Thursday, 10 November 2022

அவன், அவள், அது (குறுங்கதை)

கிபி 3022



அவ்வைக்கு திருமணம், லிவ்-இன், இன்னும் என்னென்ன பெயரிலோ வந்துவிட்ட எவ்வகை உறவிலும் விருப்பமில்லை. ஆண்களே தேவையில்லை என்று முப்பது வயது வரை வாழ்ந்துவிட்டாள். அவளுக்கு துணையாக ரோபோவும், உயிருள்ள பூனையும் வீட்டில் இருக்கின்றன. ரோபோவுக்கு கணேசன் என்று பெயரிட்டிருக்கிறாள்.

எல்லாம் சரியாகத் தான் போனது. ஆனால், அப்படியே இருப்பது விதிக்கு பொறுக்காதே? அவள் அலுவலகத்தில் புதிதாக ஒருவன் வந்தான். அவள் வாழ்க்கையில் வரவும் பிரியப்பட்டான்.

அன்று உணவு இடைவேளையில் அவனாகவே ஆரம்பித்தான். "நீ ரொம்ப அழகு, தெரியுமா?"

"தெரியும்" என்றாள். அவளுக்கு என்ன சொன்னால் அவனுக்கு மூக்குடைப்பாக இருக்கும் என்பதில் கவனம் இருந்தது.

"நான் உன்னைப் பார்ப்பது போல நீயே உன்னை பார்க்க வாய்ப்பில்லை. உன் கண்கள், உன் மூக்கு, உதடுகள் என தனித்தனியே என்னால் வர்ணிக்க முடியும்."

"ஓஹ். நீ இவ்வளவு வேலையில்லாமல் இருப்பாய் என்று எதிர்பார்க்கவில்லை. "

"எப்போதும் காதல் அப்படித்தான். யாருக்கு அதன் அருமை தெரியவில்லையோ, அவர்கள் வாசலில் தான் தவமிருக்கும். நான் வருகிறேன்." போய் விட்டான்.

அவ்வைக்கு ஏதோ ஒன்று புதிதாக இருந்தது. இதுவரையில் அவள் அழகைப் பற்றி யாரும் பேசியதில்லை. அது அவ்வளவு கிளர்ச்சியைத் தரும் என்று, அன்று தான் தெரிந்துக்கொண்டிருந்தாள். எனினும், அவள் தர்க்க அறிவு அவளோடு வாதிட்டது. கணேசன் ரோபோவால் இதைவிட சிறப்பாக அவளை வர்ணிக்க முடியும். 

அன்று வீட்டுக்கு போனதும், கணேசனிடம் கேட்டாள். "நான் அழகாக இருக்கிறேனா?"

"அழகாக என்றால் என்ன?"

அவ்வைக்கு கொஞ்சம் சுருதி குறைந்தது. எனினும் மனம் தளராமல் தொடர்ந்தாள்.

"அதாவது, திருத்தமாக இருக்கிறேனா?"

"ஓரிரு நரை முடி வர ஆரம்பித்திருக்கிறது. நெற்றி கொஞ்சம் சின்னதாக இருந்திருக்கலாம். கண்களின் கீழே கருவளையம் இருக்கிறது. கன்ஸீலர் வைத்து மறைத்திருக்கிறாய். மூக்கு நீளம் போதாது. உதடுகள் தடிமனாக..."

"போதும், நிறுத்து." சற்றேறக்குறைய அலறினாள்.

"இன்னும் மிச்ச பாகங்கள் பற்றின ரிபோர்ட் வேண்டாமா?"

"ஐயோ, ஆளை விடு. இதற்கே  இனி என்னை கண்ணாடியில் பார்க்க முடியாது."

அடுத்த நாள் அவனைத் தேடிப் போனாள். 

"நேற்று எதெதோ சொன்னாயே? பாதியில் உரையாடல் நின்றுவிட்டது. இன்று ஒரு காஃபி குடித்துக்கொண்டே பேசலாமா?"

---

விக்னேஸ்வரி சுரேஷ்

Tuesday, 8 November 2022

விண்ணப்பம் (குறுங்கதை)

 கிபி 3022



அலுவலுக்கு இடையே சின்ன இடைவெளி கிடைத்ததும் வெளியே வந்தான், உரவோன். காஃபி ஷாப்பில் அமர்ந்து சாலையில் போகும் மனிதர்களையும், ரோபோக்களையும் வேடிக்கைப் பார்ப்பது அவன் பொழுதுப் போக்கு.

தூரத்தில் அவள் வரும்போதே அவள் கழுத்திலிருந்த பெயரைப் படித்துவிட்டான். 'காவ்யா'. அழகாக இருந்தாள். சரியாக அவன் டேபிளில் அவனெதிரே அமர்ந்தாள்.

"ஹாய். " சினேகமாக புன்னகைத்தாள்.

"ஹாய்." 

உரவோன் காஃபி எதுவும் சொல்லியிருக்கவில்லை. காவ்யா, ஃபில்டர் காஃபி ஆர்டர் செய்தாள். 

"பக்கத்துல தான் ஆஃபீஸா?"

"ஆமாம். ரோபோ ஃபார் ஹுமன்ஸ்" என்றான்.

"நான் பக்கத்தில் உள்ள ஹாஸ்பிட்டலில் மருத்துவராக இருக்கிறேன்." கை குலுக்கினாள். மிருதுவாக, வெம்மையாக இருந்தது.

காஃபி வந்தது. அதை டபராவில் ஊற்றி அவள் குடிப்பதை ரசித்தான். அந்த 20 நிமிடங்களில் நம்பர் மாற்றிக்கொள்ளுமளவு நட்பானார்கள்.

அடுத்த ஒரு மாதத்தில், தெரிந்த ஊரையே சுற்றிப்பார்த்தார்கள். அவளை காத்திருக்க வைக்காமல் சரியாக போய் மருத்துவமனை வாசலில் நிற்பான். உன் பெர்ஃபெக்ஷன் பிடித்திருக்கிறது என்று அடிக்கடி சொன்னாள். அவனுக்கு, சற்றே கலைந்த தலைமுடியோடு, அவள் அரக்கப்பரக்க ஓடிவருவது ரொம்பவே பிடித்திருந்தது. 

அடுத்து ஒரே அப்பார்ட்மேண்ட்'டுக்கு குடிபெயரலாம் என்று தீர்மானித்தார்கள். அதற்கு அரசாங்கத்திடம் மனு போட வேண்டும்.

தன்னுடைய, அவளுடைய பெயர், அலுவலக முகவரி, குடிமை எண் எல்லாம் போட்டு விண்ணப்ப படிவத்தை நிரப்பி காத்திருந்தான்.

சரியாக ஒரு நிமிடத்தில் மின்னஞ்சலில் பதில் வந்திருந்தது.

"மன்னிக்கவும் உரவோன். எங்கள் டேட்டாபேஸ் படி நீங்கள் சோதனை ஓட்டத்திற்கு விடப்பட்டுள்ள ஒரு மேம்படுத்தப்பட்ட ரோபோ."

---

விக்னேஸ்வரி சுரேஷ்

Monday, 7 November 2022

சாகாவரம்

 கிபி 3022



அந்த பேராசிரியர் தன் மாணவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார்.

