கிபி 3022
அவ்வைக்கு திருமணம், லிவ்-இன், இன்னும் என்னென்ன பெயரிலோ வந்துவிட்ட எவ்வகை உறவிலும் விருப்பமில்லை. ஆண்களே தேவையில்லை என்று முப்பது வயது வரை வாழ்ந்துவிட்டாள். அவளுக்கு துணையாக ரோபோவும், உயிருள்ள பூனையும் வீட்டில் இருக்கின்றன. ரோபோவுக்கு கணேசன் என்று பெயரிட்டிருக்கிறாள்.
எல்லாம் சரியாகத் தான் போனது. ஆனால், அப்படியே இருப்பது விதிக்கு பொறுக்காதே? அவள் அலுவலகத்தில் புதிதாக ஒருவன் வந்தான். அவள் வாழ்க்கையில் வரவும் பிரியப்பட்டான்.
அன்று உணவு இடைவேளையில் அவனாகவே ஆரம்பித்தான். "நீ ரொம்ப அழகு, தெரியுமா?"
"தெரியும்" என்றாள். அவளுக்கு என்ன சொன்னால் அவனுக்கு மூக்குடைப்பாக இருக்கும் என்பதில் கவனம் இருந்தது.
"நான் உன்னைப் பார்ப்பது போல நீயே உன்னை பார்க்க வாய்ப்பில்லை. உன் கண்கள், உன் மூக்கு, உதடுகள் என தனித்தனியே என்னால் வர்ணிக்க முடியும்."
"ஓஹ். நீ இவ்வளவு வேலையில்லாமல் இருப்பாய் என்று எதிர்பார்க்கவில்லை. "
"எப்போதும் காதல் அப்படித்தான். யாருக்கு அதன் அருமை தெரியவில்லையோ, அவர்கள் வாசலில் தான் தவமிருக்கும். நான் வருகிறேன்." போய் விட்டான்.
அவ்வைக்கு ஏதோ ஒன்று புதிதாக இருந்தது. இதுவரையில் அவள் அழகைப் பற்றி யாரும் பேசியதில்லை. அது அவ்வளவு கிளர்ச்சியைத் தரும் என்று, அன்று தான் தெரிந்துக்கொண்டிருந்தாள். எனினும், அவள் தர்க்க அறிவு அவளோடு வாதிட்டது. கணேசன் ரோபோவால் இதைவிட சிறப்பாக அவளை வர்ணிக்க முடியும்.
அன்று வீட்டுக்கு போனதும், கணேசனிடம் கேட்டாள். "நான் அழகாக இருக்கிறேனா?"
"அழகாக என்றால் என்ன?"
அவ்வைக்கு கொஞ்சம் சுருதி குறைந்தது. எனினும் மனம் தளராமல் தொடர்ந்தாள்.
"அதாவது, திருத்தமாக இருக்கிறேனா?"
"ஓரிரு நரை முடி வர ஆரம்பித்திருக்கிறது. நெற்றி கொஞ்சம் சின்னதாக இருந்திருக்கலாம். கண்களின் கீழே கருவளையம் இருக்கிறது. கன்ஸீலர் வைத்து மறைத்திருக்கிறாய். மூக்கு நீளம் போதாது. உதடுகள் தடிமனாக..."
"போதும், நிறுத்து." சற்றேறக்குறைய அலறினாள்.
"இன்னும் மிச்ச பாகங்கள் பற்றின ரிபோர்ட் வேண்டாமா?"
"ஐயோ, ஆளை விடு. இதற்கே இனி என்னை கண்ணாடியில் பார்க்க முடியாது."
அடுத்த நாள் அவனைத் தேடிப் போனாள்.
"நேற்று எதெதோ சொன்னாயே? பாதியில் உரையாடல் நின்றுவிட்டது. இன்று ஒரு காஃபி குடித்துக்கொண்டே பேசலாமா?"
---
விக்னேஸ்வரி சுரேஷ்