Saturday, 30 January 2016

கற்பூரநாயகிக்கு பேய் பிடிக்குமா?சமீபத்தில் திரு.பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘பசங்க - 2’ படம் பார்த்தேன். அதில் ஒரு காட்சி வரும். ஹாஸ்டலில் சேர்க்கப்பட்ட இரண்டு வானரங்கள் அங்கிருந்து தப்பிக்க, பேய் இருப்பதாக நாடகமாடும். அதில் சக ஹாஸ்டல் குழந்தைகள் பாதிக்கப்பட்டு, இந்த இரண்டு குழந்தைகளை வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுவார்கள். அதை பார்த்ததும் என் அனுபவம் ஞாபகம் வந்தது.

திருமணத்திற்கு முன் சில வருடங்கள் வோர்கிங்-விமன் ஹாஸ்டல் வாசம். கல்லூரியில் படிக்கும் பெண்கள், திருமணமாகி வேலை காரணமாக குடும்பத்தை பிரிந்திருப்பவர்கள், என்னைப் போல திருமணத்திற்கு முன் சும்மானாச்சும் ஒரு வேலையில் ஓட்டிக்கொண்டிருப்பவர்கள் என்று கலவையான இருவது பேர். மொபைல் ஃபோனெல்லாம் புழக்கத்தில் இல்லை. ஃபோன் வந்தால் ஹாஸ்டல் ஆஃபீஸ் ரூமுக்கு தான் வரும். அங்கேயே உம்மனாமூஞ்சி வார்டனுக்கு எரிச்சல் வருவதற்குள் பேசிவிட்டு வர வேண்டியது தான். இப்போது யோசித்துப் பார்த்தால், இதன் காரணமாக கூட நாங்கள் நெருக்கமாக இருந்திருக்கிறோம். அவரவருக்கென்று தனித்தனி மொபைல் இருந்திருந்தால், சதா ரூமுக்குள் அடைந்து கிடந்திருப்போமோ என்னவோ?! ஹாலில் ஒரு டிவி. அதன் முன்னர் அமர்ந்து சீரியலை ஓடவிட்டு நாங்கள் தனி ட்ராக் ஓட விடுவோம்.


இருவர் இருவராக பத்து அறைகளில் இருந்தோம். நடுவே ஒரு வராண்டா. எதிர் எதிராக வரிசையில் ஐந்து பெரிய அறைகள். என் ரூம்மேட் ப்ரீத்தி சரியான அறுந்தவால். நாங்கள் ஒரே ஆஃபீஸும் கூட. ஹாஸ்டல் சாப்பாட்டையே மொட்டை மாடி இருளில் மெழுகுவத்தி ஏற்றி வைத்து சாப்பிடுவது (அதற்கெல்லாம் அனுமதி கிடையாது), அர்த்த ராத்திரியில் தண்ணீர் டாங்கின் மீதேறி படுத்துக்கொண்டு அன்னாந்து நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருப்பது என்று என் வாழ்க்கையும் சேர்த்து ரகளையாக்கிக்கொண்டிருந்தாள். இதனால் கிடைக்கும் த்ரில்லை விட, என்னை போல ஒர் அம்மாஞ்சியை உதறலில் வைத்திருப்பதை தான் ரசிக்கிறாளோ என்று கூட ஒரு சந்தேகம் உண்டு. ஆனாலும், முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இருவர் ஒரே இடத்தில் இருக்க நேரிட்டால், இயல்பாக ஏற்படும் ஈர்ப்பு எங்களுக்குள்ளும் இருந்தது. உலகத்தின் எத்தனையோ பெயரிடப்படாத அதிசங்களில் ஒன்றாய் நாங்களும்  இணைபிரியா தோழிகளாக இருந்தோம். ஒரு நாள், அவளுக்கு எங்கள் வாழ்கை டல்’டடிப்பது போல தோன்றிவிட்டது. எனக்கோ, இன்னும் என்னனென்ன காத்திருக்கோ என்ற திகில். நிதானமாக, நாம ஏன் ஹாஸ்டலுக்கு பேயை வரவழைக்க கூடாது என்றாள். என்ன, விளையாடறயா பேயெல்லாம் வாடகைக்கு வருமா என்ன என்று என்னால் முடிந்த அளவு மொக்கை ஜோக் முயல, அவள் மோட்டுவளையை பார்த்து ப்ளானிங் பண்ண ஆரம்பித்து விட்டிருந்தாள்.

என்னதுக்கு பேயை வர வழைக்கவேண்டும்? அப்படியே பேய் வந்தாலும் என் எமாகாதக ஹாஸ்டல் வாசிகள் பயப்படுவார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை. சனி, ஞாயிறு வந்தாலே ஆளாளுக்கு ஒரு ஃபேஸ் பேக் போட்டு, பச்ச-மஞ்சள்-வெள்ளை தமிழச்சியாக தான் சுற்றி வருகிறார்கள். பேய் பயப்படாமல் இருந்தால் போதாதா? சரி, ப்ரீத்தி ஆசையை ஏன் கெடுப்பானேன் என்று, சரி, என்ன பண்ணலாம் சொல்லு, நான் வேண்ணா என் தாத்தா, பாட்டியை கூப்பிட்டு பார்க்கவா என்றேன். அதெல்லாம் வேலைக்காகாது, நாம பேயா மாறப்போறாம் என்றாள். ’துணிய ஹேங்கர்ல மாட்றதும், தூக்கு மாட்டிக்கறதும் ஒண்ணு இல்ல. நாக்கெல்லாம் வெளிய தள்ளி, கண் பிதுங்கி செத்தப்புறம் அசிங்கமாயிருப்போம்’ என்றேன். என் கவலை எனக்கு.