"அது ஓர் அற்புதமான பிராஜெக்ட் தெரியுமா? மனிதனின் மூளையை ரோபோக்களுக்கு பொருத்துவது?! கிட்டத்தட்ட அவன் சாகாவரம் பெற்றுவிட்ட மாதிரி தான். தற்போது ரோபோக்களுக்கு உணர்ச்சிகள் இல்லை, அதையும் மனிதன் போலவே கொடுத்துவிட்டால்? அது தான் பிராஜெக்ட்டின் அடிப்படை நோக்கம்"

"பிறகு என்ன ஆயிற்று? மூளையை தர, மூளையுள்ள யாரும் முன் வரவில்லையா?" ஒரு குறும்புக்கார மாணவன் கேட்க, வகுப்பு சிரித்தது. 

"இல்லை. நிறைய குடும்பங்கள் முன் வந்தன. இதுவும் Organ donation தானே? சாகப்போகும் நிலையில் உள்ள ஒருவரின் மூளையை தானமாக கேட்கிறோம். இதன் மூலம், அவர் வாழ்வாங்கு வாழப்போகிறார்."

"இதனால் என்ன பிரயோஜனம்?"

"மனிதனின் தசைகள், எலும்புகள், ஏன் ஒவ்வொரு செல்லுமே அழிந்துப்போகும் வகையிலேயே படைக்கப்பட்டிருக்கின்றன. தற்போதுள்ள விஞ்ஞானத்தாலும் வயதாகும் வேகத்தை  குறைக்கலாமே தவிர நிறுத்த முடியாது. ஆகையால் அவன் செத்து தான் ஆக வேண்டும்."

"அதற்காகத் தான் சாகாவரம் பிராஜெக்ட்'டா?"

"ஆமாம். மனித மூளை அபார சக்திக்கொண்டது. அதை அப்படியே பாதுகாத்து ரோபோவின் மற்ற இயக்கத்தோடு இணைத்துவிடால், சாகாத மனிதன் உருவாக்கிவிடலாம் என்று நினைத்தோம்."

"பிறகு என்ன ஆயிற்று? ஏன் அந்த பிராஜெக்ட்டை கைவிட்டீர்கள்?"

"மொத்தம் மூன்று மனித மூளைகள் கிடைத்தன. இரு ஆண்கள், ஒரு பெண் போபோக்களை மனித மூளையோடு உருவாக்கினோம். நம்ப மாட்டீர்கள், குரல் கூட அப்படியே மனித குரல் கொண்டுவந்துவிட்டோம்."

பேராசிரியர் கண்களை துடைத்துக் கொண்டார்.  அந்த குறும்புக்கார மாணவன் கூட வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தான். வகுப்பில் பேரமைதி.

"அறிவு தான் மனிதனின் ஆயுதம். அவனை காப்பதும், அழிப்பதும் அதுவே.

ஆய்வகத்தில் இருந்த இரு ஆண் ரோபோக்களும் அந்த ஒரு பெண் ரோபோவையே காதலித்தன. அவள் இருவரையும் நிராகரித்தாள். மனமுடைந்த ஒரு ஆண் ரோபோ தற்கொலை செய்துக்கொள்ள,  மற்றொன்று அவளையும் கொன்று, தானும் இறந்தது கிடந்தது."


------

விக்னேஸ்வரி சுரேஷ்

Sunday, 6 November 2022

மாண்புமிகு (குறுங்கதை)

கிபி 3022



ஆனந்தராஜுக்கு ரொம்ப பெருமை. மற்ற எல்லா அரசியல் தலைவர்களும் தன் உதவியாளராக ரோபோக்களை வைத்திருக்க, தலைவர் ஷாஜி மட்டும் அவனை தாண்டித் தான் ரோபோக்களை நம்புகிறார். அவனே அதைப்பற்றி பல முறை கேட்டும் இருக்கிறான்.

"தலைவரே..  நீங்க ஏன் என்னை கூட வச்சிருக்கீங்க?"

"அதொண்ணுமில்லடா. என்ன தான் ஆயிரம் மிஷின் வந்தாலும், தலைவரே, தலைவரேன்னு சக மனுஷன் கூப்பிடறத கேட்டுக்கிட்டு இருந்தா அரசியல்வாதியா கெத்தா இருக்கு."

ஏகப்பட்ட பேரை இல்லாமல் ஆக்கிவிட்டுத் தான் தலைவராகியிருந்தார், ஷாஜி. திருமணம் செய்துக் கொள்ளவில்லை. வாரிசும் இல்லை. அவருக்கு எதாவது ஆனால், கட்சியில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகும் அபாயம் இருக்கிறது. அதைப் பற்றி அவனிடம் மட்டும் கவலைக் கொள்வார்.

"எனக்கு அரசியல் கத்துத் தாங்க, தலைவரே. நம்பிக்கையா இருப்பேன்"

"போடா. அரசியல்லாம் யாரும் கத்துக்கொடுக்க முடியாது. அது ஜீன்ல இருந்தாத்தான் உண்டு."

"அப்ப, கல்யாணம் பண்ணிக்கிடலாமில்ல? உங்க பையன் கட்சிய வழி நடத்துவான்."

"அடப்போடா. தாஜ்மஹால் கட்டினவனுக்கு ஆன கதி தெரியுமில்ல? அரசியல்ல எவனையும் நம்ப முடியாது."

ஆனால் அப்படி ஓர் ஏற்பாட்டை ரகசியமாக செய்து முடித்திருப்பார் என்று அன்று காலை வரை ஆனந்த் ராஜுக்கு தெரியாது.

"எங்க போறோம், தலைவரே?"

"என்னோட க்ளோன பார்க்கப்போறோம். பல வருஷம் முன்னயே ப்ளான் பண்ணி ஏற்பாடெல்லாம் பண்ணிடேன். என் ஜீன வச்சே உருவாக்கித்தந்திருக்காங்கடா. இப்ப டெக்னாலஜி முன்னேற்றத்தால Ageing அதிகப்படுத்தி என் வயசுல இருக்க மாதிரி ஒருத்தன தந்திருக்காங்க. தனி வீட்ல வச்சிருக்கேன். "

"ஐ!! அப்ப எனக்கு இரண்டு தலைவரு!"

ஆனந்தராஜ் உற்சாகமாக விசிலடித்தான்.

அந்த இடம் அத்துவானக்காட்டில் இருந்தது. ரகசியத்திற்காக போலும். 

"நீ இங்க இருடா." தலைவர் மட்டும் உள்ளே போனார்.

அவன் நினைத்ததைக் காட்டிலும் அதிக நேரமானது. வரும் போது தலைவர் மட்டும் தான் வந்தார்.

ஆனந்தராஜ் குழப்பமாக பார்த்தான்.

"எங்க தலைவரே, க்ளோனு?"

"ஒரு உறைல இரண்டு கத்தி இருக்க முடியாதுடா. நீ வண்டிய எடு" 

தலைவர் திரும்பிப் புன்னகைத்தார். எப்போதும் மின்னும் தங்கப்பல்லை காணவில்லை. 


