Wednesday, 23 March 2016

மார்க்ஸ் முக்கியம் மை சன்!

என்னது, எதிரில் வருவது ஸ்வாதியா என்ற அதிர்ச்சியுடன் இன்றைய நாளை துவக்கியிருக்கிறேன். என் ஜிம் தோழி. இன்னும் ஒரு பிறவி எடுத்து உடற்பயிற்சி செய்தால் இளைக்க வாய்ப்பிருப்பது போல் இருப்பாள். சமீபமாக ஆளையே பார்க்க முடிவதில்லை. இன்று கண்ணில் பட்டது அவள் தான். ஸ்பாதியாகி இருந்தாள். நோயெல்லாம் ஒன்றுமில்லை, மகனுக்கு பரிட்சையாம். நான்கு மணி நேரம் தான் தூங்குகிறாள். இன்னும் பல உடல் வருத்தல்கள், பிரார்த்தனைகள் மற்றும் நோன்புகள்.

இவள் தான் என்றில்லை, சில உறவினர்கள் பிள்ளைகளுக்கு பரிட்சை வந்தால், தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விடுகிறார்கள். தப்பித்தவறி நேரில் பார்த்துவிட்டால், ஃபோன் வயர் பிஞ்சு நாலு மாசம் ஆகிறது என்கிறார்கள். பலர் வீட்டில் டிவி பரனில் தான் இருக்கிறது. நண்பர் ஒருவர் தன் வீட்டில் டிவியை திருப்பி சுவரை பார்த்து வைத்திருந்தார். இப்படி  எப்படி பார்ப்பீங்க என்றால் மகனுக்கு பரிட்சை என்றார். பயல், அப்படி ஒன்றும் டிவியால் மட்டும் கேட்டுப்போவான் போல தோன்றவில்லை. வேற விளையாட விடுவீங்களா என்றால், நோ நோ. அவன் ரூமில் காற்றுக்கு கூட எக்ஸாம் வாசம் வீசும் என்கிறார். கடிவாளம் கட்டிய குதிரை ஒன்று பந்தயத்துக்கு தயார் ஆவது போல பிரமை தோன்றுகிறது. பேச சொன்னால் கனைப்பானோ என்னவோ.

பல பெற்றோர்கள். எந்த கல்யாணமும், விசேஷமும் மார்ச் ஏப்ரலில் வந்துவிட கூடாதே இன்று கவலைக்கொள்கிறார்கள். இன்னும் சிலர், எந்நேரம் வேண்டுமானாலும் உயிரை விட்டு விட காத்துக்கொண்டிருக்கும் பெரிசுகள், தங்கள் குழந்தைகளுக்கு பரிட்சை முடிந்தப் பின் போகட்டும் என்று கடவுளிடம் சில மாத கன்செஷன் பெற்றுத்தருகிறார்கள்.

பிப்ரவரி தாண்டி விட்டால், அகில இந்திய பெண்கள் பத்திரிகை முதல் ’வெஸ்ட் மாம்பலம் முப்பத்தி மூன்றாவது க்ராஸ் டைம்ஸ்’ வரை பரிட்சை நேர உணவுக்குறிப்பு வெளியிடுகிறார்கள். பரிட்சைக் கால சூப், பரிட்சைக்கால புலவ், பரிட்சைக்கால ஐஸ்க்ரீம் என்று ஹிஸ்ட்ரி பேப்பர் போல பக்கங்கள் நிரப்பபட்டிருக்கின்றன. இது எதுவும் அறிந்திருக்காவிட்டாலும், கணக்கு பரிட்சையன்று தவறாமல் வெண்டைக்காய் சமைத்துப்போட்டு,  பரிட்சை அன்றாவது மகனின் மூளை வேகவேகமாக செயல்படும் என நம்பும் அம்மாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


பெரும்பாலான தின நாளிதழ்கள், ‘எக்ஸாம் டிப்ஸ்’ வெளியிடுகின்றன. பதட்டமில்லாமல் தேர்வை எதிர்கொள்ள வினாத்தாளை முப்பது டிகிரி கோணத்தில் பிடித்துக் கொண்டு, கண்களை மூடி இருபத்தி ஏழு தடவை மூச்சை இழுத்து இழுத்து விட வேண்டும்  என்னும் யோசனைகளை படித்தால், படித்த கணமே நமக்கு பதட்டம் வந்து விடுகிறது.