’ஐயோ.. அதில்ல. அர்த்த ராத்திரி கொலுசு சப்தம் வர வராந்தால நடக்கறோம். அப்புறம் ஒவ்வொரு ரூம் வாசலிலும் கொஞ்சம் மல்லிகை பூ தூவிடறோம். ரத்ததுக்கு வேண்ணா உன் விரல்ல லைட்டா கீறிக்கலாம்.’ பிறகு, ரொம்ப பெரிய மனசுப் பண்ணி, விரல் ஐடியா தவிர மிச்சமெலாம் மட்டும் ஒகே செய்தாள்.

எங்கள் ப்ளான் படி, அமாவாசை அர்த்த ராத்திரி 12 மணிக்கு பேய் வரும். எத்தனை சினிமா பார்த்திருக்கிறோம். மற்ற நாட்களில் எங்கு போகுமோ பாவம்? அதென்ன 12 மணி, பண்ணிரெண்டே கால்ன்னா ஆகாதா? வாழ்நாள் முழுவதும் ‘லேட்’ ஆசாமியாக இருந்தால் கூட, லேட்’டானதும் நேரம் தவறாமை வந்துவிடுகிறதல்லவா? இதுபோன்ற என் கேள்விகள் அச்சமயம் அவளுக்கு ரசிக்கவில்லை.

அமாவாசைக்கு ஒரு நாள் முன்பு, அவள் லோக்கல் கார்டியன் வீட்டில் தங்கிக்கொள்ள போய்விட்டாள். எப்போதும் போல நான் ஏதோ நாவலை உருட்டிக்கொண்டிருந்தேன். திடீரென்று நிசப்தத்தை கிழிக்கும் கொலுசு சப்தம். மணி பார்த்தால் சரியாக 12. கொஞ்சம் கொஞ்சமாக சப்தம் அதிகரிப்பதும், மங்குவதாகவும் இருக்கிறது. எனக்கு விதிர்விதிர்த்து விட்டது. எங்கள் ப்ளான் தெரிந்து பேய்களுக்கு கோவம் வந்திருக்குமோ? பேயாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? ப்ளான் போட்டது ப்ரீதி, பழி வாங்குவது விக்னாவையா? திடீரென்று லைட் அணைந்து விட்டது. சற்று நேரத்தில் மல்லிகை பூ வாசம். கதவும் திறக்க முடியவில்லை. நான் உரக்க ‘கற்பூர நாயகியே’ என்று எட்டுக்கட்டை சுருதியில் ஆரம்பித்து (அம்மன் சாமி தானே பேயின் ஆஸ்தான எதிரி??) சஷ்டி கவசத்தை இழுத்து இன்னும் தெரிந்த தெரியாத சாமியெல்லாம் நடு ஜாமத்தில் தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டேன். பிறகு எங்கிருந்து தூங்குவது? மறுநாள் விடியும் வரை காத்திருந்து கதவை சாதாரணமாக திறந்து வெளியே எட்டிப்பார்த்தால், ஆளாளுக்கு கற்பூரநாயகி பாடுகிறார்கள். இது மொத்தமாக ப்ரீதி ப்ளானாம். இந்த பேய் ட்ராமா முழுவதுமே என்னை பயமுறுத்த தான். ஏதோ ஒரு ரூமில் இருந்து எட்டிப்பார்த்து சிரிசிரி என்று சிரிக்கிறாள், கோபம் வந்தாலும் வேறு வழியில்லாமல் சமாதானமாகி வழிந்து வைத்தேன். விடுதியில் தங்கியிருந்த மூன்று வருடமும் விக்னா என்றே என் பேரே மறந்துபோய் கற்பூரநாயகியாகவே மாற்றிவிட்டார்கள்.

இப்போதும், பேய் என்றொன்று இருப்பதற்கு சாத்தியம் இருக்கிறதா, இல்லையா எனக்கு தெரியாது. ஆனால், உங்கள் வாழ்க்கையில் பேய் விளையாடியிருந்தால், குறும்பான ஒரு தோழமை உங்களுக்கு இருப்பதற்கு சாத்தியம் ரொம்பவே அதிகம்.

இந்த இதழ் குங்குமம் தோழியில் வெளிவந்துள்ள கட்டுரை.

2 comments:

  1. ஹாஹா... செம கலக்கல். அப்போது நீங்கள் எட்டுக்கட்டையில் அலறி இருந்தாலும் இப்போது நகைச்சுவையாக சொல்லி இருப்பது நன்று! :)

    ReplyDelete
  2. நான் லாம் அடி பின்னி இருப்பேன்..பக்கி கழுத..:)) உங்ககிட்டே ஐடியா வாங்கி execute பண்ணிருக்காங்க..இது அவங்க வேலை தான்னு சந்தேகமே வரலையா அப்பவே ?:)

    ReplyDelete