Saturday, 5 November 2022

காவியக்காதல் (சிறுகதை)

கிபி 3022



"டாக்டர் கல்கி, இது என் அண்ணன், கரிகாலன். இவன் போன வாரம் நண்பர்களோட மார்ஸ்'க்கு டூர் போயிட்டு வந்தான். வந்ததிலிருந்தே இப்படி தான் பேயடிச்ச மாதிரி இருக்கான். ஒழுங்கா சாப்பிடறதில்ல, தூங்கறதில்லை."

குந்தவை சொல்லிக்கொண்டே போனாள். அவள் சொல்லாவிட்டாலும் அந்த ரோபோ டாக்டருக்கு அவள் சொன்ன எல்லா தகவல்களும் கரிகாலன் கட்டியிருந்த வாட்ச் மூலம் தகவலாக தரப்பட்டிருந்தது. கொஞ்சம் சீரியஸ் பேஷண்ட் தான் என்பதால் முன்னுரிமை தந்து அப்பாயிண்மெண்ட் அளிக்கப்பட்டிருந்தது.

"மிஸ்டர்.கரிகாலன், உங்கள் எமொஷனல் பாலஸ் ரொம்பவே வீக்'காக இருக்கிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், தற்கொலை மனநிலைக்கு போய் போய் வருகிறீர்கள். மார்ஸ்'ஸில் உங்களுக்கு என்ன நடந்தது?"

"அவள்.. நந்தினியை பார்த்தேன். நிர்தாட்சன்யமாக என் காதலை நிராகரித்தாள்."

கல்கி தன் டிஜிட்டல் சிரிப்பை உதிர்த்தார். "இன்னும் எத்தனை ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும், இந்த மனிதர்கள்  காதலில் விழுவதை யாராலும் தடுக்க முடியாது." 

குந்தவை எரிச்சலானாள். "டாக்டர், இவன் சும்மா இல்லாமல் பாரில் நந்தினியின் லிவ்-இன் பார்ட்னர் மூக்கை உடைத்திருக்கிறான். பின்னர், தூக்கி வைத்தா கொஞ்வாள்?"
 
கரிகாலன் உறுமினான். "அவள் என்னவள்!!!"

டாக்டர் பதட்டப்படாமல், "வாரத்துக்கு நாலு லவ் கேஸு வருது. என் ஹீயரிங் வால்யூமை குறைக்க வேண்டி இஞ்சினியருக்கு எழுதியிருக்கிறேன்."

குந்தவை, இப்போது டாக்டரை பாவமாக பார்த்தாள் 

"மிஸ்டர் கரிகாலன், சில மாத்திரைகள் தந்து ஆக்ஸிடாக்ஸின் சுரப்பதை குறைத்தால், நந்தினியை உங்கள் மூளையிலிருந்து தூக்கிவிட முடியும். டோப்போமைன் ஹார்மோன் வேறு தாறுமாறாக.. "

கரிகாலன், மீண்டும் க்ளினிக் அதிர கத்தினான்.

"எதையாவது செய்யுங்க... எனக்கு தூங்கினா போதும்."

டாக்டர், கரிகாலனை படுக்க வைத்து, சில வயர்கள், கொஞ்சம் மின்சாரம், சிரிஞ்சில் மருந்து என்று கலவையாக வைத்துக்கொண்டு அவன் மூளைக்குள் விளையாடினார்.

பத்து நிமிடம் கரைய..

"இப்ப நீங்க போகலாம். உங்க மூளைக்குள் காதல், தற்கொலை எண்ணம் இரண்டுமே காணாம போயாச்சு" க்ளவுஸை கழட்டி குப்பைக்குள் வீசினார்.

கரிகாலன் சோர்வாக உணர்ந்தான். குந்தவையை பார்க்க எரிச்சலாக இருந்தது. அவள் கையை உதறிவிட்டு ரோட்டில் இறங்கினான். 

"அண்ணா.. மார்ஸிலிருந்து ஸ்பேஸ் க்ராஃப்ட் வருது.. "என்று அவள் கத்தியது முழுவதுமாக அவனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.

-----
விக்னேஸ்வரி சுரேஷ்

Friday, 4 November 2022

Perfectionism (குறுங்கதை)

கிபி 3022


வெள்ளை கோட், கண்ணாடி சகிதமிருந்த ஒரு விஞ்ஞானி ரோபாட்', கர்ப்பமாக இருந்த ஐஸ்வர்யாவிடம் விளக்கிக்கொண்டிருந்தது.

"DCHS2, RUNX2, GLI3 மற்றும் PAX1 இந்த நான்கு ஜீன் களால் தான் மூக்கு சப்பையான குழந்தைகள் பிறக்கின்றன.  EDAR ஜீன் தாவங்கட்டை நீண்டு இருப்பதற்கு காரணமாகிறது. இவற்றை கருவிலேயே சரி செய்துவிட்டால், உங்கள் குழந்தை பெர்ஃபெக்ட்'டாக இருப்பதற்கு கேரண்டி."

அவள், "என்ன செலவானாலும் பரவாயில்லை டாக்டர்" என்று உதிர்க்க கூடாத ஓர் ஆயிரங்கால பழைய வசனத்தை சொன்னாள். அவளும், அவள் பார்ட்னருமாக, தென் இந்திய தோல் நிறம், க்ரேக்க மூக்கு, ரஷ்ய உயரம், ஐரோப்பிய தலைமுடியோடு பிறக்கும் வகையில் குழந்தைக்கு ஜீன்கள் தேர்தெடுத்திருந்தார்கள்.

இப்போது இது அரசாங்க கட்டளை. மனிதர்கள் அசிங்கமாக வலம் வருவது எந்த நாட்டிற்கும் இழிவானது. பாதி செலவை அரசே ஏற்றுக்கொள்ள, குழந்தை பிறக்கும் முன்பே தோல் நிறம், மூக்கு வளைவு, கண்களின் அகலம் ஆகியவை தீர்மானிக்கப்படுகிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்க முடியாத பெற்றோர்கள், இருக்கும் ஆயிரம் சாம்பிளுக்குள் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். 'பெர்ஃபெக்ட் மனிதன்' பிறக்க எல்லா முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, ஒவ்வொரு நாளும் கருவிலிருந்து குழந்தை கண்காணிக்கப் படுகிறது. அப்படியும் சில பாகங்கள் பிசகாகிவிட்டால், உயர்தர காஸ்மெடிக் சர்ஜரி மூலம் சரி செய்யப்படும்.

இன்று தெருவில் நடமாடும் எல்லா ஆண்களும், பெண்களும் அந்தந்த நாட்டின் அழகை பிரதிபளிப்பவர்களாகவே இருக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு சென்று செட்டில் ஆக விரும்பும் இளைஞர்கள், அந்த நாட்டு தோல் நிறத்துக்கு மாற்றிக்கொண்டு, விசாவுக்கு விண்ணப்பிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    


இன்று அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளைப் பற்றி தான் ஊரெல்லாம் பேச்சு! அதை பார்த்தே ஆக வேண்டும் என்று ஐஸ்வர்யாவின் பாட்டி அடம் பிடிக்க, ஐஸ்வர்யா நடுங்கும் அந்த முதிய கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். பார்க்கப் போகும் பொருளைப் பற்றி பாட்டிக்கு அதிகம் தெரிந்திருந்தது. வரும் வழியெல்லாம் மெளனமாக வந்தாலும், பாட்டியின் உள்ளம் குமுறிக்கொண்டிருப்பதாக அவள் கையில் கட்டியிருந்த வாட்ச் மூலம் ஐஸ்வர்யாவுக்கு தகவல் வந்திருந்தது.

