'உனக்கு செக்ஸ்ல ஒரு பொண்ண திருப்தி படுத்தமுடியாம போகுமோன்னு பயம் இருந்திருக்கா?'
வேலைக்கு நடுவில் இப்படியாக ஒரு மெசேஜ். அதுவும் நேரில் பார்த்திறாத ஒரு பெண்ணிடமிருந்து, பழக ஆரம்பித்த பத்து நாட்களுக்குள். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சடசடவென பெய்யும் ஜூன் மாத மழைப் போல என் வாழ்கையில் வந்து சேர்ந்துவிட்டாள். இவள் இப்படித்தான் என்று இப்போது ஓரளவு தெளிந்திருந்தேன். இல்லை, தெளிந்து விட்டதாக நினைத்திருந்தேன்.
'இருக்கு.'
'ம்ம்.. பெண்களுக்கு வேற மாதிரி ! தன் உடல் குறித்த இன்-செக்யூரிட்டி இருக்கும். பல பேர் இருட்டுல நடக்கறத விரும்பறதுக்கு காரணமும் அது தான்.'
நீ தனியாக இல்லை என்பதை தான் அழகாக சொல்கிறாள். பூமியிலுள்ள எந்த தலைப்பிலும் அவளோடு சகஜமாக பேசமுடியும். ட்விட்டரில் ஒரு ஐடியாக அறிமுகமாகி, வாட்ஸப்பில் உரையாடுமளவு முன்னேறி, டெலிகிராமுக்கு மாறுமளவு நெருங்கியிருந்தோம். ஒருமையில் மாற எங்களுக்கு தேவைப்பட்டது 24 மணி நேரமும், இரண்டு நாள் சாட்டும் தான். தன்னை கேட்காமல் எந்த மெசேஜையும் டெலீட் செய்யக்கூடாது என்று சத்தியம் வாங்காத குறையாக டெலிகிராம் வர சம்மதித்தாள். பெண்களைப் பொறுத்தவரை ஒருவர் மீது நம்பிக்கை வருவதென்பது அணைக்கட்டு உடைவதைப் போலத்தான். அடுத்த நிமிடமே ‘ஓடிபி’ கூட சொல்லத் தயாராகிவிடுகிறார்கள். அவளும் என்னை அலைப்பேசியில் அழைத்து தன் முறிந்துப் போன காதலை முடிந்த அளவு உருக்கமாக சொன்னாள். அதிலிருந்து வெளியே வருவதற்கான வழிகளை மனநல மருத்துவரின் நேர்த்தியோடு சொல்லிக்கொண்டிருந்தேன். அத்தனையும் கேட்டு விட்டு, 'உன் குரல் ரொம்ப நல்லாயிருக்கு. அதுல மயங்கி, நீ சொன்னதுல பாதி கவனிக்கல. ஆமா, உங்க அப்பா எங்க வேலை பார்க்கறார்ன்ன?'
நிறைய கேட்பாள். ஆனால் பாதி நேரம் அவளுக்கு பதில் தேவையே படவில்லை. மனதிலிருப்பதை சொல்லிவிட்டு வேறு தலைப்பிற்கு மாறிவிடுவாள். அவளளவு வேகத்தோடு தாவ நான் குரங்காக மாறினால் தான் சாத்தியம்.நாளுக்கு நாள் நாங்கள் நெருக்கமாகி கொண்டிருப்பதை பகிர ஆரம்பித்திருக்கும் அன்றாடங்களைப் பற்றின உப்பு பெறாத தகவல்கள் சொல்லின. ஒரு நாள் அலுவலகத்திலிருந்தபடியே என் புகைப்படத்தை அனுப்பினேன். ஹார்ட்டின் அழுத்திவிட்டு, நான் சந்தோஷப்படுவதற்குள், 'ரொம்ப அழகு. பின்னாடி இருக்க வால் பேப்பர்' என்றனுப்பினாள். பிறந்தநாள் கொண்ட்டத்தின் போது எடுத்தப் புகைப்பட த்தில், குடும்ப விழாக்களில் எடுத்தவை என்று எதை அனுப்பினாலும், அதிலுள்ள பெண்களைப் பற்றி கவனமாக கேட்டுக்கொண்டாள்.
