Tuesday 9 August 2022

புண்ணியாத்மா - சிறுகதை


 "நம்ம லட்சுமிக்கு எதாவது பண்ணனும்டா."  

அம்மா இதை நூறாவது முறையாக சொல்கிறாள். அவள் எப்பவும் இப்படித்தான். எதையாவது மனதில் வைத்துக்கொண்டு, சொல்லத்தெரியாமல் தவிப்பாள். இரண்டு வருடத்துக்கு ஒருமுறை நான் அமெரிக்காவிலிருந்து வந்துப்போகிறேன். ஒவ்வொருமுறையும் யாரையாவது கை காட்டுவாள்.  'நம்ம ட்ரைவர் முருகன் பையனுக்கு அட்மிஷன் கிடைக்கலையாண்டா. நீ எதாவது செய்யேன்.' 

'பி பிளாக்ல இருக்காளே வசந்தி, அவ தங்கைக்கி அமெரிக்கால வரன் பார்த்திருக்காளாம். நீ கொஞ்சம் பையன பத்தி விஜாரிச்சு சொல்லேன்.' 

'அயர்ன் பண்றானே மணிகண்டன், கால்ல புண் வந்து ஆறவே இல்லையாம். உன் ஃபிரண்ட் எவனோ அப்பல்லோல டாக்டரா இருக்கானே, கூடிண்டு போறயா?' 

இவ்வாறாக அவள் விண்ணப்பங்கள் மற்றவர்களுக்கானவை. தனக்கென்று எதுவும் கேட்கத்தெரியாது. அவள் கோபப்பட்டு நானும், அண்ணாவும் பார்ததேயில்லை. அவளின் அதிகப்பட்ச அதட்டலே, ‘டேய்தான். இன்று சின்னச்சின்ன விஷயங்களுக்காக நானும், மனைவியும் பொறுமையிழந்து சண்டையிடும் போது,  அம்மா, அப்பாவை நினைத்துக் கொள்கிறேன். இவ்வளவுக்கும் சிறுவயதில் நானும், அண்ணாவும் நிறைய சேட்டை செய்திருக்கிறோம். சாமான்கள், ஜன்னல்கள் உடைவது குறைந்தபட்சம் என்றால், ரத்தகாயம் அதிகபட்சம்.  

அம்மா தான் இப்படி என்றால், அவள் மனம் நோக அப்பா பேசியதேயில்லை. நீங்களேல்லாம் அருகிவரும் ஜீவராசிம்மா என்றால், ‘போடா' என்று வெட்கப்படுவாள். அவர்கள் வாழ்வில் ஆடம்பரம் என்ற ஒன்றே அறியாதவர்கள். கல்யாணநாள் என்றால், சமையலில் கூடுதலாக ஒரு பாயசம் சேர்ந்திருக்கும். அவ்வளவு தான். நான், எங்கள் கல்யாண நாளை மறந்தால், என் மனைவி பொங்கலே வைப்பாள். அன்பை பரிசுகளால் தான் வெளிப்படுத்த முடியும் எங்களுக்கு புகட்டிவிட்ட வணிக குரல்கள் எட்டாத தலைமுறை அம்மா, அப்பாவுடையது 

அப்பா, ஜே.கிருஷணமூர்த்தியை சாயலில் மட்டுமில்லாமல் தீர்க்கமான கருத்துக்களாலும் ஒத்திருந்தார். அனாவசியமாக எதுவும் பேச மாட்டார். ஒரு நாள் முழுவதற்குமாக சேர்த்து, அவர் பேசியவற்றை 4 ஷீட்டின் அரை பக்கத்துக்குள் அடுக்கலாம். ஆகையால், அவர் பேசினால் மதிப்புக்கொடுத்து கேட்பார்கள், கேட்போம். நானும், அண்ணாவும் ஆளுக்கொரு தேசத்தில் குடியுரிமை பெறும்போதும், மனதாற வாழ்த்து சொன்னார். அம்மாவுக்குத் தான் குரல் தழுதழுத்தது. 

