Wednesday, 16 December 2015

பெருமழைக்குப் பின்னால்..சமீபத்தில் தான் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபெயர்ந்திருக்கிறேன். குடியிருப்பு என்று சொன்னால் உங்களுக்கு அதன் பணக்காரத்தன்மை பிடிபடாமல் போய்விடும். ஆங்கிலத்தில் விவரிப்பதானால் ‘கேட்டட் கம்யூனிட்டி’.  அமெரிக்கத்தனத்தோடு தென்படும் மனிதர்களின் உடைகள், பாவனைகள், கன்றுக்குட்டி சைசில் இருக்கும் நாய்கள் (இங்கிருக்கும் நாய்களை, 'நாய்கள்' என்று சொல்லவே பயமாக இருக்கிறது), நுனி நாக்கு ஆங்கிலம் மட்டுமே பேசும் யுவன் - யுவதிகள்/ நண்டு, சிண்டுகள் , பார்க்கிங்கில் நிற்கும் பி.எம்.டபிள்யூ, பென்ஸ் என நீங்கள் உள்ளே வந்தால் என்னைப்போலவே உங்களுக்கும் மிரட்சி கொள்ள 101 காரணங்கள் இருக்கின்றன.


அப்பார்ட்மெண்ட்டுக்கென இருக்கும் வாட்ஸப் க்ரூப்பில் எப்போதும் ரணகளம் தான். ’வேலைக்காரர்கள் தங்கள் குழந்தைகளையும் கூடவே அழைத்து வரக்கூடாது, அவர்கள் பொழுது போகாமல் லிஃப்ட்டில் மேலும், கீழுமாக அலைகிறார்கள்’என்று காரசாரமாக நாள்முழுவதும் விவாதிப்பார்கள். ‘கொசுக்களை வாடகைக்கு அமர்த்தி நம் செக்யூரிட்டிகளை தூங்கவிடாமல் பார்த்துக்கொண்டால் என்ன?’ என்று ஜோக்கடித்து திகிலூட்டுவார்கள். முகம் பார்க்கும் அளவு பளபளப்பாக இருக்கும் ஜிம்’மில் சுத்தம் போதவில்லை என்று கடிந்துக்கொள்வார்கள். பெண்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஏன் தீபாவளி போனஸ் பணமாக ஏன் தரவேண்டும், புடவையாக தந்தால் போதாதா? ஒரு வருடம் ஆனால் தான் எந்த போனஸூமே தரவேண்டும் என்றெல்லாம் முதலாளித்துவ கொடிப்பிடிப்பார்கள். நகரின் ஆகப்பெரிய பள்ளிகளில் வசதி போதவில்லை என்று அங்கலாய்ப்பார்கள்.

சென்னையையே உலுக்கி எடுத்த பெருமழைக்கு நாங்கள் மட்டும் தப்பிப்போமா என்ன? அருகில் இருக்கும் ஏரி உடைப்பெடுத்து, எங்கெங்கும் வெள்ளக்காடு. நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை, பால் இல்லை, காய்கறி இல்லை. பிரதான சாலை இருபுறமும் துண்டிக்கப்பட்டு, பிரளயமே வந்தாலும்கூட அலுவலகம் செல்ல நினைக்கும் என் கணவர் போன்றவர்கள் எண்ணத்திலும் இடி விழுந்தது. அப்பார்ட்மெண்ட்டில் ஜெனரேட்டர் உதவியோடு  தண்ணீர் மற்றும் லிஃப்ட்டுக்கு மட்டும் மின்சாரம் வருமாறு பார்த்துக்கொண்டோம்.

ஆனால் விஷயம் அதுவல்ல. எங்கள் ஏரியாவே நீரில் மூழ்கியிருக்க, தப்பிப்பிழைத்த ஓரிரு கட்டிடங்களில் எங்களுடையதும் ஒன்று. அப்பார்ட்மெண்ட்வாசிகள், அருகிலிருக்கும் சேரி மக்களை அதே பளபள க்ளப்ஹவுஸில் தங்க அனுமதித்தது மட்டுமல்லாமல், அத்தனை பேருக்கும் தத்தம் வீடுகளில் சமைத்தும் தந்தார்கள். இரவில், மின்சாரம் அந்த மக்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவிகள் (அதே நுனி நாக்கு ஆங்கிலத்தில்) வீடுவீடாக வந்து பால், மருந்து பொருட்கள், பிஸ்கெட், பழங்கள், போர்வை, பாய் என வாங்கிபோய் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துதவினார்கள். பல ஆண்கள் வீடுகளுக்கு திரும்பாமல் அங்காங்கே உதவி செய்துக்கொண்டிருப்பதாக செய்தி அனுப்பிக்கொண்டிருந்தார்கள். பெண்கள், இந்த மழையில் வீட்டுவேலை செய்பவர்களை வரசொல்லி கட்டாயப்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள்.

இது என் சொந்த அனுபவம் மட்டுமே. இன்னும், வெறும் வெட்டி அரட்டைக்கான தளம் என்று இகழப்படும் சமூகவலைத்தளங்கள் மூலம் பயன்பெற்றோர் ஏராளம். வீண் பொழுது போக்குபவர்களாக அறிந்து வைத்திருந்த பல இளைஞர்களும் செயலில் இறங்கி அசத்தினார்கள். ட்விட்டர் மூலம் ஒருவர் பிரசவவலியில் தவித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு மருத்துவ உதவி பெற்றுத்தந்தார். ஒரு இளம்பெண் எந்த பயமும் இன்றி, தன் முகவரி தந்து, அருகில் மழைவெள்ளத்தில் மாட்டிக்கொண்டிருப்பவர்களை வீட்டில் வந்து தங்கிக்கொள்ள அழைத்தார்.  இன்னும் நிறைய இளைஞர்கள் தங்கள் வீடுகளில் வந்து தங்கிக்கொள்ள அழைத்துக்கொண்டே இருந்தார்கள். சிலர், மழையில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள் மொபைல் டாப்-அப் செய்து உதவினார்கள். வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்றுவது, இருப்பிடம், உணவு வழங்குவது, உதவியையும், உதவி தேவைப்படுபவர்களையும் இணைப்பது என்று பம்பரம் போன்று சுழன்றவர்களை அருகில் இருந்து காணமுடிந்தது அல்லது தெரிந்துக்கொள்ள முடிந்தது.  நாம் இதுவரை சிடுமூஞ்சிக்காரர்களாக உருவகப்படுத்திவைத்திருந்த அரசு போக்குவரத்து துறையினரும், மின்சாரவாரிய ஊழியர்களும் உயிரை பணயம் வைத்து கடமையை செய்தார்கள். வெளிநாடு வாழ் தமிழர்கள் தாராளமாக பண உதவி செய்யதுவங்கி உள்ளனர். தங்களால் நேரில் உதவிடமுடியாததற்கு உண்மையாகவே வருந்தினார்கள். நான் நேரிலும், இணையத்திலும் சந்தித்த ஒவ்வொருவரும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் மழையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உதவியிருக்கிறார்கள்.

இந்த பெருமழையின் சப்தத்திலும் அண்ணல் காந்தியின் வார்த்தையை கேட்கிறேன் - “நீங்கள் மானுடத்தின் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. மானுடம் என்பது ஒரு பெருங்கடல், அதன் சில துளிகள் அசுத்தமாக இருக்கிறது என்பதால் பெருங்கடலே அசுத்தம் என எண்ணிவிடக் கூடாது”
தற்சமயம் உதவிகள் செய்தவர்கள் யாரும் வரலாற்றில் இடம் பெறபோவதில்லை. குறைந்த பட்சம் சினிமாகாரர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் பத்திரிகை புகழ் கூட கிடைக்கப்போவதில்லை. அவ்வளவு ஏன், உதவி கிடைக்கப்பெற்றவர்கள் நினைவில் கூட நிற்கப்போவதில்லை.  அதற்காகவும் அவர்கள் அதை செய்யவில்லை. நாளை, ‘பொதுமக்கள்’ என்ற ஒருவார்த்தையில் கரைந்து போகப்போகிறார்கள். எனினும் இந்த மழை, மானுடத்தின் மீதான நம்பிக்கையில் நீரூற்றி சென்றிருக்கிறது.  சிறு துளிகள் சேர்ந்து பெருவெள்ளத்தை உருவாக்கமுடியுமெனில், சின்ன சின்ன நல்லெண்ணங்கள் சேர்ந்து மனிதம் தழைக்கச் செய்யவும் முடியும்.

முகம் தெரியாத யாரோக்காகவோ, பிரதிபலன் பாராமல் தன்னால் முடிந்த உதவியை செய்த/செய்துக்கொண்டிருக்கும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் இக்கட்டுரை சமர்ப்பணம். வாழ்க மானுடம். 

(15/12/2015 இதழ் குங்குமம் தோழியில் வெளிவந்துள்ள கட்டுரை)

Wednesday, 15 July 2015

பேரு பெத்த பேரு, தாக நீரு லேது!