இதன் முற்றிய பாதிப்பாக தேர்வு காய்சல் என்று ஒன்று இருக்கிறது. சரியாக முதல் நாள் அல்லது தேர்வு அன்று காலை பிள்ளைகளை தாக்குகிறது. கை காலெல்லாம் நடுங்கி, வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஒன்று உருளும்.  நோய்க்கான தீர்வாக பரிட்சைக்கு போகாமல் விடுவது தான் என்று பிள்ளைகளும், போனால் சரியாகிவிடும் என்று அம்மாக்களும் பிடிவாதம் பிடிப்பார்கள் என்பது அதன் சிறப்பு . எல்லா பிள்ளைகளுமே ஏதோ ஒரு வகையில் திறமைசாலிகள் தான். சிலர் திறமையை படிப்பதிலும் சிலர் மூணு செண்டிமீட்டர் ரப்பருக்கு பின்னால் முப்பது ஃபார்முலா எழுதி எடுத்துப்போவதிலும் காட்டுகிறார்கள்.

முட்டிமோதிக்கொண்டு வருடம் முழுவதும் படிக்கும் பெண் பிள்ளைகளும், பரிட்சைக்கு இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு முன் புத்தகத்தை கண்டுபிடிக்கும் பையன்களும் எப்படி கிட்டத்தட்ட ஒரே மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்பதெல்லாம் உலக அளவில் ஆராய்ச்சி செய்யப்படவேண்டிய தலைப்பு. காதலுக்கும், வடகத்துக்கும் உதவிக்கொண்டிருக்கும் மொட்டை மாடிகள் பரிட்சைக்கும் உதவும் என பையன்கள் கண்டுபிடிக்கிறார்கள்.

அம்மாகளின் வாட்ஸப்பில் பள்ளி, கல்லூரி கால தோழிகள் பின்னுக்கு போய், சக அம்மாகள் முன்னுக்கு வருகிறார்கள். மீண்டும் முதலிருந்து அ, ஆ முதல் அரித்மெடிக்  வரை கற்றுக்கொள்ளும் பாக்கியமெல்லாம் அம்மாக்களுக்கு மட்டுமே கிடைக்க கூடியது. தேமா, புளிமா வேற என்னமா சாம்பார்ல போடனும் என தூக்கத்தில் கூட பிதற்றுகிறார்கள். சர்வ வல்லமை பெற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் கூட பல அப்பாக்களின் மன உறுதிக்கு முன் தோற்றுப்போகிறது.


தேர்வு நேரத்தில் யார் வீட்டுக்காவது உறவினராய் போவேன் என்று நீங்கள் அடம்பிடித்தால், அதன் பின் உங்கள் நம்பர் அவர்கள் மொபைலிலிருந்தும், டெலிஃபோன் டைரக்ட்ரியிலிருந்தும் ஒரேடியாக தூக்கப்பட்டுவிடும். ரயில்வே டைம் டேபிளோடு, நீங்கள் விடுமுறைக்கு செல்லப்போகும் வீட்டில் குழந்தைகளின் பரிட்சை டைம்டேபிளும் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். கால மாற்றத்தில் ஒன்றாக முன்பு பரிட்சை என்றால் மாணவர் பதட்டமாவது தற்போது பெற்றோருக்கு மாறியிருக்கிறது. நாளை தாத்தா, பாட்டிகள் கூட பேரனின் எல்கேஜி தேர்வுக்காக விரதமிருக்கலாம். பத்தாவது பன்னிரெண்டாம் வகுப்பு எனில் பெற்றோருக்கு நிகராக தத்தம் மாணவர்கள் அதிக மதிப்பெண்ணோடு தேற்சி பெற நினைக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பல வருட கேள்வித்தாளோடு மாதக்கணக்கில் மள்ளுக்கட்டுகிறார்கள். மாணவர்களின் தனித்திறமையை சோதிக்கும் ஒரு தேர்ச்சி முறை வருமெனில் முதலில் மகிழப்போவது இத்தகைய ஆசிரியர்கள் தான்.