அவா வாழ்க்கைய அவாளே டிஸைட் பண்ணிக்கற பக்குவம் இருக்கு. எங்க இருந்தாலும், வாழ்க்கையோட அடிப்படை அறத்தை கைவிட மாட்டா. அப்படி வளர்த்தோம், அவ்வளவு தான் நம்ம கடமை. ரெக்க முளைச்சப்பிறகும் குஞ்சுப்பறவைய பிடிச்சு வச்சுக்கறது இயற்கைல நடக்குமா, சொல்லு?’ என்பதாக அம்மாவை சமாதானப்படுத்தினார். 

அண்ணா, போன முறை தன் மகள்களை அழைத்து வந்தான். மன்னி, ஷாப்பிங் போனது போக மிச்ச நேரத்தில் இந்திய தோழிகளோடு லஞ்சுக்கும், டின்னருக்கும் போய்வந்தாள். முண்டா பனியனும், தொடை தெரியும் ஷார்ட்ஸும் அணிந்திருந்த பேத்திகளைப் பார்த்து அம்மாவுக்கு வருத்தம் தான் 

டேய். நமக்குத்தாண்டா குழந்தை. ஊர்ல எல்லார் கண்ணும் அப்படியே இருக்குமா, சொல்லு?’ என்று அம்மா அண்ணாவிடம் அங்கலாய்த்த போதெல்லாம் அப்பா, அவள் தோளை மெல்லத் தட்டுவார். அதற்கு அர்த்தம், ‘இதற்கு மேல் பேசாதே!’, என்பதே. உங்கப்பா போல என்னால விச்ராந்தியா  இருக்க முடியலையேடா, என்று அம்மா அங்கலாய்ப்பாள்.  

என்ன உடம்புக்கு முடியவில்லை என்றாலும், அம்மா குளிந்து மஞ்சள் பூசி நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு  தினம் ஒரு சுலோகம் சொல்லியவாறே சமைக்கத் துவங்கிவிடுவாள். சமையல் முடியும் வரை பெருமாளும், சிவனும், முருகனும், அம்பாளும் சமையலறையில் நடமாடுவார்கள். அம்மா சமையலை சாப்பிட்டு பழகிய அப்பா, எப்படித்தான் சமையல்காரம்மாவுக்கு ஒத்துக்கொண்டார் என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். எந்த பாத்திரமும் உருளாமல், துளி கூட சிந்தாமல், வீணாகாமல் அம்மாவால் உன்னதமாக சமைக்க முடியும். வாரத்தின் எழு நாட்களில் எழு வித மெனுவை தருவாள். மோர் குழம்பு என்றால், பருப்பு உசிளி. வற்றல் குழம்போடு மோர் கூட்டு, சாம்பார் என்றால் கார உருளை என்று காம்பினேஷனில் அசத்துவாள். என்ன, அம்மாவுக்கு உடனுக்குடன் இன்ஸ்டாகிராமில் போட்டு அலட்டத் தெரியாது. யூ-ட்யூபில் சம்பாதிக்கவும் இல்லை.  

அம்மா, திடீரென ஒரு நாள் தலைசுற்றி கீழே விழுந்தாள். வெர்டிகோ. கழுத்து எலும்பு தேய்ந்திருப்பதாக மருத்துவர் சொன்னார். அம்மாவை விடவும் அப்பா பத்து வயது மூத்தவர். எண்பத்து நான்கு வயதாகிறது. அப்பாவே  கொஞ்ச நாள் தடுமாறி சமைத்துக்கொண்டிருந்தார். நானும், அண்ணாவும் தான் கட்டாயப்படுத்தி சமையலுக்கு லட்சுமியை ஏற்பாடு செய்தோம். அம்மா இடத்தில் லட்சுமியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. லட்சுமியின் சமையலில் எல்லாம் இருந்தது, எனினும் அது அம்மா சமையல் இல்லை. அம்மா ஆரம்பத்தில் வருத்தப்பட்டாள். அப்பா என்ன நினைக்கிறார் என எப்போதும் போல எங்களால் தெரிந்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், அது தான் அப்பா. அவர் வாயிலிருந்து குறைகளே வராது 