மாநகரம் பல விதங்களில்  சுவாரஸ்யமானது. சரியாக சொல்லப்போனால், இங்கே தண்ணீர் ஒருவர் வாழ்வில் வகிக்கும் பங்கை வைத்து அவரின் பொருளாதாரத்தை எடைப்போட்டு விடலாம். 'அப்பார்ட்மெண்ட்டில் ஸ்விமிங் பூல் இருக்கா?' என்று கவலைப்படும் பணக்காரர்களும், 'கார்ப்பரேஷன் தண்ணீ வருமில்லீங்க?' என்று விசாரித்து வீடுமாறும் நடுத்தரவர்கமும், லாரியில் வரும் தண்ணீரை பிடிக்க வீட்டிலிருந்து எவ்வளவு தொலைவு செல்லவேண்டும் என்று கேட்டு பெண் கொடுக்கும் கடைநிலை மனிதர்களுக்குமானது சென்னை. இங்கே முன்னூற்றி அறுபத்து நான்கு நாட்களும் புரண்டோடும் நதி ஒன்று உண்டென்றால் அது கூவம் தான். மற்றப்படி  தண்ணீர் மழைக்காலங்களில் கங்கையாய் வீட்டின் உள்ளேயே வந்து, வெய்யில் காலங்களில் சரஸ்வதியாய் காணாமல் போகும் ஏரியாக்கள் தான் அதிகம்.

கொஞ்சம் கீழ் தட்டு மக்கள் என்றால், குழாயடியில் வைத்து சண்டையை முடித்து, தண்ணீர் கிடைத்ததும் சிரித்துக்கொண்டே கூட வீடு திரும்பி விடுவார்கள். இரண்டுங்கெட்டானான நடுத்தர குடும்ப ஃப்ளாட்வாசிகளிடையே  மெளன யுத்தம் போல், உடைய காத்திருக்கும் நீர் குமிழி போல், தண்ணீர் சண்டை நிகழ்ந்துக்கொண்டிருக்கும். தண்ணீரை வீணடிப்பதாக தோன்றும் வீட்டினை சேர்ந்த பையன், பந்தால் மற்றொரு வீட்டின் கண்ணாடி ஜன்னலை மட்டுமில்லாது, அந்த நீர்குமிழியையும் சேர்த்தே உடைப்பான்.  அடுக்ககத்தில் இருப்பவர்களை இணைக்க ஒரு சின்ன திருட்டு சம்பவம் போதும். திடீரென்று அன்யோன்யமாகி, யார் யாரெல்லாம் ஊருக்கு போகிறார்கள் என்று பரஸ்பரம் தெரிந்து வைத்து, நாங்க பார்த்துக்கறோம் என்று வாசன் ஐ கேர் போல உறுதி தருவார்கள். போலவே ஜென்ம விரோதியாக்க தண்ணீர் பிரச்சனை போதும். கார் கால நட்பெல்லாம், கோடை காலத்தில் ஆவியாகும்! உங்க வீட்ல இன்னும் எத்தனை நாளுக்கு தான் விருந்தாளிங்க இருப்பாங்க என்று அடுத்த வீட்டில் இருப்பவர் சண்டைக்கு வருவதெல்லம் மாநகரத்து ஸ்பெஷல் எபிசோட்!!


இது ஒரு புறம் என்றால், உங்க தண்ணீல உப்பு இருக்கா என்று கேட்டு, இல்லையென்றால் குடி போகும் ஏரியாக்கள் தான் பெரும்பாலும். சமயத்தில் அருகிலுள்ள நல்ல ஸ்கூல், அல்லது வேலை பார்க்கும் அலுவலகம் காரணமாக உப்பு-தண்ணீ ஏரியாவுக்கு குடி போக நேரிட்டால், ஏற்கனவே கொஞ்சமாக மிச்சமிருக்கும் உறவுகள் நம் வீட்டுக்கு வரவே பயப்படுகிறார்கள் அல்லது அவர்கள் வந்துவிடப்போகிறார்களே என்று நாம் பயப்படுவோம். இரண்டு நாட்கள் சேர்ந்தார்ப்போல தண்ணீர் பிடித்து வைத்துவிட்டால், பக்கெட்டெல்லாம் 2 இன்ச்சுக்கு உப்பு படிந்து, அந்த கால சினிமா நடிகையின் மேக்கப் போட்ட முகம் போல மாறுகிறது. வரும் விருந்தினர்களோ இதை துளிக்கூட ரசிப்பதில்லை.
'சென்னைல தான் குளிச்சா, குளிச்ச மாதிரியே இருக்கறதில்ல. சாக்கடை தண்ணி மாறில்லா இருக்கு?!'
'ஐயோ, சென்னைக்கு வரும் போது பழைய பனியனா எடுத்துவரனும். இங்க வந்து துவைச்சா பிடி-துணி போல ஆகுதே!'
'என் பொண்ணுக்கு போன முறை உங்க வீட்டு தண்ணியால ஸ்கின் ப்ராப்ளம் வந்திருச்சு. '
இதுக்கெல்லாம் அவமானப்படும் கட்டத்தை எப்பவோ தாண்டிவிட்டோம். விருந்தினர் வருகையில், தண்ணீரும் வருவதே எங்களுக்கு போதுமானது. மாநகரத்தின் தண்ணீருக்காக முடி துறந்த மன்னர்களாச்சே நாங்கள்?!

குரோமியம், ஈயம் இன்னும் கெமிஸ்ட்ரி லாபில் இருக்கவேண்டியதெல்லாம் இப்போது நிலத்தடி நீரில் இருக்கிறதாம். இத்தனை ரசாயனத்தையும் சுமந்து சில பகுதிகளில் தண்ணீர் அழகான ஆரஞ்சு வண்ணத்தில் வருகிறது.  இன்னும் மஞ்சள், பச்சை என்று வைரமுத்து பெண்ணை பற்றி பாடத்தேவையான எல்லா வண்ணத்திலும் தண்ணீர் கிடைக்கையில், குழந்தைகள் புத்தகத்தில் மட்டும் தான் தண்ணீருக்கு வண்ணமில்லை என்றிருக்கிறது. ஏதேனும் ஒரு நதிநீரை பைப்பில் கிடைக்கப்பெரும் ஏரியாவாசிகள் போன பிறவியில் ஓரளவு நல்லவர்கள். நிலத்தடி நீரை நம்பியிருப்பவர்கள் கதை, சித்திரகுப்தன் கோவமாக இருக்கையில் எழுதியது! போர் போட்டு தண்ணீர் எடுக்க முயல்கையில், சமயத்தில் 600 அடி தாண்டியும் கூட, ப்ளம்பர், 'வெறும் காத்து தாங்க வருது' என்கிறார். எவ்வகையிலும் அது 'தேவர் மகன்' ரேவதி கிசுகிசுத்ததைப்போல தித்திப்பாக இல்லை. 'இன்னும் தோண்டு இன்னும் தோண்டு' என்கிறோம்.  அந்தப்பக்கம் அமெரிக்கா வருவதற்குள் தண்ணீர் வந்துவிடாதா என்ன?

நமக்காக, பல புறநகர் பகுதியில் உள்ள விவசாயிகள் பேருக்கு விவசாயம் செய்துக்கொண்டு, கிணற்றில் மோட்டர் போட்டு உரிஞ்சி உரிஞ்சி பயிருக்கு போகவேண்டிய தண்ணீரை லாரிகளில் நகரத்துக்குள் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். லாரிகள் வழி நெடுக நிலத்தின் ரத்தம் போல தண்ணீரை சிந்திக்கொண்டே செல்கின்றன. அதை தான் இஷ்டத்துக்கு வாரியிரைக்கிறோம்.

'லேக் வ்யூ' அப்பார்ட்மெண்ட் என்று விளம்பரம் செய்து, வீடுகள் விற்று முடித்ததும் அந்த லேக்கில் அப்பாட்மெண்ட்டின் கழிவு நீரை கொண்டுசேர்த்து, 'சாக்கடை வ்யூ' அப்பார்ட்மெண்ட்டாக மாற்றிக்கொள்வது ; எப்படியாவது வீட்டை தாண்டினால் போதும் என்று நாம் நினைக்கும் குப்பைகள், நீர் நிலைகளுக்கு அருகில் கொட்டப்படுவது; ஏரிகள் வரண்டு போக காத்திருந்து, போஸ்டல் அட்ரஸை ஏரி மேல் மாற்றிக்கொள்வது; வீட்டில், பல் தேய்பதற்கு குளிக்கத்தேவையான அளவு தண்ணீரும், குளிப்பதற்கு விவசாயம் செய்துவிடலாம் அளவு தண்ணீரையும் உபயோகிப்பது..இவையாவும் தொடர்ந்து செய்துக்கொண்டே போனோமேயானால், சென்னை சீக்கிரம் ஒட்டகமில்லா ராஜஸ்தானாகும்.Image result for water scarcity cartoonsஇதில், நம் பெண்களால் செய்யக் கூடியது ஒன்றுண்டு. குழந்தைகளுக்கு தண்ணீரின் அருமையை புரியவைப்பது. எங்கு தண்ணீர் வீணாகிக்கொண்டிருந்தாலும், ஓடிப்போய் நிறுத்துவதெல்லாம் பாலப்பாடமாக வேண்டும். இவ்வளவு ஏன் பேச வேண்டும் என்றால்,  தண்ணீர் பிரச்சனையை பொருத்த வரையில், இன்றைய சென்னை நிலை, நாளை  மொத்த தமிழகத்துக்குமான ட்ரைலர்!


