Monday, 4 July 2016

இது ஒரு குத்தமாய்யா?!"எல்லா பெண்களும் நச்சரிப்பதாக சொல்வதை ஏற்க முடியாது..
சில திருமணமாகாத பெண்களும் இருக்கிறார்கள்!’ என்று நான் விளையாட்டாக நண்பர்களிடம் சொல்வதுண்டு. பெண்களிடம் உங்களுக்கு பிடித்த, பிடிக்காத குணங்கள் என்னென்ன என்று ஆண்களை கேட்டுப்பார்த்தால், பிடித்த குணங்களில் ‘பொறுமை’யும், பிடிக்காதவைகளில் ‘நச்சரிப்பும்’ கட்டாயம் இருக்கும். அம்மா மேல் பாசமாக இருக்கும் பிள்ளைகள் கூட ‘எங்க அம்மான்னா எனக்கு ரொம்ப இஷ்டம். என்ன, சில விஷயங்கள்ல ஓவரா நச்சரிப்பாங்க. அதான் பிடிக்காது’ என்பார்கள். உண்மையில், பெண்கள் நச்சரிக்கிறோமா, அல்லது ஏன் அப்படி ஒரு பேர் வாங்கி வைத்திருக்கிறோம் என்று யோசிக்கிறோமா?


இங்கே யாரும் நச்சரிக்க வேண்டும் என்று நச்சரிப்பதில்லை. ஆனாலும், நாம் இயல்பாக செய்யும் சில செயல்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு எரிச்சலூட்டுபவைகளாக இருக்கின்றன. அதை தான் அவர்கள் அப்படி பெயரிட்டு வைத்திருக்கிறார்கள். சரி, பொதுவாக எந்தெந்த விஷயங்கள் பொதுவாக மற்றவர்க்கு எரிச்சலூட்டுபவை என்று பார்க்கலாம்.

”தூங்கி எழுந்து வந்தா ஃபேன ஆஃப் பண்ணிட்டு வர்றதில்லையா?”,  ”பைப்ப சரியா மூடனும்ன்னு ஏழு கழுதை வயசாகியும் தெரியல!”, “காஃபி குடிச்சதும் சின்க்ல போடுங்கன்னு தினம் தினமா சொல்லனும்?”, “ஈர டவல பெட்ல போடறீங்க. இப்படித்தான் உங்கம்மா வளர்த்து வச்சிருக்காங்க. எங்க வீட்லலாம்...”  - இது ஒரு விதம். சொல்லுவதென்னவோ சரியான விஷயங்கள் தான். ஆனால், சொல்லும் தொனியில் நாம் நச்சரிப்பதாக தோன்றவைத்து விடுகிறோம்.

“மறக்காம பால் கார்ட்ட ரென்யூ பண்ணிடுங்க. போன வருஷம் மே மாசம் நினைவிருக்கில்ல? நீங்க விட்டுட்டதால, அந்த மாசம் பூராவும் அதிக விலை கொடுத்து வாங்கினோம்”.  இங்கேயும் நினைவுப்படுத்துதல் என்ற நல்ல விஷயத்தை தாண்டி, போன வருடம் நடந்ததை இன்னமும் குத்திக்காட்டுவதை தான் ஆண்கள் கவனிப்பார்கள்.இன்னும் பல சமயங்களில், ஆண்களுக்கென சில பிரத்யேகமான உலகமும் ரசனையும் இருப்பதை மறந்துவிடுகிறோம். நமக்கு சீரியல் என்றால் அவர்களுக்கு க்ரிக்கெட், நியூஸ். அந்த சமயத்தில், “என்னதுக்கு டிவியவே முறைச்சுகிட்டிருக்கீங்க? பக்கத்துல குழந்தை மூத்திரம் அடிச்சு வச்சிருக்கறது தெரியாம?” என்றால், அவர்கள் உங்களை மூத்திரத்திலிருந்து காப்பாற்றுவதாகவா நினைப்பார்கள்? அவர்கள் ரசனைகளை நீங்கள் மதிப்பதில்லை என்று தான் நினைப்பார்கள். “எதாவது சொல்லி உனக்கு நான் கிரிக்கெட் பார்க்கவிடாம பண்ணிடனும். அதான?” என்ற பதில் அடுத்த நிமிடமே எதிர்பார்க்கலாம்.