கண்ணாடி பேழைக்குள் வைத்திருந்தார்கள். சுத்தம் செய்யப்பட்டு மின்னிக்கொண்டிருந்ததை ஜஸ்வர்யா ஆர்வமாக பார்க்க, தொலைவில் நின்றப்படியே பாட்டி ஒரு முறை காறி துப்பினாள். "எல்லாம் இங்கருந்து ஆரம்பிச்சது தான்" என்றாள் ஆங்காரமாக.

வைர வைடூரியங்கள்  எல்லாம் தாராளமாக பதிக்கப்பட்டு, ஆயிரம் ஆண்டுகள் முன்பு பயன்படுத்தப்பட்ட, 'உலக அழகி கிரீடம்' அங்கே சாதுவாக அமர்ந்திருந்தது.

----
விக்னேஸ்வரி சுரேஷ்


கொஞ்சம் கல்யாணம், கொஞ்சம் Affair.

கிபி 3022 



சாவித்திரி குடும்ப நீதிமன்றத்தில், விவாகரத்து கேட்டு நீதிபதி ரோபோ முன் சிலபல வயர்கள் சூழ அமர்ந்திருந்தாள். 

மை லார்ட் ஆரம்பித்தார். 

"சத்தியவானுடன் உங்கள் திருமணம் 30 நாட்கள் கடந்துவிட்டதா?"

"ஆமாம். அதற்காக பல்லை கடித்துக் கொண்டு காத்திருந்தேன்." 

குறைந்தது முப்பது நாட்கள் ஆகியிருந்தால் தான் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.  

"சரி, என்ன உங்கள் பிரச்சனை?"

"எங்கள் திருமணத்தில் ரொமான்ஸ் இல்லை."

"அவர் உங்களோடு கலவி கொள்வதில்லையா?"

"அதில்லை. காலை எழுந்ததும் குட்மார்னிங் மட்டும் சொல்கிறார். அதனோடு ஒரு டார்லிங் சேர்ப்பதில்லை. வாட்ஸப் ஸ்டேடஸ் பார்க்கிறார், ஆனால் அதற்கு தகுந்த எமோஜி அனுப்ப இன்னமும் தெரியவில்லை. குறிப்பாக முத்தங்கள்! நேரில் தருமளவுக்கு சாட்'டில் அனுப்புவதில்லை. நான் வேறு ஆணைப் பற்றி பேசினால், செல்லமாக பொறாமை படுவதில்லை. எனக்கு சலிப்பாக இருக்கிறது."

"அவ்வளவு தானா?"

"எல்லாவற்றிலும் ஒரு பெர்ஃபெக்‌ஷன். ரோபோ போல. " சாவித்திரி சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டாள்.  "அவர் எதை எடுத்தாலும் அதன் இடத்தில் வைத்துவிடுகிறார். வீடு கலைவதே இல்லை. அவரால் எனக்கு தாழ்வு மனப்பான்மையே வந்துவிட்டது."

"வேறு எதாவது? கள்ளத்தொடர்பு?"

"அவரை யாரும் காதலிக்க சாத்தியமில்லை. அலுவலக நேரம் முடிந்ததும் கணிணியை ஆஃப் செய்து விடுகிறார். பத்து மணிக்கு தூங்கிவிடுகிறார். குறிப்பாக ஃபோனில் லாக் இல்லை. எதாவது தொடர்பு இருக்குமா என்று கூட அவர் ஃபோனை சலித்து எடுத்துவிட்டேன்."

நீதிபதி இப்போது சாவித்திரியை உற்று நோக்கினார். "நீங்கள் வேறு யாருடனாவது பேசிக்கொண்டிருக்கிறீர்களா?"

சாவித்திரி திடுக்கிட்டாள். நீதிபதிகளாக ரோபோக்கள் நியமிக்கப்பட்ட பிறகு, நீதிமன்றத்தில் பொய்கள் 99.99989 சதவிகிதம் குறைந்துவிட்டன. ரோபோக்கள் மனித உடல்மொழி பற்றி அக்குவேறு ஆணிவேறாக ஒரு மைக்ரோ செகண்டில் தெரிந்துக்கொள்கின்றன. குரலின் மிகச்சிறிய மாற்றம், கண்கள் போகும் திசை, தசைகளின் இறுக்கம், இதயதுடிப்பின் ஏற்ற இறக்கம், உதடுகள் விரியும் தன்மை என அத்தனையும் கவனித்து, நாம் சொல்வது பொய் என்றால், அத்தோடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, சமயத்தில் நீதிமன்ற அவமதிப்பாக தண்டனையும் அனுபவிக்க வேண்டி வரும்.

"ஆமாம். ஃபேஸ்புக்கில் ஒருவரோடு. அவர் பெயர் இயமன்"

"ஆக, அது தான் நீங்கள் விவாகரத்து கோர உண்மையான காரணம் அல்லவா?"

"இயமனோடு பழகும் போது தான், என் திருமணத்தில் உள்ள குறைகள் தெளிவாக தெரிகின்றன. இயமன் என் மீது காதலை பொழிகிறார்."

"நியாயமாக உங்கள் கணவர் சத்தியவான் தான் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருக்க வேண்டும். உங்களுக்கு திருமணம் சலித்துவிட்டது. ஒரு  மாற்றம் தேவைப்படுகிறது. மற்றவை நீங்கள் தேடிக்கொண்ட காரணங்கள். "

"என் காரணங்களில் உள்ள உண்மை உங்களுக்கு தெரியவில்லையா?"

"உங்கள் போதாமைகளை அவர் குறைகளாக மாற்றுகிறீர்கள்.  ஆகையால் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை." 

சாவித்திரி எரிச்சலடைந்தாள். "எனக்கு விவாகரத்து வேண்டும். மேற்கொண்டு என்ன செய்யட்டும்?"

"சத்தியவானின் நலனை கருதி, விவாகரத்து வழங்கப்படுகிறது. தற்போது இருவருமாக வாங்கியிருக்கும் வீட்டை நீங்கள் அவருக்கு விட்டுவிட வேண்டும். ஜீவனாம்சமாக மாதம் மாதம்..."

"போகட்டும். இனி நான் இயமனை திருமணம் செய்ய தடை ஏதுமில்லை தானே?"

"இருக்காது. நீங்கள் சொன்ன ரொமான்ஸ் இல்லை போன்ற காரணங்களுக்காக இயமனின் மனைவியும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்."-

-----


விக்னேஸ்வரி சுரேஷ்

Thursday, 3 November 2022

மனம்

கிபி 3022



அரவிந்த் ஓர் அழகான இளைஞன். 3022 லும் ஆண்களை வர்ணிக்க வேறு மெனக்கெடல் தேவைப்படவில்லை. டேட்டிங்'கென வெப் சைட்'கள் வழக்கொழிந்து போய்விட்ட காலம் இது. அதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் மினி ரோபோக்களை வாங்கி பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு வலம் வந்தால், சரியான பெண் கண்ணில் படும்போது சமிஞ்ஞை செய்யும். 

