Wednesday, 31 July 2019

பூமி அழிப்பான்கள்

மகனுக்காக கணவர் வாங்கி வந்த எரேஸர் (அழிப்பான்).


என்ன எழவு காரணமோ, சின்ன ப்ளாஸ்டிக் பெட்டியுள் வந்திருக்கிறது. "ஐஞ்சு ஐஞ்சு பைசாவா ஐஞ்சு பேர் ஐஞ்சு வருஷம் திருடினா.. " என்பதாக பிரமாண்டத்தை விளக்க ஒரு சினிமா வசனம் வருமே, அதை நினைத்துக்கொள்கிறேன். சிறியதும் பெரியதுமாக ஒவ்வொரு மனிதனும் உபயோகித்து தூக்கிப்போடும் ப்ளாஸ்டிக் கழிவுகள் நம்மை முற்றிலுமாக அழிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. 

Thursday, 25 July 2019

Betrayal

நாள் 2: உலகத்திரைப்படம்

Betrayal என்னொரு ருஷ்யப்படம் பார்த்தேன். நாந்லீனியர் திரைக்கதை, அட்டகாசமான கேமரா, கொஞ்சம் மனிதர்களை வைத்து ஓர் உளவியல் த்ரில்லர். படம் துவங்கையில், நாயகி (கார்டியாலஜிஸ்ட்) ஒரு பேஷண்ட்டிடம், என் கணவர் வேறோரு உறவில் இருக்கிறார் என்கிறார். பேஷண்ட்டைப் போலவே நானும் குழப்பமாக பார்க்கிறோம். "உங்கள் மனைவியோடு" என்று த்ரில்லரை துவக்கி வைக்கிறார். கடைசி வரை அந்த இருவர் தான் திரையை ஆக்கிரமிக்கிறார்கள். துணை கதாப்பாத்திரமாக இருவர்  மற்றும் ஒரு பெண் போலீஸ். அட, க்ரூப் டான்ஸர்ஸ், சண்டையில் போய் நாலாப்பக்கமும் விழ அடியாட்கள் எங்கப்பா?


படம் முடிந்ததும் ஒரு விஷயம் கண்டுபிடிப்போம். எந்த கதாபாத்திரத்துக்கும் பெயரே இல்லை. 

Tuesday, 23 July 2019

அல்லியிளம் பூவோ?

நாள் 1: 
இளையராஜா பாடலைப் பாடி ஒரு பாகன் யானையை தூங்க வைக்கும் காட்சியை தொலைக்காட்சியில் காட்டினார்கள். மனிதர்களை விட விலங்குகள் நுண்ணுணர்வை நம்பிநடப்பவை. ராஜா சார் இசை விலங்குகளை மயக்குவதை விடப் பெரிய விருது அவருக்கு ஒன்றுமில்லை என நினைக்கிறேன். ஆங், அந்தப்பாட்டு அப்போது தான் முதல் முறையாகக் கேட்கிறேன். ஆண் குரலில் ஒலிக்கும் தாலாட்டு. அல்லியிளம் பூவோ, கிள்ளிமுலம் தேரோ.. யூட்யூபில் தேடினால் ஒரு நூறு வெர்ஷன்கள் இருக்கின்றன. எனினும், இந்தப் பெண் (பார்வதி ஹரி) பாடுவது ரொம்பவே பிடித்தது. ஹெட்ஃபோனில் கேட்டால் மடியிலிருக்கும் குழந்தையும் பாடுவது கேட்கிறது. நல்ல அனுபவம். 

 கவனித்துப்பார்த்தால், ஸ்ம்யூலில் மலையாளப்பாடல் பாடும் தமிழர்களை விட, தமிழ்ப்பாடல்கள் பாடும் மலையாளிகள் நிறைய தென்படுகிறார்கள். 

ஸ்ம்யூல் வந்தப்புதிதில் நிறையப் பேருக்கு ப்ரோஃபஷனலாகப் பாடத்தெரிவது ஆச்சர்யமாக இருந்தது. எனினும் சொக்கன் போன்றவர்கள், ஏற்கனவே வந்த சினிமா பாடல்களை அப்படியே பாடுவதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று எழுதினார்கள். இரு கோடுகள் தத்துவம் போல, டிக்டாக் வந்தப்பிறகு ஸ்ம்யூல் இப்போது திறமைசாளிகள் நிறைந்த டீஸண்டான இடமாகத் தெரிகிறது. 

பார்வதியை தேடிக்கொண்டே போனதில், இவர் தென்பட்டார். யேசுதாஸ் குரலில் பாடும் ஆயிரமாவது மலையாளி. பாடலை ஓடவிட்டால், அவர் வீட்டிலும் நம் மனதிலும் மழை பெய்கிறது.
இன்றைய மோட்டுவளை சிந்தனை - வலைப்பூவில் எழுதுவதற்காக Blogger என்றொரு app தரவிறக்கினேன். அனேகமாக கூகிளின் மோசமான ஆப் போட்டியில் முதல் பரிசை வென்றிருக்க கூடும். 

Monday, 22 July 2019

சிற்பி சூழுலகு !


“இந்த சிதம்பரத்துல அறுபது வயசுக்கு மேல இருக்கவங்கள்ல பாதிபேரு என்கிட்ட கொட்டு வாங்கினவங்க தான்” என்பார் என் அம்மா. அம்மா, அப்பா இருவருமே சிதம்பரத்துக்காரர்கள். பால்யம் முதலே வசிப்பதால் ஊரில் பெரும்பாலான வயதானவர்களுக்கு இருவரையும் அல்லது ஒருவரையேனும் தெரிந்திருக்கும். அம்மாவோடு வெளியே போகையில் யாராவது ஒரு பெரிசு நிறுத்தி வைத்துப் பேசிக்கொண்டிருக்கும். அம்மாவின் கண்கள் யதேச்சையாக அவர்கள் தலையைப் பார்த்து விட்டு மீளுவதைக் கண்டிருக்கிறேன்.என் அம்மா வழி தாத்தா ட்யூஷன் வாத்தியார். ஆறடி உயரம், பாரதியார் போல கோட்டும், பஞ்சகச்சமும், டர்பனும் அணிந்து முகத்தில் மட்டும் சிரிப்பை அண்ட விடாதவர். ஃபோட்டோவில் பார்த்திருக்கிறேன், புகைப்படத்துக்காகக் கூடத் தன் கண்டிப்பைக் கைவிட்டதாக தெரியவில்லை. ஊரறிந்த அவர் தனிச்சிறப்பு என்னவென்றால், எப்பேர்ப்பட்ட மக்குப் பயலையும் பாஸாகச் செய்து விடுவாராம். அந்தத் தனிச் சிறப்பை ஊரில் உள்ள பலரும் தத்தம் பிள்ளைகளை அனுப்பி ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். என் தாத்தாவுக்கு இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது என்பதை அடுத்த பாராவில் தெரிந்துக் கொள்வீர்கள்.மனப்பாடம் என்பது கெட்டவார்த்தை ஆகாத காலமாதலால், தாத்தா எல்லா வாய்பாட்டையும், நேராகவும், பின் தலைகீழ் பாடமாகவும் ஒப்பிக்க சொல்லிப் படுத்தி எடுத்திருக்கிறார். ஒப்பிக்காத மாணவர்களுக்குக் கொட்டு நிச்சயம். அதிலும் அவர் இருக்கையிலிருந்து எழ மாட்டார். இந்தப் பணியைச் செய்ய என் அம்மாவைப் பழக்கியிருந்தார். கொட்டும் சத்தம், ஐம்பது கஜ தொலைவில் அமர்ந்திருக்கும் அவர் காதில் விழ வேண்டும் என்பது பணியின் விதிமுறை மற்றும் கிளுகிளுப்பு. 

இந்தக் காலத்து மாணவர்கள் என்றால், கொட்டியதற்குப் பழிவாங்க வாத்தியார் வண்டியில் காற்றை இறக்கி விடுவார்கள். அந்தக்கால மாணவர்கள் வாய்பாடை நினைவிலும், கொட்டியதை மறந்தும் விட்டார்கள். அம்மாவுக்கு இப்போதும் ஊரில் மரியாதை!தற்போதும் ட்யூஷன்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன. சிறிய வகுப்பு என்றால் பெண்கள். ஒன்பது, பத்தாம் வகுப்புக்கு மேல் என்றால் ஆண் வாத்தியார்கள். பெரும்பாலான ட்யூஷன் டீச்சர்கள், கமலா காமேஷ் போல முகத்தில் நிரந்தர சோகம் தேக்கியவர்களாக அமைந்து விடுகிறார்கள். அப்போது ட்யூஷனுக்குப் போவதென்பது சுவாரஸ்யப்படுவதில்லை. அம்மாக்களுக்கு முதுகில் நாலு சாத்து சாத்துவதற்குக் கூடுதல் காரணம் கிடைக்கிறது. கமலா காமேஷ்கள் ட்யூஷன் எடுக்கும் போதே கீரை ஆய்ந்து கொண்டோ, வெங்காயம் உரித்துக்கொண்டோ இருப்பது அந்த வயதில் எரிச்சலூட்டியிருக்கிறது.


ட்யூஷன் எடுப்பதென்றால் என்ன, நாங்களே புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு படிக்க வேண்டும் அல்லது அப்படிப் பாவ்லா பண்ண வேண்டும். ஒரு மணி நேரத் தண்டனை அது. ஏழை கமலாக்களுக்கு உதவ இந்த அம்மா, அப்பாக்களுக்கு வேறு வழியே தென்படாதா என்று கடவுளைக் கேட்டிருக்கிறேன். 


ஒரேயொருமுறை ‘கடலோரக் கவிதைகள்’ ரேகா போன்ற அக்காவிடம் ட்யூஷன் பயின்றிருக்கிறேன். கீரை ஆயாமல், அழுது வடியாமல், பாண்ட்ஸ் பவுடர் வாசனையோடு வந்தமரும் இது போன்ற அழகான அக்காக்களிடம் பயில்வதில் உள்ள நல்ல விஷயம், அவர் கன்னத்தில் தட்டி ‘குட் பாய்’ அல்லது ‘குட் கேர்ள்’ சொல்வதைக் கேட்பதற்காகவே விழுந்து விழுந்து படிப்போம்.


சனி, ஞாயிறு என்றால் காலை நேர ட்யூஷன். அக்கா ரேடியோவில் காதல் பாடல்களை ஒலிக்க விட்டு கூடவே பாடுவார். ஒரு மாதிரி கிறக்கமாக இருக்கும். அழகான பெண்ணுக்கு நன்றாகவும் பாட வருவதெல்லாம் கில்லர் காம்பினேஷன். அதில் மயங்க ஆண், பெண், குழந்தை வேறுபாடெல்லாம் கிடையாது. ட்யூஷன் அக்கா, ‘தாண்டுரா ராமா’ சொல்லியிருந்தால் குட்டிக்கரணம் கூட அடித்திருப்போம் எனும் போது, பானிபட் யுத்தத்தை யார் எப்போது நடத்தியது என்பதைப் படித்து வைப்பது கஷ்டமா என்ன!


பக்கத்து வீட்டு அண்ணா, தினமும் ட்யூஷனில் நடந்ததை ஒன்று விடாமல் கேட்டுக் கொள்வார். அது என் படிப்பின் மீதான அக்கறை என்றே நம்பினேன். ஒருநாள், அக்கா எங்கள் படிப்பையும், பக்கத்து வீட்டு அண்ணாவையும் பற்றிக் கவலை கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டு போய் விட்டார். கமலாக்கள் ஒருபோதும் இவ்வாறு பாதியில் விட்டுப் போவதில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.


ஒன்பதாம் வகுப்பு வந்ததும் இயற்பியல், வேதியல், கணக்கு என தனித்தனி ஆசிரியர்களிடம் போக வேண்டியதாயிற்று. வகுப்பில் நன்றாகவே கணக்குச் சொல்லித் தந்த ஆசிரியரிடமே நாங்கள் ட்யூஷனுக்கு போனது பற்றி அவருக்குமே எந்த குழப்பமும் இருந்திருக்கவில்லை. ட்யூஷன் மாஸ்டர்கள் பதின்பருவ உளவியல் தெரிந்தவர்கள். பள்ளி வாத்தியார்கள் கூட அடிக்க முடியும், இவர்களால் அடிக்க முடியாது. ஆனால் அதைவிட அவமானப்படுத்தும் விதமாக, ஆண்கள் விடைத்தாளை பெண்களிடமும், பெண்கள் விடைத்தாளை ஆண்களிடமும் கொடுத்து மதிப்பெண்ணைக் கூட்டச் சொல்வர். 


என் நண்பரின் அனுபவம் வேறு விதமானது. அவர் வகுப்பில் கணிசமானவர்கள் கணக்காசிரியரிடம் ட்யூஷனுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அது அரசுப் பள்ளியாதலால், நூற்றுச் சொச்சம் மாணவர்களில் வீட்டுக்கு வரும் பையன்கள் முகம் மட்டும் அவருக்கு நன்கு பரிச்சயமாகியிருந்தது. ஒவ்வொரு காலாண்டு, அரையாண்டுப் பரிட்சை முடிவிலும் உங்களில் யார் முதல் மதிப்பெண் என்று ட்யூஷன் பையன்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். அவர்களில் ஒருவர் தான் பத்தாம் வகுப்பில் முதல் மாணவனாக வரமுடியும் என்பது தாண்டி அவர் யோசிக்கவேயில்லை. 