ஏம்பா, உங்களுக்கு இப்பலாம் அம்மா சமைச்சு சாப்பிட முடியலையேன்னு வருத்தமில்லையா?’ என்று வாய்விட்டே கேட்டுவிட்டேன். மாற்றத்தை ஏற்பது தான் பக்குவம் என்றார், மென்மையாக. அம்மா, தன்னால் இயன்ற அளவுக்கு லட்சுமிக்கு சமையல் கற்றுத்தந்தாள். 

அவர் பேசாமலேயே அவர் தேவைகளை அம்மா புரிந்துக்கொள்ளுவாள். ஐம்பதைந்து வருட தாம்பத்தியம் ஆயிற்றே! அம்மா மீது அப்பா வைத்திருக்கும் காதலை வைத்து நூறு திரைப்படங்கள் எடுக்கலாம். இரவில், அம்மாவின் கால் விரலிடுக்குகளில் சைபால் தடவி விடுவார். பிபி மாத்திரையும் தண்ணீரையும் கொண்டு வந்து கையில் தருவார். அம்மா சற்று நேரம் தள்ளி எழுந்துக்கொண்டால் மட்டும், அவருக்கு இருப்பு கொள்ளாது. தூங்கிக்கொண்டிருக்கும் அம்மாவை வந்து எட்டிஎட்டி பார்த்துவிட்டுப் போவார். 

 எண்பதுகளில் இருக்கும் தந்தையையும், எழுபதுகளில் இருக்கும் தாயையும் விட்டுவிட்டு எத்தனை சம்பாதித்தாலும், அதையும் மீறி ஒரு பாரம் மனதை அழுத்தத்தான் செய்கிறது. எனினும் என்னால் முடிந்த வரை அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக்கொள்கிறேன். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வருகிறேன். மகன்களை வீடியோ காலில் காட்டுகிறேன். என் மனைவி மடிசாரோடு பொங்கல் செய்வதையும், கார்த்திகை தீபம் ஏற்றுவதையும் வாட்ஸப்பில் அனுப்பி வைக்கிறேன். அம்மாவுக்கு சந்தோஷம் தான். கடல் தாண்டி போனாலும், நேம நிஷ்டையல்லாம் விடாம இருக்கேளேடா என்று அடிக்கடி சொல்லுவாள். 

நாங்கள் பார்ட்டி பண்ணுவதையும், பகார்டி குடிப்பதையும், பார்பிக்யூ சிக்கனை தோட்டத்தில் வைத்து திருப்புவதையும் மிகக்கவனமாக அம்மா கண்ணில் காட்டாமல் இருக்கிறேன். போன முறை வந்தப் போது, அப்பாவுக்கு ஃபேஸ்புக் கணக்கு துவங்கிக் கொடுத்தேன். நிம்மதியாக தி ஹிந்து மட்டும் படித்துக்கொண்டிருந்தவர், ஃபேஸ்புக் ரெகமண்டேஷன்லில் வரும் உம் சொல்றியா மாமா, ம்ஹூம் சொல்றீயா என கேட்டு ஆடும் குடும்பப்பெண்களை பதறிப் போய் தாண்டுகிறார்.

 

நானும், அண்ணாவும் பேசி வைத்து வீட்டு வேலைக்கென ஒரு முதியவளையும், சமையல் வேலைக்கென லட்சுமி என்ற இருபத்தி ஐந்து மதிக்கத்தக்க பெண்ணையும் அமர்த்தியிருந்தேன். இப்போது எல்லாரிடமும் வங்கிக்கணக்கு இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து நேரடியாக பணத்தை செலுத்திவிட முடிகிறது. 