'இதற்கு இப்போது 'மனம்' உண்டு! தனியே ரோபோக்களால் சிந்திக்க முடியும். சொல்லப்போனால், மனிதன் ஒரு சந்தர்ப்பத்தில் எப்படி யோசிப்பானோ அப்படி யோசிக்கும்', அந்த விஞ்ஞானி @ விற்பனையாளர் கண்கள் விரிய விளக்கினார். 

'அதாவது அது உங்களை புரிந்துக்கொள்ளும். உங்கள் கண்கள் விரிவதை வைத்து. உங்கள் வாட்ச்'சின் மூலம் பெறப்படும் தகவல்களான இதயத்துடிப்பு அதிகரிப்பதின், குறைவதின் மூலம். இன்னும் சிலதெல்லாம் வைத்து. ' என்று கண்ணடித்தார். 

'ஆக, எனக்கான பெண்ணை இது கண்டுபிடித்து தரும் என்கிறீர்கள்?' என்று அரவிந்த் கேட்க,

'நிச்சயமாக. '

'என்ன பெயரிட்டிருக்கிறீர்கள்?'

'மெட்ரிமோனியல்! சுறுக்கமாக, மோனி!'

வாங்கிக்கொண்டான். அவன் சொன்ன சில பிரத்யேக கண்டிஷன்கள் அதன் சாஃப்ட்வேரில் ஏற்றப்பட்டது.

அரவிந்த்'துக்கு திருப்தி தான். மால்கள், பீச், கோவில் என்று மோனியோடு சுற்றி சுற்றி வந்தான். வாரக்கடைசியில், மோனியை ப்ரிண்டரில் கனெக்ட் செய்து, வீக்லி ரிபோர்ட்'டை ப்ரின்ட் எடுத்தான்.

இதுவரையில் அரவிந்த்'துக்கு பார்த்தவுடன் பிடித்த பெண்கள் ஐந்து பேர். அதில் இருவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவர்களுக்கு ரிலேஷன்ஷிப்பில் ஆர்வமுமில்லை. மீச்சமுள்ள மூவரில் ஒருவர் இந்தியாவில் வாழ பிரியப்படவில்லை. கடைசியாக இருவர், அதிலும் கயல் என்பவர் அரவிந்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று மோனி தன் அறிக்கையை தந்திருந்தது. கயல் அழகாக இருந்தாள். அவளுக்கும் ரிபோர்ட் போயிருக்கும். பிடித்திருந்தால், அவள் அரவிந்தை அழைத்துப் பேசுவாள். அவனுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும், குறிப்பாக இருவரில் ஒருவரை என்ன காரணத்தால் மோனி தேர்ந்தெடுத்திருக்கும் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அவனை உந்தியது.

more details on the report என்று பொடி எழுத்தில் என்னவோ எழுதியிருக்க, அரவிந்த், அந்த ரிபோர்ட்டை கணிணியில் உயிர்ப்பித்து, லிங்க்'கை கிளிக் செய்தான். 

கயல்'லுக்கும் அரவிந்துக்கும் 80% பொருந்துகிறது.

கயல் வைத்திருக்கும் டானி ரோபோட்'டுக்கும், அரவிந்தின் மோனிக்கும் 100% பொருந்திப்போகிறது. 

ஆகையால், கயலை தேர்வு செய்கிறேன்.  

Yours sincerely, Moni. 


-------

 விக்னேஸ்வரி சுரேஷ்

பிரதிநிதிகள் (குறுங்கதை)

கி.பி 3022

வெட்கிரைண்டர் போல் வீட்டுக்கு வீடு ரோபோ வந்தாகிவிட்டது. நிதியமைச்சர், ரோபோ வரியை GST க்குள் கொண்டு வந்து பட்ஜெட் வாசிக்கிறார். அன்றைய செய்திகளை ரோபோக்கள் கேட்டு, தத்தம் முதலாளிகளிடம் சுருக்கமாக புரியும்படி சொல்கின்றன. 

இன்றைக்கு முக்கிய செய்தியாக, பிரதம மந்திரி நம் நாட்டின் ஜனத்தொகை குறைந்து வருவதைப் பற்றி கவலை தெரிவித்திருக்கிறார். மனிதர்கள், குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்கப்படுத்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

தற்போது பெரும்பாலான பணிகளுக்கு ரோபோக்கள் இருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைக்கும் வேலையை மட்டும் மனிதர்கள் பார்த்துக்கொண்டால் போதும். இரு நாடுகளுக்கிடையேயான சண்டைகள், உள்நாட்டுக்கலவரங்கள், தொலைக்காட்சியில் தோன்றி சண்டையிடுவது, அந்த சண்டையை ட்விட்டரில் பகிர்வது எல்லாம் ரோபோக்கள் வசம். 

வீடுகள் தோறும் ஆண்கள், பெண் ரோபோக்களையே துணையாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். அதற்கு அவர்கள் தந்திருக்கும் காரணங்கள் - 1) அவன் வீட்டுக்கு வந்ததும் சூடாக உணவு பரிமாறிவிட்டு ரோபோக்கள் அமைதியாகின்றன. 2) தேவைப்பட்டால் (மட்டும்) ஜென்ஸி குரலிலோ, ஷகிரா போலவோ பாடவும் செய்கின்றன. 3) சோஷியல் மீடியாவில் இத்தனை நேரம் செலவிடுகிறாயே என்று முணுமுணுப்பதில்லை. 4) முக்கியமாக வார இறுதியில் ஷாப்பிங் போகவேண்டாம். 5) உனக்கு ஏன் இன்னும் அம்மா, அப்பா இருக்கிறார்கள் என்று கேட்பதில்லை.  

பெண்கள், தாங்கள் பேசுவதை காது கொடுத்து கேட்கும் வகையிலான ஆண் ரோபோக்களை டிஸைன் செய்து வாங்கிக்கொள்கிறார்கள். இன்ன ஷேட் லிப்ஸ்டிக் உனக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி அவளை குளிர்விக்கின்றன. மாமியார், நாத்தனார், உறவினர்கள் என்பதான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் இல்லாமல் வரும் ரோபோக்கள் தங்களை சுகந்திரமாக வாழ வைத்திருப்பதாக 99.9998 சதவிகிதம் பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.  

எனினும், இப்படியே போனால் மனித இனம் அருகிவிடும் என்று சர்வதேச அரங்கில் கவலை தெரிவிக்கப்பட்டது. 'மற்ற எல்லாவற்றிற்கும் ரோபோக்கள் இருந்தாலும், காதலிக்க மனித மனதால் மட்டுமே முடியும்!' என்ற தத்துவம் டி-ஷர்ட் வாசகமாக பிரிண்ட் செய்யப்பட்டது.  ஆண்களும் பெண்களும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால், இயற்கையான ஈர்ப்பு தூண்டப்படும் என்று மருத்துவ நாளிதழ்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டன. குழந்தை வளர்ப்புக்கென தனி ரோபோக்களை நிறுவனங்கள் விளம்பரப்படுத்தின. 

சமூக ஆர்வலர்கள் சிலரின் கடும் முயற்சியால், மிகப்பெரிய அளவில் ஆண்களும், பெண்களும் சந்தித்துக்கொள்ளும் கூட்டம் ஏற்பாடாயிற்று. அங்கேயே தங்களுக்கான ஜோடியை தீர்மானிப்பவர்கள் அமர்ந்துக்கொள்ள ஏதுவாக இரு நாற்காலிகள் மட்டும் கொண்ட மேஜைகள் தனியாக அலங்கரித்து காணப்பட்டது. காதல் வரத்தோதாக மெல்லிய குளிர், லேசான பியானோ இசை எல்லாம் ரெடி! 

கூட்டத்துக்கு வருவதற்கு முன்பே ஆண்களும் பெண்களும் எதிர்பாலினத்தின் மீதான தங்கள் எதிர்பார்ப்பு படிவத்தை ஒரு மாதம் முன்பாகவே நிரப்பி அனுப்பியிருந்தார்கள். அதை சாஃப்ட்வேர் ப்ரோகிராம் மூலம் சலித்தெடுத்து, ஒரே அலைவரிசை கொண்டவர்கள் ஓரிடத்தில் அமருமாறு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஊதா நீற கண் கொண்ட பெண் பிடிக்கும், 6 பேக் ஆண் பிடிக்கும், பென்ஸ் கார் வைத்திருந்தால் பிடிக்கும் என்பவர்கள் ஏனைய மனிதர்களை சந்தித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.  

கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. 'காதலிப்பது' மனித இனத்துக்கு மறந்துப் போய் விட்டதால், சாம்பிளுக்கு திரைப்படம் காட்ட ஏற்பாடாகியிருந்தது. மிகப்பெரிய திரையில் அழகிய ஆணும், பெண்ணும் தோன்றி கண்ணுக்குள் கண் நோக்கினார்கள். பின்னணி இசை ஒலிக்க, கை கோர்த்துக்கொண்டு கடற்கரையில் வலம் வந்தார்கள். ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்துக்கொண்டு கதை பேசினார்கள். மாறி மாறி ஒருவர் மடியில் ஒருவர் படுத்து தூங்கினார்கள். திரைப்படம், மேலும் தொடர்ந்துக்கொண்டே போக,

பிரதிநிதிகளாக அனுப்பிவைக்கப்பட்டிருந்த ரோபோக்கள் அவற்றை கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டன.

-------

விக்னேஸ்வரி சுரேஷ்



Tuesday, 9 August 2022

புண்ணியாத்மா - சிறுகதை


 "நம்ம லட்சுமிக்கு எதாவது பண்ணனும்டா."  

அம்மா இதை நூறாவது முறையாக சொல்கிறாள். அவள் எப்பவும் இப்படித்தான். எதையாவது மனதில் வைத்துக்கொண்டு, சொல்லத்தெரியாமல் தவிப்பாள். இரண்டு வருடத்துக்கு ஒருமுறை நான் அமெரிக்காவிலிருந்து வந்துப்போகிறேன். ஒவ்வொருமுறையும் யாரையாவது கை காட்டுவாள்.  'நம்ம ட்ரைவர் முருகன் பையனுக்கு அட்மிஷன் கிடைக்கலையாண்டா. நீ எதாவது செய்யேன்.' 

'பி பிளாக்ல இருக்காளே வசந்தி, அவ தங்கைக்கி அமெரிக்கால வரன் பார்த்திருக்காளாம். நீ கொஞ்சம் பையன பத்தி விஜாரிச்சு சொல்லேன்.' 

'அயர்ன் பண்றானே மணிகண்டன், கால்ல புண் வந்து ஆறவே இல்லையாம். உன் ஃபிரண்ட் எவனோ அப்பல்லோல டாக்டரா இருக்கானே, கூடிண்டு போறயா?' 

இவ்வாறாக அவள் விண்ணப்பங்கள் மற்றவர்களுக்கானவை. தனக்கென்று எதுவும் கேட்கத்தெரியாது. அவள் கோபப்பட்டு நானும், அண்ணாவும் பார்ததேயில்லை. அவளின் அதிகப்பட்ச அதட்டலே, ‘டேய்தான். இன்று சின்னச்சின்ன விஷயங்களுக்காக நானும், மனைவியும் பொறுமையிழந்து சண்டையிடும் போது,  அம்மா, அப்பாவை நினைத்துக் கொள்கிறேன். இவ்வளவுக்கும் சிறுவயதில் நானும், அண்ணாவும் நிறைய சேட்டை செய்திருக்கிறோம். சாமான்கள், ஜன்னல்கள் உடைவது குறைந்தபட்சம் என்றால், ரத்தகாயம் அதிகபட்சம்.  

அம்மா தான் இப்படி என்றால், அவள் மனம் நோக அப்பா பேசியதேயில்லை. நீங்களேல்லாம் அருகிவரும் ஜீவராசிம்மா என்றால், ‘போடா' என்று வெட்கப்படுவாள். அவர்கள் வாழ்வில் ஆடம்பரம் என்ற ஒன்றே அறியாதவர்கள். கல்யாணநாள் என்றால், சமையலில் கூடுதலாக ஒரு பாயசம் சேர்ந்திருக்கும். அவ்வளவு தான். நான், எங்கள் கல்யாண நாளை மறந்தால், என் மனைவி பொங்கலே வைப்பாள். அன்பை பரிசுகளால் தான் வெளிப்படுத்த முடியும் எங்களுக்கு புகட்டிவிட்ட வணிக குரல்கள் எட்டாத தலைமுறை அம்மா, அப்பாவுடையது 

அப்பா, ஜே.கிருஷணமூர்த்தியை சாயலில் மட்டுமில்லாமல் தீர்க்கமான கருத்துக்களாலும் ஒத்திருந்தார். அனாவசியமாக எதுவும் பேச மாட்டார். ஒரு நாள் முழுவதற்குமாக சேர்த்து, அவர் பேசியவற்றை 4 ஷீட்டின் அரை பக்கத்துக்குள் அடுக்கலாம். ஆகையால், அவர் பேசினால் மதிப்புக்கொடுத்து கேட்பார்கள், கேட்போம். நானும், அண்ணாவும் ஆளுக்கொரு தேசத்தில் குடியுரிமை பெறும்போதும், மனதாற வாழ்த்து சொன்னார். அம்மாவுக்குத் தான் குரல் தழுதழுத்தது. 

அவா வாழ்க்கைய அவாளே டிஸைட் பண்ணிக்கற பக்குவம் இருக்கு. எங்க இருந்தாலும், வாழ்க்கையோட அடிப்படை அறத்தை கைவிட மாட்டா. அப்படி வளர்த்தோம், அவ்வளவு தான் நம்ம கடமை. ரெக்க முளைச்சப்பிறகும் குஞ்சுப்பறவைய பிடிச்சு வச்சுக்கறது இயற்கைல நடக்குமா, சொல்லு?’ என்பதாக அம்மாவை சமாதானப்படுத்தினார். 