(குங்குமம் தோழியில் வந்துள்ள கட்டுரை)

Friday, 12 June 2015

சீரியல் கில்லர்கள்

’இந்த குழந்தைக்கு அப்பா யாரு?' - இதுதான் எல்லா சீரியல்களிலும் உள்ள பொதுப் பிரச்சனை. முக்கால்வாசி சீரியல்கள் என்னவோ சீரியஸாகதான் இருக்கின்றன. ஆனால், அதில் காட்சிக்கு காட்சி இழையோடிடும் நகைச்சுவைதான் நம் பெண்களை கட்டிப்போடுகிறது என்று நினைத்துக்கொள்வேன்.
கூட்டுக் குடும்பத்தின் சிறப்பு
சீரியல்கள் போன்று, இன்றைய தேதியில் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை இந்தளவு வேறு எங்கேயாவது, யாராவது முன்னிறுத்துகிறார்களா? குறைந்தது ஆறு, ஏழு பேர் உள்ள குடும்பங்களில், முன்னூற்றி அறுபத்து நான்கு நாட்களும் சுவாரஸ்யமான சண்டைகளும், பிரச்சனைகளுக்கும் வர
வாய்ப்பு இருக்கிறது என்பதை விடவா, கூட்டுக்குடித்தனத்துக்கு தனி மோட்டிவேஷன் வேண்டும்?  மேலும், இப்போது தெரு சண்டைகள் சுவாரஸ்யமற்றுப் போய்விட்டன. அடுத்த வீட்டில் கொலையே விழுந்தாலும் நாங்கள் அவர்கள் பக்கம்  எட்டிப்பார்ப்பதில்லை. ஒரு வீட்டில், யார் யார் என்னென்ன சீரியல்கள் பார்ப்பார்கள் என்று தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கு இடஞ்சல் இல்லாத நேரமாக ஃபோனில் பேசும் உறவினர்கள், 'பண்பானவர்கள்' என்று பெயர் பெறுகிறார்கள்.
ரோல் மாடல்
ஒரு காலத்தில் ஆண்களுக்கு கனவு கன்னியாக விளங்கிய சினிமா நாயகி, பின்னாளில் சீரியல் நாயகியாகி அதே ஆணின் மனைவியின் மதிய தூக்கத்தைகெடுக்கிறார். தொலைக்காட்சி தொடர் கதாநாயகி பெண்களுக்கு ஒரு ரோல் மாடல் என்றால் நம்புவீர்களா? அவர், எப்போதும் மிக அழகாகவும், சிரித்த முகத்துடனும் வேலைக்கும் போய், குடும்பத்தையும் சரியாக கவனிப்பவராக இருக்கிறார். ஆனால், அவர் மாமியார் வில்லியாக மாறவேண்டி இருப்பதால் அவருக்கு குழந்தை பிறக்காமல் இருக்கிறது; அல்லது பிறந்த வீடு ஏழ்மையோடு இருக்கிறது. அல்லது மாமியாரின் பணக்காரக் தோழி, தன் ஒரே மகளை இரண்டாம் தாரமாகவாவது கதாநாயகியின் கணவருக்கு தான் கட்டிவைப்பேன் என்று காத்திருக்கிறார். இந்த ஆல் டைம் பிரச்சனை தவிரவும் நாத்தனார் ஏரியா ரெளடியோடு ஓடிபோனாலும், தம்பியை போலீஸ் பிடித்து போனாலும், கணவருக்கு வேறு தொடர்பு இருப்பது தெரிந்தாலும், அழகான உடை அணிந்து, மேட்சிங்-மேட்சிங் அணிகலனுடன் வந்து கவலைபடுகிறார். ஆதலினால் பெண் குலத்திற்கே, இனி காலையில் பொங்கின பாலுக்காக இரவு வரை மூஞ்சியை 'உம்' என்று வைத்து கொள்ளக்கூடாது என்ற தெளிவு பிறக்கிறது.
போலீஸ் பயம் போச்சு
கதையில் எப்படியும் போலீஸ் வருகிறது. அல்லது போலீஸ் ஸ்டேஷனுக்கு வீட்டிலுள்ளவர்கள் போக வேண்டியிருக்கிறது. இதெல்லாம் சாதாரண விஷயம். போலீஸ் என்றால் அதுவும் ஒரு அரசாங்க அலுவலகம் தானே என்றே தற்சமயம் தைரியம் பிறந்திருக்கிறது.
சத்திய வாக்கும் நல்ல பெண்ணிற்கான அடையாளமும்
படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு கிழவர் மாத்திரை/மருந்து வாங்குகிறாரோ இல்லையோ, கண்டிப்பாக கதாநாயகியிடம் யாவரையும் அனுசரித்துப் போக சத்தியம் வாங்குகிறார்! அந்த சத்தியம் செய்யாவிட்டாலும் கூட நாயகி நல்லவர்தான்.  வடிவேலு ஒரு நகைச்சுவை காட்சியில் சொல்வார் -  'எத்தனை அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்ல்ல்லவன்னு சொல்லிட்டாங்க '. அதே தான் இங்கேயும். சீரியல் இயக்குனர், ஒரு கதாபாத்திரத்தை  'நல்ல ' கேட்டகரியில் சேர்ப்பதென்று என்று முடிவெடுத்துவிட்டால், அது முட்டுச்சந்து தோறும் அடிவாங்கிக்கொண்டே இருக்கிறது. இப்படி பலரும், பலவிதத்திலும் கொடுமை செய்தாலும் அதையெல்லாம் குடும்ப வன்முறையாக பார்க்காமல் சகித்துக்கொண்டு வாழ்ந்து முடிப்பதே நல்ல பெண்ணிற்கான குணம் என்ற அரிய கருத்து சீரியல் தோறும் பெண்களுக்கு கிடைக்கிறது. இவ்வாறான குடுகுடு கிழவர்கள், கையை பிடித்துக்கொண்டு பேசுவதே சத்தியம் வாங்குவது போலிருப்பதால், இவர்களோடு ஒரு பத்தடி தள்ளி நின்று பேசவேண்டும் என்ற கருத்தும் நுட்பமாக வலியுறுத்தப்படுகிறது.
ஆள் மாறும் காதலர்கள்
மேலும் கற்பு பற்றின கற்பிதங்களும் மாற்றம் கண்டிருக்கின்றன. தலைப்பிலேயே ஜோடி பெயரோடு வரும் ஒரு சீரியலில், நூறு எபிசோட் தாண்டியதும் கதாநாயகிக்கு, X பொருத்தம் என்று நினைத்தால் A என்று SMS அனுப்புங்கள்.  Y பொருத்தம் என்று நினைத்தால் B என்று அனுப்புங்கள் என்று போட்டி வைத்து,ஒரு சுபயோக சுபநாளில் ஜோடி மாறுகிறது. (அதில் சிலர் தன் பெயரை கூட sms அனுப்பி பார்த்தார்கள் என்பது கிளைக்கதை)
நல்லதும் கெட்டதும்
இங்கே மனிதர்கள், பூலியன் அல்ஜீப்ரா (0 அல்லது 1) போல மிகுந்த நல்லவர்கள் அல்லது அசுர கெட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களை அடையாளம் காண்பதும் எளிதாக இருக்கிறது.  அடர்த்தியாக மை வைத்து, வீட்டில் உள்ள நகைகளை அள்ளி அணிந்து, உறக்க பேசுபவர்கள் கெட்டவர்கள்.  எழையாக அல்லது அடிமையாக மட்டுமே இருப்பவர்கள் நல்லவர்கள். மேலும், வாழ்க்கை என்பது 24 மணி நேர தொடர் ப்ளானிங்க்கானது என்பதை, அடர்த்தி நகைப் பெண்மணி கற்றுத்தருகிறார். வெள்ளிக்கிழமை தோறும் ட்விஸ்ட் வைத்து முடிக்க வேண்டி இருப்பதால், நல்லவர்கள், கெட்டவர்களாக மாறி ப்ளான் போடுகிறார்கள்; கெட்டவர்கள் நல்லவர்களாக மாறி ஆக்ஸிடெண்ட் ஆகிறார்கள்.
சில டிப்ஸ் -
முக்கியமான விஷயம் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிட்டு போகட்டும். சீரியல் என்றால் தினமும் தவறாமல், கண் இமைக்காமல் பார்க்க வேண்டும். நான் ஒருமுறை என் அம்மாவிடம் , 'என்னம்மா இது? எவ்ளோ நல்ல பொண்ணா இருந்தாங்க; இப்போ புதுசா யார் கூடவோ சுத்துறாங்கன்னு கேட்கப் போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டேன். முந்தைய எபிசோடில் 'அவருக்கு பதில் இவர்' என்று ஒரு செகண்ட் காட்டியிருக்கிறார்கள்.
ஏதாவது முக்கியமான விஷயம் என்றால், கேட்பவருக்கு முதுகு காட்டி, கேமரா பார்த்து பேசுகிறார்கள்.  நானும் அப்படி ஒரு நாள் திரும்பி நின்று பேசி பார்த்ததில்,  கணவர் எப்பவோ 'எஸ்கேப்'. ஆகவே அது வேண்டாம்.
ஒரு சீரியலுக்கு பின்னால் டைரக்டர், அஸிஸ்டண்ட் டைரக்டர், க்ரியேடிவ் ஹெட், வசனகர்த்தா, ம்யூசிக் போடுபவர் என குறைந்தது 10 - 15 ஆண்கள் இதையே தொழிலாக கொண்டு உழைக்கிறார்கள். இவர்கள் அரைத்த மாவையே அரைத்து, முடிந்த வரையில் கலாசார சீரழிவுகளை புகுத்தி கதை அமைத்து, நம் மூளைக்கு பிறர் வீட்டு வம்பு கேட்பது தான் பிடித்தமான பொழுதுபோக்கு என்று மாற்றிவைத்திருக்கிறார்கள். முடிவில், இந்த சமூகம்  பெண்களை மட்டும் குறை காணும். ஆகவே அத்தகைய விமர்சனங்களை கண்டு அஞ்சத் தேவையில்லை.
நீங்க விரும்பி பார்க்கும் சீரியலில, குடிகார தம்பி திருந்தி IAS (அதேதாங்க!) கலெக்டர் ஆகிறாரா? கொடுமைக்கார மாமியார், ஒரு நாள், ஒரு பக்க வசனத்தில் (இதை முதல் எபிசொட்டிலேயே செய்து தொலைத்தால் தான் என்ன?) நல்லவர் ஆகிறாரா? நாத்தனாரை அவர் கணவர் வந்து கூட்டிப் போகிறாரா? இது போன்று எல்லாம் நல்லதாகவே வரிசையாக நடந்தால், உங்கள் சீரியல் டைரக்டர்க்கு சினிமா சான்ஸ் கிடைத்து விட்டதென்று அர்த்தம். சீக்கிரமே ஒரு குரூப் போட்டோ எடுத்து சீரியல முடிக்கப் போகிறார்கள்.. ஆனால், கவலை வேண்டாம், ஒரு  'மஞ்சள் கிழங்கு ' முடிந்தால்  மற்றொரு  'கிழங்கு மஞ்சள் ' தொடங்கும். சீரியல்கள் ஓய்வதில்லை.
- விக்னேஷ்வரி சுரேஷ்

