Monday, 22 July 2019

ப்ரோஃபைல் பிக்சர்
--------------------------------------------
சமூகவலைத்தளங்கள் பல இருந்தாலும், ’மூஞ்சிபுக்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஃபேஸ்புக் தான், நம் வாழ்க்கையிலிருந்து தொலைந்து போனவர்களை கண்டெடுக்கவும், இது வரை சேர்த்து வைத்துள்ள நண்பர்களை நினைவு பெட்டகத்திலிருந்து தொலையாமல் பார்த்துக்கொள்ளவும் பிரதானமாக உதவுகிறது. தொடர்பில் இல்லாத பல நண்பர்களை, இன்னும் பார்த்தேயிராத பல இணையதள நண்பர்களை அவர்களின் தற்போதைய ஃபேஸ்புக் முகப்புப்பட புகைப்படத்தையே அவர்களாக மனம்  பதிந்து வைத்திருக்கிறது. ஆக, ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளவகளுக்கு முகப்புபடத்தின் முக்கியத்துவமும் அருமையும் தெரியும்

பல்வேறு சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது இந்த பிபி! அட, BP இல்லீங்க, PP. ப்ரோஃபைல் பிச்சரை தான் அப்படி செல்லமாக கூப்பிடுகிறார்கள். ஃபேஸ்புக்கில் ஓர் அழகான பிரோஃபைல் பிக்சரை பார்த்தவர்கள், உடனடியாக சம்பந்தப்பட்ட நபருக்கு நட்பின் அழைப்பை அனுப்புவார்கள். அல்லது அப்படி ஒருவர் அழைப்புவிடுத்திருப்பின் எளிதாக ஏற்றுக்கொள்வார்கள். ஆக, ஃபேஸ்புக் ஒரு நட்பு பாலம் என்றால், அதற்கான சுலபமான வழி நல்ல பிபி தான். 

எந்த புது இடத்திற்கு சென்றாலும், பிராஃபைல் பிக்சருக்காகவே தனியாக படம் எடுத்துக்கொள்ளும் மனிதர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஏன், பலர் புதிய  இடங்களுக்கு செல்வதே படம் எடுத்து ’அப்டேட்’ செய்வதற்கு தான். ஷாப்பிங்மால்களும், திரையரங்குகளும் பிரோஃபைல் பிக்சர் எடுப்பதற்காகவே தனியாக சில இடங்களை அலங்கரித்து வைத்திருக்கின்றன. 

இயற்கையை வஞ்சிக்க முடிக்கிற இடமாகவும் ஃபேஸ்புக் விளங்குகிறது என்றால் நம்புவீர்களா? வருடாவருடம் பிராஃபைல் பிக்சர்களில் மனிதர்களின் வயது குறைகின்றன. ஃபேஸ்புக்கில் கணக்கு ஆரம்பத்த போது கையில், இடுப்பில் குழந்தைகளை சுமந்து நிற்கும் பெண்கள் நாளடைவில் கல்லூரி வாசலில் நிற்கிறார்கள். தொப்பையோடு ஆரம்பித்து, ஜிம் பாடியில் முடிக்கிறார்கள் ஆண்கள். அவர்களோடு படத்தில் தென்படும் குழந்தைகள் வயது ஏறி, இறங்கி தற்போதைய வயதை கணிப்பது கடினமாகிறது. 

மெட்ரிமோனியல் தளங்களில் புகைப்படத்தை கொடுத்த கையோடு, ஃபேஸ்புக் பக்கதிலும் மாற்றுகிறார்கள், இளைஞர்கள். பெண்ணை பெற்றவர்கள் முதல் காரியமாக ஃபேஸ்புக் கணக்கு துவங்கி, பையனை பற்றி அறிய அவன் ஃப்ரோபைல் பிக்சருக்கு வரும் கமெண்ட்டுகளை கண்ணாடி போட்டு படிக்கிறார்கள். நண்பிகள் எழுதி வைக்கும் ‘செம’, ’கூல் ’ வகையறாக்கள் பரவாயில்லை ரகம். ’லவ் யூ டா’க்கள் சில வரன்களை அப்போதே முடிவுக்கு கொண்டு வருகின்றன. 