பத்தாம் வகுப்பில் என் நண்பர் தான் மாநில அளவில் முதல் மாணவர். கணக்காசிரியருக்கு, பெயர் கேள்விப்படாத அந்த மாணவன் உள்ளூர் என்பதே அதிர்ச்சி. “எவனோ ரகுன்னு ஒருத்தன் ஃபர்ஸ்ட் வந்திருக்கான். உங்களுக்கு மார்க் வாங்கறத்துக்கு என்னடா கேடு?” என்று வகுப்பில் கேட்க, “எவனோ இல்ல சார், நம்ம கிளாஸ் ரகுவரன் தான்” என்று அடையாளமில்லாமல் இருந்த மூன்றாவது பெஞ்சு ரகுவை ஒருவன் போட்டுக் கொடுத்தான். வகுப்பாசிரியருக்கு அடுத்த அதிர்ச்சி. அவரிடம் ட்யூஷனுக்கு வராததால் பையனைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. 


“சபாஷ்டா பையா!” முதுகில் ‘படீர்’ என்று ஒன்று வைத்தார். “ஆமா, யார்ட்ட ட்யூஷன் போற?” “யார்ட்டயும் இல்லசார். நீங்க கிளாஸ்ல சொல்லித்தர்றது தான்!” ஆசிரியருக்கு குஷியாகி, மீண்டும் ‘படீர்’. “அப்பா என்ன பண்றார்?” “நெசவு சார்”. மூன்றாவது ‘படீரில்’ நண்பருக்குப் பொறி கலங்கி விட்டது. மாவட்ட அளவோடு நின்று விட்டதற்காக அப்போது சந்தோஷப்பட்டிருக்கிறார். அடுத்தடுத்த வகுப்புகளுக்கு இலவசமாகவே அவரிடம் கணக்குக் கற்றுக் கொண்டாராம்.


எங்கள் ஊரில் வேதியல் ஆசிரியர் ‘சார்லஸ் சார்’ அழகான இளைஞர். திருமணமாகியிருக்கவில்லை. அவரிடம் ட்யூஷன் போக‌ எங்களுக்கு இனித்தும், எங்கள் பட்டிக்காட்டுப்பெற்றோருக்குக் கசந்தும் இருந்தது. எந்நேரமும் எங்களுக்குள் வேதியல் நிகழ்வு நடந்துவிடும் எனப் பயந்து, அதே தெருவிலிருந்த சிடுமூஞ்சி தாத்தாவிடம் - எவ்வளவு யோசித்தும் இப்போது பெயர் நினைவுக்கு வரவில்லை – சேர்த்து விட்டார்கள்.


சார்லஸ் சாரிடம் படிக்கும் பெண்களிடம் அவரைப் பற்றி அவ்வப்போது கேட்போம். அதைச் சொல்வதற்கு ரொம்ப பிகு பண்ணிக்கொள்வார்கள். அவர்களிடம் தாஜா செய்து வாங்கும் தகவல்கள் - சார்லஸ் சார் கையெழுத்து சுமார் தான், அவர் வீடு கலைந்து கிடக்கும் - மதிய உணவு இடைவேளை முழுவதும் பேசும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தன. பின்னாளில், அவர் தன் மாணவி ஒருவரையே திருமணம் செய்து கொண்டதாக அறிந்த போது எங்கள் பெற்றோர் ஒன்றும் பட்டிக்காடு இல்லை என்று தோன்றியது.

சில ட்யூஷன்களில் மாணவ / மாணவியருக்கு தனித்தனி நேரம் ஒதுக்கி ட்யூஷன் சுவாரஸ்யத்தில் கை வைப்பார்கள். எனினும் முழுக்கவே பெண்கள் அல்லது ஆண்கள் பள்ளியில் படிப்பவர்களுக்கு, ட்யூஷனுக்கு வெளியே இருக்கும் சைக்கிள் நிறுத்தத்தில் தான் முதல் வெட்கம், முதல் காதல் எல்லாம் தோன்றுகிறது.  

தற்போது ட்யூஷன்களின் முகமே மாறிவிட்டது. பெயரும். ‘கோச்சிங் கிளாஸ்’ என்று சொல்லிப்பார்த்தாலே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்குள் நுழையும் அதிர்வு கிடைக்கிறது. தொலைக்காட்சியில் பாடிப் புகழ்பெற்ற குழந்தைகள், சீசன் முடிந்ததும் கல்யாணக் கச்சேரிகளில் பாடுவது போல், எல்லாப் பேராசிரியர்களும் ஓய்வு பெற்றதும் டிஃபால்ட்டாக கோச்சிங் க்ளாஸ் ஆரம்பிக்கிறார்கள். பள்ளி ஆசிரியருக்காவது பாஸாக்கி விட்டால் போதும், ட்யூஷன் வாத்தியார்கள் பெற்றோர்களின் எஞ்னியரிங் அல்லது டாக்டர் கனவுகளையும் மெய்ப்பிக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பு படிப்ப‌வர்களுக்கு பத்தாம் வகுப்பு பாடத்தையும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்தையும் எடுப்பதில் உள்ள சிரமம் தனித்துவமானது. அடிப்படையை மட்டும் கற்றுத் தர வேண்டும், ஆனால் அதிலேயே நின்று விடக்கூடாது. இவை அனைத்தும் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக அல்லது இதர பேராசிரியர்களுக்கு அசால்ட்டாக வருகிறது. 


தினமும் ஐந்து மணிக்கே துவங்கும் வகுப்புகள், நாளொன்றுக்கு ஆறு பாட்சுகள், வாரம் ஒரு பரிட்சை நடத்தி, அதை திருத்தித் தரும் இடைவிடாத பணியைக் கூடச் சாதாரணமாக எண்ணிவிடலாம். ஆனால், அத்தனை பாட்ச்களுக்கும் வாராவாரம் தனித்தனிக் கேள்வித்தாள்கள் தயாரிப்பதின் பின்னாலுள்ள உழைப்பு அசாதாரணமானது. “பதில் சொல்றது ஈஸி, கேள்வி கேட்டுப் பார்த்தால் தான் தெரியும்” என்று ஆசிரியர்கள் மாற்றிச் சொல்வார்களாக இருக்கும். ஆனால் அதுவும் உண்மை தான்.விடையை விட இங்கே கேள்வி முக்கியம். கடைசிப் பரிட்சை ஒரு போர்முனை என்றால், எதிரி கொண்டு வரப்போகும் ஆயுதம் ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயமானதாய், கையாளத் தெரிந்திருந்ததாய் இருந்தால் வெற்றி உறுதி அல்லவா! வாரம் ஒரு பரிட்சை ட்யூஷனில் எழுதிய மாணவர்கள் தேர்வு நாளன்று, இன்றும் மற்றொரு நாளே என்ற பதட்டமில்லாத ஜென் மனநிலையும் அடைகிறார்கள். பொதுவாக இது போன்ற அனுபவ கட்டுரையில் “வாழ்க்கையில்…” என்று எங்காவது வர‌ வேண்டும் என்பது விதி. அது கட்டுரையின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது. அதனால், அப்படியே முடித்துக் கொள்வோம்.


வாழ்க்கையில் நம்மோடு பயணித்த, நம்மைச் சீரமைத்த பலரையும் நினைத்துப் பார்க்க, நன்றி கூற விட்டுவிடுகிறோம். அதில் ட்யூஷன் மாஸ்டர்கள் நிச்சயம் உண்டு. சிற்பங்களால் ஆனது தான் கோவில் எனினும் கோவிலைக் கட்டிய அரசன் போன்று சிற்பிக்கு வரலாற்றில் இடம் இல்லை. நானும் வருடா வருடம் பார்க்கிறேன், மாநிலத்தில் முதலாவதாக வரும் எந்த மாணவராவது என் வெற்றிக்கு காரணம், ட்யூஷன் மாஸ்டர் என்ற உண்மையை சொல்கிறாரா என்று. ம்கூம். “என் பேரண்ட்ஸ், என் பிரின்சிபல், என் டீச்சர்ஸ் தான் காரணம்” என்று செந்தமிழில் ஒரு பேருண்மையை மறைக்கிறார்கள். 

பொன்னர் – சங்கர்: காட்சியை ஜெயித்த‌ எழுத்து

குங்குமம் இதழில் 62 வாரத் தொடராக வந்த சரித்திர நாவல் பொன்னர் - சங்கர். திரு. முரசொலி மாற‌ன் கேட்டுக்கொண்டதற்கிணங்க இதை எழுதத் தொடங்கியதாக கலைஞர் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.


கலைஞருக்கு எங்கிருந்து இவ்வளவிற்கும் நேரம் இருந்தது என்று எப்போதையும் போல், பொன்னர் - சங்கர் படிக்கையிலும் நினைத்துக்கொண்டேன். இந்நாவல் கொங்கு நாட்டில் கும்மியடிப்பாடல்களாகவும், வீரக்கதைகளாகவும் இன்றளவும் புகழ் பெற்றிருக்கும் அண்ணன்மார் சாமி கதையை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டிருக்கிறது. புகழ்மிக்க இக்கதைப் பாடல் ‘அண்ணன்மார் கதை’ என்ற பெயரில் மட்டுமில்லாமல், 'பொன்னர் - சங்கர் கதை', ‘குன்னடையான் கதை’ என்ற பேர்களிலும் அறியப்படுகிறது. 


கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்கள் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள். இவர்களின் வரலாறு, கொங்கு மண்டல வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது. காட்டை, நாடாக்கி, குளம் வெட்டி, வளம் பெருக்கி, கோயில் எடுத்துப் பல இடங்களில் குடியேறிப் பல்கிப் பரந்து பெருகி வாழும் சமுதாயம் இது என்பதாகப் பாடல்களின் மூலம் அறிகிறோம். இவர்கள் தங்கள் மண்ணின் சாமியாகக் கும்பிடும் அண்ணன்மார் என்கிற பெரிய அண்ணன் பொன்னர், சின்ன அண்ணன் சங்கர் என்ற அண்ணன் தம்பியின் சரித்திரத்தைச் சொல்லும் வீரப்பாடல்கள் பலவுண்டு. பொன்னர் - சங்கர் கதை இவர்களின் தங்கையின் பார்வையிலிருந்தே நகர்ந்ததால், மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்றும் அடையாளப்படுத்துகின்றனர். பொன்னர் - சங்கர் சகோதரர்கள் எவ்வாறு தங்கள் நெல்லி வளநாட்டை அமைத்தார்கள், வேட்டுவ கவுண்டர்கள் தலைவனின் சூழ்ச்சிக்கு எதிராக எவ்வாறு தாக்கு பிடித்தார்கள், தங்கள் நாட்டை காக்க எப்படியெல்லாம் போராடினர்கள் என்பதாக அண்ணன்மார் சாமி கதை விரிகிறது.


கலைஞரின் பொன்னர் - சங்கர் நாவலும் மையக்கதையிலிருந்து விலகாமல், புதிய துணைப்பாத்திரங்களை உருவாக்கி, கதைக்களத்தை இலக்கிய வளத்தோடு விரிவாக்கி, பண்டைத்தமிழர்களின் வீர உணர்வு, மானங்காக்கும் மாண்பு, தொன்மைப் பெருமைகளை பேசுகிறது. இத்தனை இருந்தும் நம்மிடையே சங்ககாலம் தொட்டே இருந்த ஒற்றுமையின்மை குறித்தும் அவரது மனத்தாங்கல் அவ்வப்போது கதாப்பாத்திரங்கள் வழி வெளிப்படுகிறது. உண்மையில், பொன்னர் - சங்கரில் கலைஞர் தொட்டுச் செல்லாத மானுட உணர்ச்சிகளே இல்லை எனலாம். பண்பாடு, பாச உணர்வு, மன உறுதி, வீரம், காதல், விவேகம், தனி மனிதனின் காழ்ப்புணர்வு, அதன் பின்விளைவாக ஏற்படும் பெருஞ்சேதம் என்பதாக நம்மிடையே புழங்கும் மனிதர்கள் அல்லது நாமும் சேர்ந்து தான் நாவலில் உலாவுகிறோம்.


குன்றுடையான் (பேச்சு வழக்கில் குன்னுடையான்), தாமரை (குன்றுடையான் மனைவி), பொன்னர் (பெரியண்ணன் - குன்றுடையான் மகன்), சங்கர் (சின்னண்ணன் - குன்றுடையான் மகன்), அருக்காணித் தங்கம் (அ) தங்காயி (குன்றுடையான் மகள்), செல்லாத்தாக் கவுண்டர் (குன்றுடையான் பங்காளி), தலையூர் காளி (வேட்டுவர் குலத் தலைவன்), மாயவன், சாம்புவன் மற்றும் எண்ணற்ற துணைப் பாத்திரங்களைக் கொண்டு பொன்னர் - சங்கர் என்ற இந்த பிரம்மாண்ட‌ நாவல் புனையப்பட்டிருக்கிறது.