(தினமணி ஆன்லைனில் வந்துள்ள கட்டுரை - http://www.dinamani.com/special_stories/2015/06/11/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article2861047.ece)

Saturday, 16 May 2015

கண்டிஷன் போடாத தேவதை


ஆண்கள் உலகம் நமகெல்லாம் அறிமுகபடுத்தப்படுவது அப்பா மூலம் தான். இருப்பினும் அதை இன்னும் சுவாரஸ்யமாக்குவது சகோதரனே. ரிக்கி மார்டினையும், WWF ராக்கையும், கிரிகெட்டின் சகல சூட்சுமங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துவது அவனே! நிலைக்கண்ணாடி முன் AXE வாசனையை தருவதற்கும், கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுக்காக கடுப்படிபதற்காகவும் எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். எண்ணிலடங்கா நினைவுகள் என் தம்பியோடு இருக்கின்றன எனினும் இந்த பதிவு அதில் ஒரு துளி -

மத்திய தர வர்க்கத்துக்கே உரிய கோட்பாட்டின் படி பொறியியல் படித்து, கொஞ்ச காலம் சில பல உப்புமா கம்பெனிகெல்லாம் கோடு எழுதிக்கொடுத்து ஒரு வழியாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ப்ராஜெக்ட் லீடர் ஆனான். அவர்கள் அதோடு விடாமல் H1B யும், அமெரிக்க கனவையும் அவனுக்கு தந்தார்கள். அன்று முதல் எங்கள் அம்மாவுக்கு, பிள்ளை அமெரிக்கா போனால் 'குடியும் குடித்தனமுமாக' ஆகி "Meet my darling wife!" என்று ஒரு வெள்ளைக்காரியை கொண்டு வந்தது நிறுத்த போவதாக கனவு வர ஆரம்பித்தது.. இன்னும், பிள்ளையார் சதுர்த்திக்கு 'பர்கர்' படையல் பண்ண வேண்டி வந்துவிடுமோ என்றெல்லாம் தினம் ஒரு தினுசாக கவலை பட ஆரம்பித்தாள். இந்த விஷயத்தில் மட்டும் சுதந்திரத்திற்கு முன் வடக்கே வசித்த மோகன்லால் கரம்சந்த் காந்தியின் அம்மாவிற்கும், சுதந்திரத்திற்கு பின்னான தென் தமிழ்நாட்டின் சிற்றூரில் வசிக்கும் என் அம்மாவிற்கும் ஒன்றுப்போலவே யோசிக்க முடிந்திருக்கிறது.  அமெரிக்காவிற்கு கல்யாணம் பண்ணித்தான் அனுப்புவேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாள்.

அவன், இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தான்.  ஆனாலும், அம்மா செண்டிமெண்ட்டாவது தோற்பதாவது? அம்மாவும் அப்பாவும் ஊரிலும், தம்பி எங்களோடு சென்னையிலும் இருந்ததால் வசதி கருதி வரன் பார்க்கும் பொறுப்பு எனக்கு வந்தது.  ஆரம்பத்தில் பெண் தேடுதலில் ஒரு வித அகம்பாவத்தோடு இருந்ததென்னவோ நிஜம் தான். காரணம் மூன்று -  முதலாவதாக என் தம்பி இள வயது அஜித் போல படு ஸ்மார்டாக இருந்தது.  இரண்டாவது நல்ல குடும்பம், வேலை மற்றும் கெட்ட பழக்கம் எதுவுமில்லை என்பது கல்யாணத்துக்கு போதுமானதாக நான் அப்பாவியாக நினைத்திருந்தது மற்றும் மூன்றாவதாக பெண்ணை பற்றி அவனுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது.

பிரபல மாட்ரிமோனி முதல் தெருகோடி மாமாவின் டைரி வரை சகலத்திலும் ஃபோட்டோவோடு பதிந்ததில், என் தம்பிக்கு எப்போதும் தன்னை யாரோ தன்னை கவனித்து கொண்டே இருப்பது போல பிரமையெல்லாம் வந்தது.  பெண் தேடும் போது புரிந்த உண்மை என்னவென்றால்,  இப்போதெல்லாம் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்வீட்டாரிடமும், தேர்ந்தெடுக்கப்படும் பாக்கியம் மட்டும் மாப்பிள்ளை  ட்டாரும் பெற்றிருப்பது! பெண் வீட்டார் நம்மிடம் இருந்து ஜாதகம்-போட்டோ-ஆபீஸ் அட்ரஸ்- என சகலமும் சப்ஜாடாக பெற்று கொண்டு பதிலுக்கு கடுகத்தனை பெண்ணை பற்றி சொல்கிறார்கள். பெரும்பாலான  இன்டெர்வியு கேள்விகள் போனில் தான் - உங்க தம்பி  IT ல எவ்ளோ வருஷமா இருக்கார்? எங்க பொண்ணுக்காக மாற்றல் வாங்கிப்பாரா?அமெரிக்கா வாய்ப்பு இருக்கா? வொர்க் ஹவர்ஸ் எப்படி?... கேள்விகள்..கேள்விகள்..(டாய்லெட் போனா எவ்ளோ நேரம் எடுத்துப்பார் என்று கூட கேட்டுவிடுவார்களோ என்று பயம் வந்திருக்கிறது!) நாம் ஏதாவது பெண்ணை பற்றி கேட்டால் மட்டும் எதோ பேங்க் பாலன்சை பற்றி கேட்டது போல் பதறுகிறார்கள்.

 ஒரு முறை ஜாதகம் எல்லாம் பொருந்தி டெலிபோனிக் இன்டர்வியு முடிந்து வீட்டுக்கு கூரியரில் போட்டோ அனுப்பி வைத்தார்கள். வாழ்க்கையில் முதல் முறையாக பணம் கொடுத்து பெற்று கொண்டோம்(இப்படி பண்ண முடியும் என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?) உள்ளே நாலு பெண்கள் நிற்கும் போட்டோவும், பெண்ணின் தகப்பனார் கடிதாசியும். 'மூன்றாவதாக நிற்கும் பச்சை சுடிதார் அணிந்த பெண்' என்று குறிப்பு!! நிச்சயமாக நாலு பெண்களில் அவள் தான் அழகி. அது அவருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் விஷயம் கடிதத்தின் பின் இருந்தது - கடுகு 200 gm, நல்லெண்ணெய் அரை லிட்டர் என்று ஆரம்பித்து பெண்கள் சமாசாரம் வரை உள்ள மளிகை லிஸ்ட்! என் தம்பி, 'இதெல்லாம் நம்மள பெண் பார்க்க வரும் போது வாங்க சொல்லியிருக்காங்களா' என்று  அப்பாவியாய் கேட்க, எங்களுக்கோ ஏக எரிச்சல். இன்னும் கொஞ்சம் தண்டச்செலவு செய்து போட்டோவை திருப்பிஅனுப்பி வைத்தோம். வாழ்க்கையில் சிக்கனம் இருக்கலாம் ஆனா சிக்கனமே வாழ்க்கையாக வாழ்பவர்களை எங்கிருந்து மனதிற்கு சிக்கென பிடிக்கிறது?