தேர்வு எழுதுவதில் உள்ள மிகப்பெரிய சந்தோஷம், கடைசி பரிட்சை முடிந்ததும் கிடைக்கபோகும் ஆசுவாசம் தான். விடுமுறையில் என்னென்ன செய்யவேண்டும் என்பது ஜியாக்ரப்பி பரிட்சைக்கு படிக்கையில் வரும் பகற்கனவுகளில் ஒன்று. எந்த புத்திசாலியோ தற்போது சிபிஎஸ்ஸி முறையில் முழுப்பரிட்சை முடிந்து பத்து நாட்கள் லீவும், அடுத்த வகுப்பை ஆரம்பித்த ஒருமாதத்துக்கு பின் மீண்டும் விடுமுறை வருவதும் போலவும் மாற்றியிருக்கிறார்கள். பரிட்சை முடிந்ததும் நீண்ட விடுமுறை என்பது மாணவ பருவத்து குட்டி சொர்க்கம் என்று அவர்கள் தலையில் குட்டி சொல்ல வேண்டும்.

’அம்மா, இன்றைக்கு கஷ்டமான பரிட்சை நிறைய வேண்டிக்கோ’ என்று சொல்லிவிட்டு போகிறாள் மகள். சுலபமான பரிட்சை என்றால் கொஞ்சம் வேண்டிக்கொண்டால் போதும். மிச்சத்தை அவளே பார்த்துக்கொள்வாள். திருப்பதி பெருமாளுக்கு கணக்கு பரிட்சை என்றால் ஒரு ரூபாயும், ஹிந்தி பரிட்சை என்றால் ஐந்து ரூபாயும் முடிந்து வைக்கிறேன். லஞ்சத்தில் தான் எத்தனை வகை?


ஸ்வாதியை மறுபடியும் ஜிம்மில் பார்க்க முடிந்தால் கேட்க வேண்டும். ‘பையன் மூன்றாம் வகுப்பில் பாஸ் செய்துவிட்டானா?’


(ஆனந்த விகடனில் வெளியாகியுள்ள கட்டுரை. ஓவியம் - திரு.ஹாசிப்கான்)

Saturday, 5 March 2016

கேட்டுக்குள் ஒரு பைங்கிளி


”அம்மா, சாரு பேக்கு”  உணவு மேஜையிலிருந்து மகள் கத்துகிறாள். 
“என்னடீ இது, மரியாதை இல்லாம? போகட்டும், எந்த சார பேக்குன்ற? கராத்தே மாஸ்டரா, செஸ் சாரா?”
”போம்மா, சாருன்னா ரசம். பேக்குன்னா வேணும். இது கன்னடம்!”
 மகள் கன்னடத்து பைங்கிளியெல்லாம் ஒன்றுமில்லை. சமீபத்தில் தான் கேட்டட் கம்யூனிட்டிக்கு குடிபெயர்ந்திருக்கிறோம். ஆறு மாத அடுக்கக வாழ்க்கை அவளுக்கு நிறைய நண்பர்களையும், சில மொழிகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இத்தனை வருடங்களில் நான் கற்றுக்கொண்டது தெலுங்கில் ‘ஜெருகண்டி’யும், ஹிந்தியில் ‘தோடிஹி தேர் மே காடி ரவானா ஹோகி’யும் தான். மகள், அப்படியல்ல. நண்பர்கள் மூலம் முதல் கட்டமாக வேற்றுமொழி பேசும் நடிகர்கள் பெயரையும் பிறகு அந்த மொழியையும் சுலபமாக கற்றுக் கொள்கிறாள்.


