Friday, 19 July 2013

குடும்பம் என்பது யாதெனின்..


நீண்ட நாட்களுக்கு பிறகு என் பால்ய சினேகிதியை சந்தித்தேன். நிறைய காரணங்களில் ஒன்றாக, ரசனைகள் ஒத்து வரவில்லை என்பதால் கணவரை பிரிந்து விட்டதாக சொன்னாள். ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. ஒத்த ரசனையும், திருமணமும்?? அப்படி யோசிக்க ஆரம்பித்தால் நானும், என் கணவரும் தான் உலகின் மிகச்சிறந்த மிஸ்-மாட்ச் ஜோடியாய் இருப்போம்.முற்றிலும் மாறுபட்ட பிடித்தங்களை உடைய எங்கள் கதையை கேளுங்கள் -


என் கணவருக்கு, இந்தக் கார்கள், அதன் மாடல்கள், எஞ்சின்கள் பற்றின யாவும் அத்துப்படி. பயணங்களில் என்னிடம், ஒரே செக்கில் ஒன்பது காரை வாங்க வந்திருக்கும் வாடிக்கையாளரை பார்த்து விட்ட விற்பனை பிரதிநிதி போல, கார்களை பற்றி விளக்குவார்  (அப்போது மட்டும், என்னிடமிருந்து ‘ம்’ மட்டும் வரும் என்பது அவருக்கு கூடுதல் ஸ்வாரஸ்யம்)

இவ்வாறாக போகும் எங்கள் உரையாடல் -

’அது தான் ரெனால்ட் DUSTER..’
’ஒ!’

’ ERTIGA வ விட 5 இன்ச் தான் கம்மி, ஆனா 5 ஸீட்டர். அதனால லெக் ஸ்பெஸ் அதிகம்..'
'ம்.'

'5.2m turning radius'.
'ம்’

'மைலேஜ் எவ்ளோ தருதுன்னா..  '
(மனதிற்குள் -நீங்க டஸ்டர்னதும் நியாபகம் வந்தது) 'ஒரு சூப்பர் மார்கெட்ல நிறுத்துங்க, விளக்குமாறு வாங்கனும்..'
---------------------
அவர் உலகத்தில் மொத்தமே கறுப்பு, வெள்ளை, மஞ்சள், பச்சை, நீலம் எனபதாக ஆறு, ஏழு வண்ணங்கள் தான். நமக்கு அப்டியா?

'இந்த புடவை நல்லா இருக்காப்பா?'
'இதே கலர் தான் ஏற்கனவே வச்சிருக்கீயே?'
'அது ஆஃப் வொயிட், இது க்ரீம்.. வேற, வேற.'
 ங்கே..

இன்னும் காப்பர் ஸல்பேட் ப்ளூ, ராயல் ப்ளூ, ஆலிவ் க்ரீன், பிஸ்தா க்ரீன், செர்ரி ரெட் இம்மாதிரியான வண்ணங்களின் பெயர்கள் அடங்கிய அத்யாவசிய தகவல்கள் தெரியாமல், எப்படி தான் வளர்ந்தாரோ என பாவமாக இருக்கிறது.
------------------------
ஒரு கல்யாணத்துக்கு போய் வந்தோம்.
‘அமெரிக்கால இருந்தானே ரகுராமன் மாமாவோட பையன், வந்திருந்தான் பார்த்தியா?’
‘யாரு, மஞ்சள் அனார்கலி போட்ட பொண்ணு பின்னாடியே சுத்தி சுத்தி வந்தானே அவனா?’
‘அது தெரியாது, Canon Eos 650d slr மாட்டியிருந்தானே?’
’ப்ச், Blue Jeans - Bottle green குர்த்தி, அவன் தானே?’
' iPhone 5 வச்சிருந்தானேமா.’
’ம்? நாதஸ்வர வித்வான் போல, எல்லா விரல்லயும் மோதரம் போட்டிருந்தானே, அவன தான் சொல்றீங்க?’
.
.
ஆக, அது ரகுராமன் மாமா பையனே தான் என்று, எதோ ஒரு வாக்கியத்தில் முடிவுக்கு வந்து விடுகிறோம்.
------------
அவருக்கு சுஜாதா பெயர் தெரியும். மற்றபடி, நான் லைப்ரரியில் இருந்து எடுத்து வரும் சு.ரா, அசோகமித்ரன், நாஞ்சில், தி.ஜா - இவர்களோடு அவருக்கு ஸ்நானப்ராப்தி கூட இல்லை.. என்றாவது ஒரு நாள், ‘ஜெயமோகன் யாரு, உன் ஒன்பதாங்கிளாஸ் ஹிஸ்ட்ரி வாத்யாரா?’ என்றுகூட அவர் கேட்கலாம்.. ஆனால், தலைவர் உருட்டி உருட்டி படிக்கும் எகனாமிக் டைம்ஸ், எனக்கு மாவு சலிக்க மட்டுமே உபயோகமாயிருக்கிறது.