இன்னும் சில பெண் பார்க்கும் அனுபவங்கள் இவ்வாறு இருந்தன -

ஒரு பெண் - கண்ணாடி அணிந்து, அதுக்கு மேல் வழியாக பார்த்து இன்டர்வியூவை ஆரம்பித்தாள். Ayn Rand இல் ஆரம்பித்து சகல புத்தகங்களை பற்றியும் கேட்க துவங்க.. நம்ம ஆளோ, 'பேப்பர்' என்ற வஸ்து கண்டுபிடிதிருப்பதே பஜ்ஜியிலிருந்து எண்ணெய் எடுபதற்காக என்றிருப்பவன். (ரிசல்ட் பற்றி தனியாக வேறு சொல்ல வேண்டுமா??) வெளியில் வந்து, இனி கண்ணாடி அணிந்த பெண் வேண்டாம். அதிலும் கண்ணாடிக்கு மேல் வழியாக பார்த்தால் கண்டிப்பாக வேண்டாம், ஏனெனில் அவர்கள் எட்டாம் வகுப்பு கணக்கு டீச்சரை நினைவு படுத்துவதாக சொல்லி நொந்துப் போனான்.

மற்றொரு நாள் - மற்றொரு குடும்பம். இவர்கள் சிம்பிள் ஆக ஒரே கேள்வி தான் கேட்டார்கள் - "கல்யாணத்திற்கு பிறகு ஜாயிண்ட் பாமிலியா?" நானும், "ஆமாம்.அம்மா அப்பாவிற்கு என் தம்பி ஒரே பையன். அதனால் அவனோடு தான் இருப்பார்கள்" என்றேன். மறுநாள் போனில், "எங்களுக்கு பெரிய்ய(?) குடும்பம் சரிவராது, சாரி !" என்றார்கள். என்னம்மா இது, நீ கொஞ்சம் குண்டா இருக்கறதால  தம்பி வாழ்கை கேள்விகுறி ஆகிடும் போலிருக்கே? என்று கொஞ்சநாளைக்கு அம்மாவை கலாய்த்து கொண்டிருந்தோம்.

 இதெல்லாம் வேண்டாம் என்று ரோஜா அரவிந்த்சாமி போல கிராமத்து பெண்ணை பார்க்க போய், அவர்கள் கேட்ட கேள்வியில் ஜெர்கானதும் உண்டு! அவங்க கேட்டது - "எங்க பொண்ண மாடர்ன் டிரஸ் போட சொல்லுவீங்களா?" எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ணா என்று. எதுக்கும் கேட்போம் என்று,"எத மாடர்ன் டிரஸ் ன்னு சொல்றீங்கன்னு?" கேட்டால், "அதாம்மா ஸூ.. டிதாரு" என்று ஒரு பாட்டி ராகமாக இழுத்தார். என் தம்பி, 'ஐயோ விக்னா நான் தெரியாம சின்ன வயசுல உன்னோட சண்டைப் போட்டிருக்கலாம். அதுக்காக என் வாழ்கையோட விளையாடிடாத.' என்று அழாத குறைதான்..

இன்னும் பல இடங்களில் போட்டோவில் பார்த்த பெண்ணிற்கும் நேரில் பார்பதற்கும் 60 வித்யாசங்கள் கண்டுபிடிக்கச் செய்து பைத்தியமாக்குகிறார்கள். அவர்களை பொருத்தவரையில் +2 படித்தப்போதும், காலேஜில் படிக்கும் போதும், வேலைக்கும் செல்கின்ற போதும் இருப்பது ஒரே பெண் தான். ஆனால் நம் மூளையோ, 15 கிலோ எடை அதிகரிப்பில் வேறு பெண்ணாக எண்ணச்செய்கிறது.

இப்டியே ஒரு வருடம் போனதில் - ஏன்டா, நீ அழகா இருந்து என்ன பிரயோஜனம்? லவ் பண்ணத்தெரியலையே என்று நான் அவனையும், உன்னால ஒரு பொண்ணு கூட எனக்கு பார்க்கமுடியல, நீயெல்லாம் ஒரு அக்காவா என்று அவன் என்னையும் மாறி மாறி கடுப்பேத்திக்கொண்டோம். என் தம்பிக்காக அம்மா கோவில் பிரகாரத்தை சுற்றிய சுற்றில், அந்த தெய்வமே இளைத்து போய்விட்டதாக கூட தோன்றும்.
இவ்வளவு புலம்பிய பின்  பெண் கிடைத்தாளா இல்லையா என்று முடிக்கவில்லை என்றால் எப்படி? ஒருவழியாக என் தம்பிக்கான பெண் கிடைத்தாள். அவள் ஒரு கண்டிஷன் போடாத தேவதை!


Thursday, 30 April 2015

ஓர் ஆண்டுவிழாவும், டங்காமாரி அம்மாவும்

"என்ன மாமி, ஷாப்பிங்கா?"
 "ஆமாம்மா, என் பேரன் அபி ஸ்கூல் ஆண்டுவிழா ட்ராமால இருக்கான். அதான்.. இந்தப்புடவைக்கு மேட்சிங் ப்ளவுஸ் தச்சு, அன்னைக்கு கட்டிக்கலாம்ன்னு இருக்கேன். "

என் குழந்தைகள் படிக்கும் அதே பள்ளியில் தான் மாமியின் பேரனும் படிக்கிறான். மாமியை போல தான் நானும். குழந்தைகளை வருடாவருடாம் எதாவது நிகழ்ச்சில் இருக்குமாறு பார்த்துக்கொள்வதே, தற்போது பெற்றோருக்கு வாழ்வில் முதல் மதிப்பெண்ணுக்கு பின்னான உபரி லட்சியம். வகுப்பில் நடந்ததை விட, இவ்வாறு மேடையில் தோன்றும் ஞாபகங்கள் எத்தனை வருடமானாலும் நினைவில் நிற்கும் என்பது ஒரு காரணம். ஆனாலும், ஆண்டுவிழாவில் சந்தித்துக்கொள்ளும் அம்மாக்கள், தங்கள் குழந்தைகள் அடம்பிடித்து நிகழ்ச்சியில் இணைந்து விட்டதாக செல்லமாக அலுத்துக்கொள்வார்கள். அப்பாக்கள் வேறு மாதிரி. ஸ்கூலில் ஃபோட்டோ தருவார்கள் எனினும், முண்டியடித்து முன்னே போய், மேடையில் இருக்கும் தன் குழந்தையை படம் எடுக்க சாஃப்ட்வேர் ஆசாமியும், மளிகை கடைக்காரரும், பிஸினஸ் மேன்களும் மோதிக்கொண்டு சமத்துவத்தை நிரூபிப்பார்கள்.

ஆண்டுவிழாவின் ஆரம்ப கட்டங்கள் சுவாரஸ்யமானவை. முதலில் குழந்தைகள் சந்தோஷமாக  வீட்டிற்கு வருகின்றன. 'அம்மா, நானும்  டங்காமாரி டான்ஸில் இருக்கேன். நம்ம ஸ்ருதி தான், மூஞ்சி கழுவாத மீனாட்சி!' பிறகு பிரச்சனை ஒவ்வொன்றாக ஆரம்பிக்கிறது. டீச்சர் கண்களுக்கு வெள்ளை நிறமே அழகெனப்பட்டு, முதல் வரிசைக்கு போகிறது ஒரு குழந்தை. பிறகெப்போதுமாய் ஒரு மன குளத்தில் கல்லெறிந்துவிட்டதை அறியாமல் குழந்தைகளை தனக்கு பிடித்தவாறு வரிசைப்படுத்துகிறார் டீச்சர். ஸ்கூல் நடனத்தில் மட்டும் உயரம் ஒரு குறையாகி, கடைசி வரிசைக்கு தள்ளப்படுகிறது.  ஆனாலும், தான் ஒரு வரி கூட பேசாத நாடகத்திலும், டீச்சர் ஒத்திகைக்கு அழைத்ததும், மற்றவர்கள் பார்த்திருக்க பாதி க்ளாஸிலிருந்து எழுந்துப்போவதெல்லாம் ஒரு பெருமையாகக் கருதச்செய்கிறது, கலங்கமில்லாத பால்யம்.


ஆண்டு விழா நெருங்க, நெருங்க பல விதமான சவால்கள் பெற்றோருக்கு வருகின்றன. அதே தேதியில், கண்டிப்பாக போயாக வேண்டிய கல்யாண ரிசெப்ஷன், ஆஃபிஸ் நண்பரின் குழந்தைக்கு பர்த்டே பார்ட்டி, சொந்த தலைவலி என பலதும் வந்து தொலைகிறது. இது அத்தனையும் மீறி, கடவுளை தரிசிக்க போகும் பக்தனின் ஆர்வத்தை ஒத்திருக்கிறது, மேடையில் தன் குழந்தையை  ஐந்தே நிமிடங்கள் பார்க்கப்போகும் பெற்றோரின் ஆர்வம்.