முன்னுரையே அழகாக 'முகவாயில்' என்று தலைப்பிட்டு தொடங்குகிறார். பெரிய மலைக்கொழுந்து என்றவரின் புதல்வி தாமரை தன் மாமன் மகனான நெல்லையன்கோடன் என்பவரைக் காதலிக்கிறார். இடையில், செல்லாத்தாக்கவுண்டர் மகன் மாந்தியப்பனை தாமரையுடன் திருமணம் செய்து வைக்க முயன்று, அதற்கு தாமரை மறுக்கிறார். நெல்லையன்கோடனை திருமணம் செய்த தாமரையை பெரிய மலைக்கொழுந்தும் அவரின் புதல்வரான சின்ன மலைக்கொழுந்தும் (தந்தையும், அண்ணனும்), செல்லாத்தாக்கவுண்டரின் நண்பராக மன்னன் தலையூர் காளியின் கோபத்திற்கு அஞ்சி வீட்டில் சேர்க்க மறுக்கின்றனர். தாமரை வீட்டைவிட்டு வெளியேறும் போது தன் தமையனான சின்ன மலைக்கொழுந்திடம் நீ நாளை என் ஆண் பிள்ளைகளை உன் பெண்பிள்ளைகளுக்கு மணம் முடிப்பதற்காக என் மாளிகை வீட்டின் வாசல் நாடி வருவாய் என்று சவால் விட்டுச் செல்கிறார். ஒன்றுமில்லாதவர்களாக துரத்தி அடிக்கப்பட்ட நெல்லையங்கோடனும், மனைவி தாமரையும் கடுமையான உழைப்பால், தங்களுக்கென்று ஒரு பூமியை (வளநாடு) உருவாக்கி பெரிய செல்வந்தர்களாகிறார்கள். பல குன்றுகளுக்கு அதிபதியானதால் நெல்லையங்கோடன், குன்றுடையான் என்று அழைக்கப்படுகிறான். அவர்களுக்கு அருக்காணித் தங்கம் என்ற புதல்வியும், பொன்னர் - சங்கர் (அண்ணன்மார்) என்ற இரு புதல்வர்களும் பிறக்கிறார்கள். வீரர்களாக வளர்க்கப்படும் அவர்கள் பல இன்னல்களைத்தாண்டி, தாயின் சபதப்படி, மாமன் சின்ன மலைக்கொழுந்தின் மகள்களான முத்தாயி மற்றும் பவளாயியை திருமணம் செய்கின்றனர். அண்ணன்மார் புகழ் பரவபரவ, வேட்டுவகுல மன்னனாகிய தலையூர் காளி அவர்கள் மீது பொறாமை கொண்டு பல இன்னல் தருகிறான். முன்பகை காரணமாக பங்காளிகளான செல்லாத்தாக் கவுண்டரும், மாந்தியப்பனும் தலையூர் காளியின் மனதில் நஞ்சை விதைத்து, வஞ்சகமாக வளநாடு மீது போர் தொடுக்கின்றனர். கணவர்கள் இல்லாத போது சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், முத்தாயியும், பவளாயியும் தங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள அரண்மனைக்கு தீ வைத்து, உயிர் துறக்கிறார்கள். இறுதியில் காளி மன்னன் வீழ்த்தப்பட்டாலும், கலைஞரின் பொன்னர் - சங்கர் நாவல் முடிவில் நமக்கு சின்ன திடுக்கிடல் காத்திருக்கிறது.
வீரம் மிக்க இக்கதையில் கலைஞரின் வர்ணனைகள் போர்க்களத்தில் பூத்த பூ போல, தனித்துத் தெரிகிறது. உதாரணமாக, துவக்கத்தில் வரும் தாமரை நாச்சியின் திருமணச் சடங்கை இவ்வாறு விவரிக்கிறார்: 


குறித்த நேரத்தில் மணவிழா நிகழ்ச்சிகள் கலைக்கட்ட துவங்கின. இரு வீட்டைச் சேர்ந்த உறவினர்களும் பந்தலில் கூடியவுடன், முதல் சீர் எனப்படும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. மஞ்சளில் நனைக்கப்பட்ட துணியில் நவதானியங்களையும் முடிந்து, அரச மரக்கிளையால் அமைந்த முகூர்த்தக்காலில் கட்டி, அருமைக்காரர் பால் வார்த்து அதற்குரிய பூசைகளை நிறைவேற்றி வைத்தார். மணமகன் நெல்லியங்கோடனை மணவறையில் அமர்த்தி, பிரமச்சரிய விரதம் கழிக்கப்பட்டது. வெற்றிலைக் கட்டுதல் என்னும் முறைப்படி வெற்றிலை பாக்கு, தேங்காய், வாழைப்பழம், கண்ணாடி, சீப்பு, விரலி மஞ்சள், எலுமிச்சம்பழம், பூ, சந்தனம், கூரைச்சேலை, ரவிக்கைத்துணி முதலியவற்றை ஒரு வேட்டியில் மூட்டையாகக் கட்டி, அதற்கு அருமைக்காரர் பூசை செய்து வைக்கிறார். அதனை மேளத்தாளத்தோடு பிள்ளையார் கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து கொண்டு வந்து மணவறையில் வைத்து அதற்கு நீர் சுற்றி அவிழ்த்து மணமகள் தாமரை நாச்சிக்கு கொடுக்கச் செய்து அவளும் முறைப்படி அந்த வெற்றிலை கூரைச்சேலையை அணிந்து பெரியவர்கள் மூவரை வணங்கி எழுந்தாள். நெல்லியங்கோடனை ஒரு முக்காலியின் மீது உட்கார வைத்து செஞ்சோற்றை சுற்றிப் போட்டு, தண்ணீர் வார்த்து திருஷ்டிப் பரிகாரம் செய்யப்பட்டது. கணுவேயில்லாத விரலிமஞ்சளை, மஞ்சள் தடவப் பெற்ற நூலில் கட்டி, அதற்கு தூபம் காட்டி, அருமை பெரியோர் எனப்படும் அருமைக்காரர் மணமக்கள் இருவரின் வலது கரங்களிலும் கட்டிவிட்டார். சுற்றத்தார் சூழ்ந்து வர மணமகன் குதிரையில் அமர்ந்து, பிள்ளையார் கோவில் சென்று தேங்காய் உடைத்து வணங்கி வந்தான். பெண் வீட்டார், 'நாட்டார் சபை' எனப்படும் கொங்குப் பெருமக்கள் கூடியிருக்கும் இடத்துக்கு வந்து, “வாருங்கள் எல்லோரும்” என முறைப்படி அழைத்திடும் சடங்கும் இனிது நிறைவேறியது. மணமக்களுக்கு மாமன் முறையுள்ளோர் அனைவரையும் அழைத்து, புதுவேட்டி வழங்கி, சந்தனம் பூசி, பால் பழம் அருந்துமாறு செய்யப்பட்டது. நிறைநாளி சுற்றப்பட்டு ஐந்து செஞ்சோற்று அடைகளையும் அகற்றி மணமக்களுக்கும் அருமைக்காரப் பெண்மணி திருஷ்டி கழித்து முடித்தாள்.


மணவறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாழை குமுகு மரங்கள் கட்டப்பட்ட மணவறையின் நடுவில் இரண்டு கரகங்கள் வைக்கப்பட்டு, அவற்றில் ஒன்றில் நிறைய நெல்லும், மற்றொன்றில் நிறைய நீரும் நிரப்பப்பட்டன. கரகங்களுக்கு முன்னால் மஞ்சளில் பிள்ளையாரும், ஆயிரப்பெருந்திரியும், பூதக்கலச் சாதமும், வெற்றிலை பாக்கு மற்றும் அச்சுவெல்லக் குவியலும் காட்சி தந்தன.  குதிரை மீது அமர்த்தி அழைத்து வரப்பெற்ற மணமகன் நெல்லியங்கோடன் மணவரைக்கு வந்து சேர்ந்ததும் மங்கல நாண்சூட்டும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. குடிமகன் எனப்படுவோன் ‘கம்பர் மங்கல விழா வாழ்த்து’ என்னும் பாடலை அழுத்தமான குரலில் சொற் சுத்தம் கெடாமல் பாடியபோது அந்தப் பந்தலே உணர்ச்சிமயமாக இருந்தது.” 


மேற்கண்ட விவர்ணைகளைப் படிக்கும் போதே, கொங்கு மண்டல திருமணத்துக்கு போய்வந்தது போல் இருக்கிறது. இது ஒரு சோறு பதம் தான். ஒவ்வொரு நிகழ்வுக்கும் கலைஞர் மெனக்கெட்டிருப்பதை பார்த்தால், எத்தனை ஆராய்ச்சி இதன் பின் இருக்க வேண்டும் என்றே மலைப்பாக இருக்கிறது. சரித்திர நாவல் எழுதுவது, எழுத்தைத்தாண்டியும் வேலை பளு மிக்கதாகக் கருதுகிறேன். அன்னப்பட்சியைப் போல், கிடைத்த தகவல்களிலிருந்து நம்பகத்தன்மை கொண்டவற்றை, சுவாரஸ்யத்துக்காக சேர்க்கப்பட்டவையில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும். பின்னர் கதையின் மையக்கரு சிதையாமல் பாத்திரங்களை உருவாக்க வேண்டும். மனிதர்கள் பேசுமொழி, வாழ்விடம், உடை, இயற்கை காட்சிகள் என எல்லாவற்றிலும் கற்பனை மிகைப்படாமல் காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு இருத்தலும் வேண்டும். இவ்வளவிற்கும் ஒரு கலைஞனுக்கு நுண்ணுணர்வு மட்டுமே வழிகாட்டி! இந்நாவலைப் பொறுத்தவரை, கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடை மொழி அமைந்தது குறித்து யாதொரு கேள்வியும் எழாதபடி அரண் நிற்கிறார்கள் பொன்னரும், சங்கரும்!


கதை முழுக்கவே சாதிப் பெயர்கள் வருகின்றன. கொங்கு பூமி வேட்டுவ - வேளாள குல பகைமையே இந்த நாவலின் கதைக்களம் என்பதோடு, கதையின் நாயகர்களை, பிற பாத்திரங்களைப் பாராட்டுகையில், அவர்தம் குலத்தையும் அதன் பெருமைகளையும் உரைக்க வேண்டியது அவசியமாகிறது. சாதிப் பெருமை பேசுவதாக அமைந்த கதைக்களம், ஓர் எழுத்தாளருக்கே அபாயகரமானது என்னும் போது, மிகப் பெரிய அரசியல் கட்சியின் தலைவர் எழுதினால்? அவர் தொடரை எழுதிக் கொண்டிருக்கையிலும் அம்மாதிரி பல பிரச்சனைகள் அவரை விமர்சித்து வந்ததை அறிய முடிகிறது. ஆனால் கலைஞர் ஒரு மதியூகி. இவற்றை எதிர்பார்த்தோ என்னவோ, முன்னுரை வெளியான முதல் வார இதழிலேயே பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி, தான் விரும்புவது ஒரே சாதி, அது ‘தமிழர் சாதி’ என்பதை அறிவித்து விடுகிறார்.  


கதையின் போக்கில் ஓர் இடம் வருகிறது, மாயவரைப் பார்த்து ஒரு பெருமாட்டி சொல்கிறார்: “உங்கள் வேட்டுவர் குலத்தில் யாவரும் தும்பைப் பூ மாதிரி வெள்ளை மனதுக்கு சொந்தக்காரர்களாயிற்றே!”. இதற்கு, மாயவரின் பதிலாக வருமிடத்தில் கலைஞர் என்னும் சமூகநீதிக் காவலர் வெளிப்படுகிறார். “அம்மா, நீ சொல்லும் போது தான் நான் வேட்டுவ குலத்தில் பிறந்தவன் என்பதே எனக்கு நினைவுக்கு வருகிறது. ஏதோ அவரவர்கள் வாழ்கிற இடம், செய்கிற தொழில் கடைப்பிடிக்கிற பண்பாடு இவைகளில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் மனிதரில் பல பிரிவுகள் உருவாயின. காலப்போக்கில் அந்தப் பிரிவுகள் பிறப்பின் அடிப்படையில் உருவாயின என்ற தவறான கருத்து ஏற்பட்டுவிட்டது. அதனால் என்னை வேட்டுவ குலம் என்றும் உங்களை வேளாள குலம் என்றும் அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் எல்லாரும் ஓர் குலம் தான்!


வேட்டுவ குல மன்னன் தலையூர் காளியை முழுக்க‌ வில்லனாக்கி விடாமல் அவன் வீரத்தையும் கதையோட்டத்தோடு சொல்லிக் கொண்டே வருகிறார். வேளாள குலத்தைச் சேர்ந்த பங்காளிகளே மன்னன் மனதில் பகை வளர்க்கும் விதமாக கதை இருப்பதால், இது சாதிச் சண்டை எனக் கருதவும் முடியாதவாறு செய்துவிட்டார். ஆதி திராவிட சமூகத்தை சேர்ந்த தோழன் தோட்டி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, அவர் வழித்தோன்றலான வீரமலை எப்படி கடைசி வரை பொன்னர் - சங்கருக்கு உறுதுணை நின்று வீரமரணம் எய்துகிறார் என்பதை கலைஞர் காரணமில்லாமல் சேர்த்திருப்பார் என்று தோன்றவில்லை.


திராவிடச் சித்தாந்தங்களை பொன்னர் - சங்கர் மூலம் புகுத்தினார் என்றொரு விமர்சனம் இன்றளவும் வைக்கப்படுவதுண்டு. ஆனால், கலைஞர் திராவிடச் சித்தாந்தங்களை விட்டுக் கொடுக்காமல் எழுதினார் என்று சொல்வதே தகும். உதாரணமாக, கதையில் இரு இடங்களில் திருமண நிகழ்வுகள் வருகின்றன. அவை இப்போது இருப்பது போல், வைதீக அந்தணர்களால் நடத்தப்பட்டிருக்கும் என்பதை கலைஞர் நம்பவில்லை. “அருமை பெரியவர்” எனப்படும் அருமைக்காரர் இறை வழிபாடு செய்து மணவிழாவைத் தொடங்குவதாக குறிப்பிடுகிறார். அடுத்ததாக, கும்மியடி பாடல்களில், இதற்கு முன் எழுதப்பட்ட நூல்களில் இருப்பதை போல முடிவில் அருக்காணித்தங்கம் வேண்டிக் கொண்டபடி பெரியகாண்டி அம்மன், போர்க் களத்தில் இறந்துவிட்ட பொன்னர் - சங்கரை ஐந்து நிமிடங்கள் உயிர்பித்துத்தந்த பகுதியும் நாவலில் இடம் பெறவில்லை. ஆனால், கடைசி அத்தியாயத்தை மூலநூலான வேட்டாம்பாடி அ.பழனிச்சாமி குறிப்புகளுக்கு ஒதுக்கி, அவர் எழுதியுள்ளதையும் அப்படியே தருகிறார். தன் சித்தாந்தங்களையும் விட்டுக்கொடுக்காமல், காலங்காலமாக இருக்கும் நம்பிக்கையையும் சிதைக்காமல் இதைக் கையாண்டிருப்பதை யோசித்தால், கலைஞர் மீது மரியாதை கூடுகிறது. நம்மிடையே வாழ்ந்த சாணக்கியர் அவர் என்றால் மிகையாகாது.