”கேட்டட் கம்யூனிட்டி” பற்றி தான் இந்த கட்டுரை என்றாலும், அதற்கு அறிமுகமெல்லாம் எழுதினால், அஞ்சலி படத்திலேயே இதெல்லாம் பார்த்தாச்சு என்று தமிழர்கள் அடிக்க வருவார்கள். மாநகரத்தின் சிறு சிறு சமூகம் போல இதைச் சொல்லலாம். பல அடுக்குமாடி கட்டடங்களை ஒன்றிணைத்து ஒரே குடியிருப்பு, உள்ளுக்குள் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், நடைப்பாதை, குழந்தைகள் பார்க், இருபத்து நான்கு மணி நேர செக்யூரிட்டி மற்றும் வாடகை அளவுக்கே தரவேண்டிய பராமரிப்பு செலவு (‘மெயிண்டனஸ் சார்ஜ்’) என்பதாக வேண்டுமானால் சுருக்கமாக அறிமுகப்படுத்தலாம். விளம்பரக்காரர்கள் வார்த்தைகளில் சொல்வதானால், ‘லக்சுரி அப்பார்ட்மெண்ட்’ !

பராமரிப்பு செலவு ஒன்று தான் இதில் உள்ள பெரிய குறையாக சொல்லமுடியும். மற்றப்படி விக்ரமன் படம் போல் பெரும்பாலும் நிறையும், சின்ன சின்ன அசெளகர்யங்களையும் மட்டுமே காண்கிறேன்.  உதாரணமாக, விஸ்வனாதன் ஆனந்தை சூப்பர் சிங்கரில் பாடவைத்து, ப்ளாக் பெல்ட்டை சுற்றிவிட்டு ஓவியம் வரைய வைக்கும் முயற்சியில் இருக்கும் அம்மாக்களுக்கு ’கேட்டட் கம்யூனிட்டி’ ஒரு வரப்பிரசாதம். நூறு வீடுகள் இருக்கும் குடியிருப்பில் ஒரு பாட்டு மாமி இருப்பதற்கு நூறு சதவிகிதமும், ஆர்ட் க்ளாஸ் நடப்பதற்கு தொன்னூற்றி ஒன்பது சதவிகிதமும் வாய்ப்பிருக்கிறது.


இன்னும் நிறைய வீடுகள் உள்ள குடியிருப்பு எனில், குழந்தையை ஜும்பா க்ளாஸிலிருந்து முழுதாக உருவி எடுப்பதற்கு முன்பாக பாட்டு க்ளாஸுக்குள் திணிக்கலாம். கராத்தே உடையோடு செஸ் ஆட அனுப்பலாம். ஸ்கேட்டிங் ஷூவோடு கீ-போர்ட் தூக்கி செல்வது தவறொன்றும் இல்லையே என்று சமாதானம் செய்துக்கொள்ளலாம். எந்த அம்மாவை பார்த்தாலும், உங்க பையன் என்னலாம் கத்துக்கறான், எங்க பொண்ணுக்கு அபாக்கஸ் போக நேரமேயில்ல. ஆனா, வேதிக் மேக்ஸ் தெரியும் என்று கணக்கெடுப்பில் இறங்கி நாம் சரியான பெற்றோராக இருக்கிறோமா என்று உறுதி செய்துக்கொள்ளலாம். 


விழாக்கள் தான் இன்னும் கோலாகலம். குறைந்தபட்ச சகிப்புதன்மையோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும், கிருஸ்துமஸ் கொண்டாடின கையோடு பொங்கல் வைக்கலாம். பிரியாணியை ஒரு பிடி பிடித்து, ஆமா, இவங்களுக்கு இன்னைக்கு என்ன பண்டிகையாம் என்று பிறகு டிவியில் சாவகாசமாய் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். கலைவிழாக்களில் பங்கேற்று, பாரத விலாஸ் சிவாஜி போல், ஒரு பக்கம் சிங்’, ஒரு பக்கம் அஸ்ஸாமி அல்லது ஒடிஷாக்காரர் கைகளை பிடித்து மேலே தூக்கி ‘இந்திய நாடு என் வீடு’ பாடலாம். சுற்றுச்சுவருக்குள் மாரத்தான் ஓடலாம். இந்த வயதில் நடனம் ஆடினால் யார் பார்ப்பார்கள் என்ற கவலை துறக்கலாம். கோலப்போட்டியில் பங்கேற்று, எனக்கு கலர் அடிக்க தெரியும். ஆனா தரையில தான் கஷ்டம் என அசடு வழியலாம், இன்னும் மனிதர்களை பொறுத்து நிறைய ‘லாம்’களுக்கு வாய்ப்பிருக்கிறது. 