எவ்வளவுடா இவா சம்பளம்? என்று கேட்டாள் அம்மா. சமையலுக்கு பத்தாயிரம்மா என்றதும் அதிர்ச்சி அடைந்து ரொம்ப நேரம் பேசவேயில்லை. அப்பா ரிடயர் ஆகறச்சே கூட அவ்வளவு வாங்கலையேடா என்றாள் அங்கலாய்ப்பாக. ‘போனாப் போறதும்மா. நன்னா சமைக்கறா. நீயும் அப்பாவும் செளக்கியமா இருக்கேளோன்னோ, அது போறும்.’ என்றேன். 

 

இப்போது வந்து பார்த்தால், ஒரே லட்சுமி புராணம். ‘லட்சுமி பாவம்டா. ஆம்படையான் குடிகாரனாம். தொடுப்பு வேற வச்சுண்டுருக்கானாம் 

லட்சுமிக்கு எதாவது செய்யனும்டா. இரண்டு குழந்தேள வச்சுண்டு கஷ்டப்படறா.’ 

வீட்டிலிருந்த மெத்தைகளில் ஒன்று, இரண்டு மூன்று போர்வைகள், அம்மாவின் புடவைகள், புழக்கத்தில் இல்லாத பாத்திரங்கள் என பலதும் லட்சுமி வீட்டுக்கு இடம் பெயர்ந்திருந்தது 

காலை ஏழு மணிக்கு லட்சுமி வருகிறாள். சமையலை முடிந்து, இட்லிக்கு ஊரப்போட்டுவிட்டு போனாள் என்றால், மணி எட்டரை. மீண்டும் மாலை நான்கு மணிக்கு வந்து டிஃபனும் காஃபியும் தருகிறாள்.  எனக்கும் லட்சுமி சமையல், என் சமையல் போலவே பழகிவிட்டிருந்தது. அம்மா, நான் இந்தியாவில் இருக்கும் வரையாவது சமைக்கறேனேடா என்று கேட்டுப்பார்த்தாள். முதலில் சரி என்று சொல்லத் தோன்றினாலும், வயதான அப்பாவே அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளும் ஒரு விஷயத்தை  மாற்ற என் மனசாட்சி இடமளிக்கவில்லை.

  

இந்தியாவில் இரவு, அமெரிக்காவில் பகல். ஆக இரவெல்லாம் இங்கிருந்த படியே அலுவலக வேலை பார்த்துவிட்டு அதிகாலையில் தான் தூங்கப்போகிறேன். அது என்ன மாயமோ அங்கிருந்து இங்கு வந்தால் ஜெட்லாக் இரண்டு நாட்களில் சரியாகிறது. இங்கிருந்து அங்கு போனால், ஒரு வாரமானாலும் சரியாவதில்லை. அம்மாவும் அப்பாவும் இரவு ஒன்பதரைக்கு தூங்கப்போகிறார்கள். அதிகாலை நான்கரைக்கு எழுகிறார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளாக இது தான் இந்த வீட்டு பழக்கம். இது சனி, ஞாயிறு, வாரநாட்கள் என வித்தியாசப்படுவதில்லை.

 

வீக் எண்ட் என்றால், இரவு படம் பார்த்து, அடுத்த நாள் மதியம் எழுவதையெல்லாம் வயதானதும் கற்றுக்கொண்டேன். இப்போது என் பிள்ளைகளுக்கும் வீக் எண்ட், வீக் டே என உடலுக்கு இரு வேறு டைம்டேபிள் தருகிறார்கள்.

 

இன்று இந்தியாவில் சனிக்கிழமை. அமெரிக்காவில் இன்னும் வெள்ளி இரவு தான். சீக்கிரமே வேலை முடிந்துவிட்டது. தூங்கப்போகிறேன். அனேகமாக இரண்டு மணி நேரத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி பெருமாளை எழுப்ப, அம்மா ஃபில்டரில் டிகாஷனை இறக்கிவிட்டு அப்பா எழுந்துவர காத்திருப்பாள்.

