Monday, 27 February 2017

வாழ்வியல் மருத்துவம்

சென்ற வருடத்தில் அலோபதி மருத்துவமுறையை ஆதரித்தும், திரு.ம.செந்தமிழன் அதிகம் வலியுறுத்தும் மரபு வழி மருத்துவத்தை எதிர்த்தும் நண்பர்களிடத்து சண்டைப் போடுவதில் நிறைய நேரத்தை செலவிட்டிருக்கிறேன். குறிப்பாக,ஓவியர் திரு.சந்தோஷ் நாராயணன், பத்திரிகையாளர்  திரு.ஆனந்த் செல்லையா மற்றும் ஒளிப்பதிவாளர்  திரு.பால் கிரிகோரி. இந்த மூவருக்குமான ஓர் ஒற்றுமை, நடிகை  கீர்த்தி சுரேஷ் பற்றி பேச ஆரம்பித்தால் கூட, பத்து நிமிடத்தில் பேச்சில் வாழ்வியலையோ, சூழலியலையோ, மரபு மருத்துவத்தையோ கொண்டுவந்துவிடுவார்கள்.  தப்பிக்கவே முடியாத நிலையில், தர்க அறிவும், ஈகோவும் சேர்ந்துக்கொள்ள இணையத்தின் துணையோடு தரவு யுத்தம் நிகழ்த்திக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களாக நான் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றின் மீதான் மாற்றுச்சிந்தனையை ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை. 


எனினும் என் எக்கச்சக்க குழந்தைத்தன குணங்களுக்கு நடுவே, குட்டிக் குட்டி கல்யாண குணங்களுக்கும் உண்டு. அதில் ஒன்றாக, இவ்வளவு சொல்கிறார்களே அப்படி என்ன தான் இந்த மனிதர் வித்தியாசமாக வாழ்வியலை மாற்றி அமைக்கிறார் பார்க்கலாம் என்ற நோக்கில் யூ-ட்யூபில், ஃபேஸ்புக்கில், பத்திரிகைகளில் என அவர் சொல்வதை மானாவாரியாக கவனிக்க ஆரம்பித்தேன். 

இடது கால் பெருவிரலை நெற்றிப்பொட்டில் நிறுத்தி, ஏழாவது மலையின் உச்சியில் இருக்கும் பிச்சிப்பூவை கொண்டுவந்து... என்பது போலெல்லாம் செந்தமிழன் பயமுறுத்தவில்லை. மிக மிக எளிமையாக, உணவு பழக்கத்தை சீர் செய்வது, வாழ்வியலை இயற்கையையொடு இசைந்தவாறு அமைத்துக்கொள்வது, விருப்பத்தோடு எந்த வேலையிலும் ஈடுபடுவது, இயற்கை வேளாண்மை, மரபு கட்டடவியல் என நம் மனசாட்சிக்கு நெருக்கமான விஷயங்களை தான் சொல்லிக்கொண்டிருந்தார். கூடுதலாக, என் போன்ற மாநகர மக்களுக்கு மரபு சார்ந்த மருத்துவ முறைகளை கிட்டத்தட்ட அறிமுகம் செய்துக்கொண்டிருந்தார்.

என் மகளின் கீ-போர்ட் வாத்தியார், 23 வயது இளைஞர். கண்டப்படி கோக் குடித்து, வயிற்றை புண்ணாக்கி வைத்திருந்தார். சூடாக, குளிர்ச்சியாக, உப்பு/ காரம்/எண்ணெய் சேர்த்தது உணவில் கூடாது என்ற சன்யாச வாழ்க்கைக்கு அதற்குள்ளாகவே வந்து சேர்ந்திருந்தார். (கூடவே கமண்டம் போல கையோடு செல்லும் மருந்துகள்). 
'கல்யாணமானா பைத்தியம் தெளியும்; ஆனா பைத்தியம் தெளிஞ்சா தான் கல்யாணம் ஆகும்' கதை அல்சருக்கு அலோபதி மருந்து எடுத்துக்கொள்வதற்கு பொருந்தும். மருந்து சாப்பிட்டால் தான் அல்சர் குணமாகும் என்பார்கள். பிறகு அதே மருந்து சாப்பிடுவதால் அல்சர் ஜாஸ்தியாகும். வாத்தியாரை, நானே லேசான நம்பிக்கையோடு மட்டும் கவனித்துக்கொண்டிருந்த திரு.செந்தமிழனிடம் அழைத்துச்சென்றேன். சில வாழ்வியல் முறை மாற்றங்களும், மரபு மருத்துவமும் பரிந்துரைத்தார். இது நடந்த மூன்று மாதத்திற்குளாகவே கீ-போர்ட் வாத்தியார், என்னிடம் காஃபி வாங்கி குடித்துவிட்டு மகளை பழைப்படி மிரட்டிக்கொண்டிருக்கிறார். 