கலைஞரின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களோடு பொன்னர் - சங்கர், பிரபலங்கள் பலரும் நடித்த திரைப்படமாகவும் வந்தது. ஆனால் வெற்றி பெறவில்லை. முதன்மை காரணம் மக்கள். கலைஞரின் எழுத்தாலும், கோபுலுவின் கோட்டோவியத்தாலும் மனதில் பதிந்து விட்ட கதாபாத்திரங்களோடு, திரையில்  இருப்பவர்களை ஒப்பிட்டுப் பார்த்து ஏமாற்றமடைந்தார்கள். முக்கியக் கதாபாத்திரங்களே வசனங்களை எழுத்தின் வீரியத்தோடு பேச முடியாமல் திணறின. கடைசியாக, நாயகிகளின் முகச்சாடை, உடைகள் மற்றும் ஆபரணங்கள் அன்னியத்தன்மையோடு இருந்தன. அதனால் தான் தோல்வியைத் தழுவியது.


காட்சி மொழி எழுத்தை விடவும் சக்தி வாய்ந்தது தான். ஆனால், எழுத்தை அங்கீகரித்த மக்கள் காட்சியை நிராகரித்தால், அங்கே எழுத்து ஜெயித்ததாக‌த் தான் கொள்ளவேண்டும். கலைஞர் ஜெயித்திருக்கிறார்!


***

டிக்டாக் கலாட்டா

'ஒன் ப்ளஸ் ஒன் டூ மாமா' என்று குடும்பத்தலைவி, தலைவரைப் பார்த்துப் பாடுகிறார். அடுத்த வரி, 'யூ ப்ளஸ் மீ, த்ரீ மாமா' என்று பாடிக்கொண்டே தன் பின்னாளிருந்து ஒரு குழந்தையை வெளியே எடுக்கிறார். கணவர், 'புருஷன் சொன்னா கேட்டுக்கனும், இரண்டும் ஒண்ணும் நாலு!' என்ற பட வசனத்தை பேசிக்கொண்டே, தன் பின்னாளிருந்து இன்னோரு குழந்தையை வெளியே அழைக்க, அந்த ரசனையான காணொளி முடிகிறது. டிக்டோக் செயலி மூலம் பதிவேற்றப்படும் வீடியோக்கள் தான் இன்று இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கின்றன. பதினைந்து நொடிகளுக்குள் தங்கள் திறனை காட்ட வேண்டுமென்பது ஒரு சவாலைப்போல இருக்க இளைஞர்கள் மட்டுமில்லாது, உலகம் முழுவதுமிருந்து எல்லா வயதுக்காரர்களும் டிக்டோக்'கில் இணைந்திருக்கிறார்கள்.

நாளை இங்கே யாவருக்கும் பதினைந்து நிமிட புகழ் கிடைக்கும் என்று ஆண்டி வேர்ஹால் என்ற அமெரிக்க அறிஞர் சொல்லிச்சென்றார். அதுவே தீர்க்கதரிசனமாக பார்த்துக்கொண்டிருந்த நமக்கு, டிக்டோக் ஒருவர் புகழ் பெற பதினைந்து நொடிகளே போதும் என்கிறது. டிக்டோக் பயன்படுத்தக் கூடாது என வீட்டார் கண்டித்தால் தற்கொலை செய்துக்கொள்ளும் மனிதர்கள் கூட, காரணத்தையும் காணொளியாக பதிவேற்றிய பிறகே உயிரை விடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

மீச்சிறு காணோளிகளில் மேஜிக் நிகழ்த்துகிறார்கள், புதுவித தலையலங்காரம் செய்து காண்பிக்கிறார்கள். மைக்கேல் ஜாக்ஸனின் நிலா நடை (மூன் வாக்) போன்று நடக்கிறார்கள். இன்னும் என்னென்னவோ சாகச வீடியோக்கள் உலகம் முழுவதுமிருந்து நொடிக்கு நொடி பதிவேற்றப்பட்டுக்கொண்டே இருந்தாலும், தமிழ்நாட்டில் இருந்து வரும் வீடியோக்களை கவனிப்பது தனி சுவாரஸ்யம் தான். இளம் பெண்களுக்கு நிகராக குடும்பத்தலைவிகளும் டிக்டோக்கில் கலக்குகிறார்கள். 


சமூக வளைத்தலங்களை போன்றே, இதுவும் ஒரு புதிய வாசலை திறந்திருப்பதை மறுக்க முடியாது. ஒவ்வொரு நாளும் உலகின் எங்கோ ஒரு மூலையின் சட்டங்கள் ஏற்றப்படுவதைப் போலவே டிக்டோக்கில் அவை தகர்த்தெறியவும் படுகிறது. டிக்டோக் காணொளியில் திறமையை காண்பித்தே திரைப்பட வாய்ப்புகளை பெறுகிறார்கள். திரைப்பட வாய்ப்பை தருவதாக கூறியே சிலர் வேறு வாய்ப்பும் பெறுகிறார்கள். இதில் ஆர்வக்கோளாற்றில் ஏதையாவது பதிவிட்டுக்கொண்டே இருக்கும் நம்மாட்கள் அவ்வப்போது பார்வையாளர்களை திகிலடையவைக்கவும் தவறுவதில்லை.

உதாரணமாக, ‘திருச்சி, பத்தாம் நம்பர் பிள்ளையார் கோவில் தெரு பாமா, நீ எப்படிப்பட்டவன்னு எனக்கு தெரியாதா’ என்று ஆரம்பித்து, சகட்டமேனிக்கு கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார் ஒரு பெண். அந்த பாமாவும் வேறு வீடியோவில் பதில் சொல்லிக்கொண்டிருப்பாராக இருக்கும். டிக்டோக் வீடியோ தெரு சண்டைக்கு உதவிடும் என்று டிக்டோக் நடத்தும் சீனாக்காரர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது. ‘எங்க சாதி பெருமை என்ன தெரியுமா?’ என இளம்பெண்கள் இல்லாத மீசையை முறுக்கி காட்டுகிறார்கள். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சமூகம், இன்று தொழில்நுட்பம் பயன்படுத்தி டிக்டோக்கில் சாதி வளர்க்கிறது.

அடுத்து, தன் வீடியோ ஒன்று டெலீட் செய்யப்பட்டு விட்டதாக இளம்பெண் முறையிடுகிறார். 'என் ரசிகர்கள் நீங்கள் தான் டிக்டோக் கம்பெனியிடம் நியாயம் கேட்க வேண்டும்!' என்று அவர் கண்கள் கலங்க, இங்கே பல இதயங்கள் கைக்குட்டையை தேடுகின்றன. காற்சிலம்புக்கு பதிலாக மொபைல் இருக்க, கலியுக கண்ணகிகளின் வாழ்வில் லைக்குகள் விளையாடுகின்றன. என்ன, பையன்கள் இப்போதெல்லாம் கல்லூரி வாசல்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் அழகிய பெண்களின் முகதரிசனத்திற்காக காத்திருப்பதில்லை. டிக்டோக் செயலியை தரவிறக்கினால், அகில உலக அழகிகளும் உள்ளங்கையில் தரிசனம் தருகிறார்கள்.

துப்பட்டா போடாமல் சுடிதார் அணியும் பெண்களிடம், ஆண்களுக்கு நல்ல பெயர் எடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ‘துப்பட்டா போடுங்க, ஆண்ட்டி’ என்று சிலர் கமெண்ட் போட, துப்பட்டாவிலோ, ஆண்ட்டி என்று அழைத்ததாலோ காயப்பட்டு, அடுத்த வீடியோவில் உன் தங்கச்சியா இருந்தா இப்படி சொல்லியிருப்பியா என்று ஒரு திருமதி கண்ணை கசக்குகிறார். சீக்கிரமே கமெண்ட் பாக்ஸ் சகோதரர்களால் இத்தம்பதிகளுக்கு  விவாகரத்து கிடைத்தாலும் ஆச் சர்யப்படுவதற்கில்லை. பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கத்தையே எத்தனை நாள் பிடித்துக்கொண்டிருப்பது? சக டிக்டோக்வாசியை காதலிப்பது தான் சிறந்த மனப்பொருத்தம் என்று ஆண்களும், பெண்களும் சமூகத்தின் எல்லா சட்டதிட்டங்களையும் கட்டுடைக்கிறார்கள். இதில் சில கணவர்கள் உயிரையும் விடுகிறார்கள்.

டிக்டோக் யுகத்தில் பிறந்த குழந்தைகள் தான் ரொம்ப பாவம். தப்பித்தவறி ஒரு குழந்தை பேசியது சூப்பர் ஹிட்டாக, பல பெற்றோருக்கும் தங்கள் குழந்தை படித்து பட்டம் பெற்று நல்ல பெயர் வாங்கித்தருவதெற்கென காத்திருப்பது வீண் என்றுபடுகிறது. க்விஸ் போட்டியில் நேராக பதினாறாவது கேள்விக்கு தாவிடும் அவசரம் இன்றைய அப்பா, அம்மாக்களுக்கு வருகிறது. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி டிக்டோக்கை ஹிட்டாக செய்வது! பெற்ற குழந்தைகளே கஷ்டப்படும் போது, வாயில்லா ஜீவன்களுக்கு என்ன வந்தது கேடு?? அவைகளும் காணொளியில் தோன்றி லைக்கை அள்ளுகின்றன. என்ன, டிக்டோக்கில் தாங்கள் புகழ் பெற்றதை அவைகள் ஒருநாளும் அறியப்போவதில்லை என்பது தான் இங்கே சோகம்.

ஜோடியாக ஆடும், நடிக்கும் டிக்டோக்குகளில் அம்மா மகன் வகையறாக்கள், அவர்களுக்கு நெஞ்சு ஜிகுஜிகுக்கிறதோ இல்லையோ, நமக்கு நெஞ்சு பதைபதைக்கிறது. ஒரு டிக்டோக் காணொளியில் 'போன வீடியோவில் இருந்தது என் மகன் தெரியுமா? ' என்று ஒரு பெண்மணி வந்து, இவர்கள் காதலை வாழ்த்திய ரசிகர்கள் மீது கோபப்பட்டபிறகு தான் பலரும் அவருடைய முந்தய காணொளியை தேடித்தேடி பார்த்தார்கள். இது மற்றொரு நண்பரின் கதை. அவர் நீண்ட நாட்களாக ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த டிக்டோக் பிரபலம் ஒரு திருநங்கை என்று தெரியவர, அன்றே சந்நியாசம் போய்விடப் பார்த்தார். பலமுறை தனிசெய்தியில் உரையாடி காதலை வளர்த்த கதையை பின்னால் தெரிந்துக்கொண்டோம்.


சிறுவயதில் தோழி சொன்னதால், புட்டபர்த்தி சாய்பாபா அவர்கள் தலையில் காக்கை, குருவிகள் கூட கூடுகட்டி வாசம் செய்யும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். வளர்ந்தப்பின்னும் டிக்டோக் இளைஞர்கள் முக்கோண, செவ்வக, கூம்பு வடிவ தலைக்குள்ளிருந்து குருவி பறந்து வருமா என்று பார்க்கிறேன். ஆண்கள் அளவுக்கு பெண்கள் டிக்டோகில் மெனக்கெடுவதில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். கொஞ்சம் அழகாக இருந்தால் போதும், சினிமா பாடல்களுக்கு புருவத்தை தூக்கி இறக்கி வாயசைத்தாலே, ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் லைக்கை (ஹார்ட்டினை) தட்டிவிடுகிறார்கள். ஆண்கள் தான் தமிழ் இணையத்தின் நிரந்தர நாயகன் வைகைப்புயல் வடிவேலுவின் வசனங்களை மூச்சுமுட்ட பேசி, நடித்து, குட்டிக்கரணம் அடிக்காத குறையாக ஹார்டின் தேடுகிறார்கள். 


எங்களுக்கெல்லாம் வாய்த்த ஆசிரியர்கள் சிரிப்பை சிரத்தையாக வீட்டில் விட்டுவிட்டு வந்தவர்கள். சயின்ஸ் டீச்சர் ஒருநாள் முழுவதும் யாரையும் சிடுசிடுக்காமல் இருந்தால், அவர் மிக மகிழ்ச்சியாக இருப்பதாக கொள்வோம். இது இருபத்தோராம் நூற்றாண்டு. பையன்களும் டீச்சருமாக வீடியோவில் குத்தாட்டம் போடுவதை பார்க்கையில், முடிந்துப் போன என் பால்யத்தை எண்ணி பெருமூச்சுவிடத் தான் முடிகிறது. 

மகான் ராமகிருஷ்ணபரமஹம்சரிடம் ஒரு தாய் தனக்கு மகனுக்கு இனிப்பு சாப்பிடாமல் இருக்க அறிவுரை கூறுமாறு வேண்டுகிறார். பரமஹம்சர் அவர்களை ஒரு வாரம் கழித்து வரச்சொல்கிறார். காரணம் கேட்டப்போது, முதலில் நான் அந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும். அதன் பிறகு தான் அந்த குழந்தைக்கு அறிவுரை சொல்ல தகுதி பெறுவேன் என்றாராம். இன்று எந்த பெற்றோருக்கும் பையனை டிக்டோக் போதையிலிருந்து மீட்டெடுக்க அறிவுரை சொல்ல முடியாது. மருத்துவர் பெற்றோரிடமிருந்து சிகிச்சையை தொடங்க வேண்டும்.


