரட்சி கொள்ள 101 காரணங்கள் இருக்கின்றன.


அப்பார்ட்மெண்ட்டுக்கென இருக்கும் வாட்ஸப் க்ரூப்பில் எப்போதும் ரணகளம் தான். ’வேலைக்காரர்கள் தங்கள் குழந்தைகளையும் கூடவே அழைத்து வரக்கூடாது, அவர்கள் பொழுது போகாமல் லிஃப்ட்டில் மேலும், கீழுமாக அலைகிறார்கள்’என்று காரசாரமாக நாள்முழுவதும் விவாதிப்பார்கள். ‘கொசுக்களை வாடகைக்கு அமர்த்தி நம் செக்யூரிட்டிகளை தூங்கவிடாமல் பார்த்துக்கொண்டால் என்ன?’ என்று ஜோக்கடித்து திகிலூட்டுவார்கள். முகம் பார்க்கும் அளவு பளபளப்பாக இருக்கும் ஜிம்’மில் சுத்தம் போதவில்லை என்று கடிந்துக்கொள்வார்கள். பெண்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஏன் தீபாவளி போனஸ் பணமாக ஏன் தரவேண்டும், புடவையாக தந்தால் போதாதா? ஒரு வருடம் ஆனால் தான் எந்த போனஸூமே தரவேண்டும் என்றெல்லாம் முதலாளித்துவ கொடிப்பிடிப்பார்கள். நகரின் ஆகப்பெரிய பள்ளிகளில் வசதி போதவில்லை என்று அங்கலாய்ப்பார்கள்.

சென்னையையே உலுக்கி எடுத்த பெருமழைக்கு நாங்கள் மட்டும் தப்பிப்போமா என்ன? அருகில் இருக்கும் ஏரி உடைப்பெடுத்து, எங்கெங்கும் வெள்ளக்காடு. நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை, பால் இல்லை, காய்கறி இல்லை. பிரதான சாலை இருபுறமும் துண்டிக்கப்பட்டு, பிரளயமே வந்தாலும்கூட அலுவலகம் செல்ல நினைக்கும் என் கணவர் போன்றவர்கள் எண்ணத்திலும் இடி விழுந்தது. அப்பார்ட்மெண்ட்டில் ஜெனரேட்டர் உதவியோடு  தண்ணீர் மற்றும் லிஃப்ட்டுக்கு மட்டும் மின்சாரம் வருமாறு பார்த்துக்கொண்டோம்.

ஆனால் விஷயம் அதுவல்ல. எங்கள் ஏரியாவே நீரில் மூழ்கியிருக்க, தப்பிப்பிழைத்த ஓரிரு கட்டிடங்களில் எங்களுடையதும் ஒன்று. அப்பார்ட்மெண்ட்வாசிகள், அருகிலிருக்கும் சேரி மக்களை அதே பளபள க்ளப்ஹவுஸில் தங்க அனுமதித்தது மட்டுமல்லாமல், அத்தனை பேருக்கும் தத்தம் வீடுகளில் சமைத்தும் தந்தார்கள். இரவில், மின்சாரம் அந்த மக்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவிகள் (அதே நுனி நாக்கு ஆங்கிலத்தில்) வீடுவீடாக வந்து பால், மருந்து பொருட்கள், பிஸ்கெட், பழங்கள், போர்வை, பாய் என வாங்கிபோய் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துதவினார்கள். பல ஆண்கள் வீடுகளுக்கு திரும்பாமல் அங்காங்கே உதவி செய்துக்கொண்டிருப்பதாக செய்தி அனுப்பிக்கொண்டிருந்தார்கள். பெண்கள், இந்த மழையில் வீட்டுவேலை செய்பவர்களை வரசொல்லி கட்டாயப்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள்.