திரு.செந்தமிழன் நடத்தும் “வாழ்வியல் மருத்துவம்” வகுப்பிற்கு செல்லவேண்டும் என்ற விருப்பம் தோன்றியது அப்போது தான். விருப்பம் நம்மை வழிநடத்தும் என்பதும் என் விஷயத்தில் உண்மையாகிஇந்த வார இறுதியில், சென்னையில் நடந்த வாழ்வியல் மருத்துவ வகுப்புக்கு சென்றிருந்தேன்.

-------------------------------

மரபு மருத்துவம் என்பதற்கு பதிலாக ‘வாழ்வியல் மருத்துவம்’ என பெயரிட்டதன் காரணம் அங்கு சென்றதும் விளங்கியது. 
வாழ்வியல், சூழலியல் சார்ந்த நலவுரையும், கலந்துரையாடலுமாக முதல் நாள் போனது. நம் உடலை அறிவது எப்படி? எந்த சூழ்நிலையில் அலோபதியை நாடலாம் அல்லது நாடக்கூடாது, பசித்தால் மட்டும் சாப்பிடுவது, இல்லறத்தில் இணக்கமான சூழலை உருவாக்குவது, குழந்தைகள் மன மற்றும் உடல் நலம், அவர்களுக்கு எவ்வகையான சுதந்திரம் அளிப்பது, பத்தியம், ஓய்வு, வயதானவர்களை பராமரிப்பது, தடுப்பூசி, முரண்பாடுகளுடன் மனிதர்களை ஏற்றுக்கொள்வது என பல தலைப்புகளில் விரிவாக பேசினார். கலந்துரையாடல் போன்று மதிய வேளை போனதால், அவ்வளவு சுவையான உணவுக்கு பிறகும் கண்ணை கட்டவில்லை  ஒவ்வொரு உடலும் தன்னை சூழ்நிலைக்கேற்றவாறு தகவமைத்துக்கொள்வது சளி, காய்ச்சல் மூலமாகத்தான் என்று அவர் சொன்னது பல அம்மாக்கள் வயிற்றில் பாலை வார்த்திருக்கும் என அவதானிக்கிறேன்.

அடுத்த நாள், நம் உடலை ‘வாதம்-பித்தம்-கபம்’ வழியாக அறிந்துக்கொள்வது குறித்து கற்றுத்தந்தார். எந்த உடலுபாதையும் மனநிலை மாற்றத்தோடு சேர்த்துப் பார்க்கும் முறையாக வாழ்வியல் மருத்துவத்தை பார்க்கச் சொல்கிறார்.  சளி, காய்ச்சலுக்கான மருத்துவம், உணவு முறை, தற்காலிக வலிகளுக்கான நிவாரணம், பித்தம் தணிக்க செய்ய வேண்டியது, குதிகால் வலி, மாதவிலக்கு வலி மற்றும் இதர பிரச்சனைகள், ஆரம்ப கட்டத்தில் இருக்கும் மூல நோக்கான வீட்டு மருத்துவம், பல வகை கஷாயங்கள், பத்திய சமையல் என்பதாக இரண்டாவது நாள் இன்னும் விரைவாகவே போனது. கண்ணாடி அணிவதை தவிர்த்துவிட்ட இருவர், தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டது நம்பிக்கையூட்டவதாக இருந்தது. வகுப்பிலும், தனித்தனியாகவும் பலரும் அவரிடம் மருத்துவ ஆலோசனை பெற்றுச் சென்றார்கள்.