எனக்கும் கிரிக்கெட் பார்க்க பிடிக்கும். அதாவது அது டெஸ்ட் அல்லாமல், ஒன்-டே அல்லது 20-20யாக இருந்து, அதுவும் லைவ் மேட்ச்’சானால், அதிலும் இந்தியா ஆடினால் பார்ப்பேன். தலைவர், எப்போதோ யாரோ விளையாடி, ஹர்ஷா போக்ளே வழுக்கை தலையோடு விமர்சனம் செய்யும் ஆதி கால மாட்சை கூட கண்சிமிட்டாமல் பார்த்து, என் பொறுமையை சோதிப்பார்... ‘18ஆவது ஓவர்ல காம்ப்ளி ஒரு ஸ்ட்ரெயிட் கட் அடிப்பான், பாரேன்..’ (எனக்கு தெரிந்த ஸ்ட்ரெயிட் கட்’டை பார்லரில் தான் பண்ணிவிடுவார்கள்)

ஹோட்டலுக்கு போனால், ஆனியன் ரவா தோசை ஆர்டர் செய்வதற்கு எதற்கு மெனு கார்ட் கேட்கிறார் என்றே ஒவ்வோரு முறையும் அலுத்துக்கொள்கிறேன். (நான், வாயில் நுழையாத பெயரை கண்டுபிடித்து ஆர்டர் செய்தால், வரும் வஸ்து பெரும்பாலும் வாயில் வைக்க வழங்காது. அப்போது, ரவா தோசையையே நான் திரும்ப திரும்ப சாப்பிட வேண்டி இருக்கிறதல்லவா?)

உன்னிகிருஷ்ணனின் ’மனவ்யாள...’வில் மெய் மறந்து லயித்திருந்தால், ‘கர்னாடக சங்கீதத்துக்கு கம்பீரமான ஆண் குரல் தான் எடுபடும்!’ என்று ஒரே வரியில் தாண்டி போய்விடுகிறார். அவருக்கு பிடித்த சாதனா, எனக்கு அத்தனை சொர்கமாக இல்லை.

எவ்வளவு பிரயத்தனப்பட்டு கவனித்தாலும், அவர் சொல்லும் ஆன் லைன்/இன்வெஸ்ட்மெண்ட் பாங்கிங் சமாச்சாரம், எனக்கு 10 நிமிஷத்தில் தூக்கத்தை தருவிக்கிறது..

ஆக, இந்த பத்து வருடத்தில் எங்கள் இருவருக்கும் பொது பிடித்தமாக இருப்பது குழந்தைகளும், இன்னும் ஒன்றிரண்டு விஷயங்களும் மட்டுமே..

யார் கண்டது? ஒரு வேளை ஒத்த ரசனை கொண்டிருந்தோமேயானால், சீக்கிரமே போர் அடித்திருக்கலாம். அவர் பிடித்தங்களை நானும், என்னை அவரும் கேலி செய்யாமலில்லை. ஆயினும், இது வரை எங்கள் ரசனைகளை மாற்றிக்கொள்ள அவசியப்படவுமில்லை..

நம்புங்கள், கொஞ்சம் நகைச்சுவையும், நிறைய ப்ரியமும் இருந்தால், திருமணம் என்பது ஒன்றும் அத்தனை கஷ்டமாக இல்லை  :-)