இது என் சொந்த அனுபவம் மட்டுமே. இன்னும், வெறும் வெட்டி அரட்டைக்கான தளம் என்று இகழப்படும் சமூகவலைத்தளங்கள் மூலம் பயன்பெற்றோர் ஏராளம். வீண் பொழுது போக்குபவர்களாக அறிந்து வைத்திருந்த பல இளைஞர்களும் செயலில் இறங்கி அசத்தினார்கள். ட்விட்டர் மூலம் ஒருவர் பிரசவவலியில் தவித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு மருத்துவ உதவி பெற்றுத்தந்தார். ஒரு இளம்பெண் எந்த பயமும் இன்றி, தன் முகவரி தந்து, அருகில் மழைவெள்ளத்தில் மாட்டிக்கொண்டிருப்பவர்களை வீட்டில் வந்து தங்கிக்கொள்ள அழைத்தார்.  இன்னும் நிறைய இளைஞர்கள் தங்கள் வீடுகளில் வந்து தங்கிக்கொள்ள அழைத்துக்கொண்டே இருந்தார்கள். சிலர், மழையில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள் மொபைல் டாப்-அப் செய்து உதவினார்கள். வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்றுவது, இருப்பிடம், உணவு வழங்குவது, உதவியையும், உதவி தேவைப்படுபவர்களையும் இணைப்பது என்று பம்பரம் போன்று சுழன்றவர்களை அருகில் இருந்து காணமுடிந்தது அல்லது தெரிந்துக்கொள்ள முடிந்தது.  நாம் இதுவரை சிடுமூஞ்சிக்காரர்களாக உருவகப்படுத்திவைத்திருந்த அரசு போக்குவரத்து துறையினரும், மின்சாரவாரிய ஊழியர்களும் உயிரை பணயம் வைத்து கடமையை செய்தார்கள். வெளிநாடு வாழ் தமிழர்கள் தாராளமாக பண உதவி செய்யதுவங்கி உள்ளனர். தங்களால் நேரில் உதவிடமுடியாததற்கு உண்மையாகவே வருந்தினார்கள். நான் நேரிலும், இணையத்திலும் சந்தித்த ஒவ்வொருவரும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் மழையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உதவியிருக்கிறார்கள்.

இந்த பெருமழையின் சப்தத்திலும் அண்ணல் காந்தியின் வார்த்தையை கேட்கிறேன் - “நீங்கள் மானுடத்தின் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. மானுடம் என்பது ஒரு பெருங்கடல், அதன் சில துளிகள் அசுத்தமாக இருக்கிறது என்பதால் பெருங்கடலே அசுத்தம் என எண்ணிவிடக் கூடாது”
தற்சமயம் உதவிகள் செய்தவர்கள் யாரும் வரலாற்றில் இடம் பெறபோவதில்லை. குறைந்த பட்சம் சினிமாகாரர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் பத்திரிகை புகழ் கூட கிடைக்கப்போவதில்லை. அவ்வளவு ஏன், உதவி கிடைக்கப்பெற்றவர்கள் நினைவில் கூட நிற்கப்போவதில்லை.  அதற்காகவும் அவர்கள் அதை செய்யவில்லை. நாளை, ‘பொதுமக்கள்’ என்ற ஒருவார்த்தையில் கரைந்து போகப்போகிறார்கள். எனினும் இந்த மழை, மானுடத்தின் மீதான நம்பிக்கையில் நீரூற்றி சென்றிருக்கிறது.  சிறு துளிகள் சேர்ந்து பெருவெள்ளத்தை உருவாக்கமுடியுமெனில், சின்ன சின்ன நல்லெண்ணங்கள் சேர்ந்து மனிதம் தழைக்கச் செய்யவும் முடியும்.

முகம் தெரியாத யாரோக்காகவோ, பிரதிபலன் பாராமல் தன்னால் முடிந்த உதவியை செய்த/செய்துக்கொண்டிருக்கும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் இக்கட்டுரை சமர்ப்பணம். வாழ்க மானுடம். 

(15/12/2015 இதழ் குங்குமம் தோழியில் வெளிவந்துள்ள கட்டுரை)

12 comments:

 1. "தற்சமயம் உதவிகள் செய்தவர்கள் யாரும் வரலாற்றில் இடம் பெறபோவதில்லை. அவ்வளவு ஏன், உதவி கிடைக்கப்பெற்றவர்கள் நினைவில் கூட நிற்கப்போவதில்லை.எனினும் இந்த மழை, மானுடத்தின் மீதான நம்பிக்கையில் நீரூற்றி சென்றிருக்கிறது." சரியாக சொல்லியுள்ளிர்கள். பதிவுக்கு நன்றி .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி கணேசன் சார்

   Delete
 2. // இந்த மழை, மானுடத்தின் மீதான நம்பிக்கையில் நீரூற்றி சென்றிருக்கிறது. // கட்சி, ஜாதி வியாதிகள் மட்டும் இதனைப் புரிந்து கொள்ளவே மறுப்பதுதான் ஆயாசமாக இருக்கிறது.
  பாபு கோதண்டராமன்

  ReplyDelete
 3. சென்னைவாசிகளின் மேன்மை இயல்பாக வெளிப்படும் தருணத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. மற்ற நேரத்திலும் ஏன் அந்த அன்பு மனம் விடுப்பு எடுத்துக்கொள்கிறது, என்ற ஆதங்கத்திற்கு யாரிடமும் பதில் இல்லை.

  ReplyDelete
 5. this rain sure does have reinstated faith in humanity

  ReplyDelete
 6. பெருமழை நமக்குக் காட்டிய மானுடம்.....

  நல்ல கட்டுரை. பாராட்டுகள்.

  ReplyDelete