உடலை பற்றியும், நோய்கூறுகளை பற்றியும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கிறோமே என்று கொஞ்சம் அவமானமாக கூட இருந்தது. சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு கூட அதற்கான காரணியை தேடாமல், தற்காலிக நிவாரணியாக அலோபதியை மட்டும் நம்பிக்கொண்டிருந்திருக்கிறேன்.
இப்போதும் பால்/பிராய்லர் கோழி/ கண்ணாடி /தடுப்பூசி  தேவையில்லை வரிசையில்   செந்தமிழன் எதை  சொன்னாலும், ஏதோ அடுத்த குண்டை தூக்கி போட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. அதை மறுதலிக்க தான் அறிவு சொல்கிறது. அதற்காக நிறைய படிக்கிறேன், நிறைய மனிதர்களோடு உரையாடுகின்றேன். எத்தனைக்கெத்தனை அதில் மெனக்கெடுகிறேனோ, அத்தனைக்கத்தனை விரைவில் அவர் சொன்னது சரி தான் என்ற இடத்துக்கு  வந்துவிடுவதையும் காண்கிறேன். :-)


--------------------------------------
நம்மிடம் இவ்வளவு மருத்துவ முறைகள் இருந்தப் போதும் ஏன் அலோபதி அளவுக்கு மக்களை சென்று சேரவில்லை என்ற கேள்வி எழுவதுண்டு. அதற்கு பதில் ஒரு ‘ஜெலூசில்’ விளம்பரத்தில் கிடைத்தது. பருமனான ஒருவர் டிவி பார்த்துக்கொண்டே நொறுக்கு தீனி சாப்பிடுகிறார். திடீரென்று நெஞ்சு எரிச்சல் ஏற்ப்படுகிறது. ஒரு மாத்திரையை விழுங்கிவிட்டு தீனியை தொடர்கிறார்.
என்ன வேண்டுமானாலும் சாப்பிடு, எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கையை அமைத்துக்கொள், கூடவே இந்த மாத்திரையை மட்டும் விழுங்கிவிடு என்பது போன்ற “இன்ஸடண்ட்” மருத்துவமாக மரபு மருத்துவம் இல்லை தான். எனினும், ஆயுளையும், கூடவே நோயையும் நீட்டித்து தருகிறோம் என்னும் நவீன முறையில் எந்த பெருமையும் இல்லை என்பதை புரிந்துக்கொள்வொம்.


-------
சராசரி இந்திய ஆயுள் கிடக்கட்டும். சராசரியாக ஒரு மனிதன், முதன் முதலில் நோய்க்கான மருந்தை எந்த வயதில் உட்கொள்கிறான் என்றொரு 'சென்செஸ்' எடுத்துப்பார்க்கலாம். அது என்னவோ குறைந்துக்கொண்டே தான் வந்திருக்கிறது. 'அறுபது வயதில் தான் மருந்தையே கண்ணால பார்த்தேன்!' என்பது மாறி, "பிறந்தவுடன்" என்று வந்திருக்கிறோம். பல் வேறு உபாதைகள் தோன்றும், அதனால் என்ன, உங்களை கஷ்டப்படுத்திக்கொண்டிருந்த அந்த ஒரு நோய் தீர்ந்ததா இல்லையா என்னும் 'லாஜிக்'கில் நவீன மருத்துவ முறையில் கறாராக இருக்கிறார்கள்.


திரு.செந்தமிழன் என்றில்லை, நம் மூத்தோரிடம் வழிவழியாக வரும் வாழ்வியல் முறைகளை செவி மடுத்துக் கேட்போம். அனுபவத்தில் அவர்கள் கற்று வைத்திருப்பதை, ஐந்து வருட புத்தகப் படிப்பு படித்தவர் சொல்வதைக் கேட்டு கேலி செய்யாமலிருப்போம். 


