Wednesday, 19 October 2016

உங்க வண்டி நம்பர் என்ன?'எனக்கென்னவோ இந்தியர்கள் தங்கள் எல்லா கோபத்தையும் வண்டி ஓட்டுவதன் மூலம் தீர்த்துக்கொள்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது' இப்படி அமெரிக்காவில் செட்டிலாகி அவ்வப்போது இந்தியாவிற்கு வந்து ஷாப்பிங் செய்யும் உறவு சொல்லும்போது வேடிக்கையாக இருந்தது. ஆயினும் அவர், நம் ட்ரைவிங் அட்டூழியங்கள் என்று நீட்டிய லிஸ்ட் அவருடைய ஷாப்பிங் லிஸ்டை விட நீளமாகவே இருந்தது. அதில் உண்மையும் இல்லாமலில்லை.

நம்மூரில் ஹார்ன் அடிப்பதையெல்லாம் சிலர் எதோ வேண்டுதல் போலவே செய்கிறார்கள். வெய்யில், புகை இதற்கு நடுவில் நின்றுக்கொண்டே இருக்க யாருக்கும் ஆசையில்லை. 'நாளைக்கு சாகப்போற கிழவிய இன்னைக்கு எதுக்கு கொல்லப்போற?' என்பாரே வடிவேலு அதுபோல, அடுத்த நொடி நகரப்போகும் வாகனங்களுக்கு எதற்காக இத்தனை இரைச்சல்? 

தெரு திரும்பும் இடத்தில் வண்டியை நிறுத்தக் கூடாது என்பதை ஓட்டுனர் உரிமை தேர்வு பாடங்ளில் ஒன்றாக சேர்க்கலாம். மக்களை சொல்லி குற்றமில்லை, டீ கடைகளை சாலை முடிவில் அல்லது ஆரம்பத்தில் வைப்பதில் உள்ள சிக்கலை இன்று வரை எந்த அரசாங்க அதிகாரிகளாவது கவனித்திருப்பார்களா தெரியாது. மேலும், குறுகலான சாலைகளில் எப்படி நிறுத்தினால், போக்குவரத்துக்கு இடஞ்சல் இல்லாமல் இருக்கும் என்பது பற்றி ஒவ்வொரு முறையும் நாம் ஒரு நொடியாவது சிந்தித்தே ஆக வேண்டும். 


பெண்கள் வாகனம் ஓட்டுவது பற்றி நிறைய கேலிகள் உண்டு.  இது பற்றி பேசிக் கொண்டிருக்கையில், 'ஆண்கள் அளவுக்கு பெண்களுக்கு தங்கள் வாகனத்தை நேசிப்பது கிடையாது. சர்வீஸுக்கு விடுவதோடு சரி, வண்டியை துடைக்க கூட மாட்டார்கள். இவ்வளவு ஏன், எத்தனை பெண்களுக்கு அவர்கள் சொந்த வண்டி நம்பர் தெரியும் என்கிறாய்?' என்று நண்பன் புகைந்தான். அவனை எப்படியும் மூக்குடைக்க வேண்டும் என்று எனக்கு தெரிந்த எல்லா பெண்களிடமும் வண்டி நம்பர் கேட்டுப் பார்த்தேன். ஆச்சர்யமாக பெரும்பாலானவர்களுக்கு நம்பர் நினைவில் இல்லை. அல்லது வெறும் நம்பர் மட்டும் சொல்கிறார்கள். 'எங்களுக்கெல்லாம் வண்டி தான் முதல் காதலி' என்று அவன் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

பராமரிப்பு என்றதும் நினைவுக்கு வருகிறது, வண்டியின் இருக்கையை சுத்தம் செய்வதற்கென்று என் தோழி ஒரு வழி வைத்திருந்தாள். 'நீ வண்டி ஓட்டேன்' என்பாள். சரிதான் என்று முன்னால் அமர்ந்தால், 'இல்ல வேணாம்.. அப்படியே பின்னாடி நகரு. நானே ஓட்றேன்' என்று மனதை மாற்றிக்கொள்வாள். கொஞ்சம் கவனித்ததில், வண்டி துடைக்க துணி எடுத்துவராத போது மட்டும் இந்த டெக்னிக்'கை பயன்படுத்துவது தெரிந்தது.