இன்னும் சாவு வீட்டிலும், இடுகாட்டிலும் எடுக்கப்படும் வீடியோக்கள் உண்டு. 'மரணம், மாஸு மரணம்' என்று இதுவரையில் யாரும் பிணத்தின் கையை பிடித்திழுத்து ஆடவில்லை என்பதே இத்தருணத்தில் நிம்மதியாக இருக்கறது. சில டிக்டோக் விடியோக்களின் மெனக்கெடல்களை பற்றி சொல்லியே ஆக வேண்டும். சந்திரமுகி போல வேடமிட்டு பதினைந்து வினாடிகள் தோன்றுவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது மேக்-அப் போட்டிருக்க வேண்டும். செட்-பிராபர்டியும் சில காணொளிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

குடும்பப்பெண் கதாபாத்திரம் என்றால், துடைப்பம், ஒட்டடைக்குச்சி சகிதம் காணொளியில் ராணி வருகிறார். பாடல்கள் பாடுவதென்றால், தேனீர்வடிகட்டி மைக் ஆகிறது. இரு கொட்டாங்குச்சிகளைக் கொண்டு ஹெட்ஃபோன் மாட்டிக்கொள்கிறார்கள். பதினைந்து நோடி காணொளிக்காக முப்பது புடவை மாற்றி, அதற்கேற்ற நகையலங்காரமும் செய்த ஒரு பெண்ணை பார்த்தப் பிறகு, பெண்களின் பொறுமைக்கு ஆண்கள் அருகில் கூட வர முடியாது என்று டிக்டோக் கம்பேனி மேல் சத்தியம் செய்கிறேன். 

என் நண்பர் ஒருவரின் குடும்பம் டிக்டோக் பிரபலம். பலமுறை ஒத்திகை பார்ப்பது, பதிவேற்றிய பின் லைக்குகள் எண்ணிக்கையை கண்காணிப்பது, கமெண்ட்களுக்கு பதிலளிப்பது, தனிச்செய்தி வந்திருக்கிறதா என்று பார்ப்பது, மற்றவர் டிக்டாக் காணொளிகளை பார்ப்பது, அதில் இல்லாத ஒன்றை செய்ய திட்டமிடுவது என்று நாளொன்றுக்கு ஐந்து மணி நேரம் செலவிடுவதாக பெருமையாக சொன்னார். வெறும் டிக்டோக் தானே என்று சாதாரணமாக நினைத்திருந்த என்னை அதன் பின் இருக்கும் நேரமும், உழைப்பையும் சொல்லி வாயடைக்கச் செய்துவிட்டார். மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்தோடு அங்கீகாரத்தையும் சேர்க்க வேண்டும்.

ஆனால் இந்த மீச்சிறு காணோளிகள் யாவருக்குமானவை அல்ல. இதை ரசிக்க பிரத்யேகமான மனநிலை தேவைப்படும். குறிப்பாக,  வீடியோவில் தையாதக்கா என்று குதிப்பவர் பின்னால் துணி மூட்டையாக கிடந்தால், அதை முதலில் மடிக்க கூடாதா என்று தோன்றக்கூடாது. படிக்கிற பையன்கள் இப்படி நடிகர் பைத்தியமாக இருந்தால், வாழ்க்கை பாழாகாதா என்று கூடுதலாக யோசிக்க கூடாது. யாராவது ரொம்பவே இறுக்கமான உடை அணிந்து காலை கைய எசகுபிசகாக தூக்கினால், பதினைந்து வினாடிகள் கிழியாமல் இருக்க வேண்டி பிரார்திக்க கூடாது. இன்னும், அழும் குழந்தையை தூக்கி சமாதானப்படுத்தாமல், வீடியோ எடுக்கிறார்களே என்று எரிச்சலடையக் கூடாது. சில வீடியோக்கள் மொட்டை மாடியில் எடுக்கிறார்கள். அது இதய பலவீனமானவர்களுக்கு அல்ல. நடனமாடிக்கொண்டே விளிம்பு வரை வரும்போது பதினைந்து நோடிகள் முடிகிறது. அவருடைய அடுத்த வீடியோ வந்தால் தான் உண்டு, அதற்குள் அதிர்ச்சியில் பார்ப்பவர் பிராணனை விட்டுவிட கூடாது. 


( அவள் விகடனில் எழுதியது)

ரயிலிலே ஓர் அமைதி!
ரயிலிலே ஓர் அமைதி!


மானுட குலத்தின் சகல பயண வழிகளிலும் சுவாரஸ்யமானது ரயில் பயணம்தான். என் அனுபவங்களை வார்த்தைகள் வழியே சிலாகித்ததைப் படித்தால் நீங்களும் அதை ஆமோதிப்பீர்கள்.

எவ்வளவு சீக்கிரம் ஸ்டேஷனுக்குச் சென்றாலும் மெல்லிய பதற்றம் இல்லாம லில்லை. சரியான பிளாட்பாரம் தானா என்று ஒரு தடவைக்கு ஒன்பது தடவை பார்த்து, அதுவும் போதாமல் அதே டிரெயினைப் பிடிக்கப் போகிறவருக்கும் அதே பிளாட்பாரம் தானா என நோட்டம்விட்டு நகர்வதில் தொடங்குகிறது அந்தச் சுவாரஸ்யம். இந்திய ரயில்வேக்கு, `இந்தியர்களுக்கு எந்தக் காலத்திலும் மூட்டுவலியே வராது!' என்ற அசாத்திய நம்பிக்கை உண்டு. ரயிலுக்குள் புதுசு புதுசாக ஆயிரம் சொகுசுகள் தர ஆசைப்படுபவர்கள், குடிமக்கள் பிளாட் பாரம் மாற, நூறு படி ஏறி, நூறு படி இறங்கி, சக்கரம் வைத்த பெட்டியை மூச்சிரைக்கத் தூக்கிவருவதைப் பார்த்தும் `மனம் இரங்க மாட்டேன்' என்று அடமாக இருக்கிறார்கள்.

இதை தேசபக்தர் யாரிடமாவது சொல்லிப் புலம்பினால், `அதான் தாம்பரத்தில் எஸ்கலேட்டர் இருக்கே!' என்பார்கள். அது சரிதான், நான் கும்பகோணத்திலிருந்து சிதம்பரத்துக்குப் போக வேண்டும். எஸ்கலேட்டருக்காக தாம்பரம் வந்து ஏற முடியுமா என்ன? என் பாட்டி ஒவ்வொரு பயணத்தின்போதும், பல பிரார்த்தனைகளில் ஒன்றாக, `முதலாவது பிளாட்பாரத்துக்கு டிரெயின் வரணும்' என்று பெருமாளிடம் அப்ளிகேஷன் போட்டுவைப்பாள். அது என்ன கஷ்டம் என்று பாட்டி ஆவதற்குள்ளேயே எனக்குப் புரிந்துவிட்டது.

`நான் பிளாட்பாரத்துக்கு வந்துட்டேன்' என்று யாருக்காவது அலைபேசியில் சொன்னால், `ரொம்ப நல்லது' என்று பதில் கிடைக்கும். நடைமேடையில், எப்போதும் பெரிய பெரிய மூட்டை முடிச்சுகளோடு உட்கார்ந்திருக்கும் குடும்பம் சாவகாசமாக இருக்க, கையில் சிறிய பையோடு இருக்கும் முதியவர் மட்டும் உர்ரென இருப்பார். `இந்தப் பெரிய குடும்பத்துக்கு முன், தான் ஏறிவிட வேண்டுமே' என்று கவலை அவரை நிலைகொள்ளாமல் வைத்திருப்பதை யூகிக்கலாம்.

ரயிலிலே ஓர் அமைதி!
தேவையே இல்லையென்றாலும், அடித்துப் பிடித்து ஒருவழியாக ரயிலில் ஏறி சீட்டைக் கண்டுபிடித்து உட்கார்ந்து, வழி அனுப்ப வந்தவருக்குக் கையசைத்து, பைகளையெல்லாம் காலுக்கு அடியில் தள்ளி விட்டுவிட்டால் பதற்றம் போய்விடும் என நினைத்தீர்கள் என்றால், அதுதான் இல்லை.

ரயில் கிளம்பி டிக்கெட் பரிசோதகர் வந்து பயணச்சீட்டைச் சரிபார்த்துச் சொல்லும் வரை இந்தப் பதற்றம் இருக்கிறது. `நார்த் இண்டியால எல்லாம் யாரும் டிக்கெட்டே வாங்கிறதில்லை. பிகாரிஸ் ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்ல ஏறி நம்ம இடத்துல உட்கார்ந்துட்டாங்கன்னா, டிடிஆர் கூட ஏன்னு கேட்க முடியாது!’ என்பதுதான் காசிக்குப் போய் வந்தவர்கள் பலமுறை சொல்லும் கதை. கும்பகோணத்திலிருந்து சிதம்பரம் போவதற்குள் எந்த பிகாரி வந்து என் இடத்தைப் பறிக்கப்போகிறான்? இருந்தாலும் கேள்விஞானத்தை மறக்காமல் கொஞ்சமாவது பதற்றப்பட்டு வைக்க வேண்டியிருக்கிறது.

ரயில் கிளம்புவதற்குள் எதிர் சீட்டில் இருப்பவரிடம் வழி அனுப்ப வந்தவர் நட்பாகிவிடும் காலமெல்லாம் உண்டு. பிரயாணம் தொடங்கிய அரை மணிக்குள்ளாகவே அருகில் இருப்பவர் களோடு, `எந்த கம்பெனி ஷேரில் எவ்வளவு போடலாம்', `இன்ஜினீயரிங் படிப்புக்கு இனி வேல்யூ இல்லை', `குழந்தை வரம் தரும் கடவுள்', `ரஜினி அரசியலுக்கு வரணும் சார்' என சகலமும் பேசுவார்கள். இவ்வளவு ஏன், பரஸ்பர ஜாதகப் பரிமாற்றமெல்லாம் நடந்திருக்கிறது. என் பெரியம்மா எதிரில் இருப்பவரோடு பேசிப் பேசியே, மூன்று தலைமுறைகளுக்கு முன் எங்கோ சொந்தம் இணைந்திருந்ததைக் கண்டுபிடித்த பிறகு நடந்தது அது.

என் பால்யத்தில் ரயில் பயணம் என்றால், முன்னதாகவே அம்மாவிடம் `டீல்’ பேசிவிடுவோம். போகும்போது எனக்கு ஜன்னலோரம் என்றால், வரும்போது என் தம்பிக்கு ஜன்னலோரம். சமீபமாக கவனித்ததில், சிறார்களும் இளைஞர்களும் ஜன்னலோரத்துக்கெல்லாம் ஆசைப்படுவ தாகத் தெரியவில்லை. அவர்கள் உலகத்துக் கான ஜன்னல் அலைபேசியில் இருக்கிறது.

அப்பர் பெர்த்தில் இளைஞனோ, இளைஞியோ மொபைல் மற்றும் ஹெட் போனோடு ஏறிப் படுத்துக்கொண்டால், இறங்கும்வரை அவர்கள் முகத்தை உங்களால் பார்க்க முடியாது. வெளியே, பின்
னோக்கி ஓடும் மரங்களையும், க்ராஸிங்கில் கையாட்டக் காத்திருக்கும் குழந்தைகளையும், ஐந்தாகப் பிளந்து காரம் தூவிக் கிடைக்கும் கொய்யாப் பழங்களையும் அவர்கள் திரையில்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

என் மாமா ஒருவர், அடிக்கடி மேலைநாடுகளின் புராணம் பாடுபவர். அவர் சொன்னது, `அங்க டிரெயினெல்லாம் நிசப்தமா இருக்கும் தெரியுமா? நம் ஊர் மாதிரி காரே பூரே என்று யாரும் பேசிக்கொண்டு வருவதில்லை'.  அமைதியான ரயில் எப்படி இருக்கும் என்று சின்ன வயதில் யோசித்திருக்கிறேன். இப்போது வெளிநாட்டுக்காரனே நம்மாள்களுக்கு மொபைல்போன் தந்து வாயடைத்து விட்டான். தாத்தா பாட்டிகள்கூட, பயணத்தின்போது நிமிர்ந்தே பார்க்காமல் வாட்ஸ்அப் செய்திகளை வாசிக்கும் அளவு பிஸியாக இருக்கிறார்கள்.

மிகக் கடுமையான குற்றவாளிகளுக்குக் கொடுக்கும் தண்டனைகளில் ஒன்று, ஒரே பாடலை நாள் முழுவதும் வருடக்கணக்கில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பி, பிறகு அந்தப் பாடலை நிறுத்தினால் பைத்தியம் பிடிக்குமாறு செய்துவிடுவார்களாம். போன பிறவியில் ஏதாவது பாவம் செய்திருந்தீர்களானால், அத்தகைய தண்டனையின் சாம்பிள் ரயிலில் கிடைக்கிறது. 

இதோ, என் எதிரில் இருக்கும் மூன்று வயது குழந்தைக்குப் பிடித்த ரைம்ஸ் `வீல்ஸ் ஆன் தி பஸ்'தான். எப்படித் தெரியும் என்கிறீர்களா? ஏறினதிலிருந்து இதுவரை இருநூற்று சொச்சம் முறை அத்தனை பேரும் கேட்டிருப்போம். நானாவது பரவாயில்லை, இந்த ரயில் இன்னும் இருநூறு கிலோமீட்டர் போகப்போகிறது.

குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் எளிமையான வழியாக இப்போது அலைபேசி இருக்கிறது. கண்பார்வை நிலையானதும் மொபைலில் பாடல் போட்டுப் பார்க்கக் கற்றுத் தந்துவிடுகிறார்கள். அதன் பிறகு சாப்பாடு, தூக்கம் தவிர்த்து எதற்கும் அம்மாவைத் தேடுவதில்லை. முன்பெல்லாம் வகுப்புக்கு ஒரு கண்ணாடிப் பெண் இருப்பாள். இப்போது வகுப்பில் கண்ணாடி இல்லாத குழந்தை இருந்தாலே பெரிய விஷயம். கடவுள், அடுத்தடுத்த வெர்ஷனில் அலைபேசி ஒளிக்குத் தகவமைத்துக்கொள்ளும் மானுட இனத்தைப் படைப்பதைப் பற்றி யோசிக்கத்தான் வேண்டும்.

ரயிலிலே ஓர் அமைதி!
இன்னமும் மாறாமல் இருப்பது ஒன்றுதான். `சூடும் சர்க்கரையும் இருந்தாலே அது தேநீர்தான்' என்று ஐஆர்சிடிசி நம்புவது. ஆயினும், அதைப் பருகாமல் பயணங்கள் ருசிப்பதில்லை. உணவு என்றதும் எனக்கு நினைவில் இருக்கும் மற்றொரு விஷயம், சக பயணிகளோடு பங்கிட்டு உண்டது. மயக்க பிஸ்கட் கொடுத்துக் கொள்ளையடித்த புண்ணியவான் யாரோ தெரியாது, ஒரு தேசத்தின் பயணப் பண்பாட்டையே மாற்றிவிட்டான்.

மார்வாடிகள் விதவிதமாக உண்பார்கள். கேரளாக்காரர்கள் பிரயாணத்தின் போதுகூட மீனைத் தேடுகிறார்கள். ஆந்திராக் காரர்களுக்கு உணவில் காரம் தூக்கலாக இருக்கும் என்பதெல்லாம் பயணங்களில் பார்த்தே கற்றுக்கொண்டோம். அநேகமாக இப்போதெல்லாம் பயணிகள், எடுத்து வந்த உணவைத் திரும்பி உட்கார்ந்து உண்கிறார்கள். அப்படியே அவர்கள் கொடுக்கத் தயாராக இருந்தாலும், யாரும் வாங்கத் தயாரில்லை.
முந்தைய தலைமுறையிடம் நான் மிகவும் ரசிக்கும் விஷயம் ஒன்று உண்டு. இளைஞர்கள் பிரயாண அலுப்போடு கலைந்த தலையோடு இறங்கிப் போகையில், வயதானவர்கள் சிரத்தையாக முகம் கழுவி, தலைவாரி, பவுடர், பொட்டு என ஃபிரஷ்ஷாக இறங்குவார்கள். போகும் இடம் அவர்கள் வீடுதான் என்றாலும்கூட, கலைந்த தலையோடு ரயிலிலிருந்து இறங்கும் முதியவர்களைப் பார்ப்பது மிக மிக அரிது.

முன்பு எப்போதையும்விட, மக்கள் பயணங்களைப் பற்றி நிறைய பேசுகிறார்கள். விடுமுறை வந்தால், புதுப்புது இடங்களுக்குப் போவதைப் பற்றியும், தங்குமிட வசதிகள் குறித்தும் திட்டமிடுகிறார்கள். பயணம் என்பது வீட்டிலிருந்து அடி எடுத்து வைப்பதிலிருந்தே தொடங்குவதாகத்தான் நினைக்கிறேன். ரயிலில் சிநேகிதங்களை மறுத்து, எதையும் கவனிக்கும் ஆர்வமில்லாமல், போன இடத்தில் உல்லாச விடுதியில் தங்கி, புகைப்படங்கள் எடுத்து, ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்து, வந்த லைக்ஸைப் பார்த்துக் கொண்டே மீண்டும் ஊர் திரும்புவதால், பயணங்களில் கற்றுக்கொள்ள வேண்டியதில் பெரும்பகுதியை இழந்துவிடுகிறோம்.

(ரயில் பயணங்களில்... விக்னேஸ்வரி சுரேஷ், ஓவியங்கள் : ரமணன்)
ப்ரோஃபைல் பிக்சர்
--------------------------------------------
சமூகவலைத்தளங்கள் பல இருந்தாலும், ’மூஞ்சிபுக்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஃபேஸ்புக் தான், நம் வாழ்க்கையிலிருந்து தொலைந்து போனவர்களை கண்டெடுக்கவும், இது வரை சேர்த்து வைத்துள்ள நண்பர்களை நினைவு பெட்டகத்திலிருந்து தொலையாமல் பார்த்துக்கொள்ளவும் பிரதானமாக உதவுகிறது. தொடர்பில் இல்லாத பல நண்பர்களை, இன்னும் பார்த்தேயிராத பல இணையதள நண்பர்களை அவர்களின் தற்போதைய ஃபேஸ்புக் முகப்புப்பட புகைப்படத்தையே அவர்களாக மனம்  பதிந்து வைத்திருக்கிறது. ஆக, ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளவகளுக்கு முகப்புபடத்தின் முக்கியத்துவமும் அருமையும் தெரியும்

பல்வேறு சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது இந்த பிபி! அட, BP இல்லீங்க, PP. ப்ரோஃபைல் பிச்சரை தான் அப்படி செல்லமாக கூப்பிடுகிறார்கள். ஃபேஸ்புக்கில் ஓர் அழகான பிரோஃபைல் பிக்சரை பார்த்தவர்கள், உடனடியாக சம்பந்தப்பட்ட நபருக்கு நட்பின் அழைப்பை அனுப்புவார்கள். அல்லது அப்படி ஒருவர் அழைப்புவிடுத்திருப்பின் எளிதாக ஏற்றுக்கொள்வார்கள். ஆக, ஃபேஸ்புக் ஒரு நட்பு பாலம் என்றால், அதற்கான சுலபமான வழி நல்ல பிபி தான். 

எந்த புது இடத்திற்கு சென்றாலும், பிராஃபைல் பிக்சருக்காகவே தனியாக படம் எடுத்துக்கொள்ளும் மனிதர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஏன், பலர் புதிய  இடங்களுக்கு செல்வதே படம் எடுத்து ’அப்டேட்’ செய்வதற்கு தான். ஷாப்பிங்மால்களும், திரையரங்குகளும் பிரோஃபைல் பிக்சர் எடுப்பதற்காகவே தனியாக சில இடங்களை அலங்கரித்து வைத்திருக்கின்றன. 

இயற்கையை வஞ்சிக்க முடிக்கிற இடமாகவும் ஃபேஸ்புக் விளங்குகிறது என்றால் நம்புவீர்களா? வருடாவருடம் பிராஃபைல் பிக்சர்களில் மனிதர்களின் வயது குறைகின்றன. ஃபேஸ்புக்கில் கணக்கு ஆரம்பத்த போது கையில், இடுப்பில் குழந்தைகளை சுமந்து நிற்கும் பெண்கள் நாளடைவில் கல்லூரி வாசலில் நிற்கிறார்கள். தொப்பையோடு ஆரம்பித்து, ஜிம் பாடியில் முடிக்கிறார்கள் ஆண்கள். அவர்களோடு படத்தில் தென்படும் குழந்தைகள் வயது ஏறி, இறங்கி தற்போதைய வயதை கணிப்பது கடினமாகிறது. 

மெட்ரிமோனியல் தளங்களில் புகைப்படத்தை கொடுத்த கையோடு, ஃபேஸ்புக் பக்கதிலும் மாற்றுகிறார்கள், இளைஞர்கள். பெண்ணை பெற்றவர்கள் முதல் காரியமாக ஃபேஸ்புக் கணக்கு துவங்கி, பையனை பற்றி அறிய அவன் ஃப்ரோபைல் பிக்சருக்கு வரும் கமெண்ட்டுகளை கண்ணாடி போட்டு படிக்கிறார்கள். நண்பிகள் எழுதி வைக்கும் ‘செம’, ’கூல் ’ வகையறாக்கள் பரவாயில்லை ரகம். ’லவ் யூ டா’க்கள் சில வரன்களை அப்போதே முடிவுக்கு கொண்டு வருகின்றன. 

ஸ்மார்ட் ஃபோன் வருகையால் முகப்புபடங்கள் பொலிவடைந்திருக்கின்றன. படங்களை மென்மேலும் மெருகேற்றி வலைத்தள நண்பர்கள் எண்ணிக்கையையும் ஏற்றிக்கொள்ளலாம்.  முகநூலில் எழுத்துக்கும், அங்கீகாரத்துக்கும் உள்ள சம்பந்தத்தை விட, பிராஃபைல் பிச்சருக்கும் ”லைக்”குக்கும் அதிக சம்பந்தம் உண்டு என்பதை இங்கே அழகான பெண்களை தவிர யாவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

என் அழகான தோழி ஒவ்வொரு முறை ப்ரோஃபைல் பிக்சர் மாற்றும் போதும்,  நிறைய பேர் தேடி வந்து தனிசெய்தியில் பேசுகிறார்கள் என்று அலுத்துக்கொண்டார். அதிலும் ஒருவர், தனக்கு தினமும் மாலை நான்கு முதல் ஆறு வரை ஃப்ரீ. அந்த நேரத்தில் தினமும் சாட் செய்ய முடியுமா என்று கேட்டிருந்தார். இன்னும் ஒருவர், ஃபிரண்ட்லியா பேசுங்க போதும் என்று சலுகை தந்திருந்தார். இது போன்ற விசித்திரமான கோரிக்கைகள், எல்லா ப்ரோஃபைல் பிக்சருக்கும் வருமென்று சொல்வதற்கில்லை என்பதே இங்கே சற்று துயரமான செய்தி.

நல்ல பிபி கொண்டவர்களுக்கு காலையிலும், மாலையிலும் தனிசெய்தியில், அன்றைய நாள் இனிமையாக அமைய நிறைய பேர் வாழ்த்துகிறார்கள். அவர்களில் ஒருவராவது வீட்டுக்கு அழைத்து, தங்கள் மனைவிக்கு குட் ஈவினிங் சொல்வார்களா என்று யோசித்துப்பார்ப்பது வீண் வேலையாக தோன்றுகிறது. எதற்காக தவறாக நினைக்க வேண்டும், அறிமுகமில்லாத பெண்ணின் நாள் இனிமையாக இருக்க வாழ்த்துவது கூட ஒரு சமூக சேவை தான் என்று அவர்கள் நினைத்திருக்க கூடும். 

அப்படிதான், சமீபத்தில் முகநூலில் பிபியை வைத்து கண்டுபிடித்த என் பால்யகால தோழிக்கு நட்பின் அழைப்பை அனுப்பினேன். மேற்படி நபர் ஏற்கனவே 5000 நண்பர்களை கொண்டிருப்பதால், உங்கள் நட்பு அவருக்கு தேவையில்லை, வேண்டுமானால் நீங்கள் மட்டும் பின் தொடர்ந்துக்கொள்ளுங்கள் என்று ஃபேஸ்புக் என் சார்பில் தீர்மானித்துவிட்டிருந்தது. அழகான பிபிக்காக தனி சலுகையாக ஐயாயிரத்து பத்து நண்பர்கள் இருக்கலாம் போன்ற சலுகைகள் நாளை வரலாம். அதுவரை பழைய தோழி, பழைய தோழியாகவே இருக்கவேண்டியது தான். அல்லது, பின்னொரு நாளில், ஐயாயிரம் பேரில் யாரையாவது அனுப்பிவிட்டு, என் நட்பை அவர் ஏற்றுக்கொள்ளக்கூடும். ஏதோ சற்றே பெரிய ம்யூசிகல் சேருக்கு ஓடி தோற்றது போல வேடிக்கையாக இருக்கிறது.

பிபிகள் பல வகை மனிதர்களை குறிக்கிறது, பாருங்கள். ஆகப்பெரிய கனவான்கள் தங்கள் பி.எம்.டபில்யூவோடு எடுத்த படத்தையோ அல்லது வெளிநாட்டு சுற்றுப்பயண படங்களையோ வைத்திருக்கிறார்கள். தங்களை அட்வென்சர் விரும்பிகளாக பதிவு செய்ய விரும்புபவர்கள் பன்ஜி ஜம்ப்போ அல்லது பனிசறுக்கோ செய்கையில் கவனமாக படம் எடுத்து பிபியாக வைக்கிறார்கள். இதில் எல்லாம் ஒரு பிரச்சனையுமில்லை. கல்லூரியோடு தொலைந்து போன நண்பன் ஒருவன், தற்போது புகைப்பட கலைஞராகி, தான் எடுத்த உர்ராங்குட்டான் படத்தை பிபியாக வைத்திருக்கிறான். அவன் நட்பின் அழைப்பில், என் தலை சுற்றிவிட்டது. இப்படி ஒரு நண்பரா? ஞாபகத்தில் இருக்கும் யார் முகத்தோடு பொருத்தி பார்த்தாலும் எங்கேயோ பிசிறடிக்கிறது.

நாளொன்றுக்கு குறைந்தது ஒரு பதிவு என்று சமூகவலைத்தளங்களில் எழுதுபவர்கள் வாழ்கை, சற்றேறக்குறைய ஒரு திறந்த புத்தகம். எதுவும் எழுதாமல் நான்கு நாட்களாக இருப்பது உறுத்தினால், பிரோஃபைல் பிக்சரையாவது மாற்றிவிட வேண்டும் என்பது அவர்களுக்கான விதி. ஏனேனில் அவ்வாறு இருப்பை உலகுக்கு அறிவிக்காவிட்டால் சக எழுத்தாளர்கள் (இங்கே எல்லாருமே எழுத்தாளர்கள் தான்) வசதியாக மறந்துவிடுவார்கள். நோட்டிஃபிகேஷன்ஸ் எதுவும் இல்லாத நாட்கள் வலைத்தளவாசிகளுக்கு திகிலூட்டுபவையாக இருக்கின்றன. 