ஸ்மார்ட் ஃபோன் வருகையால் முகப்புபடங்கள் பொலிவடைந்திருக்கின்றன. படங்களை மென்மேலும் மெருகேற்றி வலைத்தள நண்பர்கள் எண்ணிக்கையையும் ஏற்றிக்கொள்ளலாம்.  முகநூலில் எழுத்துக்கும், அங்கீகாரத்துக்கும் உள்ள சம்பந்தத்தை விட, பிராஃபைல் பிச்சருக்கும் ”லைக்”குக்கும் அதிக சம்பந்தம் உண்டு என்பதை இங்கே அழகான பெண்களை தவிர யாவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

என் அழகான தோழி ஒவ்வொரு முறை ப்ரோஃபைல் பிக்சர் மாற்றும் போதும்,  நிறைய பேர் தேடி வந்து தனிசெய்தியில் பேசுகிறார்கள் என்று அலுத்துக்கொண்டார். அதிலும் ஒருவர், தனக்கு தினமும் மாலை நான்கு முதல் ஆறு வரை ஃப்ரீ. அந்த நேரத்தில் தினமும் சாட் செய்ய முடியுமா என்று கேட்டிருந்தார். இன்னும் ஒருவர், ஃபிரண்ட்லியா பேசுங்க போதும் என்று சலுகை தந்திருந்தார். இது போன்ற விசித்திரமான கோரிக்கைகள், எல்லா ப்ரோஃபைல் பிக்சருக்கும் வருமென்று சொல்வதற்கில்லை என்பதே இங்கே சற்று துயரமான செய்தி.

நல்ல பிபி கொண்டவர்களுக்கு காலையிலும், மாலையிலும் தனிசெய்தியில், அன்றைய நாள் இனிமையாக அமைய நிறைய பேர் வாழ்த்துகிறார்கள். அவர்களில் ஒருவராவது வீட்டுக்கு அழைத்து, தங்கள் மனைவிக்கு குட் ஈவினிங் சொல்வார்களா என்று யோசித்துப்பார்ப்பது வீண் வேலையாக தோன்றுகிறது. எதற்காக தவறாக நினைக்க வேண்டும், அறிமுகமில்லாத பெண்ணின் நாள் இனிமையாக இருக்க வாழ்த்துவது கூட ஒரு சமூக சேவை தான் என்று அவர்கள் நினைத்திருக்க கூடும். 

அப்படிதான், சமீபத்தில் முகநூலில் பிபியை வைத்து கண்டுபிடித்த என் பால்யகால தோழிக்கு நட்பின் அழைப்பை அனுப்பினேன். மேற்படி நபர் ஏற்கனவே 5000 நண்பர்களை கொண்டிருப்பதால், உங்கள் நட்பு அவருக்கு தேவையில்லை, வேண்டுமானால் நீங்கள் மட்டும் பின் தொடர்ந்துக்கொள்ளுங்கள் என்று ஃபேஸ்புக் என் சார்பில் தீர்மானித்துவிட்டிருந்தது. அழகான பிபிக்காக தனி சலுகையாக ஐயாயிரத்து பத்து நண்பர்கள் இருக்கலாம் போன்ற சலுகைகள் நாளை வரலாம். அதுவரை பழைய தோழி, பழைய தோழியாகவே இருக்கவேண்டியது தான். அல்லது, பின்னொரு நாளில், ஐயாயிரம் பேரில் யாரையாவது அனுப்பிவிட்டு, என் நட்பை அவர் ஏற்றுக்கொள்ளக்கூடும். ஏதோ சற்றே பெரிய ம்யூசிகல் சேருக்கு ஓடி தோற்றது போல வேடிக்கையாக இருக்கிறது.

பிபிகள் பல வகை மனிதர்களை குறிக்கிறது, பாருங்கள். ஆகப்பெரிய கனவான்கள் தங்கள் பி.எம்.டபில்யூவோடு எடுத்த படத்தையோ அல்லது வெளிநாட்டு சுற்றுப்பயண படங்களையோ வைத்திருக்கிறார்கள். தங்களை அட்வென்சர் விரும்பிகளாக பதிவு செய்ய விரும்புபவர்கள் பன்ஜி ஜம்ப்போ அல்லது பனிசறுக்கோ செய்கையில் கவனமாக படம் எடுத்து பிபியாக வைக்கிறார்கள். இதில் எல்லாம் ஒரு பிரச்சனையுமில்லை. கல்லூரியோடு தொலைந்து போன நண்பன் ஒருவன், தற்போது புகைப்பட கலைஞராகி, தான் எடுத்த உர்ராங்குட்டான் படத்தை பிபியாக வைத்திருக்கிறான். அவன் நட்பின் அழைப்பில், என் தலை சுற்றிவிட்டது. இப்படி ஒரு நண்பரா? ஞாபகத்தில் இருக்கும் யார் முகத்தோடு பொருத்தி பார்த்தாலும் எங்கேயோ பிசிறடிக்கிறது.