இத்தனை கஷ்டத்திற்கு, சுவாரஸ்யத்திற்கு பிறகு வரும் ஆண்டுவிழாக்களின் ஒலி/ஒளி தவிற வேறு விஷயங்களில் நூற்றாண்டுகளாக மாற்றமில்லை.  மைக்கை அளவின்றி நேசிக்கும் 'சீஃப் கெஸ்ட்' , நம் பொறுமையின் அளவை சோதித்துவிட்டு உட்காருகிறார். ஆண்டுவிழா உடைகள், இது நாள் வரை ஒரே லட்சியம் கொண்டு தான் தைக்கப்படுகின்றன - பிறகு எப்போதும், வேறு எங்கேயும் அணிந்து சென்றிடக் கூடாது என்பதே அது! மிட்டாய் ரோஸ் அல்லது தங்க நிறத்தில் இருக்கும் உடையில், ஒரு 'ஜில் ஜில் ரமாமணி'யாக வெளியே வர சிறு குழந்தைக்கு கூட பிடிப்பதில்லை. உடைக்கு சற்றும் சலித்ததில்லை, மேக்கப் பயங்கரங்கள். டீச்சர், தான் கற்ற வித்தை அனைத்தையும் அந்த சின்னஞ்சிறு முகங்களில், கருணை போல எல்லையற்று காட்டுகிறார். பெற்ற தாய்கே மேடையின் கீழிருந்து குழந்தையை பார்த்தால் அடையாளம் தெரியாத உலக அதிசயமெல்லாம் பள்ளி ஆண்டுவிழாவில் சகஜம். ஏக்கச்சக்க லிப்ஸ்டிக்கை அப்பி விடுவதில், குழந்தைகள் ஒரு மாதிரியாக வாயை பிளந்துக்கொண்டு பூச்சி பிடிக்க காத்திருக்கும் பல்லி போல இருக்கின்றன. நிகழ்ச்சிகள் பொதுவாக இறைவணக்கம், சில உரைகள், பட்டம்பூச்சி நடனம், ஆங்கில, தமிழ் நாடகங்கள், பள்ளியில் ஹிந்தி உண்டு என்றால் ஒரு ஹிந்தி பாடல், சமீபத்திய குத்துப்பாட்டு,'அடுத்தாத்து அம்புஜம்' மற்றும் கேட்வாக் என்று திட்டவட்டமாக இருக்கின்றன. அதில் கேட்வாக், என்பது பெரிய வகுப்பு மாணவர்களுக்கானது. எப்போதும் அணியும் உடையில், சிடி, காகித பூ, ப்ளாஸ்ட்டிக் ஸ்பூன், ஃபோர்க், ஈர்க்குச்சி என கண்டதையும் ஒட்டிக்கொண்டு, இது தான் ஃபேஷன் என்று நம்பி நடந்தார்கள், நடக்கிறார்கள், நடப்பார்கள்.நமக்கே இத்தனை சவால்கள் என்றால், டீச்சர்கள் பாடு கொஞ்ச நஞ்சமல்ல என்று புரிய கொஞ்சம் பின்னோக்கி பயணிக்க வேண்டும். மேடைக்கு பின்னால், காந்தியின் தடி காணாமல் போயிருக்கிறது. அதற்கு பதிலாக கிருஷ்ணரின் புல்லாங்குழல் எவ்வகையிலாவது சரிப்படுமா என்று ஆசிரியை கண நேரம் திகில் யோசனை அடைகிறார். தேவதை வேடமிட்ட பெண் குழந்தை, பசியில் அழத்துவங்குகிறது. திரெளபதியின் மானம், டீச்சரின் சில பல சேஃப்டி பின்னில் இருக்கிறது. ராஜராஜ சோழனின் பழைய ஒட்டுமீசை பசை குறைந்து மண் ஒட்ட காத்திருக்க, மேடையில் நிகழ்ச்சி நிரல் படிக்கும் அந்த ஒரு ஆசிரியை தவிர, அத்தனை பேரும் வியர்க்க விறுவிறுக்க பட்டுப்புடவையில் பதட்டமாக இருக்கிறார்கள்.

நாம் எல்லாரும் செய்யும் தவறு ஒன்றுண்டு. நிகழ்ச்சியை நம் குழந்தைக்காக மட்டும் பார்த்துவிட்டு, தடாலென கிளம்புவது. கடைசிக் கடைசியாக வரும் நிகழ்ச்சியைப் பார்க்க சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோரும், ஆசிரியர்களையும் தவிர யாருமே இருப்பதில்லை, சீஃப் கெஸ்ட் உட்பட. மொக்கை சினிமா என்று தெரிந்துவிட்டால் கூட முழு படத்தையும் விடாமல் பார்க்கும் நமக்கு, சின்னஞ்சிறு குழந்தைகளுக்காக கூடுதலாக ஓரு மணி நேரம் இருக்கமுடியாத அளவு வேலைகள் திடீரென்று முளைக்கின்றன.

முன்பு போலில்லாமல், பள்ளிகள் வலுக்கட்டாயமாக எல்லாம் குழந்தைகளை நிகழ்ச்சியில் சேர்ப்பதில்லை. இப்போது அச்சடித்தே தந்துவிடுகிறார்கள் -
உங்கள் குழந்தை ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டுமா?
1) எந்த கல்சுரல் ப்ரோக்ராமில் உங்கள் குழந்தை பங்குப்பெற வேண்டும் என்பதை நாங்களே தீர்மானிப்போம்
2) இதற்கான உடை தேர்வு முற்றிலும் பள்ளி நிர்வாகத்தால் முடிவு செய்யப்படும்.
3) இதற்காக தினமும், வகுப்புக்கு பின்னரும், வார இறுதியிலும் பயிற்சிக்கு வகுப்புக்கு வர வேண்டும்.
4) இந்த பயிற்சி வகுப்புகளுக்கு எக்காரணம் கொண்டும் விடுப்பு எடுக்க கூடாது.
5) பயிற்சி வகுப்பு முடிந்ததும், பெற்றோர் தான் அழைத்து செல்ல வேண்டும். பள்ளி வேனில் வரும் குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.

மேலே குறிப்பிட்ட யாவற்றிற்கும் சம்மதமெனில், Yes என்னுமிடத்தில் டிக் செய்து, ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பவும்.

நான் மகளிடம் கேட்டேன் - "இவ்வளவு கண்டிஷனுக்கும் எந்த வீட்டில் ஒத்துக்கொள்வார்கள்? உங்க க்ளாஸில் யாவாவது ஆண்டு விழாவிற்கு பெயர் கொடுத்திருக்கிறார்களா?"
மகள் - "ஆல்மோஸ்ட் எல்லாருமே கொடுத்திருக்கோம் மா". அது தான் பெற்றோர்கள்! :-)
விழாவில், பக்கதில் அமர்ந்திருந்த மாமி, நாடகம் தொடங்கியதும் மகிழ்வுடன் சொல்கிறார் - "பாரு, பாரு.. அதோ ராஜராஜ சோழனுக்கு பின்னால சாமரம் வீசறானே, அதான் அபி!"

(ஏப்ரல் மாத குங்குமம் தோழியில் வந்த கட்டுரை)

Sunday, 15 March 2015

இந்தியாவும் மகள்களும்.

இந்தியாவின் மகள் (India’s daughter) என்று பெயரிடப்பட்டு, பிபிசி தொலைக்காட்சிக்காக  திருமதி லெஸ்லி உட்வின்  எடுத்த ஆவணப்படம் நாடளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் கடந்த  2012 ஆம் வருடம், நிர்பயா என்று ஊடகங்களால் பெயரிடப்பட்ட மாணவி, இரவு தன் நண்பனோடு சினிமா பார்த்துவிட்டு வரும் போது, ஓடும் பேருந்தில் வைத்து ஆறு பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அதன் பின், மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டு, பேருந்தில் இருந்து வீசி ஏறியப்பட்ட அவர், மிக நீண்ட போராட்டதிற்கு பின், உயிரிழக்க நேரிட்டது. முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் 18 வயதை அடைய மூன்று மாதம் மீதமிருந்ததால் குறைந்தப்பட்ச தண்டனை பெற்றார். இன்னும் ஒருவர் சிறையில் தூக்கிட்டுக்கொண்ட நிலையில், மீதி நால்வர் திகார் சிறையில் உள்ளனர். நாட்டையே தலைகுனிய வைத்த இச்சம்பவம் குறித்து இந்த ஆவணப்படம் பேசுகிறது. குறிப்பாக குற்றவாளிகளின் வாக்குமூலம், அவர்கள் வழக்கறிஞர்களின் பேட்டி, நிர்பயாவின் பெற்றோரின் தற்போதைய மனநிலை மற்றும் சமூக ஆர்வலர்களின் இது குறித்த அலசல்கள்.
இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் தொலைக்காட்சி வாயிலாகவோ, இணையத்திலோ வெளியிட இந்திய அரசு நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியுள்ள நிலையில், இது குறித்து இரு வேறு நிலைப்பாடுகள் இணையத்தில் காணப்படுகிறது. IndiasDaughter என்ற ஹாஷ்டேக் வரிசையில் ட்விட்டர், ஃபேஸ்புக்கிலும்,இன்னும் பல் வேறு வலைத்தளங்களிலும் மக்கள் இது பற்றி அலசுகிறார்கள்.