ஆண்களுக்கு நண்பர்கள் முக்கியம். நமக்கு ஒரு தோழியும் அல்லது நட்புவட்டமும் தற்போது இல்லை என்பதற்காக ஆணுக்கும் அப்படி இருக்கக்கூடாது என நினைப்பது சுயநலமல்லவா? மணிக்கணக்காக பேச அவர்களுக்குள் விஷமிருக்கும். சொல்லப்போனால், நம்மிடம் சொல்லாத பல விஷயங்களை நண்பனிடம் விவாதிப்பார்கள். அதற்காக குடும்பம் முக்கியமில்லை என்பதில்லை, அதற்காக தான் ஓடி ஓடி உழைக்கிறார்கள். ஆனால், அதற்காக எல்லாவற்றையும் நம்மிடமே பகிரவேண்டும் என நினைப்பது ஒரு வகை பொஸஸிவ்னஸ். அதை அவர்கள் கண்டிப்பாக விரும்புவதில்லை.


சரி, நச்சரிப்பதாகவே பேர் வாங்கிவிட்டதாக நினைத்துக்கொள்வோம். அதை எப்படி மாற்றுவது?

1) முதலில் திரும்பத்திரும்ப சொல்வதை விட்டுவிடுங்கள். உதாரணமாக ’பென்சில் பாக்ஸை ஸ்கூல் பேக்’கில் எடுத்து வச்சுக்கோ’ என்று பல முறை சொன்னால் தான் மகள் எடுத்து வைக்கிறாள் என்றால், கொஞ்ச நாள் எடுத்துப்போகாமல் இருக்கட்டும். தானாக, அப்படி செய்வதால் ஏற்படும் சிக்கல்களை சந்தித்ததும் அதை தினமும் எடுத்துச்செல்வது பற்றின எண்ணம் தானாகவே தோன்றிவிடும்.

2) கணவரிடம், இன்று பால் கார்ட் வாங்க கடைசி நாள் என்பதை நினைவு படுத்த வேண்டும் என்றால், ஒரு முறை நேரில் சொல்லிவிட்ட பிறகு, சின்ன சீட்டில் எழுதி அவர் பையில் வைக்கலாம். அல்லது இருக்கவே இருக்கிறது குறுஞ்செய்தி.

3)இதை எல்லாவற்றையும் மீறி அவர்கள் அதை செய்ய மறந்தால், சொல்லிக்காட்டாதீர்கள். அமைதியாக இருந்தால், அவர்களுக்கே தன் செயல் குறித்த குற்ற உணர்வும், அதை எப்படி சரி செய்யலாம் என்ற எண்ணமும் ஏற்படும். ‘அடுத்த முறை பால் கார்ட்ட கடைசி நாள் வரை வச்சுக்க வேண்டாம். முன்னாடியே கட்டிடறேம்மா’ என்பார். அந்த இடத்தில் ‘சரிங்க’ என்று சொல்லி அதை முடித்துவிடுங்கள்.

4) இவ்வுலகின் எல்லா அம்மாக்களுக்கும் ஆகப்பெரிய கோவம் என்பது, கூப்பிட்டவுடன் சாப்பிட வராததாக தான் இருக்கிறது. நமக்கு நம் வேலை முடியவேண்டும், போலவே அவர்களுக்கு அவர்கள் வேலை. அதனால், இருக்கவே இருக்கிறது ஹார்பேக். போட்டு வைத்துவிடுங்கள். பசித்தாலும் சாப்பாட்டை நினைக்காத மனித இனம் இன்னும் படைக்கப்படவில்லை. தானாக வருவார்கள்.