அனுமானிக்க முடியாத எதுவும் கிளர்ச்சி தான். அது தான் அவள் மீது ஈர்ப்பை கூட்டிக்கொண்டிருந்தது. குழந்தைத்தனமும், புத்திசாலித்தனமுமாக சரிவிகிதத்தில் கலந்து சுஜாதா கதைகளின் நாயகியாக எனக்குத் தோன்றினாள். அவளுக்கு நான் வைத்திருக்கும் பெயர் 'பறவை'. என் சீரான ஒழுக்கத்தோடு போகும் பாதையில், குறுக்கும் மறுக்குமாக தலைக்கு மேல் பறந்துக்கொண்டிருந்தாள். எதிர்பாரா தாக்குதல்கள் சாதாரணமாக ஆரம்பித்த நாளில் இதை வேறு பேச்சினூடே கேட்டாள்.
'உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. நாம அடுத்த கட்டத்துக்கு போறத பத்தி என்ன நினைக்கற?'
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், 'அடுத்த கட்டம் என்றால்?' என்று அனுப்பினேன்.
கொஞ்ச நேரம் பொறுத்து, 'ரிலேஷன்ஷிப்' என்று பதில் அனுப்பினாள். அவள் அதை முணுமுணுப்பது போலவே எனக்கு தோன்றியது.
'ஃபிரண்ட்ஷிப்புக்கும் அதற்கும் என்ன வித்தியாசம்?' இவ்வாறான திடீர் ப்ரபோஸல்களை எதிர்கொள்வது பற்றி ஏன் இன்னும் எந்த சுயமுன்னேற்ற குருவும் யூட்யூபில் சொல்லித்தருவதில்லை என்று வருந்தினேன். அவ்விடத்தில் நான் பேசியது அனைத்தும் திகைப்பின் வெளிப்பாடு.
'செக்ஸ் தான். இன்னும் வேறு எதாவது செய்முறை விளக்கம் வேண்டுமா?' என் கேள்வியின் அபத்தம் உரைக்கும் முன் அவள் கோபம் வந்து சேர்ந்திருந்தது.
'இல்லை. நான் இதை இப்படியே தொடறத்தான் விருப்புகிறேன்' என்றேன்.
மிகப்பெரிய அமைதி. தூங்கப்போவதற்கு முன் சாரி அனுப்பியிருந்தாள்.
அடுத்து வந்த நாட்களில் அவள் சாரி அனுப்புவதும், நான் பதிலுக்கு சாரி அனுப்புவதுமாக தொடர்ந்தது. ஒரு பீரோ வாங்கித்தான் இத்தனை சாரியையும் வைக்கனும் என்று அவளே முடித்து வைத்தாள். ஆயினும் அவ்வப்போது தன்னை நிராகரித்ததை விளையாட்டுப் போல, வருத்தமாக, கோவமாக, இன்னும் எத்தனை உணர்ச்சிகள் சாத்தியமோ அத்தனை வகையில் சொல்லிக்கொண்டே இருந்தாள்.
திடீரென ஒரு நாள் அவளுடைய எக்ஸ், எக்ஸ் அடைமொழியை உதறி மீண்டும் காதலனானான். அது நாள் வரை சாதாரணமாகவும், கெட்ட வார்த்தை சேர்த்தும் திட்டிக்கொண்டிருந்தவள், மீண்டும் அவனோடு கனவில் சஞ்சரிக்கத் தொடங்கினாள்.
தோழியின் காதலன் எந்த கதையில் ஹீரோவாக முடியும்? அவன் எப்படியிருந்தாலும் வில்லன் தான். அவனைப்பற்றி அவள் சொன்ன தகவல்களிலிருந்து அவனை வில்லனாக்கும் காரணிகளை மனம் கெட்டியாக பிடித்துக்கொண்டது. அதற்கு பெரிதாக மெனக்கெட வேண்டியிருக்கவில்லை. ஏதோ பொழுது போகாத நாளில் அந்த பொறம்போக்கு 'ஐ லவ் யூ' சொல்லியிருக்கிறது. இந்த பைத்தியம் அதையும் நம்பி ஏங்கிக்கொண்டிருக்கிறது. இத்தனை வருட உதாசீனத்தை மன்னிப்பதன் மூலம், வாழும் தெரசாவாக காட்டிக்கொள்ள அவள் விரும்புவதாக சொன்னேன். 'பார்ரா' என்று பதில் வந்தது. இந்த 'பார்ரா'வை எங்கெங்கெல்லாம் பதில் சொல்ல முடியவில்லையோ, அங்கெங்கெல்லாம் இட்டு நிரப்பிக்கொள்வாள்.