வாகனம் ஓட்டுவதில் பல தவறுகள் இருபாலாருக்கும் பொருந்தும் என்றாலும், சிலவற்றை பெண்கள் தான் அதிகம் செய்கிறோம் என்று அடித்து சொல்கிறார்கள். 'சைட் மிரர்' பார்காமல் வண்டி ஓட்டுவது அதில் முதன்மையானது. இறங்கும் தருவாயில் முகத்தை சரிபார்க்க மட்டும் வண்டியின் கண்ணாடியை பயன்படுத்துவது சரியானதல்ல. அடுத்தது, இண்டிகேட்டர் உபயோகம். சட்டென்று இடமோ வலமோ திரும்பி பின்னால் வருபவருக்கு அதிர்ச்சி தருவதை விட, இண்டிகேட்டர் போட்டு, நாங்களும் நல்ல ஓட்டுனர்கள் தாம் என்று அதிர்ச்சி தரலாம்.

மூன்றாவதாக, மானாவாரியாக 'பார்க்' செய்வது. இரண்டு கார்களுக்கு இடையே கொஞ்சம் இடமிருக்கிறது என்று கொண்டுபோய் நிறுத்தினால், அவர்கள் கதவை திறக்காமல் மேலிருந்து தான் உள்ளே குதிக்கவேண்டும். அதை விட மோசமானது, நின்றுக்கொண்டிருக்கும் கார் அல்லது வேறு வண்டி பின்னால் குறுக்குவாட்டத்தில் நிறுத்திவிட்டு போய்விடுவது. அடுத்து, கால்களால் தேய்த்துக்கொண்டே வண்டி ஓட்டுவது. பின்னால் வருபவருக்கு நீங்கள் நிறுத்தப்போகிறீர்களா, தொடர்ந்து ஓட்டப்போகிறீர்களா என்று தெரியாமல் மண்டை காயும்.

கடைசியாக, தலையை மூடும் எதுவும் ஹெல்மெட் என்று நம்புவது. இந்த மூகமூடி கொள்ளையர்களை போக்குவரத்து காவலர்களும் விட்டுவிடுவது தான் வேடிக்கை. துப்பட்டாவுக்கும் ஹெல்மெட்டுக்கும் உயிர் அளவு வித்தியாசம் இருக்கிறதல்லவா? முன்னால் போகும் காரை, ஓட்டுவது ஒரு பெண் என்பதை தூரத்தில் இருந்தே கண்டுபிடித்து விடலாமாம். 'சடன் ப்ரேக்' போடுவதில் நம்மை மிஞ்ச முடியாது என்று கிண்டலடிக்கிறார்கள். ஆனால்,  ஆரம்பகட்ட பதற்றம் தணிந்து, வண்டி ஓட்டுவது இயல்பான செயலானதும் இதை தவிர்க்க முடியும் என்று தோன்றுகிறது.

ஸ்கூட்டி அல்லது பைக்'குக்கென்று ஒரு அகலம் உண்டு. சாதாரணமாக அதை கணக்கு பண்ணி ஓட்டினால் போதும் தான். ஆனால், காலுக்கு கீழே கீ-போர்ட் வைத்துக்கொண்டு ஓட்டும் அம்மாக்கள், வீட்டுக்கு பிவிஸி பைப் வாங்கி போகும் ஆண்கள், தாங்கள் ஓட்டுவது நான்கு சக்கர வாகனம் என்றே நினைக்கலாம், தவறில்லை. அதை மறந்து நட்டநடுவில் இவர்கள் ஓட்டினால், அரசியல்வாதி பின்னால் போகும் பரிவாரங்கள் போல் வேறு வழியில்லாமல் பின்னாலேயே அரை பர்லாங் போகவேண்டியிருக்கிறது. எதிரே வந்தாலோ, ஓரமாக ஒதுங்கி அவர்களை போகவிட்டுவிடுவது தான் ஒரே வழி.

