Tuesday, 19 July 2016

கூட்டத்திலிருந்து வாங்க!

கூட்டத்திலிருந்து யாராவது ஒருத்தர் வாங்க " என்று இந்த மேஜிக் செய்பவர்கள், லேகியம் விற்பவர்கள் அழைத்தால், எப்படியும் ஒரு ஜீவன், சிறிது நேரம்  சோதனைக்கூட எலியாக இருப்பதற்கு சுத்திமுத்தி தெனாவட்டாக பார்த்துக்கொண்டே போகுமே? அதை தைரியம் என்று சொல்வதை விட, ஒரு மாதிரியான ஆர்வக்கோளாறு எனலாம். அத்தகைய கோளாறெல்லாம் என்னிடம் நிறையவே ஸ்டாக் இருப்பதால் அன்றும் நானே அந்த அழகுப்பெண் காட்டிய எடை பார்க்கும் கருவி போலிருந்த ஒன்றின் மேலேறி நின்றேன்.

அன்று காலையில் தான் தோழி தன் வீட்டில் படி நிலை சந்தைப்படுத்துதல் (மல்டி லெவல் மார்கெட்டிங்) நிறுவனம் ஒன்று அழகு சாதன மற்றும் ஆரோக்கியத்துக்காக (ப்யூட்டி அண்ட் ஹெல்த் கேர்) புதிய பொருட்களை அறிமுகப்படுத்தப்போவதாகவும், யார் வேண்டுமானாலும் தெரிந்துக்கொள்ள வரலாம் என்றும் அழைப்பு விடுத்திருந்தார். என்னை போல பின்னாலிருந்து ஆர்வக்கோளாறு உந்தித் தள்ளிய நிறைய பெண்கள் ஆஜர் ஆகியிருந்திருந்தார்கள்.


அதற்கு முன் ஒன்று சொல்லியாக வேண்டும். நான்கைந்து பெண்கள் நீண்ட நேரமாக அரட்டை அடித்துக்கொண்டிருந்தால், அங்கே உடல் எடை பற்றின பேச்சு எப்படியும் வந்துவிடும். பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ளும் ஆசையும், கனவும் இருக்கும். அங்கெயெல்லாம் ஒல்லியாக இருக்கும் பெண் தான் நாயகி. சில பெருமூச்சுகள் அவளை கிளுகிளுப்பூட்டவும் தவறுவதில்லை. அப்படி ஒரு பெண்ணாகிய என்னை, பத்து பதினைந்து பெண்கள் கவனித்து கொண்டிருக்க, எடைப் பார்க்கும் கருவியில் ஏறச் சொன்னால், என்னவொரு தன்னம்பிக்கையோடு நின்றிருப்பேன் என்று நினைத்துப்பாருங்கள்.

“நீங்க ஓவர் வெயிட்டா இருக்கீங்க” என்ற அந்தப் பெண்ணின் குரல் என் கனவை கலைத்தது. என்னை விட மற்ற பெண்கள் அவரை நம்ப முடியாமல் பார்க்க, கருவி என்னை 59 கிலோ காட்டிக்கொண்டிருந்தது. இந்த கருவியில் ஏறுவதற்கு முன்பு வரை 56 தானே என்று என குழம்பினேன். பிறகு ஒரு பட்டனை தட்ட, BMI 25.  இவங்க வயது என்று வேறு ஒரு பட்டனைத் தட்டினார். அது 41 என்றது. அடுத்த அதிர்ச்சி. என் வயதை சில பல வருடங்கள் எற்றிவிட்டிருந்தது. இந்த இடத்தில் மனமுடைந்து போகாத பெண்ணே இருக்க முடியாது. நானும் முதல் பாலிலிலேயே அவுட்டான பேஸ்ட்மேன் போல முகத்தை வைத்துக்கொண்டு இருக்கைக்கு திரும்பினேன். சில வருடங்கள் முன்பு வரை பி.எம்.ஐ 25 ஆரோக்கியமானதாக கருதப்பட்டு, அலோபதி மருத்துவம் அதை 22 தான் சரி  என்று மாற்றியதில் ஒரே நாளில் நோயாளியாக மாற்றப்பட்டிருக்கிறேன் போலிருக்கிறது.