நியூட்டனின் குளிர்வு விதி rate of cooling is proportional to difference in temperature with the surroundings என்ன என்பதை அறிந்துக்கொள்ள, நீங்கள் கல்லூரியின் முதலாமாண்டு வரை காத்திருக்க வேண்டும். அதுவும் இயற்பியல் பாடம் மதிய வேளை என்றால் உங்களுக்கு தூக்கம் வராமல் இருந்தால் தான். வீட்டிலிருக்கும் பாட்டி, 'வெந்நீரை வெளாவி வையி. அப்படியே வச்சா சீக்கிரம் ஆறிடும்!' என்று சாதாரணமாக சொல்லும்.  அது தான் அனுபவம் என்பது. 

ஒவ்வொரு குடும்பமும் மரபு வழி மருத்துவத்தை ஆவணப்படுத்துவதும், அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் தங்கள்  கடமையாகவே கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். நவீன மருத்துவ முறைகளை முற்றிலுமாக நிராகரிக்கும் இடத்தில் நாம் இப்போது இல்லை எனினும் அதை நோக்கி பயணிப்பதில் தவறில்லையே. மருத்துவ துறையில் ஏகப்பட்ட ஊழல்களையும் முறைக்கேடுகளையும், மறைக்கப்படும் பக்கவிளைவுகளையும் கேள்விப்படும்போது, மருந்தில்லாத வாழ்க்கை வாழ விரும்புவதே சிறந்த வழியாக தோன்றுகிறது. இனி வரும் தலைமுறை ‘மாத்திரை’ என்பது ஒரு தமிழ் இலக்கண வார்த்தையாக மட்டும் அறிந்திருக்கட்டும்.

-------------
எத்தனை இன்னல்கள் வந்தாலும், தங்கள் தன்னலமில்லாத பாதையை இம்மியும் மாற்றிக்கொள்ளாமல் பயணிக்கும் திரு.செந்தமிழன் அவர்களுக்கும், செம்மை குடும்பத்தாருக்கும் அந்த பேராற்றல் எல்லா நலமும் வளமும் அருளட்டும்.

நன்றி.
விக்னேஸ்வரி சுரேஷ்

6 comments:

 1. மிக அருமையான பதிவு..

  ReplyDelete
 2. நன்றி

  ReplyDelete
 3. இந்த விசம் போல இன்னொரு விசயமும் இருக்கு.நம் உடல் ஒத்துக்கணும்.திடீர்னு எல்லா மாறக்கூடாது. தனிமனிதன் மாதிரியே குழுவுக்கும் மரபு இருக்கு. அது குழுவுக்கு குழு மாறுபடும்.அதனாலேதான் மனிதர்கள் சமம் அல்ல என்பது. உங்கள் மரபில் என்ன் பின்பற்றினார்கள் என்பதை கவனித்து பிள்ளைகளுக்கு சொல்லணும்.செந்தமிழன் அவர் மரபை கவனித்து வருவது அவருக்கு நல்லது. இந்த பிரிவு உண்டு கண்டிப்பா.

  மரபு என்பது நுணுக்கமான சங்கிலித்தொடர். இப்டி எல்லாம் தடுப்பூசி நிறுத்தணும்ங்கிறது அபத்தம். அதுக்கு காட்டுவாழ்க்கைஉம் வாழவேண்டிருக்கும். நீங்க உங்க அப்பா அம்மா வாழ்ந்தது உண்டா. இல்லை எனில் இப்டி போக கூடாது.

  ReplyDelete
 4. தடுப்பூசி தேவையில்லை என்பதை அவர் குருட்டாம்போக்கில் சொல்லவில்லை. அதன் பக்கவிளைவுகளை பற்றி எடுத்துச்சொல்லி மக்களை தீர்மானிக்க அனுமதியுங்கள் என்கிறார். தடுப்பூசி பற்றி விரிவாக அவர் பேசியுள்ளதன் தொகுப்பு இங்குள்ளது http://senthamizhanpakkangal.blogspot.in/?m=1
  உங்கள் ஏனையை கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

  ReplyDelete
 5. Your narration crisp & clear. Super!

  ReplyDelete