Wednesday, 8 June 2016

Sorry, You're not My Type !

 ‪#‎வாசிப்பனுபவம்‬

இந்திய ஆங்கில எழுத்துக்களில் சமீபமாக வரும் நாவல்கள் பெரும்பாலும் கெளதம் வாசுதேவ மேனன் வகையறாக்கள். அவை, சுற்றிச்சுற்றி பணக்கார அல்லது பணக்கார நண்பர்களை கொண்ட இளைஞர்களை பற்றினதாகவே இருக்கின்றன. கதாபாத்திரங்களின் அதிக பட்ச கவலை கேர்ள் ஃபிரண்டை கரெக்ட் பண்ணுவது அல்லது தக்கவைப்பது. நடுநடுவே மானே, தேனே பொன்மானே போல், அவர்களுக்கென்று சில லட்சியங்கள் இருப்பதாக சேர்க்கப்பட்டிருக்கும். சுவாரஸ்ய ஒற்றுமையாக அவை அவர்கள் படிப்புக்கு சம்பந்தமில்லாதவைகளாக இருக்கின்றன. கதையில், அவர்கள் படிப்பது தவிர எல்லாம் ெய்துக்கொண்டிருப்பதற்கு எதாவது ஜஸ்டிஃபிகேஷன் வேண்டுமே? மேலும், படிப்பை உதறி விட்டு லட்சியத்தை நோக்கி பயணிக்கும் கதைகள் தான் தற்போதைய ட்ரெண்ட்.

ஆயினும் எப்படியும் மாதம் ஒரு இந்திய-ஆங்கில நாவலாவது படித்துவிடுகிறேன். அட்டகாசமான சர்காஸ்டிக் ஹூமர் வரிக்கு வரி நிரவி இருப்பார்கள். (சேத்தன் பகத்தெல்லாம் அப்படி பெரியாளானவர் தான்.) ’மனித மனதின் பல்வேறு உட்பரிமாணன படிமங்களில் புகுந்து’ வகை சீரியஸ் எழுத்துக்களை, ஸ்விமிங் க்ளாஸ் வாசலில் காத்திருக்கையில் படிக்க வாகாக இருப்பதில்லை. அதுவும் ஒரு காரணம்.
அப்படி சமீபத்தில் படிக்க நேர்ந்தது – Sorry, You’re not my type (Sudeep Nagarkar)

நட்பு-காதல்-காமம்-துரோகம் என திரைப்படமாக எடுக்கத் தேவையான எல்லாம் இருக்கிறது. அல்லது அதை மனதில் வைத்து தான் எழுதுகிறார்களோ, என்னவோ? குஷ்பு ஒரு பேட்டியில் ‘தற்போதைய இளைஞர்களிடம் திருமணத்திற்கு முன் உறவு வைத்துக்கொள்வது சகஜமாகிவருகிறது. பாதுக்காப்பாக இருப்பது பற்றிய விழிப்புணர்வு மட்டுமே நாம் தரமுடியும்’ என்று சொன்னதற்காக அடித்துத் துவைத்தார்களே? இவ்வகை நாவல்கள் படித்தால், அவர் சொன்னது எவ்வளவு நிஜமென்று புரியும்.
மூன்று நண்பர்கள். இரண்டு ஆண்கள், ஒரு பெண். கல்லூரியின் சிறந்த இசை குழுவாக இருக்கிறார்கள். அவர்கள் லட்சியமும் இசையோடு பயணிப்பதே. ‘Life is not short, Youth is.’ என்று சொல்வார்கள். இளமையில், அதீத முக்கியத்துவத்தை இப்படி கேர்ள் ப்ரண்ட்/ பாய் ஃபிரண்ட் என்ற தற்காலிக உறவுக்கு கொடுப்பதால் ஏற்படும் சாதக-பாதகங்களை பற்றி, காதல்னா என்ன? நட்புன்னா என்ன என்று அறிவுரைகளுடன் பேசுவதே கதை. ஒரு முறை படிக்கலாம் அல்லது காதலிக்கு கிஃப்ட் செய்யலாம் வகை நாவல் தான்.

பிகு 1: நிச்சயமாக போரடிக்கவில்லை. பயமுறுத்தவில்லை. எளிமையான ஆங்கிலம்.
பிகு 2: சேத்தன் பகத், ப்ரீத்தி ஷெனாய் வரிசையில் சுதீப்பும் மூன்று புத்தங்கள் நன்றாக விற்றதும் Motivational Speakerஆகியிருக்கிறார். இதைப் பற்றி ரொம்பவே வெட்டியாக இருக்கும் பொழுதுகளில் யோசிக்கலாம். ஒரு போஸ்ட் போடலாம்.
பி.கு 3 : இவரது மற்றுமொரு நாவல் – And it started with a friend request! (இன்னும் படிக்கவில்லை). பல ஃபேஸ்புக் வாசிகள் தங்களோடு பொருத்தி பார்த்துக்கொள்ள முடியுமென்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment