Thursday, 12 December 2024

சொற்களில் உறையும் தூரம்

'உனக்கு செக்ஸ்ல ஒரு பொண்ண திருப்தி படுத்தமுடியாம போகுமோன்னு பயம் இருந்திருக்கா?'

வேலைக்கு நடுவில் இப்படியாக ஒரு மெசேஜ். அதுவும் நேரில் பார்த்திறாத ஒரு பெண்ணிடமிருந்து, பழக ஆரம்பித்த பத்து நாட்களுக்குள். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சடசடவென பெய்யும் ஜூன் மாத மழைப் போல என் வாழ்கையில் வந்து சேர்ந்துவிட்டாள். இவள் இப்படித்தான் என்று இப்போது ஓரளவு தெளிந்திருந்தேன். இல்லை, தெளிந்து விட்டதாக நினைத்திருந்தேன்.

'இருக்கு.'

'ம்ம்.. பெண்களுக்கு வேற மாதிரி ! தன் உடல் குறித்த இன்-செக்யூரிட்டி இருக்கும். பல பேர் இருட்டுல நடக்கறத விரும்பறதுக்கு காரணமும் அது தான்.'

நீ தனியாக இல்லை என்பதை தான் அழகாக சொல்கிறாள். பூமியிலுள்ள எந்த தலைப்பிலும் அவளோடு சகஜமாக பேசமுடியும். ட்விட்டரில் ஒரு ஐடியாக அறிமுகமாகி, வாட்ஸப்பில் உரையாடுமளவு முன்னேறி, டெலிகிராமுக்கு மாறுமளவு நெருங்கியிருந்தோம். ஒருமையில் மாற எங்களுக்கு தேவைப்பட்டது 24 மணி நேரமும், இரண்டு நாள் சாட்டும் தான்.  தன்னை கேட்காமல் எந்த மெசேஜையும் டெலீட் செய்யக்கூடாது என்று சத்தியம் வாங்காத குறையாக டெலிகிராம் வர சம்மதித்தாள். பெண்களைப் பொறுத்தவரை ஒருவர் மீது நம்பிக்கை வருவதென்பது அணைக்கட்டு உடைவதைப் போலத்தான். அடுத்த நிமிடமே ‘ஓடிபி’ கூட சொல்லத் தயாராகிவிடுகிறார்கள். அவளும் என்னை அலைப்பேசியில் அழைத்து தன் முறிந்துப் போன காதலை முடிந்த அளவு உருக்கமாக சொன்னாள். அதிலிருந்து வெளியே வருவதற்கான வழிகளை மனநல மருத்துவரின் நேர்த்தியோடு சொல்லிக்கொண்டிருந்தேன். அத்தனையும் கேட்டு விட்டு, 'உன் குரல் ரொம்ப நல்லாயிருக்கு. அதுல மயங்கி, நீ சொன்னதுல பாதி கவனிக்கல. ஆமா, உங்க அப்பா எங்க வேலை பார்க்கறார்ன்ன?'

நிறைய கேட்பாள். ஆனால் பாதி நேரம் அவளுக்கு பதில் தேவையே படவில்லை. மனதிலிருப்பதை சொல்லிவிட்டு வேறு தலைப்பிற்கு மாறிவிடுவாள். அவளளவு வேகத்தோடு தாவ நான் குரங்காக மாறினால் தான் சாத்தியம்.நாளுக்கு நாள் நாங்கள் நெருக்கமாகி கொண்டிருப்பதை பகிர ஆரம்பித்திருக்கும் அன்றாடங்களைப் பற்றின  உப்பு பெறாத தகவல்கள் சொல்லின. ஒரு நாள் அலுவலகத்திலிருந்தபடியே என் புகைப்படத்தை அனுப்பினேன். ஹார்ட்டின் அழுத்திவிட்டு, நான் சந்தோஷப்படுவதற்குள்,  'ரொம்ப அழகு. பின்னாடி இருக்க வால் பேப்பர்' என்றனுப்பினாள். பிறந்தநாள் கொண்ட்டத்தின் போது எடுத்தப் புகைப்பட த்தில், குடும்ப விழாக்களில் எடுத்தவை என்று எதை அனுப்பினாலும், அதிலுள்ள பெண்களைப் பற்றி கவனமாக கேட்டுக்கொண்டாள்.


அனுமானிக்க முடியாத எதுவும் கிளர்ச்சி தான். அது தான் அவள் மீது ஈர்ப்பை கூட்டிக்கொண்டிருந்தது. குழந்தைத்தனமும், புத்திசாலித்தனமுமாக  சரிவிகிதத்தில் கலந்து சுஜாதா கதைகளின் நாயகியாக எனக்குத் தோன்றினாள். அவளுக்கு நான் வைத்திருக்கும் பெயர் 'பறவை'. என் சீரான ஒழுக்கத்தோடு போகும் பாதையில், குறுக்கும் மறுக்குமாக தலைக்கு மேல் பறந்துக்கொண்டிருந்தாள். எதிர்பாரா தாக்குதல்கள் சாதாரணமாக ஆரம்பித்த நாளில் இதை வேறு பேச்சினூடே கேட்டாள்.

'உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. நாம அடுத்த கட்டத்துக்கு போறத பத்தி என்ன நினைக்கற?'

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், 'அடுத்த கட்டம் என்றால்?' என்று அனுப்பினேன்.

கொஞ்ச நேரம் பொறுத்து,  'ரிலேஷன்ஷிப்' என்று பதில் அனுப்பினாள். அவள் அதை முணுமுணுப்பது போலவே எனக்கு தோன்றியது.

'ஃபிரண்ட்ஷிப்புக்கும் அதற்கும் என்ன வித்தியாசம்?' இவ்வாறான திடீர் ப்ரபோஸல்களை எதிர்கொள்வது பற்றி ஏன் இன்னும் எந்த சுயமுன்னேற்ற குருவும் யூட்யூபில் சொல்லித்தருவதில்லை என்று வருந்தினேன். அவ்விடத்தில் நான் பேசியது அனைத்தும் திகைப்பின் வெளிப்பாடு.

'செக்ஸ் தான். இன்னும் வேறு எதாவது செய்முறை விளக்கம் வேண்டுமா?'  என் கேள்வியின் அபத்தம் உரைக்கும் முன் அவள் கோபம் வந்து சேர்ந்திருந்தது.

'இல்லை. நான் இதை இப்படியே தொடறத்தான் விருப்புகிறேன்' என்றேன்.

மிகப்பெரிய அமைதி. தூங்கப்போவதற்கு முன் சாரி அனுப்பியிருந்தாள். 


அடுத்து வந்த நாட்களில் அவள் சாரி அனுப்புவதும், நான் பதிலுக்கு சாரி அனுப்புவதுமாக தொடர்ந்தது. ஒரு பீரோ வாங்கித்தான் இத்தனை சாரியையும் வைக்கனும் என்று அவளே முடித்து வைத்தாள். ஆயினும் அவ்வப்போது தன்னை நிராகரித்ததை விளையாட்டுப் போல, வருத்தமாக, கோவமாக, இன்னும் எத்தனை உணர்ச்சிகள் சாத்தியமோ அத்தனை வகையில் சொல்லிக்கொண்டே இருந்தாள். 


திடீரென ஒரு நாள் அவளுடைய எக்ஸ், எக்ஸ் அடைமொழியை உதறி மீண்டும் காதலனானான். அது நாள் வரை சாதாரணமாகவும், கெட்ட வார்த்தை சேர்த்தும் திட்டிக்கொண்டிருந்தவள், மீண்டும் அவனோடு கனவில் சஞ்சரிக்கத் தொடங்கினாள்.

தோழியின் காதலன் எந்த கதையில் ஹீரோவாக முடியும்? அவன் எப்படியிருந்தாலும் வில்லன் தான். அவனைப்பற்றி அவள் சொன்ன தகவல்களிலிருந்து அவனை வில்லனாக்கும் காரணிகளை மனம் கெட்டியாக பிடித்துக்கொண்டது. அதற்கு பெரிதாக மெனக்கெட வேண்டியிருக்கவில்லை. ஏதோ பொழுது போகாத நாளில் அந்த பொறம்போக்கு 'ஐ லவ் யூ' சொல்லியிருக்கிறது. இந்த பைத்தியம் அதையும் நம்பி ஏங்கிக்கொண்டிருக்கிறது. இத்தனை வருட உதாசீனத்தை மன்னிப்பதன் மூலம், வாழும் தெரசாவாக காட்டிக்கொள்ள அவள் விரும்புவதாக சொன்னேன். 'பார்ரா' என்று பதில் வந்தது. இந்த 'பார்ரா'வை எங்கெங்கெல்லாம் பதில் சொல்ல முடியவில்லையோ, அங்கெங்கெல்லாம் இட்டு நிரப்பிக்கொள்வாள். 

 பெரும்பாலும் அவள் சொல்வதைக் கேட்டுவிட்டு அந்த அவனை நேரில் பார்த்தால் பளார் என்று அறைய தோன்றும்.

'க்ளாமரா ஃபோட்டோ எடுத்து அனுப்பினீயா?'

'ஆமா. ரொம்ப நாளா கேட்டான், அதான்.'

'உனக்கு அறிவுன்றது கொஞ்சமாவது இருக்கா?'

கண்ணில் நீர் வர சிரிக்கும் ஸ்மைலியை கை வலிக்கும் வரை அழுத்தி அனுப்பினாள். இதில் சிரிக்க என்ன இருக்கிறதென்று இப்போது வரை புரியவில்லை. ஒரு நாள் பேச்சுவாக்கில் 'டி' என்று அழைத்தேன். ' நீயும் டா வே கூப்பிட்டுக்கோ. 'டி' மட்டும் அவனுக்கானதா இருக்கட்டும்.' என்றாள். 'மயிறு' என்று மனதில் தோன்றிய உடனடி கெட்ட வார்த்தையை அடித்து, பின் அனுப்பாமல் விட பல வருட தியானம் தான் உதவியது.

அவளை வெறுப்பதற்கான காரணங்களை தேடிக்கொண்டே இருந்தேன். அப்படி ஒன்றும் கிடைக்காமல் போகவில்லை. அவளுக்கு பிடித்த அரசியல் ஜி, எனக்கு சீ. இருந்தாலும் அந்த தலைப்பை தொட்டுவிடாமல் ஜாக்கிரதையாக தாண்டிச்சென்றேனே தவிர, புள்ளிவிவரங்களை தெளித்து அவளை புண்படுத்த மனம் வரவில்லை. 

இது இன்னொரு நாள். அவள் அனுப்பிய புகைப்படத்திற்கு அவன் ஹார்டின் போடவில்லை என்று வருத்தப்பட்டாள். 

'நீ எதுக்கு அவனையே புடிச்சு தொங்கிகிட்டு இருக்க?' என்றேன். 

'இந்த கேள்விக்கு விடை தெரிஞ்ச அன்னைக்கு உனக்கும் சொல்றேன். பொதுவாவே எனக்கு யாரையும் விட மனசு வராது, அவங்க தப்பே பண்ணியிருந்தாலும்.' என்று லாஜிக் இல்லாமல் பதில் அனுப்பினாள். ஒரு புடவை தேர்ந்தெடுக்க எடுக்கும் சிரத்தை கூட அவளுக்கு காதலுக்கு தேவைப்படவில்லை. 'உன் கதையை ஷங்கரை வைத்து பிரமாண்டமாக எடுத்தால் கூட ஒடாது.' அவர்கள் உறவின் அபத்தத்தை சொல்ல முயன்று தோற்றுக்கொண்டே இருந்தேன்.


இனி இவள் சொல்லும் 'அவன்' கதைகளை கேட்க கூடாது என்று நினைத்துக்கொள்வேன். ஆயினும் அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

'ஒன்னரை நிமிஷ வாய்ஸ் நோட்'ல அஞ்சு நிமிஷத்துக்கு புலம்பறாண்டா. அறிவியல் அதிசயம்டா அவன்'. இது இன்னொரு நாள். அப்படி என்ன புலம்புவான் என்றேன். அது எதுக்கு உனக்கு என்று மூக்குடைத்தாள். ஆனால் அவளாக அதைவிட ரகசிய தகவல்களை கேட்காமலே சொல்லவும் முடியும்.


அவ்வப்போது புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் தலைவர் பற்றின செய்திகளை பகிர்ந்து 'க்ரெஷ்' என்று கண்களால் ஹார்டின் விடுவாள். மற்றொரு சந்தர்ப்பத்தில் சினிமாநடிகர் ஒருவரைப் பற்றி சிலாகித்துக்கொண்டே போனாள். இவனும் உன் க்ரெஷ்ஷா என்று கேட்டதும் நீண்ட அமைதி. உரையாடலின் நடுவே விழும் அமைதி புயலுக்கான அறிகுறி என்று உள்ளுணர்வு சொல்ல, ‘ஹலோ?’ என்று அனுப்பினேன். எதையோ டைப் செய்வதும், அழிப்பதுமாக இருந்தாள். 'ஐ அம் நாட் அ ஸ்லட்' என்று ஒருவழியாக பதில் வந்தது. 


அவ்வளவு பெரிய வார்த்தையை சொல்வாள் என்று எதிர்பாராததால், விதிர்விதிர்த்துப் போனேன். பல சமாதானங்களுக்குப் பிறகு மனம் இறங்கி எதுவும் நடக்காதது போல் பேச துவங்கினாள். சின்ன விஷயங்களுக்கு கோபித்துக் கொள்ளவும், பெரிய விஷயங்களை கடந்து போவதுமாக அவள் என்னை மிகப்பெரிய ரோலர் கோஸ்டரில் அழைத்துக்கொண்டு போனாள். 


என்னை சந்தித்தே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்க, நேரில் போனேன். புடவை கட்டி வருவாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் அனுப்பிய புகைப்படங்கள் எத்தனை எடிட்டிங் செய்யப்பட்டனவோ? நேரில் குச்சியாக, கண்களைத் தவிர வேறு எதுவும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி இல்லாமல் இருந்தாள். எனினும் அவள் பலமே பழகும் விதத்தில் தான். பக்கத்து பெஞ்சில் அமர்ந்து பரிட்சைக்கு நடுவில் உதறி உதறி எழுதுவதை கவனித்து தானாக துளி இங்க் பகிரும் பள்ளித்தோழி போன்ற ஆதூரமான அன்பை அவளால் சர்வசாதாரணமாக அளித்துவிட முடியும்.

காரில் என் அருகில் சம்மணமிட்டு அமர்ந்து, ஏதோ கையை ஆட்டி ஆட்டி பேசிக்கொண்டிருக்க, அவள் கையை தன்னிச்சையாக பிடித்தேன். அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் கையை உருவிக்கொண்டாள். 



நிராகரிப்பின் வலியை திருப்பித்தருகிறாள். அவளை நட்பின் எல்லைக்குள் நிறுத்தியது நான் தான். எனினும் அவள் செயல்படுத்திக்காட்டிய போது எரிச்சலாக, அவமானமாக இருந்தது. வீட்டுக்கு வந்ததும், ‘ரீச்ட் ஹோம்’ என்று அனுப்பியிருந்தாள்..சற்று தள்ளி நிற்கலாம் என்று சில மணி நேரத்திற்கு அமைதி காத்தேன். அடுத்த நாளும் பட்டும்படாமலும் ரிப்ளை செய்ய,

'Ok. எதாவது சொல்லிட்டு போ. இல்லனா, நான் நேர்ல ugly ஆ இருக்கேன், அதான் உனக்கு திடீர்ன்னு பேச பிடிக்காம போயிடுச்சுன்னு தோணும்ல?'என்றாள். கையை உருவிக்கொண்டதெல்லாம் அன்னிச்சை செயல் போல. அது அவள் நினைவிலேயே இல்லை.

'அப்படியே நினை. அது உண்மை தான்'

பிடித்தவர்களை எவ்வளவு விருப்பதோடு காயப்படுத்த முடிகிறது? அந்தப்பக்கம் அவள் அழுவதாக சர்வநிச்சயமாக தோன்றியது. அது சின்ன திருப்தியையும் தரதவறவில்லை. ஆயினும் அவளுடனான எல்லா பிணக்குகளும் கடுங்கோடையில் ஈரக்துணி காயும் வேகத்தில் காணாமல் போயின. 

'என்னை எப்பவாவது லவ் பண்ணனும்னு உனக்கு தோணியிருக்கா?'

இது கன்னிவெடி கேள்வி. ஆமாம் என்றால், இதை தான் மனசில் வைத்து பழகுகிறாயா என்பாள். இல்லை என்றால், நான் அவ்வளவு வொர்த் இல்லையா என்று அழவும் வாய்ப்பிருக்கிறது. ரொம்ப ஜாக்கிரதையாக, 'நான் அதை பத்தி யோசிக்கல' என்றேன். 'இது தான் உங்கிட்ட பிடிக்காது. ரிபிகல் மேனேஜர். பலதையும் யோசிச்சு பதில் சொல்வ. மனசுல இருக்கறத சொல்லவே மாட்ட.' பழிப்பு காட்டிவிட்டு போய்விட்டாள்.

'என்னை எதனால் உனக்கு பிடிக்கிறது?' இந்த கேள்விக்கு சரியான பதிலை அவ்வப்போது தரும் ஆண்மகன் காதலில் ஜெயிக்கிறான். என்னிடம் இரண்டு நாளுக்கு ஒருமுறை கேட்டு, வெவ்வேறு பதில் தரவேண்டும் என எதிர்பார்ப்பாள். கல்லில் நார் உரிக்க நினைக்கும் அவள் விக்ரமாதித்த முயற்சியை ரசித்துக்கொள்வேன். ஆயினும் பதிலுக்கு என்னை ஏன் பிடிக்கும் என்று அவள் அடுக்கும் காரணங்களை நான் நம்ப தொடங்கினால், அடுத்த ஸ்ரீராமன் நான் தான் என்று கோவில் கட்டச்சொல்லி கேட்பேன்.

காதலுமில்லாமல், நட்புமில்லாமல் அவள் நிறுத்தி வைத்திருக்கும் இடம் என்னை குழப்பியது. நெருங்க நினைத்தால் உடனே தடை போடவும், விலக நினைத்தால் பிடித்து நிறுத்தவும் பெண்களுக்கு யாரும் கற்றுத்தரவேண்டியதில்லை. அவர்கள் வரையும் லட்சுமண கோட்டை அவர்களே அறிவார்கள். அது அவ்வப்போது அவர்கள் வசதிக்கேற்ப சுறுங்கியும் விரிந்து கொடுத்தது. என் உருவத்தை, உயரத்தை அவள் சிலாகிப்பாள். பதிலுக்கு, நேரில் பார்த்த அன்று அவள் திரும்பும் போது, ப்ளவுஸ் முடிந்த இடத்தில் கொஞ்சூண்டு தெரிந்த இடுப்பை கவனித்ததை சொன்னதும் உடனடியாக பேச்சை மாற்றினாள்.

என்னளவில் அவளை விரும்பினேன். எனினும் அவள் காதலனிடம் கண்டுபிடிக்கும் குறைகளுக்கு சற்றும் குறைவில்லாமல் என்னிடமும் இருக்கின்றன. எண்ணெய் சட்டியிலிருந்து தப்பிக்க நெருப்பில் குதிக்க நினைத்திருக்கிறாள். என்னால் அவள் வருத்தப்பட்டு விலகிப் போவதை விட, இப்படியே தொடர்வது தான் இவளை தக்க வைக்க எனக்கிருக்கும் வழி. என் மனதில் அவள் என்னவாக இருக்கிறாள் என்ற ஒன்று எனக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருக்கட்டும். 

இரவு பதினொன்ரை வரை நீண்ட ஓர் உரையாடலின் நடுவே கேட்டேன்.

'நான் யாரு உனக்கு?' 

'நீ என் பாய்பெஸ்ட்டி டா.' உடனே பதில் வந்தது.

அது வரை கேள்விப்படாத உறவுமுறை. அப்படி என்றால் என்ன என்று கேட்க நினைத்து, எனக்கே தான் பதில் தெரியுமே என்று புன்னகைத்துக்கொண்டேன்.

பாய்பெஸ்ட்டி என்றால்,  சட்டை பேண்ட் அணிந்த இரு பெரிய காதுகள்!


(Published in Aananda Vikatan)

Thursday, 10 November 2022

அவன், அவள், அது (குறுங்கதை)

கிபி 3022



அவ்வைக்கு திருமணம், லிவ்-இன், இன்னும் என்னென்ன பெயரிலோ வந்துவிட்ட எவ்வகை உறவிலும் விருப்பமில்லை. ஆண்களே தேவையில்லை என்று முப்பது வயது வரை வாழ்ந்துவிட்டாள். அவளுக்கு துணையாக ரோபோவும், உயிருள்ள பூனையும் வீட்டில் இருக்கின்றன. ரோபோவுக்கு கணேசன் என்று பெயரிட்டிருக்கிறாள்.

எல்லாம் சரியாகத் தான் போனது. ஆனால், அப்படியே இருப்பது விதிக்கு பொறுக்காதே? அவள் அலுவலகத்தில் புதிதாக ஒருவன் வந்தான். அவள் வாழ்க்கையில் வரவும் பிரியப்பட்டான்.

அன்று உணவு இடைவேளையில் அவனாகவே ஆரம்பித்தான். "நீ ரொம்ப அழகு, தெரியுமா?"

"தெரியும்" என்றாள். அவளுக்கு என்ன சொன்னால் அவனுக்கு மூக்குடைப்பாக இருக்கும் என்பதில் கவனம் இருந்தது.

"நான் உன்னைப் பார்ப்பது போல நீயே உன்னை பார்க்க வாய்ப்பில்லை. உன் கண்கள், உன் மூக்கு, உதடுகள் என தனித்தனியே என்னால் வர்ணிக்க முடியும்."

"ஓஹ். நீ இவ்வளவு வேலையில்லாமல் இருப்பாய் என்று எதிர்பார்க்கவில்லை. "

"எப்போதும் காதல் அப்படித்தான். யாருக்கு அதன் அருமை தெரியவில்லையோ, அவர்கள் வாசலில் தான் தவமிருக்கும். நான் வருகிறேன்." போய் விட்டான்.

அவ்வைக்கு ஏதோ ஒன்று புதிதாக இருந்தது. இதுவரையில் அவள் அழகைப் பற்றி யாரும் பேசியதில்லை. அது அவ்வளவு கிளர்ச்சியைத் தரும் என்று, அன்று தான் தெரிந்துக்கொண்டிருந்தாள். எனினும், அவள் தர்க்க அறிவு அவளோடு வாதிட்டது. கணேசன் ரோபோவால் இதைவிட சிறப்பாக அவளை வர்ணிக்க முடியும். 

அன்று வீட்டுக்கு போனதும், கணேசனிடம் கேட்டாள். "நான் அழகாக இருக்கிறேனா?"

"அழகாக என்றால் என்ன?"

அவ்வைக்கு கொஞ்சம் சுருதி குறைந்தது. எனினும் மனம் தளராமல் தொடர்ந்தாள்.

"அதாவது, திருத்தமாக இருக்கிறேனா?"

"ஓரிரு நரை முடி வர ஆரம்பித்திருக்கிறது. நெற்றி கொஞ்சம் சின்னதாக இருந்திருக்கலாம். கண்களின் கீழே கருவளையம் இருக்கிறது. கன்ஸீலர் வைத்து மறைத்திருக்கிறாய். மூக்கு நீளம் போதாது. உதடுகள் தடிமனாக..."

"போதும், நிறுத்து." சற்றேறக்குறைய அலறினாள்.

"இன்னும் மிச்ச பாகங்கள் பற்றின ரிபோர்ட் வேண்டாமா?"

"ஐயோ, ஆளை விடு. இதற்கே  இனி என்னை கண்ணாடியில் பார்க்க முடியாது."

அடுத்த நாள் அவனைத் தேடிப் போனாள். 

"நேற்று எதெதோ சொன்னாயே? பாதியில் உரையாடல் நின்றுவிட்டது. இன்று ஒரு காஃபி குடித்துக்கொண்டே பேசலாமா?"

---

விக்னேஸ்வரி சுரேஷ்

Tuesday, 8 November 2022

விண்ணப்பம் (குறுங்கதை)

 கிபி 3022



அலுவலுக்கு இடையே சின்ன இடைவெளி கிடைத்ததும் வெளியே வந்தான், உரவோன். காஃபி ஷாப்பில் அமர்ந்து சாலையில் போகும் மனிதர்களையும், ரோபோக்களையும் வேடிக்கைப் பார்ப்பது அவன் பொழுதுப் போக்கு.

தூரத்தில் அவள் வரும்போதே அவள் கழுத்திலிருந்த பெயரைப் படித்துவிட்டான். 'காவ்யா'. அழகாக இருந்தாள். சரியாக அவன் டேபிளில் அவனெதிரே அமர்ந்தாள்.

"ஹாய். " சினேகமாக புன்னகைத்தாள்.

"ஹாய்." 

உரவோன் காஃபி எதுவும் சொல்லியிருக்கவில்லை. காவ்யா, ஃபில்டர் காஃபி ஆர்டர் செய்தாள். 

"பக்கத்துல தான் ஆஃபீஸா?"

"ஆமாம். ரோபோ ஃபார் ஹுமன்ஸ்" என்றான்.

"நான் பக்கத்தில் உள்ள ஹாஸ்பிட்டலில் மருத்துவராக இருக்கிறேன்." கை குலுக்கினாள். மிருதுவாக, வெம்மையாக இருந்தது.

காஃபி வந்தது. அதை டபராவில் ஊற்றி அவள் குடிப்பதை ரசித்தான். அந்த 20 நிமிடங்களில் நம்பர் மாற்றிக்கொள்ளுமளவு நட்பானார்கள்.

அடுத்த ஒரு மாதத்தில், தெரிந்த ஊரையே சுற்றிப்பார்த்தார்கள். அவளை காத்திருக்க வைக்காமல் சரியாக போய் மருத்துவமனை வாசலில் நிற்பான். உன் பெர்ஃபெக்ஷன் பிடித்திருக்கிறது என்று அடிக்கடி சொன்னாள். அவனுக்கு, சற்றே கலைந்த தலைமுடியோடு, அவள் அரக்கப்பரக்க ஓடிவருவது ரொம்பவே பிடித்திருந்தது. 

அடுத்து ஒரே அப்பார்ட்மேண்ட்'டுக்கு குடிபெயரலாம் என்று தீர்மானித்தார்கள். அதற்கு அரசாங்கத்திடம் மனு போட வேண்டும்.

தன்னுடைய, அவளுடைய பெயர், அலுவலக முகவரி, குடிமை எண் எல்லாம் போட்டு விண்ணப்ப படிவத்தை நிரப்பி காத்திருந்தான்.

சரியாக ஒரு நிமிடத்தில் மின்னஞ்சலில் பதில் வந்திருந்தது.

"மன்னிக்கவும் உரவோன். எங்கள் டேட்டாபேஸ் படி நீங்கள் சோதனை ஓட்டத்திற்கு விடப்பட்டுள்ள ஒரு மேம்படுத்தப்பட்ட ரோபோ."

---

விக்னேஸ்வரி சுரேஷ்

Monday, 7 November 2022

சாகாவரம்

 கிபி 3022



அந்த பேராசிரியர் தன் மாணவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார்.

"அது ஓர் அற்புதமான பிராஜெக்ட் தெரியுமா? மனிதனின் மூளையை ரோபோக்களுக்கு பொருத்துவது?! கிட்டத்தட்ட அவன் சாகாவரம் பெற்றுவிட்ட மாதிரி தான். தற்போது ரோபோக்களுக்கு உணர்ச்சிகள் இல்லை, அதையும் மனிதன் போலவே கொடுத்துவிட்டால்? அது தான் பிராஜெக்ட்டின் அடிப்படை நோக்கம்"

"பிறகு என்ன ஆயிற்று? மூளையை தர, மூளையுள்ள யாரும் முன் வரவில்லையா?" ஒரு குறும்புக்கார மாணவன் கேட்க, வகுப்பு சிரித்தது. 

"இல்லை. நிறைய குடும்பங்கள் முன் வந்தன. இதுவும் Organ donation தானே? சாகப்போகும் நிலையில் உள்ள ஒருவரின் மூளையை தானமாக கேட்கிறோம். இதன் மூலம், அவர் வாழ்வாங்கு வாழப்போகிறார்."

"இதனால் என்ன பிரயோஜனம்?"

"மனிதனின் தசைகள், எலும்புகள், ஏன் ஒவ்வொரு செல்லுமே அழிந்துப்போகும் வகையிலேயே படைக்கப்பட்டிருக்கின்றன. தற்போதுள்ள விஞ்ஞானத்தாலும் வயதாகும் வேகத்தை  குறைக்கலாமே தவிர நிறுத்த முடியாது. ஆகையால் அவன் செத்து தான் ஆக வேண்டும்."

"அதற்காகத் தான் சாகாவரம் பிராஜெக்ட்'டா?"

"ஆமாம். மனித மூளை அபார சக்திக்கொண்டது. அதை அப்படியே பாதுகாத்து ரோபோவின் மற்ற இயக்கத்தோடு இணைத்துவிடால், சாகாத மனிதன் உருவாக்கிவிடலாம் என்று நினைத்தோம்."

"பிறகு என்ன ஆயிற்று? ஏன் அந்த பிராஜெக்ட்டை கைவிட்டீர்கள்?"

"மொத்தம் மூன்று மனித மூளைகள் கிடைத்தன. இரு ஆண்கள், ஒரு பெண் போபோக்களை மனித மூளையோடு உருவாக்கினோம். நம்ப மாட்டீர்கள், குரல் கூட அப்படியே மனித குரல் கொண்டுவந்துவிட்டோம்."

பேராசிரியர் கண்களை துடைத்துக் கொண்டார்.  அந்த குறும்புக்கார மாணவன் கூட வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தான். வகுப்பில் பேரமைதி.

"அறிவு தான் மனிதனின் ஆயுதம். அவனை காப்பதும், அழிப்பதும் அதுவே.

ஆய்வகத்தில் இருந்த இரு ஆண் ரோபோக்களும் அந்த ஒரு பெண் ரோபோவையே காதலித்தன. அவள் இருவரையும் நிராகரித்தாள். மனமுடைந்த ஒரு ஆண் ரோபோ தற்கொலை செய்துக்கொள்ள,  மற்றொன்று அவளையும் கொன்று, தானும் இறந்தது கிடந்தது."


------

விக்னேஸ்வரி சுரேஷ்

Sunday, 6 November 2022

மாண்புமிகு (குறுங்கதை)

கிபி 3022



ஆனந்தராஜுக்கு ரொம்ப பெருமை. மற்ற எல்லா அரசியல் தலைவர்களும் தன் உதவியாளராக ரோபோக்களை வைத்திருக்க, தலைவர் ஷாஜி மட்டும் அவனை தாண்டித் தான் ரோபோக்களை நம்புகிறார். அவனே அதைப்பற்றி பல முறை கேட்டும் இருக்கிறான்.

"தலைவரே..  நீங்க ஏன் என்னை கூட வச்சிருக்கீங்க?"

"அதொண்ணுமில்லடா. என்ன தான் ஆயிரம் மிஷின் வந்தாலும், தலைவரே, தலைவரேன்னு சக மனுஷன் கூப்பிடறத கேட்டுக்கிட்டு இருந்தா அரசியல்வாதியா கெத்தா இருக்கு."

ஏகப்பட்ட பேரை இல்லாமல் ஆக்கிவிட்டுத் தான் தலைவராகியிருந்தார், ஷாஜி. திருமணம் செய்துக் கொள்ளவில்லை. வாரிசும் இல்லை. அவருக்கு எதாவது ஆனால், கட்சியில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகும் அபாயம் இருக்கிறது. அதைப் பற்றி அவனிடம் மட்டும் கவலைக் கொள்வார்.

"எனக்கு அரசியல் கத்துத் தாங்க, தலைவரே. நம்பிக்கையா இருப்பேன்"

"போடா. அரசியல்லாம் யாரும் கத்துக்கொடுக்க முடியாது. அது ஜீன்ல இருந்தாத்தான் உண்டு."

"அப்ப, கல்யாணம் பண்ணிக்கிடலாமில்ல? உங்க பையன் கட்சிய வழி நடத்துவான்."

"அடப்போடா. தாஜ்மஹால் கட்டினவனுக்கு ஆன கதி தெரியுமில்ல? அரசியல்ல எவனையும் நம்ப முடியாது."

ஆனால் அப்படி ஓர் ஏற்பாட்டை ரகசியமாக செய்து முடித்திருப்பார் என்று அன்று காலை வரை ஆனந்த் ராஜுக்கு தெரியாது.

"எங்க போறோம், தலைவரே?"

"என்னோட க்ளோன பார்க்கப்போறோம். பல வருஷம் முன்னயே ப்ளான் பண்ணி ஏற்பாடெல்லாம் பண்ணிடேன். என் ஜீன வச்சே உருவாக்கித்தந்திருக்காங்கடா. இப்ப டெக்னாலஜி முன்னேற்றத்தால Ageing அதிகப்படுத்தி என் வயசுல இருக்க மாதிரி ஒருத்தன தந்திருக்காங்க. தனி வீட்ல வச்சிருக்கேன். "

"ஐ!! அப்ப எனக்கு இரண்டு தலைவரு!"

ஆனந்தராஜ் உற்சாகமாக விசிலடித்தான்.

அந்த இடம் அத்துவானக்காட்டில் இருந்தது. ரகசியத்திற்காக போலும். 

"நீ இங்க இருடா." தலைவர் மட்டும் உள்ளே போனார்.

அவன் நினைத்ததைக் காட்டிலும் அதிக நேரமானது. வரும் போது தலைவர் மட்டும் தான் வந்தார்.

ஆனந்தராஜ் குழப்பமாக பார்த்தான்.

"எங்க தலைவரே, க்ளோனு?"

"ஒரு உறைல இரண்டு கத்தி இருக்க முடியாதுடா. நீ வண்டிய எடு" 

தலைவர் திரும்பிப் புன்னகைத்தார். எப்போதும் மின்னும் தங்கப்பல்லை காணவில்லை. 


Saturday, 5 November 2022

காவியக்காதல் (சிறுகதை)

கிபி 3022



"டாக்டர் கல்கி, இது என் அண்ணன், கரிகாலன். இவன் போன வாரம் நண்பர்களோட மார்ஸ்'க்கு டூர் போயிட்டு வந்தான். வந்ததிலிருந்தே இப்படி தான் பேயடிச்ச மாதிரி இருக்கான். ஒழுங்கா சாப்பிடறதில்ல, தூங்கறதில்லை."

குந்தவை சொல்லிக்கொண்டே போனாள். அவள் சொல்லாவிட்டாலும் அந்த ரோபோ டாக்டருக்கு அவள் சொன்ன எல்லா தகவல்களும் கரிகாலன் கட்டியிருந்த வாட்ச் மூலம் தகவலாக தரப்பட்டிருந்தது. கொஞ்சம் சீரியஸ் பேஷண்ட் தான் என்பதால் முன்னுரிமை தந்து அப்பாயிண்மெண்ட் அளிக்கப்பட்டிருந்தது.

"மிஸ்டர்.கரிகாலன், உங்கள் எமொஷனல் பாலஸ் ரொம்பவே வீக்'காக இருக்கிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், தற்கொலை மனநிலைக்கு போய் போய் வருகிறீர்கள். மார்ஸ்'ஸில் உங்களுக்கு என்ன நடந்தது?"

"அவள்.. நந்தினியை பார்த்தேன். நிர்தாட்சன்யமாக என் காதலை நிராகரித்தாள்."

கல்கி தன் டிஜிட்டல் சிரிப்பை உதிர்த்தார். "இன்னும் எத்தனை ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும், இந்த மனிதர்கள்  காதலில் விழுவதை யாராலும் தடுக்க முடியாது." 

குந்தவை எரிச்சலானாள். "டாக்டர், இவன் சும்மா இல்லாமல் பாரில் நந்தினியின் லிவ்-இன் பார்ட்னர் மூக்கை உடைத்திருக்கிறான். பின்னர், தூக்கி வைத்தா கொஞ்வாள்?"
 