"இவங்க வயதுக்கு எடை ஜாஸ்தி. பி.எம்.ஐ தப்பா இருக்கு. உடல் அவங்க வயதை விட சீக்கிரம் தளர்ந்திருக்கு. இதுக்கெல்லாம் என்ன காரணம்ங்கறீங்க? ப்ரோட்டீன் குறைப்பாடு தான்.” இப்போது என்னை விட்டுவிட்டு, மற்ற பெண்கள் பக்கம் திரும்பினார். "பிள்ளைகளை, கணவரை வேலைக்கு அனுப்பிவிட்டு அசதியாகி விடுகிறீர்களா?"  இதற்கு பெரும்பாலானோர் பதில், ஆமாம் தான். மீண்டும் அனைவருக்கும் ப்ரோட்டீன் குறைபாடு இருப்பது நிமிடத்தில் தெரியவருகிறது.


”உங்கள்ல எத்தனை பேருக்கு முடி கொட்டுது?”
இந்தக்கேள்விக்கு யாராவது இல்லை என்று சொல்லியிருந்தால், விரோதி போல பார்த்திருப்போம். ஆனால், சகலரும் ஆமாம் என்று சொல்ல, அழகுப் பெண் மகிழ்ச்சி அடைகிறார். ”உங்களுக்கு இரும்பு மற்றும் கால்ஷிய குறைப்பாடு இருக்கிறது. நாளை ஆஸ்ரியோபோரோஸிஸ் வந்து உங்கள் எலும்புகள் நொறுங்கி விடக்கூடும், ரத்தசோகை வரும், நரம்புகள் வலுவிழக்கும்.."

'எங்க கொஞ்சம் இருமி காட்டுங்க' என்று அவர் கேட்டு நான் செய்திருந்தால், நல்ல அனுபவமுள்ள காசநோய்க்காரர்களைப் போல் லாவகமாக இருமுகிறீர்கள். எதற்கும் இந்த வைட்டமினை சாப்பிடுங்கள் என்று சொல்லியிருப்பார் எனத்தோன்றியது. பெரும்பாலான நோய்களுக்கு அங்கே பரப்பியிருந்த டப்பிகளில் நிவாரணம் இருந்தது. குழுமியிருந்த பெண்கள், தங்களுக்கு வர சாத்தியமுள்ள நோய்க்கேற்ப மற்றும் விலைக்கேற்ப பிற்சேர்க்கை (சப்ளிமெண்ட்கள்) வாங்கிச்சென்றனர்.


நுகர்வோர் கலாச்சாரம் (கன்ஸ்யூமரிசம்) இரண்டு வகையில் செயல்படுகிறது. ஆசைக்காட்டி வாங்க வைப்பது, பயமுறுத்தி வாங்க வைப்பது. அழகு சாதன பொருட்களை எடுத்துக்கொண்டால், மானுட குலத்தின் மொத்த தன்னம்பிக்கையும் கைக்குள் அடங்கும் ட்யூபில் இருப்பது புரியும்.  மூன்றே வாரத்தில் சிவப்பாவீர்கள், நான்கே நாளில் பாய் ஃபிரண்டு கிடைப்பான், ஒரு மாதத்தில் அமெரிக்க விசா கிடைக்கும் என்பதாக நீளும். போலவே உடல் ஆரோக்கியத்திற்காக விற்கப்படும் பொருட்கள், உங்களுக்கு சொர்கத்தில் இருக்கும் தாத்தா பாட்டியை கண்ணுக்குள் காட்டி வாங்கச்சொல்கின்றன.

இவர்கள் பயம் காட்டுவதில் பெரும்பாலானவை நோயே அல்ல. உதாரணமாக,
உடல் அசதி, தொடர் உழைப்பிலிருந்து இடைவெளி கோரி உடல் தரும் சமிஞ்ஞை தான். அதை ப்ரோட்டீன் பவுடர் கொண்டு நிரப்புவதை விட, சின்ன தூக்கமே போதுமானதாய் இருக்கலாம்.

மேலை நாட்டவர்கள் போல் அல்லாமல், நமக்கு அபரீதமான சூரிய ஒளி கிடைக்கிறது. தினசரி பத்து நிமிடங்கள் வெய்யில் பட நடந்தால், உடல் தனக்கான வைட்டமின்-டியை தயாரித்துக்கொள்ளும். இதற்கு மாத்திரை சாப்பிடுவதென்பது, வீட்டை கும்மிருட்டாக்கிவிட்டு பகலில் மின்சார விளக்கை எரிய விடுவதைப் போன்ற பணக்கார பைத்தியக்காரத்தனத்தில் வரும்.