நாம் ஓட்டுவதை தாண்டியும் சாலையில் பல அபாயங்கள், இடஞ்சல்கள் இருக்கின்றன. பெரும்பாலான பேருந்துகளில், லாரிகளில் 'ப்ரேக் லைட்' எரிவதில்லை. பேருந்தாவது, நிறுத்தம் மக்களுக்கு முன் கூட்டியே தெரிவதால் சுதாரித்துக்கொள்கிறார்கள். மேலும் பிரச்சனை ஓட்டுனருடையதல்ல. தூரத்தில் பேருந்தைக் கண்டதும் மக்களே பாதி ரோட்டுக்கு வந்துவிடுவதால், ஓட்டுனர் அவர்களையும் தாண்டி நட்டநடு ரோட்டில் நிறுத்திவிடுகிறார். இரண்டு வாகனங்கள் போகக் கூடிய அளவுள்ள சாலை என்றாலும் பேருந்து நடுவில் நிற்பதால், பின்னால் வரும் அத்தனை வாகனங்களும் ஸ்தம்பிக்கின்றன.

ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும் வேன், மினி லாரி அருகில் செல்வீர்களானால், இந்த அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும். எப்போது ஓட்டுனர் கதவை படார் என்று திறப்பார் என்று சொல்வதற்கில்லை. நம்மீது இடிக்காவிட்டாலும், அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே சில நொடிகள் ஆகின்றன.

லாரி ஓட்டுபவர்கள் வேறு வகை. அவர்கள் இண்டிகேட்டராக நினைத்துக்கொள்வது கிளீனர் பையனின் சின்ன கையை தான். ஏற்கனவே சிலபல அலங்கார பொருட்கள், மந்திரித்த கயிறுகள்  லாரியின் பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருக்கையில், இருட்டில் சட்டென்று நீண்டு மறையும் அந்த கையை பார்ப்பதற்கென்று கண்களுக்கு விசேட சக்தி தேவைப்படுகிறது. இத்தனை இடஞ்சல்களையும் மீறி நெருக்கமாக பின் தொடர்பவர்களுக்கு லாரியின் பின் நுட்பமான செய்தி இருக்கிறது - 'பரலோக ராஜ்ஜியத்திற்கு சமீபத்திருங்கள்!'

இந்திய சாலைகளில் வண்டி ஓட்டுவதென்பது ஒரு கலை. ஒரு சாகசம். பல நுண்ணுணர்வுகளையும் சோதிக்கும் மற்றும் வளர்க்கும் வல்லமை கொண்டது. முன்னால் போகும் நபரின் உடல் மொழியைக் கவனித்து, அவர் திரும்பப்போகும் திசையை கணிப்பதெல்லாம் உலகில் வேறு எங்கும் சாத்தியமா தெரியாது. குறுகலான சாலைகள், நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே போகும் வாகன நெரிசல் என நம்மை எரிச்சலடையச் செய்ய இங்கே நிறைய காரணிகள் இருக்கின்றன. எனினும் போகவேண்டிய இடத்திற்கு முன்னதாகவே கிளம்பி நிதானமாக ஓட்டுவது, சாலை விதிகளை பின்பற்றுவது, குறைவாக ஹார்ன் பயன்படுத்துவது என பயணத்தை நமக்கும் பிறருக்கும் இனிமையாக்க சாத்தியங்கள் இல்லாமல் இல்லை.

சமீபத்தில் தோழி வண்டி வாங்கியிருந்தாள். 'ஊருக்குள்ள எனக்கு அறிவுரை சொல்லாத ஆளுன்னு இனி யாரும் இல்ல, உனக்கும் எதாவது சொல்லனுமா?' என்று சிரித்தாள். 'கொஞ்சம் கருணையோடு ஓட்டு, போதும்' என்றேன்.

----------------------------

// அவள் விகடனில் பிரசுரமாகியுள்ள கட்டுரை.  

No comments:

Post a Comment