அண்ணா, போன முறை தன் மகள்களை அழைத்து வந்தான். மன்னி, ஷாப்பிங் போனது போக மிச்ச நேரத்தில் இந்திய தோழிகளோடு லஞ்சுக்கும், டின்னருக்கும் போய்வந்தாள். முண்டா பனியனும், தொடை தெரியும் ஷார்ட்ஸும் அணிந்திருந்த பேத்திகளைப் பார்த்து அம்மாவுக்கு வருத்தம் தான் 

டேய். நமக்குத்தாண்டா குழந்தை. ஊர்ல எல்லார் கண்ணும் அப்படியே இருக்குமா, சொல்லு?’ என்று அம்மா அண்ணாவிடம் அங்கலாய்த்த போதெல்லாம் அப்பா, அவள் தோளை மெல்லத் தட்டுவார். அதற்கு அர்த்தம், ‘இதற்கு மேல் பேசாதே!’, என்பதே. உங்கப்பா போல என்னால விச்ராந்தியா  இருக்க முடியலையேடா, என்று அம்மா அங்கலாய்ப்பாள்.  

என்ன உடம்புக்கு முடியவில்லை என்றாலும், அம்மா குளிந்து மஞ்சள் பூசி நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு  தினம் ஒரு சுலோகம் சொல்லியவாறே சமைக்கத் துவங்கிவிடுவாள். சமையல் முடியும் வரை பெருமாளும், சிவனும், முருகனும், அம்பாளும் சமையலறையில் நடமாடுவார்கள். அம்மா சமையலை சாப்பிட்டு பழகிய அப்பா, எப்படித்தான் சமையல்காரம்மாவுக்கு ஒத்துக்கொண்டார் என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். எந்த பாத்திரமும் உருளாமல், துளி கூட சிந்தாமல், வீணாகாமல் அம்மாவால் உன்னதமாக சமைக்க முடியும். வாரத்தின் எழு நாட்களில் எழு வித மெனுவை தருவாள். மோர் குழம்பு என்றால், பருப்பு உசிளி. வற்றல் குழம்போடு மோர் கூட்டு, சாம்பார் என்றால் கார உருளை என்று காம்பினேஷனில் அசத்துவாள். என்ன, அம்மாவுக்கு உடனுக்குடன் இன்ஸ்டாகிராமில் போட்டு அலட்டத் தெரியாது. யூ-ட்யூபில் சம்பாதிக்கவும் இல்லை.  

அம்மா, திடீரென ஒரு நாள் தலைசுற்றி கீழே விழுந்தாள். வெர்டிகோ. கழுத்து எலும்பு தேய்ந்திருப்பதாக மருத்துவர் சொன்னார். அம்மாவை விடவும் அப்பா பத்து வயது மூத்தவர். எண்பத்து நான்கு வயதாகிறது. அப்பாவே  கொஞ்ச நாள் தடுமாறி சமைத்துக்கொண்டிருந்தார். நானும், அண்ணாவும் தான் கட்டாயப்படுத்தி சமையலுக்கு லட்சுமியை ஏற்பாடு செய்தோம். அம்மா இடத்தில் லட்சுமியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. லட்சுமியின் சமையலில் எல்லாம் இருந்தது, எனினும் அது அம்மா சமையல் இல்லை. அம்மா ஆரம்பத்தில் வருத்தப்பட்டாள். அப்பா என்ன நினைக்கிறார் என எப்போதும் போல எங்களால் தெரிந்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், அது தான் அப்பா. அவர் வாயிலிருந்து குறைகளே வராது 

ஏம்பா, உங்களுக்கு இப்பலாம் அம்மா சமைச்சு சாப்பிட முடியலையேன்னு வருத்தமில்லையா?’ என்று வாய்விட்டே கேட்டுவிட்டேன். மாற்றத்தை ஏற்பது தான் பக்குவம் என்றார், மென்மையாக. அம்மா, தன்னால் இயன்ற அளவுக்கு லட்சுமிக்கு சமையல் கற்றுத்தந்தாள். 

அவர் பேசாமலேயே அவர் தேவைகளை அம்மா புரிந்துக்கொள்ளுவாள். ஐம்பதைந்து வருட தாம்பத்தியம் ஆயிற்றே! அம்மா மீது அப்பா வைத்திருக்கும் காதலை வைத்து நூறு திரைப்படங்கள் எடுக்கலாம். இரவில், அம்மாவின் கால் விரலிடுக்குகளில் சைபால் தடவி விடுவார். பிபி மாத்திரையும் தண்ணீரையும் கொண்டு வந்து கையில் தருவார். அம்மா சற்று நேரம் தள்ளி எழுந்துக்கொண்டால் மட்டும், அவருக்கு இருப்பு கொள்ளாது. தூங்கிக்கொண்டிருக்கும் அம்மாவை வந்து எட்டிஎட்டி பார்த்துவிட்டுப் போவார். 

 எண்பதுகளில் இருக்கும் தந்தையையும், எழுபதுகளில் இருக்கும் தாயையும் விட்டுவிட்டு எத்தனை சம்பாதித்தாலும், அதையும் மீறி ஒரு பாரம் மனதை அழுத்தத்தான் செய்கிறது. எனினும் என்னால் முடிந்த வரை அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக்கொள்கிறேன். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வருகிறேன். மகன்களை வீடியோ காலில் காட்டுகிறேன். என் மனைவி மடிசாரோடு பொங்கல் செய்வதையும், கார்த்திகை தீபம் ஏற்றுவதையும் வாட்ஸப்பில் அனுப்பி வைக்கிறேன். அம்மாவுக்கு சந்தோஷம் தான். கடல் தாண்டி போனாலும், நேம நிஷ்டையல்லாம் விடாம இருக்கேளேடா என்று அடிக்கடி சொல்லுவாள். 

நாங்கள் பார்ட்டி பண்ணுவதையும், பகார்டி குடிப்பதையும், பார்பிக்யூ சிக்கனை தோட்டத்தில் வைத்து திருப்புவதையும் மிகக்கவனமாக அம்மா கண்ணில் காட்டாமல் இருக்கிறேன். போன முறை வந்தப் போது, அப்பாவுக்கு ஃபேஸ்புக் கணக்கு துவங்கிக் கொடுத்தேன். நிம்மதியாக தி ஹிந்து மட்டும் படித்துக்கொண்டிருந்தவர், ஃபேஸ்புக் ரெகமண்டேஷன்லில் வரும் உம் சொல்றியா மாமா, ம்ஹூம் சொல்றீயா என கேட்டு ஆடும் குடும்பப்பெண்களை பதறிப் போய் தாண்டுகிறார்.

 

நானும், அண்ணாவும் பேசி வைத்து வீட்டு வேலைக்கென ஒரு முதியவளையும், சமையல் வேலைக்கென லட்சுமி என்ற இருபத்தி ஐந்து மதிக்கத்தக்க பெண்ணையும் அமர்த்தியிருந்தேன். இப்போது எல்லாரிடமும் வங்கிக்கணக்கு இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து நேரடியாக பணத்தை செலுத்திவிட முடிகிறது. 