பெரும்பாலும் அவள் சொல்வதைக் கேட்டுவிட்டு அந்த அவனை நேரில் பார்த்தால் பளார் என்று அறைய தோன்றும்.
'க்ளாமரா ஃபோட்டோ எடுத்து அனுப்பினீயா?'
'ஆமா. ரொம்ப நாளா கேட்டான், அதான்.'
'உனக்கு அறிவுன்றது கொஞ்சமாவது இருக்கா?'
கண்ணில் நீர் வர சிரிக்கும் ஸ்மைலியை கை வலிக்கும் வரை அழுத்தி அனுப்பினாள். இதில் சிரிக்க என்ன இருக்கிறதென்று இப்போது வரை புரியவில்லை. ஒரு நாள் பேச்சுவாக்கில் 'டி' என்று அழைத்தேன். ' நீயும் டா வே கூப்பிட்டுக்கோ. 'டி' மட்டும் அவனுக்கானதா இருக்கட்டும்.' என்றாள். 'மயிறு' என்று மனதில் தோன்றிய உடனடி கெட்ட வார்த்தையை அடித்து, பின் அனுப்பாமல் விட பல வருட தியானம் தான் உதவியது.
அவளை வெறுப்பதற்கான காரணங்களை தேடிக்கொண்டே இருந்தேன். அப்படி ஒன்றும் கிடைக்காமல் போகவில்லை. அவளுக்கு பிடித்த அரசியல் ஜி, எனக்கு சீ. இருந்தாலும் அந்த தலைப்பை தொட்டுவிடாமல் ஜாக்கிரதையாக தாண்டிச்சென்றேனே தவிர, புள்ளிவிவரங்களை தெளித்து அவளை புண்படுத்த மனம் வரவில்லை.
இது இன்னொரு நாள். அவள் அனுப்பிய புகைப்படத்திற்கு அவன் ஹார்டின் போடவில்லை என்று வருத்தப்பட்டாள்.
'நீ எதுக்கு அவனையே புடிச்சு தொங்கிகிட்டு இருக்க?' என்றேன்.
'இந்த கேள்விக்கு விடை தெரிஞ்ச அன்னைக்கு உனக்கும் சொல்றேன். பொதுவாவே எனக்கு யாரையும் விட மனசு வராது, அவங்க தப்பே பண்ணியிருந்தாலும்.' என்று லாஜிக் இல்லாமல் பதில் அனுப்பினாள். ஒரு புடவை தேர்ந்தெடுக்க எடுக்கும் சிரத்தை கூட அவளுக்கு காதலுக்கு தேவைப்படவில்லை. 'உன் கதையை ஷங்கரை வைத்து பிரமாண்டமாக எடுத்தால் கூட ஒடாது.' அவர்கள் உறவின் அபத்தத்தை சொல்ல முயன்று தோற்றுக்கொண்டே இருந்தேன்.
இனி இவள் சொல்லும் 'அவன்' கதைகளை கேட்க கூடாது என்று நினைத்துக்கொள்வேன். ஆயினும் அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
'ஒன்னரை நிமிஷ வாய்ஸ் நோட்'ல அஞ்சு நிமிஷத்துக்கு புலம்பறாண்டா. அறிவியல் அதிசயம்டா அவன்'. இது இன்னொரு நாள். அப்படி என்ன புலம்புவான் என்றேன். அது எதுக்கு உனக்கு என்று மூக்குடைத்தாள். ஆனால் அவளாக அதைவிட ரகசிய தகவல்களை கேட்காமலே சொல்லவும் முடியும்.