உண்மையிலேயே உங்களுக்கு கவலை தரும் விதமாக உடலில் உபாதை இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது தான். அதிலும், ஒரு நல்ல மருத்துவர் எடுத்த எடுப்பில் உங்களை வைட்டமினோ, கால்ஷியமோ இன்னபிற பிற்சேர்க்கை மருந்துகளோ எடுத்துக்கொள்ளச்சொல்ல மாட்டார். ரத்தத்தில் அவற்றின் அளவை வைத்தே தீர்மானிப்பார். பெரும்பாலான நேரங்களில் உணவு பழக்கத்தை ஆரோக்கியமானதாக  மாற்றினாலே போதுமானதாக இருக்கும். அல்லது சிறிது காலம் மருந்து உட்கொண்ட பிறகு, நிறுத்திவிட சொல்லுவார்.


பிற்சேர்க்கை மருந்துகள் உட்கொள்வது, தற்போது ஃபாஷனாகி வருகிறது. முக்கால்வாசி கிணற்றை தாண்டிய பின், சுற்றிபோவது எளிமையான வழி என்று உணர்ந்தால் எற்படும் கடுப்பை அலோபதி மருத்துவம் பல முறை தந்திருக்கின்றது. இன்று கால்ஷியம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்பார்கள். நாளையே, இதையா சாப்பிட்டாய் கிட்னியில் கல் வருமென்று தெரியாதா என்று தலையில் கல்லை போடுவார்கள்.

ஆபத்தில்லாத நல்ல தீர்வு, நம் உணவில் தான் இருக்கிறது.

உணவு, சமைப்பவருக்கும் உண்பவருக்குமான தொடர்புச் சங்கிலி. நகைச்சுவையாக ஒன்று சொல்வதுண்டு, 'நல்ல காபி போட என்ன வேண்டும்?' 'முதலில், நல்ல காபி போட வேண்டுமென்ற எண்ணம்'. ஏனேனில் அதே பால், டிகாஷன் மற்றும் சர்க்கரையை வைத்துக்கொண்டு ஒருவர் கும்பகோணம் டிகிரி காபியை தர முடியும், நேரடியாக குப்பையில் கொட்ட வேண்டிய வஸ்துவையையும் தர முடியும்.

யோசித்துப்பாருங்கள். ஆதியில் மாமிசத்தை சுட்டு சாப்பிடத் துவங்கிய நாம் தற்போது எத்தனை விதமான உணவுகளை கண்டுபிடித்திருக்கிறோம். அதன் பின்னால் இருப்பது ரசனை மட்டுமில்லை. தேவைக்கேற்ப்பவே புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. 'கேரட் சாம்பாரில் போட்டால் பிடிக்கவில்லையா, பொறியல் சுவைத்துப்பார், அதுவும் வேண்டாமா இது உனக்கு தான் கேரட் அல்வா!' என்று பிரியமானவர்களுக்கு நல்ல உணவை எப்படியாவது தந்து விடும் நம் அன்பும் பிடிவாதமும் உணவில் இருக்கிறது.

சுவைக்கும், ஆரோக்கியத்துக்குமான இடைவெளியை குறைப்பதில் ஒளிந்திருக்கும் சமைப்பவரின் திறமை. கீரை பிடிக்காதா, இரும்பு மாத்திரை எடுத்துக்கோ, பால் வேண்டாமா, இந்தா கால்ஷியம் மாத்திரையை முழுங்கு என்பதில் சமைப்பவரின் பங்கு என்ன இருக்க முடியும்?

உணவு நம் கலாச்சாரம், உணவு நம் பண்பாடு, உணவு நம் ரசனை, உணவு நம் வழிபாடு, உணவு நம் கருணை. இத்தனையையும் ஒரு காப்ஸ்யூலுக்குள் அடக்கிவிட முடியுமென தோன்றவில்லை!
சிந்திப்போம்.


கலாட்டா கார்னர்
---------------------------------

இருமல் மருந்து குடித்தால் தூக்கம் வந்துவிடுமே என்று ஆரம்பித்து, இருமல் மருந்து குடித்தாலாவது தூக்கம் வருமா என்பதில் முடிகிறது வாழ்க்கை!

2 comments:

  1. நல்லதொரு கட்டுரை. பலரும் இந்த மாதிரி விஷயங்களில் ஏமாந்து தான் போகிறார்கள்....

    ReplyDelete
  2. thanks.very good article.

    ReplyDelete