எவ்வளவுடா இவா சம்பளம்? என்று கேட்டாள் அம்மா. சமையலுக்கு பத்தாயிரம்மா என்றதும் அதிர்ச்சி அடைந்து ரொம்ப நேரம் பேசவேயில்லை. அப்பா ரிடயர் ஆகறச்சே கூட அவ்வளவு வாங்கலையேடா என்றாள் அங்கலாய்ப்பாக. ‘போனாப் போறதும்மா. நன்னா சமைக்கறா. நீயும் அப்பாவும் செளக்கியமா இருக்கேளோன்னோ, அது போறும்.’ என்றேன். 

 

இப்போது வந்து பார்த்தால், ஒரே லட்சுமி புராணம். ‘லட்சுமி பாவம்டா. ஆம்படையான் குடிகாரனாம். தொடுப்பு வேற வச்சுண்டுருக்கானாம் 

லட்சுமிக்கு எதாவது செய்யனும்டா. இரண்டு குழந்தேள வச்சுண்டு கஷ்டப்படறா.’ 

வீட்டிலிருந்த மெத்தைகளில் ஒன்று, இரண்டு மூன்று போர்வைகள், அம்மாவின் புடவைகள், புழக்கத்தில் இல்லாத பாத்திரங்கள் என பலதும் லட்சுமி வீட்டுக்கு இடம் பெயர்ந்திருந்தது 

காலை ஏழு மணிக்கு லட்சுமி வருகிறாள். சமையலை முடிந்து, இட்லிக்கு ஊரப்போட்டுவிட்டு போனாள் என்றால், மணி எட்டரை. மீண்டும் மாலை நான்கு மணிக்கு வந்து டிஃபனும் காஃபியும் தருகிறாள்.  எனக்கும் லட்சுமி சமையல், என் சமையல் போலவே பழகிவிட்டிருந்தது. அம்மா, நான் இந்தியாவில் இருக்கும் வரையாவது சமைக்கறேனேடா என்று கேட்டுப்பார்த்தாள். முதலில் சரி என்று சொல்லத் தோன்றினாலும், வயதான அப்பாவே அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளும் ஒரு விஷயத்தை  மாற்ற என் மனசாட்சி இடமளிக்கவில்லை.

  

இந்தியாவில் இரவு, அமெரிக்காவில் பகல். ஆக இரவெல்லாம் இங்கிருந்த படியே அலுவலக வேலை பார்த்துவிட்டு அதிகாலையில் தான் தூங்கப்போகிறேன். அது என்ன மாயமோ அங்கிருந்து இங்கு வந்தால் ஜெட்லாக் இரண்டு நாட்களில் சரியாகிறது. இங்கிருந்து அங்கு போனால், ஒரு வாரமானாலும் சரியாவதில்லை. அம்மாவும் அப்பாவும் இரவு ஒன்பதரைக்கு தூங்கப்போகிறார்கள். அதிகாலை நான்கரைக்கு எழுகிறார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளாக இது தான் இந்த வீட்டு பழக்கம். இது சனி, ஞாயிறு, வாரநாட்கள் என வித்தியாசப்படுவதில்லை.

 

வீக் எண்ட் என்றால், இரவு படம் பார்த்து, அடுத்த நாள் மதியம் எழுவதையெல்லாம் வயதானதும் கற்றுக்கொண்டேன். இப்போது என் பிள்ளைகளுக்கும் வீக் எண்ட், வீக் டே என உடலுக்கு இரு வேறு டைம்டேபிள் தருகிறார்கள்.

 

இன்று இந்தியாவில் சனிக்கிழமை. அமெரிக்காவில் இன்னும் வெள்ளி இரவு தான். சீக்கிரமே வேலை முடிந்துவிட்டது. தூங்கப்போகிறேன். அனேகமாக இரண்டு மணி நேரத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி பெருமாளை எழுப்ப, அம்மா ஃபில்டரில் டிகாஷனை இறக்கிவிட்டு அப்பா எழுந்துவர காத்திருப்பாள்.

 

அரைக்குறை தூக்கத்தில் என் ஏஸி ரூமையும் தாண்டி படார் என்ற காது கிழியும் சபதமும், வீடெங்கும் சூழந்த நெருப்பும், புகையையும் என்னை அலறி அடித்து எழச் செய்தது 

ஐயோ, அம்ம்ம்மா…. அப்ப்பாஎன்று கத்திக்கொண்டே சமயலறையை நோக்கி ஓடியதும், நெருப்பு கொளங்களாக இரு உருவத்தையும் பார்த்து மயங்கி விழுந்ததும் தான் நினைவில் இருக்கிறது.

 

இரவு கேஸ் சிலிண்டர் மூடாமல் இருந்திருக்கிறது. காலை அப்பாவை டைனிங் டேபிளில் காத்திருக்க சொல்லிவிட்டு, அம்மா சமையலறை லைட்டைப் போட்டிருக்கிறாள். இதையெல்லாம் பிறகு அறிந்துக்கொண்டேன். அம்மா மூன்று நாட்களும், அப்பா மூன்று மாதங்களும் குற்றுயிராக இருந்து இறந்துப் போனார்கள். குறைந்த காயத்துடன் அனுமதிக்கப் பட்டிருந்த என்னை, ஒரு வாரம் கழித்து பேசுமளவு ஆனதும் இன்ஸ்பெக்டர் வந்து பார்த்தார். ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கொண்டார். 

'யாருங்க நைட்டு கேஸ திறந்து வச்சது?' 

 

லட்சுமி தான் கடைசியாக கேஸை, சமையலறையை சுத்தமாக துடைத்துவிட்டு வீட்டுக்குப் போவாள் என்பதை நன்கறிவேன். எனினும், லட்சுமிக்கு எதாவது செய்யனும்டா என்ற அம்மாவின் குரல் உள்ளிருந்து என்னை செலுத்தியது. 

வலி நிவாரணிகள் உடலெங்கும் சங்கமித்திருந்தாலும், மனது மரத்துப் போயிருந்தாலும் தெளிவாக சொன்னேன், 'எங்க அம்மா தான் இன்ஸ்பெக்டர், கேஸ மூட மறந்திருக்கனும். ராத்திரி பால் சுட வச்சு குடிக்கற வழக்கம் உண்டு.’  

இன்ஸ்பெக்டர் தயங்கினார்.

‘இல்ல, உங்க வீட்டு சமையக்காரம்மா… அது பேரு என்ன.. ஆங்.. லட்சுமி! ஒரு மாதிரி மலங்க மலங்க விழிக்குது. கொஞ்சம் மிரட்டினா சொல்லிரும்.’

‘இல்ல இன்ஸ்பெக்டர். அவங்க போனதும் தான் அம்மா கிட்சன்ல நடமாடிட்டிருந்தாங்க. எனக்கு ஞாபகமிருக்கு.’

அதற்கு மேல் அவருக்கு பேச எதுவுமில்லை. நான் சொன்னதையே ஸ்டேட்மெண்ட்’டாக எழுதிய பேப்பரில் கையெழுத்துப் போட்டேன்.

அம்மா நிம்மதியாக போய் சேர்ந்திருப்பாள்.




madraspaper.com ல் வெளியான எனது சிறுகதை)