முதலில், இந்த ஆவணப்படத்தை ஏன் வெளியிட கூடாது என்பதற்கான சில விவாதங்கள் குறித்துப்பார்ப்போம்.
 • இந்த படம் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் கெடுத்துவிடும். இந்தியா வாழ தகுதியற்ற நாடு போல காட்ட முயல்கின்றது.
 • இனி மீண்டும் போராட்டமும், கலகமும் ஏற்படும். இதனால் சமூக அமைதி கெட்டுவிடும். 
 • ஆவணப்படம், குற்றவாளியின் குரலை வலுவாக எடுத்துரைத்தது போல, இதற்காக போராடியவர்களை காட்டவில்லை.
 • நிர்பயாவின் பெற்றோர்கள், குறிப்பாக அவரது தாய் படம் முழுவதும் அழுதுக்கொண்டே இருப்பது போலில்லாமல், அவர்கள் இந்த சம்பவத்தையும் அதன் பிறகான நாட்களையும் எவ்வாறு தைரியமாக எதிர்கொண்டார்கள் என்பது போல் அமைந்திருக்கவேண்டும்.
 • இந்தியாவின் அனைத்து ஆண்களுமே காமக்கொடூரர்கள் அல்ல. தோழியாக, மகளாக, தாயைப்போல பெண்களை பார்க்கும் பெரும்பாலானவர்களும் இருக்கிறார்கள். ஆவணப்படம், தேடி தேடி, பெண்கள் பற்றின பிற்போக்கு சிந்தனை உள்ளவர்களையே படம்பிடித்திருக்கிறது.
 • மேலும், ஒட்டுமொத்தமாக  சமூக மனநிலைப்பற்றி எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளாமல், மேம்போக்காக ஒரு சம்பவத்தையும், சில மனிதர்களையும் காட்டி தன் முடிவை வெளியிடுகிறது.


ஆனால் இந்த ஆவணப்படத்தை ஏன் வெளியிடவேண்டும், ஏன் மக்கள் அவசியம் பார்க்கவேண்டும் என்று பார்த்தோமேயானால்,
 • குற்றவாளி மிகமிக இயல்பாக அச்சம்பவத்தை விவரிக்கிறார். அவள் உள்ளுருப்பில் இருந்து பெருங்குடலை வெளியே இழுத்ததை பற்றிப்பேசும் போது நம் அடிவயிறு கலங்குகிறது.  அந்தப் பெண் அவ்வளவு தூரம் போராடாவிட்டால், சாகவேண்டி இருந்திருக்காது என்று குற்றவாளி சொல்லும் போது, இந்த தண்டனையின் பயன் தான் என்ன என்று மிகபெரிய ஆயாசம் உருவாகிறது. இனி, வெளி வந்த பிறகும் இவர்கள் இதை தொடறமாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை என்பது உறுதியாகிறது.  
 • குற்றவாளிகளின் வக்கீல் இன்னும் ஒரு படி மேலே சென்று,  ஆணும், பெண்ணும் எவ்வகையிலும் சரிசமமில்லை என்கிறார். என் பெண் இவ்வாறு இரவில் ஒரு ஆணோடு சுற்றிக்கொண்டிருந்தால், அவளை நானே பெட்ரோல் ஊத்திக்கொளுத்துவேன்.ஒரு கற்பழிப்பு நடக்கிறதென்றால், அங்கே ஆணை விட அந்தப்பெண்ணே காரணமாகிறாள்.அவள் ஒரு உணவைப் போல தெருவில் கிடைக்க கூடாது.ரோட்டில் ஒரு வைரம் கிடந்தால், அதை நாய் எடுக்கதான் செய்யும். அது தவிர்கவே முடியாது. இப்படி அவர் சொல்லச் சொல்ல, படிப்புக்கும் பண்புக்கும் எந்த சம்பந்தமுமில்லையோ எனத்தோன்றுகிறது.  
 • இது தான் இன்றைய சமூகத்தின் நிலை. இதை மறைப்பது, பூனை கண்ணை மூடிக்கொண்டு இருண்டு விட்டதாக நினைப்பது போல தான். இத்தனைகயை மனநிலையை ஒரு நோயை போல அனுகவேண்டும். முதலில் அது இருப்பதை ஒத்துக்கொண்டால் தான் அதை சரி செய்யவும் முடியும்
 • இப்படத்தின் இயக்குனரே பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டவர். அதன் பின் நான் ஏன் வெளியே வரத்தயங்க வேண்டும்? உண்மையில் வருத்தப்பட, வெட்கப்படவேண்டியது குற்றவாளி தான், என்கிறார். அதுவே சரியானதும் கூட
 • மேலும், இன்று ஒரு சானல்4 இல்லையென்றால், இலங்கையில் போர் குற்றங்கள் வெளிவராமல் போயிருக்கும், அல்லவா?


எதுஎப்படியோ, இனி அரசு தண்டனைகளை கடுமையாக்கலாம். பேருந்துகள் , கார்கள் குளிர் கண்ணாடியின் கருமையை குறைக்கலாம். பெண்களை வீட்டில் பூட்டி வைக்கலாம். ஆனால் இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கொஞ்சம் வேண்டுமானால் குறையலாம். ஆனால் ஆரோக்கியமான தேசத்துக்கான மாற்றம் என்னவோ, ஒட்டுமொத்த சமூகத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும், முடியும். பாலியல் பலாத்காரங்களின் பிண்ணனியில் ஏழ்மை, படிப்பறிவின்மை, குடும்பத்தை பிரிந்து வெளிமாநிலங்களில் கடுமையான நெருக்கடியில் வேலை செய்யும் தொழிளாலர்கள் என பலதும் இருக்கிறது. இவையாவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தீர்வு காண முடியாது.
ஓவ்வொரு  தனி மனிதருக்குமே ஒழுக்கம் சார்ந்த அறம் அவசியப்படுகிறது. இங்கே, பெற்றோர்கள் ஆண் குழந்தையை டாக்டராக, இஞ்சினியராக மாற்றுவதை விட,  நல்ல மனிதனாக ஆக்குவது தான் இந்த பூமிக்கு செய்யும் பிரதிபலனாக இருக்கும்.

படம் வெளியிடப்பட்டாலும், இல்லையென்றாலும், பெண்ணை பற்றின சமூகத்தின் தற்போதைய சிந்தனை  மிகவும் கவலைக்குறியது. ஐந்து வயது பெண் குழந்தை வன்புணரப்படுகிறது. எவ்வகையிலும் அதன் ஆடை அதற்கு காரணமாக இருக்கப்போவதில்லை. எப்போதுமில்லாத அளவு பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கான அறிவுரைகள் நீள்கின்றன. பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய அரசில், பாராளுமன்றத்தில் ஆபாசப்படம் பார்க்கும் எம்பிகள் இருக்கிறார்கள். ஆணும், பெண்ணும் நட்பாக இருப்பது சாத்தியமில்லை என்று கணிசமானவர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் தோன்றி உறுதியளிக்கிறார்கள். ஈவ் டீஸிங் செய்து பெண்ணை அடைவது தான் காலம்காலமாக நம் சினிமா, ஹீரோயிஸமாக காட்டுகிறது. உடை முதல் வெளியே செல்லும் நேரம் வரை அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு என்றாகிறது. ரகசிய காமிராவில் படம்பிடிக்கப்பட்ட யாரோ ஒரு பெண்ணின் அந்தரங்கம், சிறிது குற்ற உணர்ச்சிக் கூட இல்லாமல், இளைஞர்களால் வாட்ஸப்பில் பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது. தன் மண வாழ்க்கைக்காக தெருவில் இறங்கிப் போராடும் ஒரு கவிதாயினி, அதற்காக எள்ளளவும் உதவிடாதவர்களால் இணையத்தில் கேலி பேசப்படுகிறார். இவை யாவும் சேர்ந்தது தான் ஒரு சமூகம். பலாத்காரம் பெருங்குற்றமெனில், பெண்ணை ஒரு போகப்பொருளாக பார்ப்பதுவும் ஒரு குற்றமே!


பெண்ணை தெய்வமாக பார்க்க தேவையேயில்லை. அவள் சக உயிர். மதிக்கவேண்டிய, நேசிக்க வேண்டிய ஒரு மனுஷி. இரு கண்களில் ஒரு கண்ணை ஊசியால் குத்திக்கொண்டால், பார்வை ஒருபோதும் அழகாவதில்லை. 

(குங்குமம் தோழி 14/3/2015 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை )


Saturday, 31 January 2015

பேரு வச்சியே.. சோறு வச்சியா?

