Thursday 3 November 2022

பிரதிநிதிகள் (குறுங்கதை)

கி.பி 3022

வெட்கிரைண்டர் போல் வீட்டுக்கு வீடு ரோபோ வந்தாகிவிட்டது. நிதியமைச்சர், ரோபோ வரியை GST க்குள் கொண்டு வந்து பட்ஜெட் வாசிக்கிறார். அன்றைய செய்திகளை ரோபோக்கள் கேட்டு, தத்தம் முதலாளிகளிடம் சுருக்கமாக புரியும்படி சொல்கின்றன. 

இன்றைக்கு முக்கிய செய்தியாக, பிரதம மந்திரி நம் நாட்டின் ஜனத்தொகை குறைந்து வருவதைப் பற்றி கவலை தெரிவித்திருக்கிறார். மனிதர்கள், குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்கப்படுத்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

தற்போது பெரும்பாலான பணிகளுக்கு ரோபோக்கள் இருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைக்கும் வேலையை மட்டும் மனிதர்கள் பார்த்துக்கொண்டால் போதும். இரு நாடுகளுக்கிடையேயான சண்டைகள், உள்நாட்டுக்கலவரங்கள், தொலைக்காட்சியில் தோன்றி சண்டையிடுவது, அந்த சண்டையை ட்விட்டரில் பகிர்வது எல்லாம் ரோபோக்கள் வசம். 

வீடுகள் தோறும் ஆண்கள், பெண் ரோபோக்களையே துணையாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். அதற்கு அவர்கள் தந்திருக்கும் காரணங்கள் - 1) அவன் வீட்டுக்கு வந்ததும் சூடாக உணவு பரிமாறிவிட்டு ரோபோக்கள் அமைதியாகின்றன. 2) தேவைப்பட்டால் (மட்டும்) ஜென்ஸி குரலிலோ, ஷகிரா போலவோ பாடவும் செய்கின்றன. 3) சோஷியல் மீடியாவில் இத்தனை நேரம் செலவிடுகிறாயே என்று முணுமுணுப்பதில்லை. 4) முக்கியமாக வார இறுதியில் ஷாப்பிங் போகவேண்டாம். 5) உனக்கு ஏன் இன்னும் அம்மா, அப்பா இருக்கிறார்கள் என்று கேட்பதில்லை.  

பெண்கள், தாங்கள் பேசுவதை காது கொடுத்து கேட்கும் வகையிலான ஆண் ரோபோக்களை டிஸைன் செய்து வாங்கிக்கொள்கிறார்கள். இன்ன ஷேட் லிப்ஸ்டிக் உனக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி அவளை குளிர்விக்கின்றன. மாமியார், நாத்தனார், உறவினர்கள் என்பதான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் இல்லாமல் வரும் ரோபோக்கள் தங்களை சுகந்திரமாக வாழ வைத்திருப்பதாக 99.9998 சதவிகிதம் பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.  

எனினும், இப்படியே போனால் மனித இனம் அருகிவிடும் என்று சர்வதேச அரங்கில் கவலை தெரிவிக்கப்பட்டது. 'மற்ற எல்லாவற்றிற்கும் ரோபோக்கள் இருந்தாலும், காதலிக்க மனித மனதால் மட்டுமே முடியும்!' என்ற தத்துவம் டி-ஷர்ட் வாசகமாக பிரிண்ட் செய்யப்பட்டது.  ஆண்களும் பெண்களும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால், இயற்கையான ஈர்ப்பு தூண்டப்படும் என்று மருத்துவ நாளிதழ்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டன. குழந்தை வளர்ப்புக்கென தனி ரோபோக்களை நிறுவனங்கள் விளம்பரப்படுத்தின. 

சமூக ஆர்வலர்கள் சிலரின் கடும் முயற்சியால், மிகப்பெரிய அளவில் ஆண்களும், பெண்களும் சந்தித்துக்கொள்ளும் கூட்டம் ஏற்பாடாயிற்று. அங்கேயே தங்களுக்கான ஜோடியை தீர்மானிப்பவர்கள் அமர்ந்துக்கொள்ள ஏதுவாக இரு நாற்காலிகள் மட்டும் கொண்ட மேஜைகள் தனியாக அலங்கரித்து காணப்பட்டது. காதல் வரத்தோதாக மெல்லிய குளிர், லேசான பியானோ இசை எல்லாம் ரெடி! 

கூட்டத்துக்கு வருவதற்கு முன்பே ஆண்களும் பெண்களும் எதிர்பாலினத்தின் மீதான தங்கள் எதிர்பார்ப்பு படிவத்தை ஒரு மாதம் முன்பாகவே நிரப்பி அனுப்பியிருந்தார்கள். அதை சாஃப்ட்வேர் ப்ரோகிராம் மூலம் சலித்தெடுத்து, ஒரே அலைவரிசை கொண்டவர்கள் ஓரிடத்தில் அமருமாறு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஊதா நீற கண் கொண்ட பெண் பிடிக்கும், 6 பேக் ஆண் பிடிக்கும், பென்ஸ் கார் வைத்திருந்தால் பிடிக்கும் என்பவர்கள் ஏனைய மனிதர்களை சந்தித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.  

கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. 'காதலிப்பது' மனித இனத்துக்கு மறந்துப் போய் விட்டதால், சாம்பிளுக்கு திரைப்படம் காட்ட ஏற்பாடாகியிருந்தது. மிகப்பெரிய திரையில் அழகிய ஆணும், பெண்ணும் தோன்றி கண்ணுக்குள் கண் நோக்கினார்கள். பின்னணி இசை ஒலிக்க, கை கோர்த்துக்கொண்டு கடற்கரையில் வலம் வந்தார்கள். ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்துக்கொண்டு கதை பேசினார்கள். மாறி மாறி ஒருவர் மடியில் ஒருவர் படுத்து தூங்கினார்கள். திரைப்படம், மேலும் தொடர்ந்துக்கொண்டே போக,

பிரதிநிதிகளாக அனுப்பிவைக்கப்பட்டிருந்த ரோபோக்கள் அவற்றை கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டன.

-------

விக்னேஸ்வரி சுரேஷ்



No comments:

Post a Comment