அவ்வப்போது புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் தலைவர் பற்றின செய்திகளை பகிர்ந்து 'க்ரெஷ்' என்று கண்களால் ஹார்டின் விடுவாள். மற்றொரு சந்தர்ப்பத்தில் சினிமாநடிகர் ஒருவரைப் பற்றி சிலாகித்துக்கொண்டே போனாள். இவனும் உன் க்ரெஷ்ஷா என்று கேட்டதும் நீண்ட அமைதி. உரையாடலின் நடுவே விழும் அமைதி புயலுக்கான அறிகுறி என்று உள்ளுணர்வு சொல்ல, ‘ஹலோ?’ என்று அனுப்பினேன். எதையோ டைப் செய்வதும், அழிப்பதுமாக இருந்தாள். 'ஐ அம் நாட் அ ஸ்லட்' என்று ஒருவழியாக பதில் வந்தது.
அவ்வளவு பெரிய வார்த்தையை சொல்வாள் என்று எதிர்பாராததால், விதிர்விதிர்த்துப் போனேன். பல சமாதானங்களுக்குப் பிறகு மனம் இறங்கி எதுவும் நடக்காதது போல் பேச துவங்கினாள். சின்ன விஷயங்களுக்கு கோபித்துக் கொள்ளவும், பெரிய விஷயங்களை கடந்து போவதுமாக அவள் என்னை மிகப்பெரிய ரோலர் கோஸ்டரில் அழைத்துக்கொண்டு போனாள்.
என்னை சந்தித்தே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்க, நேரில் போனேன். புடவை கட்டி வருவாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் அனுப்பிய புகைப்படங்கள் எத்தனை எடிட்டிங் செய்யப்பட்டனவோ? நேரில் குச்சியாக, கண்களைத் தவிர வேறு எதுவும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி இல்லாமல் இருந்தாள். எனினும் அவள் பலமே பழகும் விதத்தில் தான். பக்கத்து பெஞ்சில் அமர்ந்து பரிட்சைக்கு நடுவில் உதறி உதறி எழுதுவதை கவனித்து தானாக துளி இங்க் பகிரும் பள்ளித்தோழி போன்ற ஆதூரமான அன்பை அவளால் சர்வசாதாரணமாக அளித்துவிட முடியும்.
காரில் என் அருகில் சம்மணமிட்டு அமர்ந்து, ஏதோ கையை ஆட்டி ஆட்டி பேசிக்கொண்டிருக்க, அவள் கையை தன்னிச்சையாக பிடித்தேன். அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் கையை உருவிக்கொண்டாள்.
நிராகரிப்பின் வலியை திருப்பித்தருகிறாள். அவளை நட்பின் எல்லைக்குள் நிறுத்தியது நான் தான். எனினும் அவள் செயல்படுத்திக்காட்டிய போது எரிச்சலாக, அவமானமாக இருந்தது. வீட்டுக்கு வந்ததும், ‘ரீச்ட் ஹோம்’ என்று அனுப்பியிருந்தாள்..சற்று தள்ளி நிற்கலாம் என்று சில மணி நேரத்திற்கு அமைதி காத்தேன். அடுத்த நாளும் பட்டும்படாமலும் ரிப்ளை செய்ய,
'Ok. எதாவது சொல்லிட்டு போ. இல்லனா, நான் நேர்ல ugly ஆ இருக்கேன், அதான் உனக்கு திடீர்ன்னு பேச பிடிக்காம போயிடுச்சுன்னு தோணும்ல?'என்றாள். கையை உருவிக்கொண்டதெல்லாம் அன்னிச்சை செயல் போல. அது அவள் நினைவிலேயே இல்லை.
'அப்படியே நினை. அது உண்மை தான்'
பிடித்தவர்களை எவ்வளவு விருப்பதோடு காயப்படுத்த முடிகிறது? அந்தப்பக்கம் அவள் அழுவதாக சர்வநிச்சயமாக தோன்றியது. அது சின்ன திருப்தியையும் தரதவறவில்லை. ஆயினும் அவளுடனான எல்லா பிணக்குகளும் கடுங்கோடையில் ஈரக்துணி காயும் வேகத்தில் காணாமல் போயின.