மாநகரத்துக்கு வந்த புதிதில், அறிமுகமில்லாத மனிதர்கள் என்னை பார்த்து சிரித்தாலே டப்பர்வேர் அல்லது ஆம்வே ஆசாமியோ என்று பயம் கொள்வேன். ஒரு மாதிரி பதிலுக்கு சிரித்தமாதிரியும் சிரிக்காதமாதிரியுமாக முகத்தை பேலன்ஸ் செய்துக்கொள்வேன். பின், அவர்களும் எப்படி தான் பொருட்களை விற்பனை செய்வார்கள் என்று இப்போது தோன்றுகிறது. கேட்டட் கம்யூனிட்டியில் அவர்களுக்கும் சங்கடமில்லை. நமக்குமில்லை. வாட்ஸப் க்ரூப் துவங்கி பொருட்களை சந்தைப்படுத்தினால், வேண்டும் என்கிறவர்கள் மட்டும் தொடர்புக்கொள்கிறார்கள். இன்னும், டெரக்கோட்டா நகை செய்பவர்கள், சுடிதார் வாங்கிவிற்பவர்கள், விழாக்களுக்கு கேக், சாக்லேட் செய்பவர்கள் என்று வாட்ஸப், ஃப்ளிப்கார்ட் போல் மாறுகிறது.( என்ன காரணமோ சுடிதார் விற்பவர்கள் மட்டும், நான் விக்கல. என் ஃபிரண்ட் விக்கறா. தாங்கள் நட்புக்காக உதவி செய்வதாக சொல்கிறார்கள். மற்ற பொருள் விற்பவர்களுக்கு அத்தகைய ஃபிரண்ட் இருப்பதில்லை. )


கேட்டட் கம்யூனிட்டியின் பல சுவாரஸ்யங்களில் ஒன்று அசோசியேஷன் தேர்தல். பெரும்பாலும், இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்குமான போட்டியாகவே இருக்கிறது. என் தூரத்து சொந்தக்கார மாமா ஒருவர் அசோசியேஷன் பிரசிடெண்ட்டாக இருக்கிறார். ப்ளாட், அவரது மகனுடையது. அவர் மனைவி கூட செல்லமாக, அவர் ஊருக்கு உதவுவதற்காகவே பிறந்திருப்பதாக அலுத்துக்கொள்வார். விஷயம் என்னவென்றால், ஆசாமி ரொம்ப கெடுபிடியானவர். அவரை ஏனைய கமிட்டி மெம்பர்களுக்கு பிடிக்காமல் போக, வீட்டின் சொந்தக்காரர் தான் தேர்தலில் நிற்க முடியும். அவர்களது அப்பா அல்லது உறவினர் நிற்க முடியாது என்று அரசியல்வாதிகள் போல் ஒருவருக்காகவே சட்டம் கொண்டுவந்து அடுத்த எலெக்‌ஷனில் மாமாவை ஊருக்கு உதவ விடாமல் செய்தார்கள். 

அந்த ஒருவருடத்தில் இளைஞர்கள் (அதாவது இன்னும் வேலைக்கு போகிறவர்கள்) மட்டும் அசோசியேஷனில் இருந்ததால், ஒரு வேலையும் சரிவர நடக்கவில்லை. வீட்டிலேயே இருப்பவர்களால் தான் கண்ட கண்ட நேரத்தில் வரும் தண்ணீர் லாரி, கழிவு நீர் லாரிக்காரர்கள், மற்றும் ப்ளம்பர், எலெக்ட்ரீஷியன்களோடு மல்லுக்கட்ட முடிகிறது. மெட்ரோ வாட்டருக்காக கடிதம் எழுதி எடுத்துக்கொண்டு கஜினி முகமது போல் அரசு அலுவலகத்துக்கு படை எடுக்க முடிகிறது. இந்த உண்மை உரைத்ததும், மூத்தோர் சொல் முது நெல்லிக்கனி என்று கண்டுபிடித்து(?) சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டார்கள். மாமி மறுபடியும் செல்லமாக அலுத்துக்கொள்கிறார்.    