கரிகாலன் உறுமினான். "அவள் என்னவள்!!!"

டாக்டர் பதட்டப்படாமல், "வாரத்துக்கு நாலு லவ் கேஸு வருது. என் ஹீயரிங் வால்யூமை குறைக்க வேண்டி இஞ்சினியருக்கு எழுதியிருக்கிறேன்."

குந்தவை, இப்போது டாக்டரை பாவமாக பார்த்தாள் 

"மிஸ்டர் கரிகாலன், சில மாத்திரைகள் தந்து ஆக்ஸிடாக்ஸின் சுரப்பதை குறைத்தால், நந்தினியை உங்கள் மூளையிலிருந்து தூக்கிவிட முடியும். டோப்போமைன் ஹார்மோன் வேறு தாறுமாறாக.. "

கரிகாலன், மீண்டும் க்ளினிக் அதிர கத்தினான்.

"எதையாவது செய்யுங்க... எனக்கு தூங்கினா போதும்."

டாக்டர், கரிகாலனை படுக்க வைத்து, சில வயர்கள், கொஞ்சம் மின்சாரம், சிரிஞ்சில் மருந்து என்று கலவையாக வைத்துக்கொண்டு அவன் மூளைக்குள் விளையாடினார்.

பத்து நிமிடம் கரைய..

"இப்ப நீங்க போகலாம். உங்க மூளைக்குள் காதல், தற்கொலை எண்ணம் இரண்டுமே காணாம போயாச்சு" க்ளவுஸை கழட்டி குப்பைக்குள் வீசினார்.

கரிகாலன் சோர்வாக உணர்ந்தான். குந்தவையை பார்க்க எரிச்சலாக இருந்தது. அவள் கையை உதறிவிட்டு ரோட்டில் இறங்கினான். 

"அண்ணா.. மார்ஸிலிருந்து ஸ்பேஸ் க்ராஃப்ட் வருது.. "என்று அவள் கத்தியது முழுவதுமாக அவனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.

-----
விக்னேஸ்வரி சுரேஷ்

Friday, 4 November 2022

Perfectionism (குறுங்கதை)

கிபி 3022


வெள்ளை கோட், கண்ணாடி சகிதமிருந்த ஒரு விஞ்ஞானி ரோபாட்', கர்ப்பமாக இருந்த ஐஸ்வர்யாவிடம் விளக்கிக்கொண்டிருந்தது.

"DCHS2, RUNX2, GLI3 மற்றும் PAX1 இந்த நான்கு ஜீன் களால் தான் மூக்கு சப்பையான குழந்தைகள் பிறக்கின்றன.  EDAR ஜீன் தாவங்கட்டை நீண்டு இருப்பதற்கு காரணமாகிறது. இவற்றை கருவிலேயே சரி செய்துவிட்டால், உங்கள் குழந்தை பெர்ஃபெக்ட்'டாக இருப்பதற்கு கேரண்டி."

அவள், "என்ன செலவானாலும் பரவாயில்லை டாக்டர்" என்று உதிர்க்க கூடாத ஓர் ஆயிரங்கால பழைய வசனத்தை சொன்னாள். அவளும், அவள் பார்ட்னருமாக, தென் இந்திய தோல் நிறம், க்ரேக்க மூக்கு, ரஷ்ய உயரம், ஐரோப்பிய தலைமுடியோடு பிறக்கும் வகையில் குழந்தைக்கு ஜீன்கள் தேர்தெடுத்திருந்தார்கள்.

இப்போது இது அரசாங்க கட்டளை. மனிதர்கள் அசிங்கமாக வலம் வருவது எந்த நாட்டிற்கும் இழிவானது. பாதி செலவை அரசே ஏற்றுக்கொள்ள, குழந்தை பிறக்கும் முன்பே தோல் நிறம், மூக்கு வளைவு, கண்களின் அகலம் ஆகியவை தீர்மானிக்கப்படுகிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்க முடியாத பெற்றோர்கள், இருக்கும் ஆயிரம் சாம்பிளுக்குள் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். 'பெர்ஃபெக்ட் மனிதன்' பிறக்க எல்லா முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, ஒவ்வொரு நாளும் கருவிலிருந்து குழந்தை கண்காணிக்கப் படுகிறது. அப்படியும் சில பாகங்கள் பிசகாகிவிட்டால், உயர்தர காஸ்மெடிக் சர்ஜரி மூலம் சரி செய்யப்படும்.

இன்று தெருவில் நடமாடும் எல்லா ஆண்களும், பெண்களும் அந்தந்த நாட்டின் அழகை பிரதிபளிப்பவர்களாகவே இருக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு சென்று செட்டில் ஆக விரும்பும் இளைஞர்கள், அந்த நாட்டு தோல் நிறத்துக்கு மாற்றிக்கொண்டு, விசாவுக்கு விண்ணப்பிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    


இன்று அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளைப் பற்றி தான் ஊரெல்லாம் பேச்சு! அதை பார்த்தே ஆக வேண்டும் என்று ஐஸ்வர்யாவின் பாட்டி அடம் பிடிக்க, ஐஸ்வர்யா நடுங்கும் அந்த முதிய கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். பார்க்கப் போகும் பொருளைப் பற்றி பாட்டிக்கு அதிகம் தெரிந்திருந்தது. வரும் வழியெல்லாம் மெளனமாக வந்தாலும், பாட்டியின் உள்ளம் குமுறிக்கொண்டிருப்பதாக அவள் கையில் கட்டியிருந்த வாட்ச் மூலம் ஐஸ்வர்யாவுக்கு தகவல் வந்திருந்தது.

கண்ணாடி பேழைக்குள் வைத்திருந்தார்கள். சுத்தம் செய்யப்பட்டு மின்னிக்கொண்டிருந்ததை ஜஸ்வர்யா ஆர்வமாக பார்க்க, தொலைவில் நின்றப்படியே பாட்டி ஒரு முறை காறி துப்பினாள். "எல்லாம் இங்கருந்து ஆரம்பிச்சது தான்" என்றாள் ஆங்காரமாக.

வைர வைடூரியங்கள்  எல்லாம் தாராளமாக பதிக்கப்பட்டு, ஆயிரம் ஆண்டுகள் முன்பு பயன்படுத்தப்பட்ட, 'உலக அழகி கிரீடம்' அங்கே சாதுவாக அமர்ந்திருந்தது.

----
விக்னேஸ்வரி சுரேஷ்


கொஞ்சம் கல்யாணம், கொஞ்சம் Affair.

கிபி 3022 



சாவித்திரி குடும்ப நீதிமன்றத்தில், விவாகரத்து கேட்டு நீதிபதி ரோபோ முன் சிலபல வயர்கள் சூழ அமர்ந்திருந்தாள். 

மை லார்ட் ஆரம்பித்தார். 

"சத்தியவானுடன் உங்கள் திருமணம் 30 நாட்கள் கடந்துவிட்டதா?"

"ஆமாம். அதற்காக பல்லை கடித்துக் கொண்டு காத்திருந்தேன்." 

குறைந்தது முப்பது நாட்கள் ஆகியிருந்தால் தான் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.  

"சரி, என்ன உங்கள் பிரச்சனை?"

"எங்கள் திருமணத்தில் ரொமான்ஸ் இல்லை."

"அவர் உங்களோடு கலவி கொள்வதில்லையா?"

"அதில்லை. காலை எழுந்ததும் குட்மார்னிங் மட்டும் சொல்கிறார். அதனோடு ஒரு டார்லிங் சேர்ப்பதில்லை. வாட்ஸப் ஸ்டேடஸ் பார்க்கிறார், ஆனால் அதற்கு தகுந்த எமோஜி அனுப்ப இன்னமும் தெரியவில்லை. குறிப்பாக முத்தங்கள்! நேரில் தருமளவுக்கு சாட்'டில் அனுப்புவதில்லை. நான் வேறு ஆணைப் பற்றி பேசினால், செல்லமாக பொறாமை படுவதில்லை. எனக்கு சலிப்பாக இருக்கிறது."

"அவ்வளவு தானா?"

"எல்லாவற்றிலும் ஒரு பெர்ஃபெக்‌ஷன். ரோபோ போல. " சாவித்திரி சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டாள்.  "அவர் எதை எடுத்தாலும் அதன் இடத்தில் வைத்துவிடுகிறார். வீடு கலைவதே இல்லை. அவரால் எனக்கு தாழ்வு மனப்பான்மையே வந்துவிட்டது."

"வேறு எதாவது? கள்ளத்தொடர்பு?"

"அவரை யாரும் காதலிக்க சாத்தியமில்லை. அலுவலக நேரம் முடிந்ததும் கணிணியை ஆஃப் செய்து விடுகிறார். பத்து மணிக்கு தூங்கிவிடுகிறார். குறிப்பாக ஃபோனில் லாக் இல்லை. எதாவது தொடர்பு இருக்குமா என்று கூட அவர் ஃபோனை சலித்து எடுத்துவிட்டேன்."

நீதிபதி இப்போது சாவித்திரியை உற்று நோக்கினார். "நீங்கள் வேறு யாருடனாவது பேசிக்கொண்டிருக்கிறீர்களா?"

சாவித்திரி திடுக்கிட்டாள். நீதிபதிகளாக ரோபோக்கள் நியமிக்கப்பட்ட பிறகு, நீதிமன்றத்தில் பொய்கள் 99.99989 சதவிகிதம் குறைந்துவிட்டன. ரோபோக்கள் மனித உடல்மொழி பற்றி அக்குவேறு ஆணிவேறாக ஒரு மைக்ரோ செகண்டில் தெரிந்துக்கொள்கின்றன. குரலின் மிகச்சிறிய மாற்றம், கண்கள் போகும் திசை, தசைகளின் இறுக்கம், இதயதுடிப்பின் ஏற்ற இறக்கம், உதடுகள் விரியும் தன்மை என அத்தனையும் கவனித்து, நாம் சொல்வது பொய் என்றால், அத்தோடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, சமயத்தில் நீதிமன்ற அவமதிப்பாக தண்டனையும் அனுபவிக்க வேண்டி வரும்.

"ஆமாம். ஃபேஸ்புக்கில் ஒருவரோடு. அவர் பெயர் இயமன்"

"ஆக, அது தான் நீங்கள் விவாகரத்து கோர உண்மையான காரணம் அல்லவா?"

"இயமனோடு பழகும் போது தான், என் திருமணத்தில் உள்ள குறைகள் தெளிவாக தெரிகின்றன. இயமன் என் மீது காதலை பொழிகிறார்."

"நியாயமாக உங்கள் கணவர் சத்தியவான் தான் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருக்க வேண்டும். உங்களுக்கு திருமணம் சலித்துவிட்டது. ஒரு  மாற்றம் தேவைப்படுகிறது. மற்றவை நீங்கள் தேடிக்கொண்ட காரணங்கள். "

"என் காரணங்களில் உள்ள உண்மை உங்களுக்கு தெரியவில்லையா?"

"உங்கள் போதாமைகளை அவர் குறைகளாக மாற்றுகிறீர்கள்.  ஆகையால் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை." 

சாவித்திரி எரிச்சலடைந்தாள். "எனக்கு விவாகரத்து வேண்டும். மேற்கொண்டு என்ன செய்யட்டும்?"

"சத்தியவானின் நலனை கருதி, விவாகரத்து வழங்கப்படுகிறது. தற்போது இருவருமாக வாங்கியிருக்கும் வீட்டை நீங்கள் அவருக்கு விட்டுவிட வேண்டும். ஜீவனாம்சமாக மாதம் மாதம்..."

"போகட்டும். இனி நான் இயமனை திருமணம் செய்ய தடை ஏதுமில்லை தானே?"

"இருக்காது. நீங்கள் சொன்ன ரொமான்ஸ் இல்லை போன்ற காரணங்களுக்காக இயமனின் மனைவியும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்."-

-----


விக்னேஸ்வரி சுரேஷ்

Thursday, 3 November 2022

மனம்

கிபி 3022



அரவிந்த் ஓர் அழகான இளைஞன். 3022 லும் ஆண்களை வர்ணிக்க வேறு மெனக்கெடல் தேவைப்படவில்லை. டேட்டிங்'கென வெப் சைட்'கள் வழக்கொழிந்து போய்விட்ட காலம் இது. அதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் மினி ரோபோக்களை வாங்கி பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு வலம் வந்தால், சரியான பெண் கண்ணில் படும்போது சமிஞ்ஞை செய்யும். 

'இதற்கு இப்போது 'மனம்' உண்டு! தனியே ரோபோக்களால் சிந்திக்க முடியும். சொல்லப்போனால், மனிதன் ஒரு சந்தர்ப்பத்தில் எப்படி யோசிப்பானோ அப்படி யோசிக்கும்', அந்த விஞ்ஞானி @ விற்பனையாளர் கண்கள் விரிய விளக்கினார். 

'அதாவது அது உங்களை புரிந்துக்கொள்ளும். உங்கள் கண்கள் விரிவதை வைத்து. உங்கள் வாட்ச்'சின் மூலம் பெறப்படும் தகவல்களான இதயத்துடிப்பு அதிகரிப்பதின், குறைவதின் மூலம். இன்னும் சிலதெல்லாம் வைத்து. ' என்று கண்ணடித்தார். 

'ஆக, எனக்கான பெண்ணை இது கண்டுபிடித்து தரும் என்கிறீர்கள்?' என்று அரவிந்த் கேட்க,

'நிச்சயமாக. '

'என்ன பெயரிட்டிருக்கிறீர்கள்?'

'மெட்ரிமோனியல்! சுறுக்கமாக, மோனி!'

வாங்கிக்கொண்டான். அவன் சொன்ன சில பிரத்யேக கண்டிஷன்கள் அதன் சாஃப்ட்வேரில் ஏற்றப்பட்டது.

அரவிந்த்'துக்கு திருப்தி தான். மால்கள், பீச், கோவில் என்று மோனியோடு சுற்றி சுற்றி வந்தான். வாரக்கடைசியில், மோனியை ப்ரிண்டரில் கனெக்ட் செய்து, வீக்லி ரிபோர்ட்'டை ப்ரின்ட் எடுத்தான்.

இதுவரையில் அரவிந்த்'துக்கு பார்த்தவுடன் பிடித்த பெண்கள் ஐந்து பேர். அதில் இருவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவர்களுக்கு ரிலேஷன்ஷிப்பில் ஆர்வமுமில்லை. மீச்சமுள்ள மூவரில் ஒருவர் இந்தியாவில் வாழ பிரியப்படவில்லை. கடைசியாக இருவர், அதிலும் கயல் என்பவர் அரவிந்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று மோனி தன் அறிக்கையை தந்திருந்தது. கயல் அழகாக இருந்தாள். அவளுக்கும் ரிபோர்ட் போயிருக்கும். பிடித்திருந்தால், அவள் அரவிந்தை அழைத்துப் பேசுவாள். அவனுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும், குறிப்பாக இருவரில் ஒருவரை என்ன காரணத்தால் மோனி தேர்ந்தெடுத்திருக்கும் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அவனை உந்தியது.

more details on the report என்று பொடி எழுத்தில் என்னவோ எழுதியிருக்க, அரவிந்த், அந்த ரிபோர்ட்டை கணிணியில் உயிர்ப்பித்து, லிங்க்'கை கிளிக் செய்தான். 

கயல்'லுக்கும் அரவிந்துக்கும் 80% பொருந்துகிறது.

கயல் வைத்திருக்கும் டானி ரோபோட்'டுக்கும், அரவிந்தின் மோனிக்கும் 100% பொருந்திப்போகிறது. 

ஆகையால், கயலை தேர்வு செய்கிறேன்.  

Yours sincerely, Moni. 


-------

 விக்னேஸ்வரி சுரேஷ்

பிரதிநிதிகள் (குறுங்கதை)

கி.பி 3022

வெட்கிரைண்டர் போல் வீட்டுக்கு வீடு ரோபோ வந்தாகிவிட்டது. நிதியமைச்சர், ரோபோ வரியை GST க்குள் கொண்டு வந்து பட்ஜெட் வாசிக்கிறார். அன்றைய செய்திகளை ரோபோக்கள் கேட்டு, தத்தம் முதலாளிகளிடம் சுருக்கமாக புரியும்படி சொல்கின்றன. 

இன்றைக்கு முக்கிய செய்தியாக, பிரதம மந்திரி நம் நாட்டின் ஜனத்தொகை குறைந்து வருவதைப் பற்றி கவலை தெரிவித்திருக்கிறார். மனிதர்கள், குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்கப்படுத்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

தற்போது பெரும்பாலான பணிகளுக்கு ரோபோக்கள் இருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைக்கும் வேலையை மட்டும் மனிதர்கள் பார்த்துக்கொண்டால் போதும். இரு நாடுகளுக்கிடையேயான சண்டைகள், உள்நாட்டுக்கலவரங்கள், தொலைக்காட்சியில் தோன்றி சண்டையிடுவது, அந்த சண்டையை ட்விட்டரில் பகிர்வது எல்லாம் ரோபோக்கள் வசம். 

வீடுகள் தோறும் ஆண்கள், பெண் ரோபோக்களையே துணையாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். அதற்கு அவர்கள் தந்திருக்கும் காரணங்கள் - 1) அவன் வீட்டுக்கு வந்ததும் சூடாக உணவு பரிமாறிவிட்டு ரோபோக்கள் அமைதியாகின்றன. 2) தேவைப்பட்டால் (மட்டும்) ஜென்ஸி குரலிலோ, ஷகிரா போலவோ பாடவும் செய்கின்றன. 3) சோஷியல் மீடியாவில் இத்தனை நேரம் செலவிடுகிறாயே என்று முணுமுணுப்பதில்லை. 4) முக்கியமாக வார இறுதியில் ஷாப்பிங் போகவேண்டாம். 5) உனக்கு ஏன் இன்னும் அம்மா, அப்பா இருக்கிறார்கள் என்று கேட்பதில்லை.  

பெண்கள், தாங்கள் பேசுவதை காது கொடுத்து கேட்கும் வகையிலான ஆண் ரோபோக்களை டிஸைன் செய்து வாங்கிக்கொள்கிறார்கள். இன்ன ஷேட் லிப்ஸ்டிக் உனக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி அவளை குளிர்விக்கின்றன. மாமியார், நாத்தனார், உறவினர்கள் என்பதான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் இல்லாமல் வரும் ரோபோக்கள் தங்களை சுகந்திரமாக வாழ வைத்திருப்பதாக 99.9998 சதவிகிதம் பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.  

எனினும், இப்படியே போனால் மனித இனம் அருகிவிடும் என்று சர்வதேச அரங்கில் கவலை தெரிவிக்கப்பட்டது. 'மற்ற எல்லாவற்றிற்கும் ரோபோக்கள் இருந்தாலும், காதலிக்க மனித மனதால் மட்டுமே முடியும்!' என்ற தத்துவம் டி-ஷர்ட் வாசகமாக பிரிண்ட் செய்யப்பட்டது.  ஆண்களும் பெண்களும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால், இயற்கையான ஈர்ப்பு தூண்டப்படும் என்று மருத்துவ நாளிதழ்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டன. குழந்தை வளர்ப்புக்கென தனி ரோபோக்களை நிறுவனங்கள் விளம்பரப்படுத்தின. 

சமூக ஆர்வலர்கள் சிலரின் கடும் முயற்சியால், மிகப்பெரிய அளவில் ஆண்களும், பெண்களும் சந்தித்துக்கொள்ளும் கூட்டம் ஏற்பாடாயிற்று. அங்கேயே தங்களுக்கான ஜோடியை தீர்மானிப்பவர்கள் அமர்ந்துக்கொள்ள ஏதுவாக இரு நாற்காலிகள் மட்டும் கொண்ட மேஜைகள் தனியாக அலங்கரித்து காணப்பட்டது. காதல் வரத்தோதாக மெல்லிய குளிர், லேசான பியானோ இசை எல்லாம் ரெடி! 

கூட்டத்துக்கு வருவதற்கு முன்பே ஆண்களும் பெண்களும் எதிர்பாலினத்தின் மீதான தங்கள் எதிர்பார்ப்பு படிவத்தை ஒரு மாதம் முன்பாகவே நிரப்பி அனுப்பியிருந்தார்கள். அதை சாஃப்ட்வேர் ப்ரோகிராம் மூலம் சலித்தெடுத்து, ஒரே அலைவரிசை கொண்டவர்கள் ஓரிடத்தில் அமருமாறு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஊதா நீற கண் கொண்ட பெண் பிடிக்கும், 6 பேக் ஆண் பிடிக்கும், பென்ஸ் கார் வைத்திருந்தால் பிடிக்கும் என்பவர்கள் ஏனைய மனிதர்களை சந்தித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.  

கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. 'காதலிப்பது' மனித இனத்துக்கு மறந்துப் போய் விட்டதால், சாம்பிளுக்கு திரைப்படம் காட்ட ஏற்பாடாகியிருந்தது. மிகப்பெரிய திரையில் அழகிய ஆணும், பெண்ணும் தோன்றி கண்ணுக்குள் கண் நோக்கினார்கள். பின்னணி இசை ஒலிக்க, கை கோர்த்துக்கொண்டு கடற்கரையில் வலம் வந்தார்கள். ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்துக்கொண்டு கதை பேசினார்கள். மாறி மாறி ஒருவர் மடியில் ஒருவர் படுத்து தூங்கினார்கள். திரைப்படம், மேலும் தொடர்ந்துக்கொண்டே போக,

பிரதிநிதிகளாக அனுப்பிவைக்கப்பட்டிருந்த ரோபோக்கள் அவற்றை கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டன.

-------

விக்னேஸ்வரி சுரேஷ்