'என்னை எப்பவாவது லவ் பண்ணனும்னு உனக்கு தோணியிருக்கா?'
இது கன்னிவெடி கேள்வி. ஆமாம் என்றால், இதை தான் மனசில் வைத்து பழகுகிறாயா என்பாள். இல்லை என்றால், நான் அவ்வளவு வொர்த் இல்லையா என்று அழவும் வாய்ப்பிருக்கிறது. ரொம்ப ஜாக்கிரதையாக, 'நான் அதை பத்தி யோசிக்கல' என்றேன். 'இது தான் உங்கிட்ட பிடிக்காது. ரிபிகல் மேனேஜர். பலதையும் யோசிச்சு பதில் சொல்வ. மனசுல இருக்கறத சொல்லவே மாட்ட.' பழிப்பு காட்டிவிட்டு போய்விட்டாள்.
'என்னை எதனால் உனக்கு பிடிக்கிறது?' இந்த கேள்விக்கு சரியான பதிலை அவ்வப்போது தரும் ஆண்மகன் காதலில் ஜெயிக்கிறான். என்னிடம் இரண்டு நாளுக்கு ஒருமுறை கேட்டு, வெவ்வேறு பதில் தரவேண்டும் என எதிர்பார்ப்பாள். கல்லில் நார் உரிக்க நினைக்கும் அவள் விக்ரமாதித்த முயற்சியை ரசித்துக்கொள்வேன். ஆயினும் பதிலுக்கு என்னை ஏன் பிடிக்கும் என்று அவள் அடுக்கும் காரணங்களை நான் நம்ப தொடங்கினால், அடுத்த ஸ்ரீராமன் நான் தான் என்று கோவில் கட்டச்சொல்லி கேட்பேன்.
காதலுமில்லாமல், நட்புமில்லாமல் அவள் நிறுத்தி வைத்திருக்கும் இடம் என்னை குழப்பியது. நெருங்க நினைத்தால் உடனே தடை போடவும், விலக நினைத்தால் பிடித்து நிறுத்தவும் பெண்களுக்கு யாரும் கற்றுத்தரவேண்டியதில்லை. அவர்கள் வரையும் லட்சுமண கோட்டை அவர்களே அறிவார்கள். அது அவ்வப்போது அவர்கள் வசதிக்கேற்ப சுறுங்கியும் விரிந்து கொடுத்தது. என் உருவத்தை, உயரத்தை அவள் சிலாகிப்பாள். பதிலுக்கு, நேரில் பார்த்த அன்று அவள் திரும்பும் போது, ப்ளவுஸ் முடிந்த இடத்தில் கொஞ்சூண்டு தெரிந்த இடுப்பை கவனித்ததை சொன்னதும் உடனடியாக பேச்சை மாற்றினாள்.
என்னளவில் அவளை விரும்பினேன். எனினும் அவள் காதலனிடம் கண்டுபிடிக்கும் குறைகளுக்கு சற்றும் குறைவில்லாமல் என்னிடமும் இருக்கின்றன. எண்ணெய் சட்டியிலிருந்து தப்பிக்க நெருப்பில் குதிக்க நினைத்திருக்கிறாள். என்னால் அவள் வருத்தப்பட்டு விலகிப் போவதை விட, இப்படியே தொடர்வது தான் இவளை தக்க வைக்க எனக்கிருக்கும் வழி. என் மனதில் அவள் என்னவாக இருக்கிறாள் என்ற ஒன்று எனக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருக்கட்டும்.
இரவு பதினொன்ரை வரை நீண்ட ஓர் உரையாடலின் நடுவே கேட்டேன்.
'நான் யாரு உனக்கு?'
'நீ என் பாய்பெஸ்ட்டி டா.' உடனே பதில் வந்தது.
அது வரை கேள்விப்படாத உறவுமுறை. அப்படி என்றால் என்ன என்று கேட்க நினைத்து, எனக்கே தான் பதில் தெரியுமே என்று புன்னகைத்துக்கொண்டேன்.
பாய்பெஸ்ட்டி என்றால், சட்டை பேண்ட் அணிந்த இரு பெரிய காதுகள்!
(Published in Aananda Vikatan)
No comments:
Post a Comment