சொந்தப் புகைப்படம், நடிகையினுடையது, குழந்தை, நாய்க்குட்டி, கட்சிக்கொடி , அரிவாள்மனை இதையெல்லாம் தாண்டிய சுவாரஸ்ய முகப்பு படங்கள் பார்த்துள்ளீர்களா? ”புன்னகை என்கிற முகவரி உங்களிடம் இருந்தால், நண்பர்கள் என்னும் கடிதம் வந்துக்கொண்டே இருக்கும்”, “ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் நேரத்தில் புத்திசாலி ஆகிறான்” வகையறா தத்துவங்கலெல்லாம் கூட சிலரது முகப்பு படங்களாக இருக்கின்றன. அதிலும் இத்தனை தத்துவங்களா அப்துல் கலாம் சொல்லி சென்றிருக்கிறார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. ஏன், அவருக்கே கூட ஆச்சர்யமாக இருந்திருக்கலாம். ‘யாரோ’ என்ற அனானி எழுதுவதை விட  கலாம் பெயரில் எழுதினால் தத்துவங்களுக்கு மதிப்பு அதிகம் என்பதை எழுதியவர் அறிவார்.


ஆனாலும், எனக்கு ஃபேஸ்புக்குக்கு வைக்க கோரிக்கை ஒன்று உண்டு. சாட்’டிங்கிற்கு தனி முகப்புப்படம் வைக்க அனுமதிக்க வேண்டும். என் தோழிகள் குடும்பசகிதமான படத்தையே வைத்திருக்கின்றனர். தோழியோடு தனியாக சாட் செய்யலாம் என்றால், அவள் கணவரும் கூடக்கூட வருவது அவஸ்த்தையாக இருக்கிறது.


இந்த பிபி’யை வைத்து வெளிநாட்டுக்காரர்கள் ஆராய்ச்சி கட்டுரை எல்லாம் சமர்பித்திருக்கிறார்கள். முகத்தை டைட் க்ளோசப்பில் போடுபவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாம். சினிமாவின் கடைசி டைட்டில் கார்ட்’ போல ‘மற்றும் பலராக’ பத்து பேர் இருக்கும் படத்தில் ஒளிந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் மிகுந்த தாழ்வுமனப்பான்மை கொண்டிருக்கிறீர்களாம். தன்னம்பிக்கை மிளிரும் அஜித் படத்தை கொண்டவர்கள் மட்டும் தமிழ்நாட்டில் ஆயிரம் பேராவது இருப்பார்கள் என்று சொன்னால் வெள்ளைக்காரன் தலை சுற்றிப்போவான்.

ஓளிமயமான எதிர்காலம் புகைப்படக்கலைஞர்களுக்கு தென்படுகிறது. சின்னதாக ஒரு வரி விசிட்டிங் கார்டில் சேர்த்துக்கொண்டால் போதும் - “இங்கே நல்ல ஃப்ரோஃபைல் பிக்சர் எடுத்துத்தரப்படும்!”

அட, என் படத்தை பற்றி கேட்கிறீர்களா? வோட்டு போட்டதற்கு அடையாளமாக மை வைத்த அழகான விரல் படத்தை தான்  வைத்திருக்கிறேன். அதுவும் இணையத்தில் கிடைத்தது தான். 

எளிமைக்கான ஆஃபர்

உங்களுக்கு தெரியுமா, பேஸ்ட்டை அளவாக பிதுக்கி பிரஷ்ஷில் போட்டுத்தர மிஷின் இருப்பது? விரலை உள்ளே விட்டால் நகத்தை நறுக்கிவிடும் மிஷின்? தண்ணீர் பாட்டிலை சரிக்காமல் டம்ளரில் நிரப்பித்தரும் உபகரணம்? அட.. காது குடைந்து விடும் சாதனம்?  இதுக்கெல்லாம் எவனாவது மிஷின தேடுவானா என்கிறீர்களா? இப்படி நூற்றுக்கணக்கான சாமான்கள் இணையத்தில் விற்பனைக்கு இருக்கின்றன. உங்களை எதையாவது வாங்கிக்கொண்டே இருக்கும் போதை உள்ளவர்களாக (விக்கிப்பீடியா பாஷையில் 'ஓனியோமேனியா' ஆசாமி) மாற்றிவிட துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறது இணைய வணிகம்.

அம்மா அப்பா தவிர்த்து தற்போது எதையும் இணையம் மூலம் வாங்கி விட முடிகிறது. இணைய வர்த்தகம் நாளுக்கு நாள் மாநகரத்தின் கார்பன் புகை போல் தப்பிக்க முடியாதளவு நம்மை சூழ்ந்துக் கொண்டாலும், எங்கே அதற்கான 'லட்சுமணன் கோடு' வரைவது என்பது இன்னமும் கூட நம் கையில் தான் இருக்கிறது.  

ஆன்லைனில் சாமான்கள் வாங்குவதில் உள்ள மிகப்பெரிய சவால், சமயத்தில் இணையத்தில் பார்த்ததற்கும் கையில் இருப்பதற்குமான ஆறிலிருந்து அறுபது வித்தியாசங்கள் தான். பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையெல்லாம் ஓல்ட் ஃபாஷன். பிள்ளையார் ஆர்டர் செய்து குரங்கு டெலிவர் ஆவது தான் இப்பொழுது சரியாக வரும். 

என் தோழிக்கு சகலமும் இணையம் தான். லெங்கிங்ஸ் ஆர்டர் செய்வாள். சாக்ஸ் சைஸில் வந்து சேரும். சரி, எப்போதாவது ஒல்லியானால் போட்டுக்கொள்ளலாம் என்று எடுத்துவைத்துக்கொள்வாள். படுக்கை விரிப்பு கேட்டால் போர்வை வரும். 'இருக்கட்டும், உறவினர் வந்தால் தேவைப்படும்'. கணிணி திரை பேபி பின்க்'காக காட்டிய புடவை கைக்கு வரும்போது மிட்டாய் ரோஸாக மாறியிருக்கும். 'அதனாலென்ன, எனக்கு தான் மிட்டாய் பிடிக்குமே'. இவற்றை கன சிரத்தையாக மாற்ற அல்லது பணத்தை திரும்ப பெற நிறைய பொறுமை வேண்டும். அது இல்லாதவர்கள் இணைய வர்த்தம் பக்கம் தலை வைத்தே படுக்க கூடாது.

நண்பன் ஒருவன் இருபத்தி நான்கு கடிகாரம் வைத்திருக்கிறான். என்ன லாஜிக்கோ?!  நல்லவேளையாக ஆன்லைனில் காலண்டர் வாங்குவதில்லை. அவனோடு தெருவில் இறங்கினால், 'என்னண்ணே.. இந்த வாரம் இதுவும் வாங்கலையா?' என்று கூரியர் பையன்கள் எப்படியோ சிரிக்காமல் கேட்கிறார்கள்.  ஷாப்பிங் செய்ய இடஞ்சலாக இருப்பதால் காதலை முறித்துக் கொண்டதாக, வாழ்கைத்துணை விவாகரத்து வரை போனதாக  தென்படும் இளைஞர்களின் வலைத்தள பதிவுகள் திகிலூட்டுகின்றன.

மிகப் பெரிய இணைய நிறுவனத்தின் 'பிக் பில்லியன் டே' மஹாத்மா பிறந்த நாளில் வருகிறது. 'இந்த பூமியால் அனைவர் தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலும் ஆனால் பேராசைகளை அல்ல' என்றாரே, அதே மஹாத்மா தான். ஏதோ அவர் பிறந்த நாளுக்கு விடுமுறை கிடைப்பதால், ரூபாய் நோட்டில் தென்படுவதால் பெயர் அளவிளாவது தெரிந்து வைத்திருக்கிறோம். அதற்கு மேல் அவர் சொல்லிச் சென்றதெல்லாம்  யாருக்கு தெரியும். காந்தி பொன்மொழிகள் போட்ட டீஷர்ட் ஆன்லைனில் கிடைக்கிறதா பார்க்கலாம்.

நீங்கள் யார், ஆணா, பெண்ணா, சராசரியாக இணையத்தில் எத்தனை நேரம் செலவிடுகிறீர்கள், எது மாதிரியான பொருட்கள் உங்களை ஈர்க்கின்றன, சமூக வலைத்ததளங்களில் என்ன பகிர்கிறீர்கள், எதை விரும்பிகிறீர்கள் என பலதும் AdSense, Browser Cookies  போன்ற டெக்னிகல் சமாச்சாரங்களின் துணையோடு கண்காணிக்க படுகிறது. பெற்றவளையும்  விட மேலாக உங்களைப் பற்றி தெரிந்துவைத்துக்கொண்டு, இணையத்தில் நீங்கள் போகும் இடமெல்லாம் உங்களுக்கு பிரியமான பொருட்களாக கடைபரப்ப படுகிறது.

கீதை சொல்லும் ஐம்புலன்களினால் வரும் வாசனைகளில்(ஆசைகள்) இது என்ன வகையோ. எனினும் இதை கடப்பதுவ்ம் கடினமாகவே இருக்கிறது. க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட், கேஷ் ஆன் டெலிவரி, கேஷ் பேக் என பல கட்டுக்கள் நம் காலை பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கின்றன. இனி கடவுள் அவதரித்தால், விழாக்கால தள்ளுபடியில் தடுக்கி விழாமல் கடப்பதே வாழ்வின் அடுத்தப் படியாக உபதேசித்திருப்பார்.


உங்களுக்கு தினசரி வரும் மின்னஞ்சலில் "ஆஃபர்" மெயில்களே பிரதானமாய் இருக்கிறதென்றால், ஏற்கனவே வீட்டில்இருக்கிற பொருட்களையே மறந்து திரும்ப வாங்குகிறீர்கள் என்றால்,கூரியர் கொண்டுவரும் பையன்கள் உங்களை வெளியிடத்தில் பார்த்தால் கூட அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்றால், நண்பர்கள், உறவுகளோடு செலவிடும் நேரத்தை ஷாப்பிங்கிற்க்கு இடஞ்சல் என்று நினைப்பீர்களேயானால், எப்போதும் உங்கள் கணிணியில் ஒரு திரை விற்பனை தளத்திற்காக திறந்திருக்கும் என்றால்,ஷாப்பிங் செய்யாவிட்டால் மன அழுத்தம் இருப்பதாக உணர்ந்தால்,எதுவும் வாங்காவிட்டாலும் சதா ஆன்லைன் ஷாப்பிங் பற்றின சிந்தனைகளே மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தால், மென்மையாக சொல்லவேண்டுமானால் உங்களுக்கு வந்திருப்பது அடிக்‌ஷன்! பூசி மெழுகாமல் சொல்வதானால், "முத்திடுச்சி".


உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல இடத்தில் வந்தமர்ந்து, சரி இந்த ஆன்லைன் ஷாப்பிங் போதையை விட்டொழிப்போம் என தோன்ற வைத்தால், கடைப்பிடிக்க சுலபமான பல வழிகள் இருக்கின்றன. கைபேசி என்றால் எல்லா வர்த்தக ஆப்(app) களை அடியோடு தூக்கிவிடுவது, விளம்பர மின்னஞ்சல்களை unsubscribe செய்வது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்களை புது கோலம் போல பாவித்து, 'லபக்' என்று தாண்டிவிடுவது மற்றும் சிறிது நாட்களுக்கு எது வாங்குவதாகினும் முன்கூட்டியே பட்டியலிட்டு கடைக்கு நேரில் சென்று வாங்குவது. (பொதுவாக கண்டதையும் வாங்கும் பழக்கம் கொண்டவர்கள் பெரு வர்த்தக கடைகளை விட சிறிய கடைகளையே நாடுவது நலம்.)


இணைய வணிகமே தேவையில்லை என்று சொல்ல வரவில்லை, அப்படி சொல்வதும் அபத்தம். 'பிராண்டட்' பொருட்களை நேரடியாக வாங்குவதால் போலிகளைத் தவிர்க்க முடிகிறது தான். நல்ல சலுகைகளும் கிடைக்கின்றன. நம்மிடம் இருக்கும் பொருட்களை மறுவிற்பனை செய்ய, ஏலத்தில் விட இணையம் சுலபமான வழி. ஆனால், அதன் மூலம் மி்ச்சமாகும் பணத்தை தண்டமாக வேறு ஒன்று வாங்குவதால் விட்டுவிடுவது தான் இளைய சமுதாயத்தின் பிரச்சனை. சமீபத்தில் சென்னையில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தில் சில இளைஞர்கள் கைதானார்கள். அதில் ஒருவர் காவல்நிலையத்தில் மரணமடைந்தார். அச்சம்பவத்தை பற்றி சமூக ஆர்வலர் ஒருவர், ' குப்பத்தில் இருக்கும் இளைஞர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் மாநகரத்தின் ஆடம்பரத்தை காண்கிறார்கள். அந்த வாழ்க்கை அவர்களை ஈர்க்கிறது. அப்படி அவர்களுக்கு வாழ வழியில்லாத போது, அது ஆற்றாமையாக மாறி குற்றச்செயல்களில் ஈடுபடவைக்கிறது' என்று பேட்டியளித்திருந்தார்.