வீடு,ஆஃபீஸ் - வேலை என்று ஒரு சுழலில் மாட்டிக்கொண்ட ஆண்களுக்கு ஞாயிறு அன்று போய் நண்பர்களோடு விளையாடுங்கள் என்று சொன்னால், ஆரம்பத்தில் ஆளில்லாத ஷேர் ஆட்டோ போல் தயங்கி தயங்கி தான் போவார்கள். பின், நாம் நினைத்தாலும் நிறுத்த முடியாதளவு வாடிக்கையாகிவிடும். குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் அதன் பின் ஆண்கள் என்று நட்புவட்டம் அமைத்துக்கொள்ளும் வேகத்தை வரிசைப்படுத்தலாம். ஆனால், அதன் பின் அனைவரும் குழந்தைகளாகிடுவது தான் நட்பின் சுவாரஸ்யம். அது அடுக்ககத்தில் இயல்பாகவே நிகழ்கிறது. 

என் தோழிக்கு வேறு மாதிரி பிரச்சனை. கோவையில் இருக்கிறாள். தினமும் அவள் அலுவலகம் கிளம்புகையில், லிஃப்ட்டை அழுத்தினால், சரியாக ஒர் ஆசாமி நாயோடு முன்பே உள்ளிருக்கிறாராம். என்ன காரணமோ அந்த நாய்க்கும் அவளை பிடிக்கவில்லை. ஒரு மாதிரியாக எப்போது வேண்டுமானாலும் கடிப்பேன் என்று சொல்வது போல் உறுமுகிறது. தினம் தினம் டோரா போல் சாகச பயணத்தோடு அன்றைய நாளை தொடங்குகிறாள். என் நாய் ரொம்ப ‘ஃப்ரண்ட்லி’ இதுவரை யாரையும் கடிச்சதில்லீங் என்கிறாராம் அதன் சொந்தக்காரர். எதற்கும் ஓர் ஆரம்பம் இருக்கிறதல்லவா? அவளுக்கு அந்த ஆரம்பமாக இருக்க விருப்பமில்லை. பல்லி போல சுவற்றில் ஒட்டிக்கொண்டு வெளியே வருகிறாள். 

அதெல்லாம் நான்கைந்து மாதங்கள் தான். அதே தோழி, லிஃப்டில் வரும் நாயோடு தற்போது ராசியாகி விட்டாள். சிரித்து/ முறைத்து/ தலையை குனிந்துக்கொண்டு என்று தினமொன்றாக முயன்றுப்பார்த்ததில், கண்ணோடு கண் நோக்காமல் இரண்டே அரைக்கால் செண்டிமீட்டர் புன்னகையோடு நின்றுக்கொண்டு வந்தால், நாய்க்கு பிடிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறாள். நாய் வைத்திருப்பவர்களுக்கு வீடு வாடகைக்கு கிடைக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று கூட அங்கலாய்க்கிறாள்.  சீக்கிரமே ஒரு நாய்க்கு சொந்தக்காரியானாலோ, அல்லது சொந்தக்காரருக்கு சொந்தக்காரியானாலோ ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று தெரிகிறது.

இந்த செக்யூரிட்டிகள் தான் கேட்டட் கம்யூனிட்டிக்கு கெத்து. கயிற்றில் நடக்கும் லாவகத்துடன் வேலைப்பார்க்க வேண்டியவர்களும் அவர்களே. ரொம்பவே ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர்கள் என்றால், மிகைப்பட நடந்துக்கொண்டு நமக்கு கெட்டப்பெயர் வாங்கித்தந்து விடுவார்கள். எதுடா சாக்கு என்று கோபித்துக்கொள்ள காத்திருக்கும் உறவுகள், செக்யூரிட்டி கேட்கும் மூன்றாவது கேள்விக்கு ஆட்டோவை திருப்ப சொல்லிவிடுகிறார்கள். நண்பர் ஒருவர் தன் பழைய அனுபவத்தால், நீங்க கேட்டட் கம்யூனிட்டியில் இல்லையே என்று கேட்டுவிட்டு தான் நட்பையை நடப்பாக்குகிறார். மனிதர்கள் மேல் நம்பிக்கை கொள்ளாத உங்கள் உலகம் எனக்கு தேவையில்லை என்று என்னுடனான வரப்போகும் சண்டையில் அவர் பிரயோகிக்கபோகும் அஸ்திரம் என்பதறிவேன். செக்யூரிட்டி கொஞ்சம் கெத்தாக இல்லாவிட்டால், வேறு பிரச்சனை. மூன்றாவது ப்ளாக் நான்காவது மாடி வீட்டுக்கு பால் பாக்கெட்டும், ஐந்தாவது ப்ளாகில் இருப்பவருக்கு மூட்டுவலி தைலமும் வாங்கிவர நேரிடும். 