யானை அசைந்து தின்னும் ; வீடு, அசையாமல் தின்னும் என்பார்கள். உண்மை தான். அதற்காக சோறே போடாமல் விட்டுவிட்டால்?! பலர், வீட்டை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்றுப் பார்த்தால், பேரு வச்சியே, சோறு வச்சியே கதை தான்.


இந்தப் பிரச்சனையை முதலில் கவனிக்க ஆரம்பித்தது ஒரு காலிங் பெல்லில் தான். எதிர் வீட்டுக்கு ஏதோ காரியமாக போக நேர்ந்தது. காலிங் பெல்லை நான் அடிக்க, ஷாக் என்னை அடிக்கிறது. ஆம், பெல்லில் மின்சாரக்கசிவு. அதை  சரி பண்ண அவர்களுக்கு நேரம் அமையவில்லை. நாய் வளர்ப்பது போல, இதுவும் அழையாத விருந்தினரை பயமுறுத்தும் டெக்னிக்கா அதுவும் தெரியவில்லை.

ஒரு முறை, என் கணவரை படாதபாடு படுத்தி, என் தூரத்து உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்றேன். உண்மையாகவே தூ..ரத்து உறவினர் தான், சுமார் 15 கிமீ சென்னைக்குள்ளேயே பயணிக்க வேண்டும்.போனதும், வாங்க, வாங்க என்று அன்போடு அழைத்து அமரச்செய்து, காபியும் கொடுத்தார்கள். காபியை வாங்கிய என் கணவர், பாதியாக ஆற்றி, மீதியை தரையில் வைக்க பக்கவாட்டில் சாய்ந்தார். அது வரை தான் பார்த்தேன். அடுத்தக்காட்சியில் கீழே விழுந்து கிடக்கிறார். மேலே காபி அபிஷேகம். கீழே விழுந்தால் அடிபடவில்லை என்பதை விடவும், யாரும் கவனிக்கவில்லை என்பது தானே நிம்மதி? அந்த நிம்மதி என் கணவருக்கு கிட்டவில்லை, பாவம். உறவினர் குடும்பமே சூழ்ந்துக்கொண்டு, எப்படி விழுந்தார், உள் காயம் - வெளி காயம் எதேனும் இருக்க வாய்ப்புள்ளதா, காபியை ஏன் பக்கவாட்டில் வைக்கக்கூடாது, அப்படியே வைக்க நேர்ந்தாலும் எத்தனை டிகிரி ஆங்கிளில் சாய்வது வரை உசிதம் என்று விரிவாக பேசி தீர்த்தார்கள். எங்களை சமாதானம் செய்யும் விதமாக, சேர் எப்பவும் உள்ளே தான் போடறது.. என்பதாக உறவினர் இழுக்கிறார். அதென்ன உள்ளே போடுவது? உள்ளே மட்டும் விழலாமா என்று அப்போது கேட்க வசதிப்படவில்லை.
போதாத குறைக்கு, அந்த வீட்டுப்பெரியவர் ஒரு சேரை, அதாவது நல்ல சேரை போட்டு எதிரில் உட்கார்ந்துக்கொண்டு, அவர் வீட்டில் இது வரை விழுந்தவர்களின் வரலாற்றை கொட்டித்தீர்த்தார். மொகலாயப்பேரரசின் வீழ்ச்சி கதையெல்லாம் தோற்றது. அத்தனை நெடிய வரலாறு. சுவரில் கோடு போட்டு எண்ணி வைக்காதது தான் பாக்கி. அத்தனை பேர் விழுந்திருக்கிறார்கள். இனி எப்போது அந்த சேர், சேரிடம் அடையுமோ தெரியாது.
திரும்பி வரும் போது, என் கண்பர் பரிதாபமாக சொல்கிறார், அடுத்த முறை யார் விழுந்தாலும் என் கதையும் சேர்ந்து சொல்வாங்க இல்ல?

இது மற்றுமொரு கதை, வீட்டில் சகலமும் ப்ரஸ்டீஜில் தான் வாங்கியிருக்கிறார். ஆகையால், மனைவியை ரொம்ப நேசிப்பவர். மனைவி, முதல் முறை கருவுற்றிருந்த போது அவர் வீட்டுக்கு போயிருந்தேன். ஹாலில் எங்களோடு பேசிக்கொண்டிருந்தவர், திடீரென்று சமையலறைக்கு போய் வந்தார். சின்ன ஹெல்ப் பண்ணிட்டு வந்தேன், என்றார். ஒரு நிமிடத்தில் செய்யக்கூடிய உதவி என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். அவராகவே, அவ வெயிட் தூக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார். அதனால நான் தான் குக்கருக்கு குண்டு போடுவது என்றார். (எனக்கு என்னவோ, இன்னுமும் கூட டாக்டர் குக்கர் வெயிட்டை சொல்லியிருப்பார் என்றுத்தோன்றவில்லை. ) மீண்டும் அவர் விட்டுக்கு ஐந்தாறு வருடங்களுக்கு பிறகு போக நேர்ந்தது. இம்முறையும் குக்கர் சத்தம் தான் என்னை வரவேற்றது. கூடவே மினி அனுகுண்டு சத்தமும்.  அதொன்னுமில்ல, குக்கர், வெயிட்டை தானாவே தூர வீசிடும் என்று குண்டு போட்டார். அதனால தான் சாதம் கடைசியா வச்சிட்டு வெளிய வந்துடறது.. ஏன், இவ்வளவு கஷ்டப்படவேண்டும், குக்கரை ஒரே ஒரு முறை கடைக்கு எடுத்துப்போனால் போதுமே என்று அவர்களுக்கே தெரிந்த ஒரு விஷயத்தை அறிவுரையாகிவிட்டு வந்தேன்.

மற்றுமொரு அனுபவம். என் குழந்தைகள், சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் டாய்லெட் கதவு சரியாக பொருந்தாது என்பதலாலேயே வர மாட்டேன் என்கிறார்கள். இது அடுத்த தலைமுறை. டாய்லெட் சுத்தமாக இல்லையென்றால்  'let it go nature 's missed call ' என்பாள் மகள். கதவு சரியாக மூடாது, ஒரு கையால் பிடித்துக்கொண்டே உள்ளே இருக்கவேண்டும் என்றால்? பாத்ரூம்ல பாட்டுப்பாடலாம், டாய்லெட்ல பாடமுடியுமாம்மா என்று நாசூக்காக சொல்லிவிட்டாள். கதவு ஸ்க்ரூவில் ஒர் உறவு சங்கிலியே ஊசலாடுவதை அவர் புரிந்துக்கொள்ளத்தான் வேண்டும்.
 போலவே, வீட்டில் எதாவது ஒரு லைட் ஃப்யூஸ் ஆகிக்கொண்டே தான் இருக்கும். அதற்காக நாம் வேண்டுமானால் தட்டுத்தடுமாறி நடமாடிக்கொள்ளலாம். வீட்டுக்கு வரும் அனைவரையும் பேய் வேஷம் கட்ட சொன்னால் எப்படி? கேண்டி க்ரெஷில் எத்தனையோ லேவல் தாண்டியிருப்பான் பையன். ஆனால், ட்யூப் லைட் கூட மாற்றத்தெரியாத ட்யூப்லைட்டாக வளர்த்து வைத்திருப்பார்கள்.  'ஹீஹீ, நேத்து தான் ஃப்யூஸ் போச்சு ',  'இன்னிக்கு வாங்கலாம் என்றிருந்தோம் ' என்று சொல்லிச் சொல்லி, அனாவசியமாக பொய்களை கணக்கில் ஏற்றிக்கொள்வார்கள்.
இன்னும் சிலர் வீட்டில் தண்ணீர், பைப்பிலிருந்து சொட்டிக்கொண்டே இருக்கும். ப்ளம்பரெல்லாம் கொள்ளை காசு வாங்கறான், என்பார்கள். நாள் ஒன்றுக்கு 2 பக்கெட் வீதம், மாதம் அவர்கள் வீணடிக்கும் தண்ணீரையும் அதை மோட்டர் போட்டு ஏற்றுவதற்கான கரெண்ட் செலவையும் பார்த்தால், ஒரு ப்ளம்பரை சம்பளம் கொடுத்தே வைத்துக்கொள்ளலாம்.

டிப்ஸ் - சில சின்ன சின்ன ரிப்பேர்களை நாமே செய்யக் கற்றுக்கொள்ளலாம். சிலவற்றை யோசிக்காமல் தூக்கிப்போட்டு புதுசு வாங்கவேண்டும். ப்ளம்பர், எலெக்ட்ரிஷன் இவர்களிடம் ரொம்ப பேரம் பேசி வெறுப்பேற்றாமல், கூப்பிட்டால் உடனே வரும் அளவுக்கு நட்பு வைத்துக்கொள்ளவேண்டும். வீட்டை பராமரிக்கவும், அதில் உள்ள பொருட்களுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டுமா என்றால், ஆம், தரத்தான் வேண்டும்.

ஏனேனில், வீட்டில் நாம் ஒரு உறுப்பினர் மட்டுமல்ல, வீடும் நம்மில் ஒரு உறுப்பினரே.

(குங்குமம் தோழியில் வெளியாகியுள்ள கட்டுரை)