 

அரைக்குறை தூக்கத்தில் என் ஏஸி ரூமையும் தாண்டி படார் என்ற காது கிழியும் சபதமும், வீடெங்கும் சூழந்த நெருப்பும், புகையையும் என்னை அலறி அடித்து எழச் செய்தது 

ஐயோ, அம்ம்ம்மா…. அப்ப்பாஎன்று கத்திக்கொண்டே சமயலறையை நோக்கி ஓடியதும், நெருப்பு கொளங்களாக இரு உருவத்தையும் பார்த்து மயங்கி விழுந்ததும் தான் நினைவில் இருக்கிறது.

 

இரவு கேஸ் சிலிண்டர் மூடாமல் இருந்திருக்கிறது. காலை அப்பாவை டைனிங் டேபிளில் காத்திருக்க சொல்லிவிட்டு, அம்மா சமையலறை லைட்டைப் போட்டிருக்கிறாள். இதையெல்லாம் பிறகு அறிந்துக்கொண்டேன். அம்மா மூன்று நாட்களும், அப்பா மூன்று மாதங்களும் குற்றுயிராக இருந்து இறந்துப் போனார்கள். குறைந்த காயத்துடன் அனுமதிக்கப் பட்டிருந்த என்னை, ஒரு வாரம் கழித்து பேசுமளவு ஆனதும் இன்ஸ்பெக்டர் வந்து பார்த்தார். ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கொண்டார். 

'யாருங்க நைட்டு கேஸ திறந்து வச்சது?' 

 

லட்சுமி தான் கடைசியாக கேஸை, சமையலறையை சுத்தமாக துடைத்துவிட்டு வீட்டுக்குப் போவாள் என்பதை நன்கறிவேன். எனினும், லட்சுமிக்கு எதாவது செய்யனும்டா என்ற அம்மாவின் குரல் உள்ளிருந்து என்னை செலுத்தியது. 

வலி நிவாரணிகள் உடலெங்கும் சங்கமித்திருந்தாலும், மனது மரத்துப் போயிருந்தாலும் தெளிவாக சொன்னேன், 'எங்க அம்மா தான் இன்ஸ்பெக்டர், கேஸ மூட மறந்திருக்கனும். ராத்திரி பால் சுட வச்சு குடிக்கற வழக்கம் உண்டு.’  

இன்ஸ்பெக்டர் தயங்கினார்.

‘இல்ல, உங்க வீட்டு சமையக்காரம்மா… அது பேரு என்ன.. ஆங்.. லட்சுமி! ஒரு மாதிரி மலங்க மலங்க விழிக்குது. கொஞ்சம் மிரட்டினா சொல்லிரும்.’

‘இல்ல இன்ஸ்பெக்டர். அவங்க போனதும் தான் அம்மா கிட்சன்ல நடமாடிட்டிருந்தாங்க. எனக்கு ஞாபகமிருக்கு.’

அதற்கு மேல் அவருக்கு பேச எதுவுமில்லை. நான் சொன்னதையே ஸ்டேட்மெண்ட்’டாக எழுதிய பேப்பரில் கையெழுத்துப் போட்டேன்.

அம்மா நிம்மதியாக போய் சேர்ந்திருப்பாள்.




madraspaper.com ல் வெளியான எனது சிறுகதை)

4 comments:

  1. மிக அழகான சிறுகதை. கதாபாத்திரங்களை செதுக்கி இருக்கிறீர்கள்! கதை உண்மைக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணர்கிறேன், நானும் அமெரிக்காவில் வசிப்பதால்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! ப்ளாக் படிப்பவர்களும், கமெண்ட் போடும் கலாச்சாரமும் இன்னும் அழியாமல் இருப்பது மகிழ்ச்சி. :)

      Delete
  2. Raw grief, guilt for not being enough of a son, and knowing what his mom would have desired - everything played out in that decision to absolve lakshmi.

    I was wondering abt the end game. The payoff was worth it Vigna.

    ReplyDelete
  3. அருமை..

    ReplyDelete