இத்தனை மனிதர்கள் இருக்கும் இடத்தில், ஊர் வம்பில் சீரியல் கதைகளை மிஞ்சும் சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமில்லை.  ‘அந்த தாடி வச்சு மொட்டைமாடியில் சிகரெட் ஊதுவானே… (இது ஒரு டெட்லி காம்பினேஷன். தாடி மீசையோடு, சிகரெட்டும் ஊதினால், பெரும்பாலான முதியவர்கள் அவர்கள் வீட்டு பெண்களை உங்கள் கண்ணில் படாமல் பார்த்துக்கொள்வார்கள்) அவன் ரேஷ்மி துணிகாயப்போட வரும்போதெல்லாம் மாடில பேப்பர் படிக்கறான்’. ’எனக்கென்னமோ, மாலா வீட்டுக்காரருக்கு வேலை இல்லைன்னு தான் தோணுது. மத்தியானம் மூணு மணிக்கு வேன்லருந்து இறங்கற குழந்தையை கூப்பிட வர்றார்’ ‘நீ கவனிச்சியா, ரமாவும் கீதாவும் இப்பலாம் பேசிக்கறதில்ல’ என்றெல்லாம் உலகமே காம்ப்பவுண்டுக்குள் இருப்பதாக எண்ணிக்கொள்ளலாம்.

  
பால்கனியின் வந்து விழும்  திருப்பி கொடுக்கவும் முடியாத, வைத்துக்கொள்ளவும் முடியாத உள்ளாடைகள், சரியாக நம் கார் அருகிலேயே கிரிகெட் விளையாடும் அறுந்தவால்கள், தப்பித்தவறி நேருக்கு நேர் பார்க்க நேரிட்டால் காந்தியில் ஆரம்பித்து ராகுல் காந்தியில் முடிக்க காத்திருக்கும் பெரிசுகள், சின்ன சின்ன விஷயங்களை ஊதி பெரிதாக்கும் நல்லவர்கள், மெட்ரோ வாட்டருக்கு பணம் கொடுக்காமல் தண்ணி காட்டுபவர்கள் என்று இம்சைகள் இல்லாமல் இல்லை. ஆயினும், மாநகரத்தின் ஆகப்பெரிய நன்மையாக பல பேதங்கள் தாண்டிய ஒரே சமூகமாக வாழ கேட்டட் கம்யூனிட்டி வழிசெய்கிறது என்றால் மிகையாகாது. 


இந்த கட்டுரையை முடிக்கும் தருவாயில், பொறாமை படும்படியான தனி வீட்டில் இருக்கும் தோழி அலைபேசுகிறாள்.
“விக்னா, உங்க கேட்டட் கம்பூனிட்டிக்கு வந்திடலாம்ன்னு பார்க்கறேன். இங்க பசங்களுக்கு பொழுதே போகல. சதா டிவிய பார்த்துட்டு இருக்குங்க. அங்கன்னா, நாலு பசங்களோட விளையாடலாம், நீச்சல் கத்துக்கலாம். அபாக்ஸ் க்ளாஸெல்லாம் வேற நடக்குதாமே..”

ஆம். தற்போது இக்கரைக்கு அக்கரை ஸ்விம்மிங் பூல் அல்லவா?(ஆனந்த விகடனில் வெளியான கட்டுரை)