நாளொன்றுக்கு குறைந்தது ஒரு பதிவு என்று சமூகவலைத்தளங்களில் எழுதுபவர்கள் வாழ்கை, சற்றேறக்குறைய ஒரு திறந்த புத்தகம். எதுவும் எழுதாமல் நான்கு நாட்களாக இருப்பது உறுத்தினால், பிரோஃபைல் பிக்சரையாவது மாற்றிவிட வேண்டும் என்பது அவர்களுக்கான விதி. ஏனேனில் அவ்வாறு இருப்பை உலகுக்கு அறிவிக்காவிட்டால் சக எழுத்தாளர்கள் (இங்கே எல்லாருமே எழுத்தாளர்கள் தான்) வசதியாக மறந்துவிடுவார்கள். நோட்டிஃபிகேஷன்ஸ் எதுவும் இல்லாத நாட்கள் வலைத்தளவாசிகளுக்கு திகிலூட்டுபவையாக இருக்கின்றன. 

சொந்தப் புகைப்படம், நடிகையினுடையது, குழந்தை, நாய்க்குட்டி, கட்சிக்கொடி , அரிவாள்மனை இதையெல்லாம் தாண்டிய சுவாரஸ்ய முகப்பு படங்கள் பார்த்துள்ளீர்களா? ”புன்னகை என்கிற முகவரி உங்களிடம் இருந்தால், நண்பர்கள் என்னும் கடிதம் வந்துக்கொண்டே இருக்கும்”, “ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் நேரத்தில் புத்திசாலி ஆகிறான்” வகையறா தத்துவங்கலெல்லாம் கூட சிலரது முகப்பு படங்களாக இருக்கின்றன. அதிலும் இத்தனை தத்துவங்களா அப்துல் கலாம் சொல்லி சென்றிருக்கிறார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. ஏன், அவருக்கே கூட ஆச்சர்யமாக இருந்திருக்கலாம். ‘யாரோ’ என்ற அனானி எழுதுவதை விட  கலாம் பெயரில் எழுதினால் தத்துவங்களுக்கு மதிப்பு அதிகம் என்பதை எழுதியவர் அறிவார்.


ஆனாலும், எனக்கு ஃபேஸ்புக்குக்கு வைக்க கோரிக்கை ஒன்று உண்டு. சாட்’டிங்கிற்கு தனி முகப்புப்படம் வைக்க அனுமதிக்க வேண்டும். என் தோழிகள் குடும்பசகிதமான படத்தையே வைத்திருக்கின்றனர். தோழியோடு தனியாக சாட் செய்யலாம் என்றால், அவள் கணவரும் கூடக்கூட வருவது அவஸ்த்தையாக இருக்கிறது.


இந்த பிபி’யை வைத்து வெளிநாட்டுக்காரர்கள் ஆராய்ச்சி கட்டுரை எல்லாம் சமர்பித்திருக்கிறார்கள். முகத்தை டைட் க்ளோசப்பில் போடுபவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாம். சினிமாவின் கடைசி டைட்டில் கார்ட்’ போல ‘மற்றும் பலராக’ பத்து பேர் இருக்கும் படத்தில் ஒளிந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் மிகுந்த தாழ்வுமனப்பான்மை கொண்டிருக்கிறீர்களாம். தன்னம்பிக்கை மிளிரும் அஜித் படத்தை கொண்டவர்கள் மட்டும் தமிழ்நாட்டில் ஆயிரம் பேராவது இருப்பார்கள் என்று சொன்னால் வெள்ளைக்காரன் தலை சுற்றிப்போவான்.

ஓளிமயமான எதிர்காலம் புகைப்படக்கலைஞர்களுக்கு தென்படுகிறது. சின்னதாக ஒரு வரி விசிட்டிங் கார்டில் சேர்த்துக்கொண்டால் போதும் - “இங்கே நல்ல ஃப்ரோஃபைல் பிக்சர் எடுத்துத்தரப்படும்!”

அட, என் படத்தை பற்றி கேட்கிறீர்களா? வோட்டு போட்டதற்கு அடையாளமாக மை வைத்த அழகான விரல் படத்தை தான்  வைத்திருக்கிறேன். அதுவும் இணையத்தில் கிடைத்தது தான். 

1 comment:

  1. பி.பி. நல்ல கட்டுரை. ஆங்காங்கே தெளித்து இருக்கும் நகைச்சுவை ரசிக்க வைத்தது.

    இப்படி படங்களை வைத்துக் கொள்ளவே தினம் தினம் படம் எடுத்துக் கொள்ளும் நண்பர்கள் சிலர் பார்த்ததுண்டு.

    ReplyDelete