ஆடம்பரங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல சமூக சீர்கேடுகளை விதைத்துக்கொண்டே தான் இருக்கிறது. நமக்கு முந்தய தலைமுறை வரை, பொருட்களை வாங்குவதற்கு முன், இது இல்லாமல் சமாளிக்க முடியுமா என்று யோசித்தார்கள். நாமோ வாங்கிய பின் அதற்கான பயன்பாட்டை யோசிக்கின்றொம். நம் ஆடைகளினால் அலமாரி நிரம்பி வழியும் போது, தேவைக்கு மீறினதை பகிர்ந்தளிக்கலாம், ஆடைகள் வாங்குவதை நிறுத்தலாம் அல்லது புதிய அலமாரி வாங்கலாம். மூன்றில் எது நம் விருப்பம் என்பதை தீர்மானிக்கும் உரிமை வணிகர்களிடம் இல்லை.

'இன்றைய தேதியின் உலகின் சிறந்த கைபேசி' என்ற ஒன்றை வாங்கினால், அந்த 'சிறந்த' பட்டம் அடுத்த சில வருடங்களில் அதே நிறுவனத்தின் அடுத்த கைபேசி வரவால் பறிக்கப்படுகிறது. சில சமயத்தில் பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்குள் நம் கைபேசி மாடல் பழையதாகிவிடுகிறது. உங்கள் 'பழைய' மொபைலை நாங்களே நல்ல விலைக்கு எக்ஸ்சேஞ் செய்துக் கொள்கிறோம். இதோ இதுவே இன்றைய தேதியின் சிறந்த கைப்பேசி என்கிறார்கள். மீண்டும் ஒரு பதட்டமான க்யூ வரிசையில் நம்மை இணைத்துக்கொள்கிறோம்.


ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் Minimalist Living என்னும் மிக குறைவான பொருட்களை கொண்டு வாழும் எளிய வாழ்க்கை முறைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். 'தன்னிறைவு' மனம் சார்ந்த  விஷயம் என்பது புரிபடாதவரை யார் வேண்டுமானாலும் நம்மை அடிமைப்படுத்தலாம். ஆயினும் ஆடம்பரங்கள் ஒருகட்டத்தில் மனச்சோர்வை தந்து, தீர்வை யோசிக்க வைக்கும். அந்த தீர்வு, எளிமையான வாழ்வு தான் என்பதில் சந்தேகமேயில்லை.


(தினமணி. காமில் வெளியான கல்

Wednesday, 19 October 2016

உங்க வண்டி நம்பர் என்ன?'எனக்கென்னவோ இந்தியர்கள் தங்கள் எல்லா கோபத்தையும் வண்டி ஓட்டுவதன் மூலம் தீர்த்துக்கொள்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது' இப்படி அமெரிக்காவில் செட்டிலாகி அவ்வப்போது இந்தியாவிற்கு வந்து ஷாப்பிங் செய்யும் உறவு சொல்லும்போது வேடிக்கையாக இருந்தது. ஆயினும் அவர், நம் ட்ரைவிங் அட்டூழியங்கள் என்று நீட்டிய லிஸ்ட் அவருடைய ஷாப்பிங் லிஸ்டை விட நீளமாகவே இருந்தது. அதில் உண்மையும் இல்லாமலில்லை.

நம்மூரில் ஹார்ன் அடிப்பதையெல்லாம் சிலர் எதோ வேண்டுதல் போலவே செய்கிறார்கள். வெய்யில், புகை இதற்கு நடுவில் நின்றுக்கொண்டே இருக்க யாருக்கும் ஆசையில்லை. 'நாளைக்கு சாகப்போற கிழவிய இன்னைக்கு எதுக்கு கொல்லப்போற?' என்பாரே வடிவேலு அதுபோல, அடுத்த நொடி நகரப்போகும் வாகனங்களுக்கு எதற்காக இத்தனை இரைச்சல்? 

தெரு திரும்பும் இடத்தில் வண்டியை நிறுத்தக் கூடாது என்பதை ஓட்டுனர் உரிமை தேர்வு பாடங்ளில் ஒன்றாக சேர்க்கலாம். மக்களை சொல்லி குற்றமில்லை, டீ கடைகளை சாலை முடிவில் அல்லது ஆரம்பத்தில் வைப்பதில் உள்ள சிக்கலை இன்று வரை எந்த அரசாங்க அதிகாரிகளாவது கவனித்திருப்பார்களா தெரியாது. மேலும், குறுகலான சாலைகளில் எப்படி நிறுத்தினால், போக்குவரத்துக்கு இடஞ்சல் இல்லாமல் இருக்கும் என்பது பற்றி ஒவ்வொரு முறையும் நாம் ஒரு நொடியாவது சிந்தித்தே ஆக வேண்டும். 


பெண்கள் வாகனம் ஓட்டுவது பற்றி நிறைய கேலிகள் உண்டு.  இது பற்றி பேசிக் கொண்டிருக்கையில், 'ஆண்கள் அளவுக்கு பெண்களுக்கு தங்கள் வாகனத்தை நேசிப்பது கிடையாது. சர்வீஸுக்கு விடுவதோடு சரி, வண்டியை துடைக்க கூட மாட்டார்கள். இவ்வளவு ஏன், எத்தனை பெண்களுக்கு அவர்கள் சொந்த வண்டி நம்பர் தெரியும் என்கிறாய்?' என்று நண்பன் புகைந்தான். அவனை எப்படியும் மூக்குடைக்க வேண்டும் என்று எனக்கு தெரிந்த எல்லா பெண்களிடமும் வண்டி நம்பர் கேட்டுப் பார்த்தேன். ஆச்சர்யமாக பெரும்பாலானவர்களுக்கு நம்பர் நினைவில் இல்லை. அல்லது வெறும் நம்பர் மட்டும் சொல்கிறார்கள். 'எங்களுக்கெல்லாம் வண்டி தான் முதல் காதலி' என்று அவன் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

பராமரிப்பு என்றதும் நினைவுக்கு வருகிறது, வண்டியின் இருக்கையை சுத்தம் செய்வதற்கென்று என் தோழி ஒரு வழி வைத்திருந்தாள். 'நீ வண்டி ஓட்டேன்' என்பாள். சரிதான் என்று முன்னால் அமர்ந்தால், 'இல்ல வேணாம்.. அப்படியே பின்னாடி நகரு. நானே ஓட்றேன்' என்று மனதை மாற்றிக்கொள்வாள். கொஞ்சம் கவனித்ததில், வண்டி துடைக்க துணி எடுத்துவராத போது மட்டும் இந்த டெக்னிக்'கை பயன்படுத்துவது தெரிந்தது.

வாகனம் ஓட்டுவதில் பல தவறுகள் இருபாலாருக்கும் பொருந்தும் என்றாலும், சிலவற்றை பெண்கள் தான் அதிகம் செய்கிறோம் என்று அடித்து சொல்கிறார்கள். 'சைட் மிரர்' பார்காமல் வண்டி ஓட்டுவது அதில் முதன்மையானது. இறங்கும் தருவாயில் முகத்தை சரிபார்க்க மட்டும் வண்டியின் கண்ணாடியை பயன்படுத்துவது சரியானதல்ல. அடுத்தது, இண்டிகேட்டர் உபயோகம். சட்டென்று இடமோ வலமோ திரும்பி பின்னால் வருபவருக்கு அதிர்ச்சி தருவதை விட, இண்டிகேட்டர் போட்டு, நாங்களும் நல்ல ஓட்டுனர்கள் தாம் என்று அதிர்ச்சி தரலாம்.

மூன்றாவதாக, மானாவாரியாக 'பார்க்' செய்வது. இரண்டு கார்களுக்கு இடையே கொஞ்சம் இடமிருக்கிறது என்று கொண்டுபோய் நிறுத்தினால், அவர்கள் கதவை திறக்காமல் மேலிருந்து தான் உள்ளே குதிக்கவேண்டும். அதை விட மோசமானது, நின்றுக்கொண்டிருக்கும் கார் அல்லது வேறு வண்டி பின்னால் குறுக்குவாட்டத்தில் நிறுத்திவிட்டு போய்விடுவது. அடுத்து, கால்களால் தேய்த்துக்கொண்டே வண்டி ஓட்டுவது. பின்னால் வருபவருக்கு நீங்கள் நிறுத்தப்போகிறீர்களா, தொடர்ந்து ஓட்டப்போகிறீர்களா என்று தெரியாமல் மண்டை காயும்.

கடைசியாக, தலையை மூடும் எதுவும் ஹெல்மெட் என்று நம்புவது. இந்த மூகமூடி கொள்ளையர்களை போக்குவரத்து காவலர்களும் விட்டுவிடுவது தான் வேடிக்கை. துப்பட்டாவுக்கும் ஹெல்மெட்டுக்கும் உயிர் அளவு வித்தியாசம் இருக்கிறதல்லவா? முன்னால் போகும் காரை, ஓட்டுவது ஒரு பெண் என்பதை தூரத்தில் இருந்தே கண்டுபிடித்து விடலாமாம். 'சடன் ப்ரேக்' போடுவதில் நம்மை மிஞ்ச முடியாது என்று கிண்டலடிக்கிறார்கள். ஆனால்,  ஆரம்பகட்ட பதற்றம் தணிந்து, வண்டி ஓட்டுவது இயல்பான செயலானதும் இதை தவிர்க்க முடியும் என்று தோன்றுகிறது.

ஸ்கூட்டி அல்லது பைக்'குக்கென்று ஒரு அகலம் உண்டு. சாதாரணமாக அதை கணக்கு பண்ணி ஓட்டினால் போதும் தான். ஆனால், காலுக்கு கீழே கீ-போர்ட் வைத்துக்கொண்டு ஓட்டும் அம்மாக்கள், வீட்டுக்கு பிவிஸி பைப் வாங்கி போகும் ஆண்கள், தாங்கள் ஓட்டுவது நான்கு சக்கர வாகனம் என்றே நினைக்கலாம், தவறில்லை. அதை மறந்து நட்டநடுவில் இவர்கள் ஓட்டினால், அரசியல்வாதி பின்னால் போகும் பரிவாரங்கள் போல் வேறு வழியில்லாமல் பின்னாலேயே அரை பர்லாங் போகவேண்டியிருக்கிறது. எதிரே வந்தாலோ, ஓரமாக ஒதுங்கி அவர்களை போகவிட்டுவிடுவது தான் ஒரே வழி.

நாம் ஓட்டுவதை தாண்டியும் சாலையில் பல அபாயங்கள், இடஞ்சல்கள் இருக்கின்றன. பெரும்பாலான பேருந்துகளில், லாரிகளில் 'ப்ரேக் லைட்' எரிவதில்லை. பேருந்தாவது, நிறுத்தம் மக்களுக்கு முன் கூட்டியே தெரிவதால் சுதாரித்துக்கொள்கிறார்கள். மேலும் பிரச்சனை ஓட்டுனருடையதல்ல. தூரத்தில் பேருந்தைக் கண்டதும் மக்களே பாதி ரோட்டுக்கு வந்துவிடுவதால், ஓட்டுனர் அவர்களையும் தாண்டி நட்டநடு ரோட்டில் நிறுத்திவிடுகிறார். இரண்டு வாகனங்கள் போகக் கூடிய அளவுள்ள சாலை என்றாலும் பேருந்து நடுவில் நிற்பதால், பின்னால் வரும் அத்தனை வாகனங்களும் ஸ்தம்பிக்கின்றன.

ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும் வேன், மினி லாரி அருகில் செல்வீர்களானால், இந்த அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும். எப்போது ஓட்டுனர் கதவை படார் என்று திறப்பார் என்று சொல்வதற்கில்லை. நம்மீது இடிக்காவிட்டாலும், அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே சில நொடிகள் ஆகின்றன.

லாரி ஓட்டுபவர்கள் வேறு வகை. அவர்கள் இண்டிகேட்டராக நினைத்துக்கொள்வது கிளீனர் பையனின் சின்ன கையை தான். ஏற்கனவே சிலபல அலங்கார பொருட்கள், மந்திரித்த கயிறுகள்  லாரியின் பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருக்கையில், இருட்டில் சட்டென்று நீண்டு மறையும் அந்த கையை பார்ப்பதற்கென்று கண்களுக்கு விசேட சக்தி தேவைப்படுகிறது. இத்தனை இடஞ்சல்களையும் மீறி நெருக்கமாக பின் தொடர்பவர்களுக்கு லாரியின் பின் நுட்பமான செய்தி இருக்கிறது - 'பரலோக ராஜ்ஜியத்திற்கு சமீபத்திருங்கள்!'

இந்திய சாலைகளில் வண்டி ஓட்டுவதென்பது ஒரு கலை. ஒரு சாகசம். பல நுண்ணுணர்வுகளையும் சோதிக்கும் மற்றும் வளர்க்கும் வல்லமை கொண்டது. முன்னால் போகும் நபரின் உடல் மொழியைக் கவனித்து, அவர் திரும்பப்போகும் திசையை கணிப்பதெல்லாம் உலகில் வேறு எங்கும் சாத்தியமா தெரியாது. குறுகலான சாலைகள், நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே போகும் வாகன நெரிசல் என நம்மை எரிச்சலடையச் செய்ய இங்கே நிறைய காரணிகள் இருக்கின்றன. எனினும் போகவேண்டிய இடத்திற்கு முன்னதாகவே கிளம்பி நிதானமாக ஓட்டுவது, சாலை விதிகளை பின்பற்றுவது, குறைவாக ஹார்ன் பயன்படுத்துவது என பயணத்தை நமக்கும் பிறருக்கும் இனிமையாக்க சாத்தியங்கள் இல்லாமல் இல்லை.

சமீபத்தில் தோழி வண்டி வாங்கியிருந்தாள். 'ஊருக்குள்ள எனக்கு அறிவுரை சொல்லாத ஆளுன்னு இனி யாரும் இல்ல, உனக்கும் எதாவது சொல்லனுமா?' என்று சிரித்தாள். 'கொஞ்சம் கருணையோடு ஓட்டு, போதும்' என்றேன்.

----------------------------

// அவள் விகடனில் பிரசுரமாகியுள்ள கட்டுரை.