5) பாத்ரூமில் மணிக்கணக்காக தனியாக இருப்பது, மொட்டை மாடியில் சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றுக்கொண்டிருப்பது, நண்பர்களோடு நேரம் செலவிடுவது, ஞாயிறுகளில் சோம்பேறித்தனமாக இருப்பது என்பதெல்லாம் அவர்களுக்கு முக்கியம். இதில் தலையிடுவதையும், கிண்டலடிப்பதையும் தவிர்க்கப்பாருங்கள்.

6)கூச்சலிடாதீர்கள். அப்போதைக்கு அது தீர்வாக அமைந்தாலும், நாளடைவில் அதுவும் பலனலிக்காமல் போகும். மேலும் உங்கள் அக்கம் பக்கத்து வீட்டில் எப்படியும் தொலைக்காட்சி இருக்கும். நீங்கள் தரும் எண்டெர்டெயின்மெண்ட் வேறு அவர்களுக்கு தேவையில்லை.


வேலைக்கு செல்லும் பெண்களை விட, குடும்பத்தலைவியாக, ஒரு நாளின் பாதி நேரம் தனியாக இருப்பவர்கள் அதிகம் நச்சரிப்பவர்களாக மாறிவிடுவதாக ஆராய்ச்சி சொல்கிறது. அது ஏன் என்று யோசித்தால், ஒரே மாதிரியான வேலையை குடும்பத்தலைவிகள் தொடர்ச்சியாக வருடக்கணக்காக செய்கிறார்கள். அதில் நாளடைவில் சலிப்படைகிறார்கள். மேலும், பெரும்பாலான பெண்களுக்கு,  வீட்டில் அவர்கள் செய்யும் பல விதமான வேலைக்கு உரிய அங்கீகாரமோ பாராட்டோ கிடைப்பதில்லை. இது அவர்களை மனரீதியாக வலுவிழக்கச் செய்கிறது. தங்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக, தன் கருத்து  யாருக்கும் தேவைப்படாத ஒன்றாக முதலில் கற்பனை செய்துக்கொள்கிறார்கள். பின் தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்துவிடும் ஒரு கணத்துக்காக, தரையில் கிடக்கும் ஈர டவலுக்காக காத்திருக்க துவங்குகிறார்கள்.

மனிதர்களுக்கே உரிதான ஒரு எதிர்பார்ப்பும், குணமும் தன்னோடு பழகுபவர்கள், தன்னை முக்கியமானவராக கருதவேண்டும், மரியாதையாக நடத்த வேண்டும் என்பது. பெண்கள் மட்டும் விதிவிலக்கல்ல. தன்னம்பிக்கையோடு இருங்கள். இந்த உலகில் யாரொருவரும் அதிகப்படியாக படைக்கப்படவில்லை. உங்கள் வேலையில் சின்ன சின்ன கற்பனைகளை புகுத்தி உற்சாகத்தை கூட்டுங்கள். உங்களுக்கென சில மணித்துளிகளை ஒதுக்கி, உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்.

கடைசியாக, ‘நான் தான் இங்கிட்டு கரடியா கத்திட்டு இருக்கேன்’ என்று சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். நீங்கள் கரடி போல் கத்துவதாக உங்களுகே தோன்றும் போது, அதை ஏற்றுக்கொள்வது வீட்டிலுள்ளவர்களுக்கு கஷ்டமா என்ன?

2 comments:

  1. நல்ல குறிப்புகள்.... பாராட்டுகள்.

    ReplyDelete
  2. பெண்களுக்கு தன் கணவர் மீது எவ்வளவு பிரியம்,என்பதை மறைமுகமாக காட்கிறது,இந்த பகிர்வு

    ReplyDelete